பிப்ரவரி 12, 2026 அகில இந்திய பொது வேலை நிறுத்தம்.

இனியும் பொறுப்பதற்கில்லை! வீதிகளில் அணி திரள்வோம்!

$articleData->title

பிப்ரவரி 12, 2026 அகில இந்திய பொது வேலை நிறுத்தம்.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற பின்னணியில், 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ஒன்றிய மோடி அரசு,  நவம்பர் 21, 2025 அன்று  அரசிதழில் வெளியிட்டிருக்கிறது.

அதற்கு சில நாள்களுக்கு முன்பாக ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சரையும் பட்ஜெட்டுக்கு முந்திய கலந்தாலோசனை கூட்டத்தில் ஒன்றிய நிதி அமைச்சரையும் மைய தொழிற்சங்கத் தலைவர்கள் சந்தித்து இந்திய தொழிலாளர் மாநாட்டை நடத்தும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென சட்டத் தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசும் பல்வேறு மாநில அரசாங்கங்களும் இன்னும் சட்டத்தொகுப்புகளுக்கான விதிகளை உருவாக்கவில்லை. இந்தத் திடீர் நடவடிக்கை காரணமாக தொழிலாளர் நீதிமன்ற செயல்பாடுகள் முடங்கிய பிறகு, அடுத்த நாளே ஒரு திருத்தத்தை வெளியிட வேண்டிய நிலை இருந்தது.

பிறகுதான் 4 சட்டத் தொகுப்புகளுக்கான ஒன்றிய வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் கருத்துச் சொல்ல 45 நாட்கள் அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டத் தொகுப்புகளை வெளியிட்ட போதே ஏஐசிசிடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மிக விரிவான கருத்துக்களை தெரிவித்து மறுப்பை பதிவு செய்திருந்தன. ஆனால் எவற்றையும் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை.

கூடவே, இப்போது ‘ஸ்ரம் சக்தி நிடி’ என்ற வரைவு தொழிலாளர் கொள்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதிகாசங்கள், புராணங்கள், உபநிஷத்துகளை ஆதாரமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள வரைவு தொழிலாளர் கொள்கையானது உழைப்பை ‘தர்மா’ என்றும் ‘கடமை’ என்றும் சொல்லி உரிமைகள் பற்றி பேசக்கூடாது என்கிறது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை மறுத்து மனுதர்மப்படி தொழிலாளர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தக் கொள்கையின் சாரமாகும்.

4 சட்ட தொகுப்புகள் குறித்த மிகப்பெரும் மாயையை ஏற்படுத்தும் பிரச்சார இயக்கத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் அனைத்திலும் தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டு இந்த சட்டத் தொகுப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக விஷம பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. சங் பரிவாரத்தின் பாரதிய மஸ்தூர் சங்கம்(BMS) இப்பிரச்சாரத்தை தொழிலாளர்கள் மத்தியில் கொண்டு செல்வதில் முன்னணி பங்காற்றி வருகிறது.

மின்சாரத்துடன் 10 பேர் வேலை செய்யக்கூடிய இடங்களும் மின்சாரம் இல்லாமல் 20 பேர் பணி செய்யக்கூடிய இடங்களும் தொழிற்சாலை என்ற வரையறைக்குள் இருந்ததை இப்போது முறையே 20 பேர், 40 பேர் பணிபுரிந்தால் தான் என்று புதிய சட்டத் தொகுப்பில் எண்ணிக்கையை உயர்த்தியிருக்கிறார்கள். இதனால்  கிட்டத்தட்ட 60% தொழிலாளர்கள் சட்ட வரையறையிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். மேலும் ‘குறித்த கால வேலை’ என்பதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஆட்குறைப்பு, கதவடைப்பு செய்ய 100 தொழிலாளர்களுக்கு மேல் இருந்தால் அரசாங்கத்தின் அனுமதி பெற வேண்டும் என்பதை இப்போது 300 தொழிலாளர்கள் வரை அனுமதி பெறத் தேவையில்லை என்பதாக சட்டத் தொகுப்புகள் மாற்றியுள்ளன. இது முதலாளிகளுக்கு கேட்பாரற்ற சுதந்திரத்தைக் கொடுக்கிறது. முதலீடு போடுகிற முதலாளி, நிலம் (விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டவையும் அடங்கும்) மின்சாரம், நிலத்தடி நீர் இன்ன பிற பொது உட்கட்டமைப்புகள் அனைத்தையும் பயன்படுத்தித் தான் லாபம் ஈட்டுகிறார்கள். ஆகவே, அவர்கள் மனம் போன போக்கில் தொழிற்சாலையை மூடிவிட்டுப் போக முடியாது என்ற காலங்காலமாக கடைப்பிடித்து வரும் நிலைபாட்டிற்கு விடை கொடுக்கப்படுகிறது.

அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படும் என தொழில் உறவு சட்டத் தொகுப்பு குறிப்பிடுகிறது. பணி நியமன ஆணைகளில் வேலை அளிப்பவர், தன்னுடைய எல்லா நிபந்தனைகளையும் குறிப்பிட முடியும். சென்னை ராம்கி நிறுவனம், தூய்மைப் பணியாளர்களை பணிக்கமர்த்த நியமன ஆணை வழங்குவதாகச் சொல்லப்பட்டது. அதில் வீடுகளில் குப்பையை சேகரிக்கும் பணிக்கு 6 மாத காலம் பயிற்சி என்று சொன்னது. அது மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற சரத்தும் இடம் பெற்றிருந்தது. இன்னொரு புறம், 100 பேருக்கு மேல் இருந்தால் கட்டாயமாக நிலையாணைச் சட்டம் பொருந்தும் என்பதை இப்போது 300 பேராக மாற்றி இருக்கிறது. நிலையாணைகள் சட்டத்தில் தான் தொழிலாளருடைய பணி நிலைமைகள் பற்றி, ஒழுங்கு நடவடிக்கை முறைகள் பற்றி தொழிலாளர்கள் தங்களது கருத்துக்களைச் சொல்ல இடம் உண்டு. முதலாளி- தொழிலாளி இணைந்து தொழிலாளர் ஆணையர் சான்றளித்து நடைமுறைப்படுத்த வேண்டிய ஆவணமாக நிலையாணைகள் உள்ளன. பிரச்சனை வந்தால் சரத்துகளில் திருத்தங்கள் கொண்டு வரவும் முடியும். புதிய சட்டத் தொகுப்புகள் எண்ணிக்கையை 300 ஆக உயர்த்துவதன் மூலம் பெரும்பாலான நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் சட்டப் பாதுகாப்பை ஒழித்துக் கட்டுகிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான், முதன் முதலில் தொழிற்சங்க இயக்கம் முன்னெடுத்த கடும் போராட்டங்களின் விளைவாக கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டதோடு நல வாரியங்களும் உருவாக்கப்பட்டன. செஸ் வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டு, முறைசாராத் தொழிலாளர்கள் பயன்களைப் பெற்று வருகின்றனர். புதிய சட்டத் தொகுப்புகள் அமலாக்கப்படும்போது நல வாரியங்கள் கைவிடப்படும் அபாயம் எழுந்துள்ளது. ஏற்கனவே ஜிஎஸ்டி என்ற வரிமுறை வந்தபோது, பீடி செஸ் வரி ரத்து செய்யப்பட்டது. அதனால், பீடி தொழிலாளர் நலச் சட்டமும் கைவிடப்பட்டது. இப்போது அரசாங்க உதவியுடன் சொற்ப அளவில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இதுவரை இல்லாத வகையில் கிக், பிளாட்பார்ம் தொழிலாளர்கள் (ஸ்விக்கி,  ஸோமாட்டோ மூன்று நிறுவனங்களில் பணியாற்றுவோர்) பயனடைவார்கள் என்ற அரசாங்கப் பிரச்சாரம் பித்தலாட்டம் தவிர வேறல்ல. வெறும் காப்பீடு மட்டுமே அவர்களுக்கு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. அவர்களை ஒரு தொழிலாளியாக அங்கீகரிக்கவே இல்லை. தொழிலாளியாக அங்கீகரிக்கும் போது தான் அவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி என்ற உண்மையான சமூகப் பாதுகாப்புத்  திட்டங்கள் கிடைக்கும்.

தாக்குதல் பலம் கொண்ட அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களின் உரிமைகளும், சலுகைகளும் பறிபோகும்போது, அமைப்புச்சாராத் தொழிலாளிக்கு பலன் கிடைக்கும் என்பது விஷம பிரச்சாரமே ஆகும்.

ஊதிய சட்டத் தொகுப்பில் குறைந்தபட்ச ஊதிய சட்டப்படியான பாதுகாப்பு கூட இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. தரைமட்டக் கூலி (நாள் ஒன்றுக்கு ரூபாய் 176) என்பதை அறிமுகப்படுத்தி தரைமட்டக் கூலி கொடுத்தால் போதுமானது என்று சொல்லப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கூலி கேட்டு வழக்கு தொடுக்க முடியாது.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவும் போது, பெண் தொழிலாளர்களை இரவு நேர பணிக்கு விருப்பத்தின் பேரில் அனுமதிக்கலாம் என்கிறது சட்டத் தொகுப்பு. இதையே பெண் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரமாகவும் அவர்கள் கூறிக் கொள்கின்றனர்.

“தொழில் செய்வதை இலகுவாக்குதல்” என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் தொகுப்புகள் எவ்வித தொழிற்சாலை ஆய்வும் தேவையில்லை என்கிறது. எல்லா சட்டங்களும் பின்பற்றப்படுவதாக ஆலை அதிபர்கள் சுய சான்றிதழ் அளித்தால் போதுமானது என்கிறது.

தொழில் உறவு சட்டத் தொகுப்பானது தொழிற்சங்கப் பதிவை, போராடும் உரிமையை, வேலை நிறுத்த உரிமையை பறிக்கும் வகையில் இருக்கிறது.

இந்தச் சட்டத் தொகுப்புகளானது ‘காலை வெட்டி எடுத்துவிட்டு அவருக்கு ஊன்றுகோல் கொடுப்பது’ போல் உள்ளது.. 

 புதிய, புதிய சட்டங்கள், புதிய, புதிய தாக்குதல்கள்:

ஏற்கனவே அனல் மின்சாரம், புனல் மின்சாரம், காற்றாலை, சூரிய சக்தி மின்சாரம் எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் இருக்கும் போது, இப்போது அணு மின்சாரமும் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளிடம் கொடுக்க வகை செய்யும் சாந்தி ( SHANTI) சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காப்பீட்டு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் சட்டம், விவசாயிகளை கார்ப்பரேட்டுகளுக்கு அடிமைகளாக்கும் விதைச் சட்டம் ஆகிய எல்லாம் நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இருக்கும் எண்ணிக்கை பலத்தை வைத்துக்கொண்டு எவ்வித ஜனநாயக நடைமுறைகளையும் பின்பற்றாமல் நிறைவேற்றப்பட்டு விட்டன.

போராடி, சிறை சென்று, தியாகம் செய்து பெற்ற தொழிலாளர் உரிமைச் சட்டங்கள் அனைத்தும் பறிபோகின்றன.

165 நாட்களாக நீண்ட, போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்தி வெற்றி கண்ட சென்னை தூய்மைப் பணியாளர்களின் போராட்ட மரபை,  பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு உத்தரப்பிரதேசத்தில் ஏஐசிசிடியு  தலைமையில் நடந்து வரும் ஆஷா பெண் தொழிலாளர் போராட்ட மரபை உயர்த்திப்பிடித்து ஒன்றிய மோடி அரசின் மதவெறி பாசிச கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக களம் காணுவோம்.

பிப்ரவரி 12 வேலை நிறுத்தத்தை பெரும் வெற்றியடையச் செய்வோம்!


23 January, 2026