தலையங்கம்

மாறும் அதிகார மையங்களும் காத்திருக்கும் அபாயங்களும்

$articleData->title

இந்துத்துவ கார்ப்பரேட் சாமியார்கள் அதிகார மையங்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டை ஆளும் பாஜவை ஆர்எஸ்எஸ்தான் வழி நடத்துகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆர்எஸ்எஸ் வேறு, பாஜக வேறு என்று சங்கிகள் சொல்லிக் கொண்டிருந்த கதையை எல்லாம்  அவர்களே காலாவதியாக்கிவிட்டார்கள். ஒருபுறம் நாடு என்ன மாதிரி மாற வேண்டும் என்று மோகன்பகவத் அன்பான! உத்தரவுகள் ஆட்சியாளர்களுக்கு போட்டுக் கொண்டிருக்கிறார் என்றால் இன்னொரு புறம், இந்துத்துவ கார்ப்பரேட் சாமியார்கள் அதிகார மையங்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கார்ப்பரேட் சாமியார்கள் ஆட்சியாளர்களை தங்கள் கைக்குள் போட்டுக் கொள்கிறார்களா? அல்லது மக்களை மத, போதை அடிமைகளாக்கி வைப்பதற்காக இந்த காவி-கார்ப்பரேட் சாமியார்கள் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறார்களா? என்றால், இரண்டும்தான் என்பதே பதிலாகும். அபாயகரமான, முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய அணு  சக்தித் துறையில் ‘சாந்தி (SHANTI)’ என்ற சட்டத்தின் மூலம் மோடியின் நண்பர் அதானி நுழையப் போகிறார். இந்திய நாட்டின் பாதுகாப்பே இனி கேள்விக்குள்ளாகும். அணு சக்தித் துறை அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே கூடங்குளம் போன்ற அணு உலைகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை. எப்போது உற்பத்தி நடைபெறுகிறது? ஏன் மூடப்படுகிறது? எவ்வளவு உற்பத்தியாகிறது? அணுக் கழிவுகளின் நிலை என்ன? என்கிற எந்தவொரு விவரங்களும் வெளியே சொல்லப்படுவதில்லை. வெள்ளை அறிக்கை கேட்டும் அரசு தருவதில்லை. இந்த நிலையில் அணு ஆற்றலை, அணு சக்தியை ஒட்டு மொத்தமாக கொள்ளை இலாபமே நோக்கமாகக் கொண்ட தனியாரிடம் ஒப்படைத்தால் என்னவாகும் என்று சொல்ல வேண்டியதில்லை.   ஏற்கனவே நாட்டில் உள்ள மின் உற்பத்தியை முழுவதும் அதானி, அம்பானிகளிடம் ஒப்படைத்தாகிவிட்டது. அதன் விளைவாக, மின் கட்டண உயர்வு, மீட்டர் பொருத்துதல் என்று நாட்டு மக்களின் தலையில் இடி மின்னல் விழுந்து கொண்டிருக்கிறது. மிகவும் அத்தியாவசியமான பெட்ரோலியப் பொருள்களின் விலையை அதானி, அம்பானிக்கள்தான் ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்கிறார்கள். இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கு அம்பானிக்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி நரவணேயின் புத்தகம் வெளிவருவதற்கு முன்பே பிரதமர் மோடி நாட்டின் பாதுகாப்பில் எந்த அளவிற்கு அக்கறையற்று இருந்தார் என்பது சந்தி சிரிக்கிறது. இந்த நிலையில், அணு சக்தி, இராணுவம் எல்லாம் கார்ப்பரேட்டுகளின் கைகளில் என்றால், நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. அதோடு மட்டும் நிற்கவில்லை. இராணுவத் தளபதிகளை, அறிவியல் அறிஞர்களை கார்ப்பரேட் சாமியார்களின் காலடியில் விழச் செய்து விட்டது இந்த பாசிச ஆர்எஸ்எஸ்-பாஜக அரசு. காடுகளை அழித்து, வன விலங்குகளைக் கொன்று, கொலை, கொள்ளைகளில் தொடர்புடையவர் என்று சொல்லப்படுகிற, சுற்றுச் சூழலை மாசுபடுத்திக் கொண்டிருக்கிற, பக்தி என்ற பெயரில் பல லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஈஷா ஜக்கி நடத்திய சிவராத்திரி விழாவில், சிந்தூர் இராணுவ நடவடிக்கையில் சிறப்பாகச் செயல்பட்டார்கள் என்று சொல்லி இந்திய நாட்டின் முப்படை இராணுவ அதிகாரிகளுக்கு ‘பாரத் பூஷன்’  விருது வழங்கப்படுகிறது. அந்த விருதுகளை இந்திய நாட்டின் இராணுவ அமைச்சரே அங்கு வந்து வழங்குகிறார். அப்படி என்றால், இந்த நாட்டை ஆள்பவர்கள் யார்? இந்த நாட்டின் ஆட்சி அதிகாரம் உண்மையில் யார் கையில் இருக்கிறது. இந்திய நாட்டின் பாரத் ரத்னா, பத்ம பூஷன் போன்ற விருதுகள் இந்திய அரசால், குடியரசுத் தலைவரால்தான்் வழங்கப்படும். இப்போது இந்த ஈஷா ஜக்கி, பாரத பூஷன் என்றெல்லாம் விருது வழங்குகிறார் என்றால், அரசாங்கம் யார் நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. அந்த எப்ஸ்டின் நாட்டிற்கு வெளியே தனி தீவு வைத்திருந்தான் என்றால், இந்த ஜக்கி நாட்டிற்குள்ளேயே அதுவும் தமிழ்நாட்டிற்குள்ளேயே காட்டை அழித்து மர்மத் தீவாக ஆக்கி வைத்துத்துள்ளார். இந்த ஈஷா மையத்திற்கு என்று தனிச் சுடுகாடு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதற்காக அங்கு தனி சுடுகாடு? இந்த நாட்டை ஆளப் போகிறோம், நாட்டு மக்களுக்கு விடிவு தரப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் ஜக்கியிடம் சரணடைந்துகிடக்கிறார்கள். வடக்கில் பாபா ராம் தேவ் என்றால், தெற்கே இந்த ஈஷா ஜக்கி என கார்ப்பரேட் சாமியார்கள் இந்த நாட்டை ஆள, மக்களை மயக்கத்தில்  ஆழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகத்திலும் புரட்சி செய்த இராமானுஜர், இராமலிங்க வள்ளலார், நாராயண குரு, அய்யா வைகுண்டர், அய்யன்காளி போன்றோர் வாழ்ந்த இந்த தமிழ்நாட்டில், பெரியார் இன்னும் மக்கள் மத்தியில் கருத்துகளால் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லும் தமிழ்நாட்டில், இந்த கார்ப்பரேட் சாமியார்களின் அதிகார வரம்பெல்லை அதிகரித்துக் கொண்டே போவது தமிழ்நாட்டிற்கு பேராபத்தாகும். வனத்தை அழித்த ஜக்கியை ‘சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்’ என வளர்த்துவிட்டத்தில் கலைஞருக்கும் பங்கிருக்கிறது. அன்று செய்த தவறை இன்று, கார்ல் மார்க்ஸ் சிலையை நிறுவிய, இராமலிங்க வள்ளலாருக்கு விழா எடுக்கப்படும், வடலூரில் வள்ளலார் நெறி பரப்பும் பள்ளி அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள, முதல்வர் ஸ்டாலின் அவர்கள், உழைக்கும் மக்கள் விரோத இந்த போலிச் சாமியார்களின் நடவடிக்கைகளை ஒழித்துக் கட்டி, பெரியாரின் கொள்கைகளைப் பரப்பி சரிசெய்ய முன்வர வேண்டும்.

20 February, 2026