தலையங்கம்

காத்திருக்கும் பேரபாயங்களும் கலகங்களும்!

$articleData->title

காத்திருக்கும் பேரபாயங்களும் கலகங்களும்!

தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேங்களில்  வாக்குப் பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கைக்காக காத்துக் கொண்டிருக்கும் வேளையில், பாஜக மோடி அரசு தன்னுடைய பாசிச திட்டங்களை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.  உலகிலேயே மிகப் பெரிய பொதுத் துறையான இந்திய இரயில்வேயில் 2 சதவீத ஊழியர்களை அதாவது 14 லட்சத்து 80 ஆயிரம் பணியிடங்களில் சுமார் 30 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்து இந்திய இரயில்வே வாரியம் அனைத்து மண்டலங்களுக்கும்  சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஒவ்வொரு நிதி ஆண்டும் இரயில்வேயில் உள்ள பணியிடங்களை ஒழித்துக் கட்டிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. கடந்த 2024-25ம் ஆண்டில் மட்டும் சுமார் 28 ஆயிரத்து 800 பணிடங்கள் ஒழிக்கப்பட்டன. ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாகச் சொல்லி ஆட்சிக்கு வந்த மோடி அரசு, இப்போது ஒவ்வொரு ஆண்டும் இருக்கின்ற வேலையைப் பறிக்கின்ற வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது.  மோடி அரசு, ஏற்கனவே விமானப் போக்குவரத்தை முற்றிலுமாக தனியாரிடம் ஒப்படைத்துவிட்டது. இயில்வேயையும் கொஞ்சம் கொஞ்சமாக தனியாரிடம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. உணவு தயாரிப்பு, பரிமாற்றம் முதல் தூய்மைப் பணி, பராமரிப்பு என ஒவ்வொன்றாக தனியார் ஒப்பந்ததாரர்களிடம் கொடுத்துவிட்டது. இரயில்வேயில் உள்ள நிரந்தரத் தொழிலாளர்களை படிப்படியாக வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ஒட்டு மொத்தமாக தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம்தான் இந்த ஆள் குறைப்பு நடவடிக்கை. பல மாநிலங்களில் தேர்தல்கள் நடக்கும் போதே  கொஞ்சமும் பதறாமல் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைத் திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு. நீதித் துறை உட்பட எல்லா துறைகளும் தம் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் நாங்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்வோம் என்கிறது பாசிச மோடி அரசு.  அதற்கேற்பவே இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் கூட இருக்கிறார். தொழிற்சங்கங்களால்தான் வேலைகள் பறி போகின்றன என்றும் தொழிற்சங்கங்கள்தான் போராட்டங்களைத் தூண்டி விடுகின்றன என்றும் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், நோய்டாவில் நடக்கும் தொழிலாளர் போராட்டங்கள் எந்தவொரு தொழிற்சங்கத்தின் தலைமையின்றி தன்னெழுச்சியாக நடைபெறுகின்றன. மோடி அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும் ஆட்குறைப்பும் வேலை நேர நீட்டிப்பும் விலைவாசி உயர்வும்தான் அந்தத் தொழிலாளர்களின் போராட்டத்தைத் தலைமைதாங்கிக் கொண்டிருக்கின்றன. இன்னொருபுறம் பன்முகக் கலாச்சாரம் கொண்ட இந்தியாவை ஒற்றை கலாச்சாரத்திற்குள் கொண்டு வருவதற்கு அமைச்சர், ஆளுநர், நீதிபதி என பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆர்.என்.ரவி போய் அவ்விடத்திற்கு வந்துள்ள ஆர்வி.அர்லேகர், சென்னையில் ஒரு விழாவில் பேசும் போது நமது நாடு பல்வேறு கலாச்சாரங்கள் கொண்டதல்ல. நாம் வெவ்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் அல்ல, வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியா வரை ஒரே கலாச்சாரம்தான் என்று பேசுகிறார்.  மத்தியப் பிரதேசம் போபால் சட்டப் பல்கலைக் கழகத்தின் விழாவில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, சட்ட மாணவர்கள் தங்களின் பண்பாடு மற்றும் சிந்தனை வேர்களில் இருந்து முற்றிலும் விலகிவிட்டனர்; அவர்களை பண்பாட்டு வேர்களுடன் இணைக்க தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில், மநுஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம் கட்டாயமாகப் படிக்கச் செய்ய வேண்டும் என்று பேசியிருக்கிறார். ஆளுநரும் நீதிபதியும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி பதவி ஏற்றவர்கள். ஆனால், அவர்கள் தங்களின் உறுதியேற்புக்கெதிராக, இந்திய அரசிலமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசுகிறார்கள். பரப்புரை செய்கிறார்கள். பாசிச பாஜகவின் இந்து நாடு, இந்துத்துவம், இந்தி மொழி கொள்கையைத் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காபந்து அரசாங்கம் பிரெஞ்சு மொழியை நீக்கி விட்டு இந்தியை அல்லது சமஸ்கிருதத்தைப் படிக்கச் சொல்லி பாடத் திட்டத்தை மாற்றுகிறது. காத்திருக்கும் இந்த பாசிசப் பேரபாயங்களில் இருந்து மக்கள் தங்கள் உரிமைகளையும் உடமைகளையும் காக்க கலகங்களில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது. அதேவேளை அதை அரசியலற்ற போக்கில் அல்லாமல் சரியான திசைவழியில் கொண்டு செல்லும் கடமையும் பொறுப்பும் இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு சக்திகளின் கைகளில் இருக்கிறது.

29 April, 2026