நான்குநேரி மீண்டும் பேசுபொருளாகி உள்ளது. 2026 மார்ச் 2 இரவு 8 மணியளவில், நான்குநேரி, பெரும்பத்து கிராமத்திற்குள் ஆள் நடமாட்டம் உள்ள கடைவீதியில், மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அரிவாளால் 7 பேரை சரமாரியாக வெட்டிச் சாய்த்து விட்டுச் சென்றுள்ளார்கள். இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் செங்கற்சூளையில் வேலை பார்க்கும் வட மாநிலத் தொழிலாளி. மற்றவர்கள் கொடும் வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் நால்வர் நாடார் சமூகம்; ஒருவர் கோனார் சமூகம். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று 7 பேரை மார்ச் 3ம் தேதி இரவு காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் நான்குநேரி சின்னத்துரையையும் அவரது தங்கையையும் வீடு புகுந்து வெட்டியவர்கள். அந்தச் சிறுவர்கள் சிறையில் இருந்தபோதே, எவ்வித அச்ச உணர்வுமின்றி, ‘அடுத்த ஆபரேஷனுக்கு ரெடி’ என்பதுபோல குதூகலத்துடன் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர் அச்சாதியவாதிகள். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நான்குநேரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் தாங்கள்தான் அதிகாரம் மிக்கவர்கள் என்பதைக் காட்ட இந்த வன்கொலையை அரங்கேற்றியுள்ளனர் என்பதாகவே தெரிகிறது. பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்தி்ய அமைச்சர் எல்.முருகன் போன்றோர் கஞ்சா போதையில் நடத்தப்பட்ட கொலை என்றும் தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது, சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் விட்டது என்று உடனடியாக அறிக்கை விட்டார்கள். கஞ்சா போதையில் வெறியாட்டம் என்று சொல்லும் நயினார் நாகேந்திரன் அவர்கள் கொலையைக் கண்டிக்கவோ, கொலையாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தவோ இல்லை. கொலையாளிகள் திட்டமிட்டு கருப்பு துணியைக் கொண்டு முகத்தை முற்றிலும் மறைத்துக் கொண்டு வந்துள்ளனர். கஞ்சா போதையில் வெட்டினர் என்றால் கடை வீதியில் நின்ற எல்லாரையும் வெட்டியிருக்க வேண்டுமே. ஒரு குறிப்பிட்ட சாதியினரை விவரமாக தவிர்த்து விட்டுள்ளார்களே என்கிறார்கள் பெரும்பத்துக்காரர்கள். மது, கஞ்சா போதையைக் காட்டிலும் மிக மோசமான சாதி வெறி, மதவெறிப் போதை இளைஞர்களுக்கு ஊட்டப்படுகிறது. ஓராண்டிற்கு முன்பு நயினார் நாகேந்திரன் அவர்கள் தன்னுடைய சமுதாயத்தினர் நடத்திய கூட்டத்தில், சாதிப் பெருமை பேசி கொலை வெறியை தூண்டும் வகையில் உரையாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகச் சுற்றி வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. திருப்பரங்குன்றத்தில் இதுவரை இல்லாத புது வழக்கமாக தூண் ஒன்றில் தீபம் ஏற்ற இந்துக்கள் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்று அனைத்து சாதியினருக்கும் அழைப்பு விடுக்கும் பாஜக சங்கிகள், சாதியாதிக்கப் படுகொலைகள் தடுக்கப்பட வேண்டும் அதற்காக இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று ஒப்புக்காவது சொல்வார்களா? நிச்சயமாக மாட்டார்கள். யாரெல்லாம் ஆதிக்க சாதிப் பெருமை பேசுகிறார்களோ அவர்கள்தான் இந்துத்துவம், சனாதனம் என்றும் பேசுகிறார்கள். இவர்கள்தான் சாதி மறுப்பு காதல் திருமணங்கள் கூடாது என்று ஆணவப் படுகொலைகளைத் தூண்டிவிடுகிறார்கள். சாதி வன்முறையை தடுத்திட மாணவர்கள் கையில் சாதி அடையாள வண்ணக் கயிறு கட்ட அனுமதிக்கக் கூடாது என்று நீதிபதி சந்துரு அவர்கள் பரிந்துரைத்த அறிக்கை நகலை, இந்து மத நம்பிக்கைக்கு எதிரானது என்று சொல்லி தேனி ஊராட்சி குழுக் கூட்டத்தில் துணைத் தலைவர் ராஜாபாண்டி கிழித்து எறிந்தார். இது நீதிபதி சந்துரு அவர்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் தனது அறிக்கையை வழங்கிய அடுத்த நாளே நடந்தது. இந்துத்துவமும் சாதியாதிக்கமும் பின்னிப் பிணைந்தது. இதை தமிழ்நாட்டிலும் சங்கிகள் தங்களின் பாசிச சதித் திட்டத்திற்கு சரியாகவே பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். சமூக நீதி பேசினாலும் சாதி வாக்குகளுக்காக ஆட்சியிலிருப்பவர்கள் அடக்கி வாசிக்கிறார்கள். நீதிபதி சந்துரு அவர்களின் அறிக்கையும் பரிந்துரைகளும் அரசிடம் கொடுக்கப்பட்டு ஓராண்டிற்கும் மேலாக கண்டு கொள்ளப்படாமல் கிடக்கிறது. காவல்துறையிலும் ஆதிக்க சாதி வெறி தலை விரித்து ஆடுவதால், கொலைகாரக் கும்பல்கள் குதூகலத்துடன் சுற்றி வருகிறார்கள். பாதிக்கப்படுபவர்கள் பக்கம் தமிழ்நாடு அரசும் காவல்துறையும் கறாராக நிற்க வில்லை என்றால் சாதியாதிக்கப் படுகொலைகள் மேலும் அதிகரிக்கவே செய்யும். தமிழ்நாடு அரசு இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் மனைவி அல்லது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வெட்டுப்பட்டு சிகிச்சையிலிருப்பவர்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சையும் அய்ம்பது லட்ச ரூபாய் இழப்பீடும் வழங்கிட வேண்டும். அனைத்திற்கும் மேலாக, தில்லியிலிருந்து கொண்டு தமிழ்நாட்டை ஆள நினைக்கும் சனாதன பாஜகவின் எல்.முருகன், நாகேந்திரன்களின் வெறுப்பை விதைக்கும் வாய்களும் கலவரமூட்டும் கைகளும் கட்டிப் போடப் பட வேண்டும். அதற்கு திமுக அரசு, நீதிபதி சந்துரு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு நடைமுறைப்படுத்திட வேண்டும். அதோடு மட்டுமின்றி திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக, தமிழ்நாட்டில் சாதியாதிக்கப் படுகொலைகளும் சாதி மறுப்பு, காதல் திருமணப் படுகொலைகளும் தடுத்து நிறுத்தப்படும் என அறிவிப்பு செய்து, இந்த வகையிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
