இறுதிப்போட்டி
கால்பந்து உலக கோப்பை இறுதிப்போட்டியை, தொலைக்காட்சி வாயிலாக 200 கோடி பேர் வரை பார்த்திருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. பொது பூங்காக்களில், மது விடுதிகளில், வீடுகளில் இருந்து உலகம் முழுவதும் இந்த ஆட்டத்தை கவனித்தார்கள். அய்க்கிய அமெரிக்காவில் ஃபாக்ஸ் டெலிமுண்டோ நிறுவனங்கள் ஒளிபரப்ப, ஆறு கோடியே 60 லட்சம் பேர் பார்த்திருப்பார்கள். மெஸ்ஸியின் மந்திர கால்கள் 40 வயதிலும் சாதனை புரியுமா, தடுப்பாட்டக்காரர்களை எல்லாம் தந்திரமாக ஏமாற்றி, தடைகளை எல்லாம் தாண்டி, காலால் உதைத்தோ தலையால் முட்டியோ கோல் போடுவாரா என்ற எதிர்பார்ப்பு, எல்லா கண்டங்களிலும் இருந்தது. இன்னொரு புறம், மெஸ்ஸி விளையாடிய ஸ்பெயினின் பார்சிலோனா அணிக்காக விளையாடும் 18 வயது இளைஞர் லாமின் யாமல் கோல் போடுவாரா என்ற எதிர்பார்ப்பும், வேகம் அடைந்து வந்தது. யாமல் விறுவிறுப்பான ஆட்டத்தையும் வேகத்தையும் திறமையும் கொண்டிருந்த அதே நேரத்தில், பாலஸ்தீனத்தின் கொடியை உயர்த்திப் பிடித்ததன் மூலம் மானுடத்தின் பக்கம் நின்றார். அர்ஜென்டினாவின் ஆட்சித் தலைவர் மிலேய், இஸ்ரேல் உடைய தீவிர ஆதரவாளராகவும், டிரம்ப்பினுடைய அணுக்கமான நண்பராகவும் இருந்தார். அவருக்கு தெரிந்த ஒரே இடது என்பது, மெஸ்ஸியினுடைய இடது கால் தான் என்று சொல்லி, உலகெங்கும் இருந்த கோடானு கோடி மக்கள் பற்றாளர்களின் உணர்வுகளை, சீண்டியிருந்தார்.
இந்த விளையாட்டில், இப்போது, வரலாற்று முரண் ஒன்று அரங்கேறி உள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, போர்ச்சுக்கல், நாடுகளோடு சேர்ந்து, நாடு பிடிக்க புறப்பட்ட ஸ்பெயின், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அர்ஜென்டினாவை காலனி அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கியது. இப்போது வரலாறு மாறி, அர்ஜென்டினா, அடிமைத்தனத்தின் பக்கம், ஆதிக்கத்தின் பக்கம், மானுட விரோதி இஸ்ரேலின் பக்கம், நின்றது. ஸ்பெயின், அய்க்கிய அமெரிக்காவை எதிர்ப்பதில், இஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்ப்பதில், உறுதியாக இருந்த அதே நேரம், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக திட்டவட்டமாக நிலைப்பாடு எடுத்திருந்தது. இந்தப் பின்னணியில், விளையாட்டுக்குள் நுழைந்தது அரசியல். முற்போக்கு ஜனநாயக முகாமை சேர்ந்தவர்கள், ஸ்பெயினின் வெற்றிக்காக காத்திருந்தார்கள்.
ஆட்டம்.
ஆட்டம் துவங்கியது. 1.1/2 மணி நேரம் முடிந்தது. காய நேரமும், கடந்து போனது. இருதரப்பினரும் ஒரு கோல் கூட போடவில்லை. கூடுதல் நேரத்திற்கு ஆட்டம் சென்றது. ஸ்பெயின் வீரர்கள் வசம் பந்து 68 சதமும் , அர்ஜென்டினாவின் வசம் 32 சதமும் இருந்தது. ஸ்பெயின் வீரர்கள் 803 முறை சக வீரர்களுக்கு பந்தை மாற்றி விட்டார்கள். 90% சரியாக மாற்றி தந்தார்கள். அர்ஜென்டினா வீரர்கள் 445 முறை மட்டுமே பந்தை சகவீரர்களுக்கு மாற்றிவிட்டபோது, அதுவும் 78% மட்டும் சரியாக இருந்தது. அர்ஜென்டினாவின் மெஸ்ஸி உள்ளிட்ட முன்கள ஆட்டக்காரர்கள், முழுமையாக முடக்கப்பட்டார்கள். அந்த நேரத்தில்தான் ஆட்டத்தின் 106 ஆவது நிமிடத்தில் பெட்ரோ பெரோ காலால் உதைத்து கோலை நோக்கி பந்தை கிராஸ் செய்ய, மிகச்சரியாக நிக்கோ தாமஸ் அந்தப் பந்தை தலையால் முட்ட, பதிலியாக களம் கண்ட டோரஸ், தனது இடது காலால் பந்தை கோலுக்குள் உதைத்தார். ஸ்பெயின் தொடர்ச்சியாக 38 வது முறையும் வென்றது. அர்ஜென்டினாவுக்கு எந்த வாய்ப்பும் இறுதி போட்டியில் கிடைக்கவில்லை. அர்ஜென்டினா வீரர் சிகப்பு அட்டை பெற்று வெளியேறியதை தவிர, அவர்கள் தரப்பில், குறிப்பாக எதுவும் நடக்கவில்லை. ஸ்பெயினின் இந்த வெற்றி, பாலஸ்தீனத்தில் காசாவில் மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் கொண்டாடப்பட்டது. மற்ற சில முக்கிய ஆட்டங்கள் ஆட்டக்காரர்கள் பற்றி சொல்வதற்கு முன்பாக ஆட்டத்தை பற்றி வேறு சில செய்திகளை காண்போம்.
கால்பந்து ஆட்டம் - சில வார்த்தைகள்
ஆசியாவில், ஆப்பிரிக்காவில், அய்ரோப்பாவில், அய்க்கிய அமெரிக்காவில், அமெரிக்க கண்டத்தின் மற்ற நாடுகளில், கால்பந்தாட்டம் விளையாடப்படுகிறது. கால்பந்து விளையாட்டு எளிமையான விளையாட்டு இன்னமும் இந்தியாவின் தமிழ்நாட்டில் எளிய மக்கள் வாழும் பகுதிகளில், கால்பந்து விளையாடப்படுகிறது. ஜந்தர் மந்தர், அப்ஜித் தீப்கே, CJP, AISA, நேஹா போரா என்ற பெயர்களைப் போல், மெஸ்ஸி, யாமல், எம்பாபே, ரொனால்டோ போன்ற பெயர்களும், 2026 உலக கோப்பையை ஒட்டி பிரபலமாகி உள்ளன.
கால்பந்து ஆட்டத்தில், ஓர் அணிக்கு 11 வீரர்கள் வேண்டும். ஒருவர், பந்து வலைப்பகுதிக்குள் கோல் விழாமல் தடுக்கிற கோல் கீப்பராக இருப்பார். மற்றபடி பின்கள நடுகள தடுப்பாட்டக்காரர்கள், நடுகள முன்கள தாக்குதல் ஆட்டக்காரர்கள், இடதுபுறமும் வலது புறமும் ஓரங்களில் ஓடி ஓடி, பந்தை எதிரணியின் கோலுக்குள் கடத்த பார்ப்பவர்கள். முன்கள தாக்குதல் வீரர்கள் இருப்பார்கள். ஆட்ட நேரம் ஒரு பாதிக்கு 45 நிமிடம் என ஓர் இடைவெளியுடன் 1.1/2 மணி நேரம் இருக்கும். அதற்குள் கோல் விழவில்லை என்றால், கூடுதலாக மற்றொரு சிறு இடைவேளை போக, இரண்டு 15 நிமிடங்கள் ஆட்டம் இருக்கும். அப்போதும் கோல் விழாவிட்டால், கோல் வலைக்கு பக்கத்திலிருந்து கோல் கீப்பருக்கும், உதைப்பவருக்கும் இடையில் யாரும் இல்லாமல், பந்தை உதைத்து கோல் போடும் பெனால்டி வாய்ப்பு வழங்கப்படும்.
ஆட்டத்தில் தப்பாட்டம் ஆடப்பட்டால், கீழே விழுந்தவர்கள் காயமடைதல் நேரம் Injury Time என தனியாக வைக்கப்படும். இந்த காய நேரமும், பின்னர் கூடுதலாக சேர்த்துக் கொள்ளப்படும். டெஸ்ட் கிரிக்கெட்டை விட, 50 ஓவர் கிரிக்கெட்டை விட, டி 20 கிரிக்கெட் பிரம்மாண்டமான வணிக வெற்றி பெறுகிறது. அதேபோல் கால்பந்தாட்டமும் அதிகபட்சம் 2.1/2 மணி நேரம் 3 மணி நேரத்தில் முடிந்து விடும். மைதானத்திற்கு ஆள் வருவதற்கும் தொலைக்காட்சியில் காண வைப்பதற்கும், குறுகிய நேரத்தில் விறுவிறுப்பான விளையாட்டு, ஒரு முக்கிய விஷயமாகும். கால்பந்தாட்டத்தில் தலையால் முட்டி கோல் போட அனுமதி உண்டு என்பது மட்டும் இல்லாமல், அது சிறப்பாட்டமாக கூட பார்க்கப்படும். D-க்கு, அதாவது கோலுக்கு பக்கத்தில் உள்ள பகுதிக்கு வெளியில் இருந்து, போடப்படுகிற கோல் பீல்டு கோல் என அழைக்கப்படும். D க்குள் சென்று கோல் போட வேண்டுமென்றால், கோல் கீப்பர் தவிர்த்த எதிரணி ஆட்டக்காரர் ஒருவராவது D க்குள் இருக்க வேண்டும். ஆட்டத்தில் தப்பாட்டம் ஆடினால் மஞ்சள் எச்சரிக்கை அட்டையும், தப்பாட்டத்தை தொடர்ந்தால் சிவப்பு அட்டை வெளியேற்றமும் நடக்கும்.
2026 உலககோப்பை சில விவரங்கள்
இந்தப் போட்டியில் அய்ரோப்பாவில் இருந்து இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, டென்மார்க் குரேசியா, போலந்து, ஸ்வீடன், செர்பியா, வேல்ஸ், செக்குடியரசு என்ற 12 நாடுகள் கலந்து கொண்டன. கண்டத்து நாடுகளில் அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே, ஈக்வடர், கொலம்பியா, சிலி, பெரு, மெக்சிகோ, கோஸ்டாரிக்கோ, பனாமா, குராக்கோ என்ற 11 நாடுகளும், வட அமெரிக்காவில் இருந்து அய்க்கிய அமெரிக்கா மற்றும் கனடாவும் கலந்து கொண்டன. ஜப்பான், தென்கொரியா, ஈரான், சவுதி அரேபியா, கத்தார், ஈராக், உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் நாடுகளும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளும் கலந்து கொண்டன. ஆப்பிரிக்காவிலிருந்து மொராக்கோ, செனிகல், துனீசியா, எகிப்து, நைஜீரியா, கானா, கேமரூன், மாலி, கபே வர்டே ஆகிய நாடுகள், கலந்து கொண்டன.
48 உலக நாடுகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் அடுத்த மூன்று அணிகளுடன் ஆடி முடித்த பிறகு, 12 நாடுகள் போட்டியிலிருந்து விடை பெற்றன. முன் கால்இறுதி, கால் இறுதி, அரை இறுதிப் போட்டிகள் என்பதாக ஆட்டம் மேலே சென்றது. 104 போட்டிகள் நடைபெற்றன. அய்க்கிய அமெரிக்கா கனடா, மெக்ஸிகோ என்ற மூன்று நாடுகளில், 16 நகரங்களில், 16 விளையாட்டு அரங்கங்களில் நடைபெற்ற 104 ஆட்டங்களை காண, 68,10,996 பார்வையாளர்கள் வருகை தந்தனர்.
சர்வதேச கால்பந்து சம்மேளனம் சென்ற உலகக் கோப்பையில் 7.57 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது. இந்த உலகக் கோப்பையில் வருவாய், 13 பில்லியன் டாலர் ஆனது.
போட்டியில் 308 கோல்கள் போடப்பட்டன. சராசரி பார்த்தால், ஓர் ஆட்டத்திற்கு 2.96 கோல்கள். முதல்முறையாக அதிகபட்சமாக, அணிகள் தமக்கு எதிராக போட்ட சொந்த கோல்கள் 14 என உயர்ந்தது. தொலைதூரத்தில் இருந்து உதைத்து போடப்பட்ட கோல்கள் 37 ஆகவும் பெனால்ட்டியில் போடப்பட்ட கோல்கள் 59 ஆகவும் இருந்தன. இந்த உலகக் கோப்பையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் அர்ஜென்டினாவை முறியடித்து வெற்றி பெற்றது. மூன்றாவது இடத்தை இங்கிலாந்தும், நான்காவது இடத்தை பிரான்சும் பெற்றன. ஸ்பெயின் அணியின் தலைவரும் நடுகள வீரருமான ரோட்ரி போட்டியின் ஆகச்சிறந்த வீரருக்கான தங்க கால்பந்தை வென்றார். இந்த போட்டியில் மட்டுமே 10 கோல்கள் போட்ட பிரான்ஸ் அணியின் தலைவர் கிளியன் எம்பாபே இரண்டாவது முறையாக தங்க காலணியை வென்றார். மெஸ்ஸி உலகக் கோப்பை ஆட்டங்களில் 21 கோல்கள் போட்டிருந்த நிலையில், 22 கோல்களுடன் கிளியன் எம்பாபே, அவரைத் தாண்டி சென்று விட்டார். போட்டியின் சிறந்த புதிய வீரர் விருதை, ஸ்பெயினின் பா குப்ராசி பெற்றார். போட்டியின் சிறந்த கோல் கீப்பர் விருதை, ஸ்பெயினின் உனாய் சைமன் வென்று, தங்க கையுறையைப் பெற்றார். ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் ஒரே ஒரு கோலை மட்டுமே, உனாய் சைமன் விட்டுக் கொடுத்தார். 650 நிமிடங்கள் ஆட்டத்தில், அவர் ஒரு கோல் கூட விடவில்லை.
5,25,000 மக்கள் தொகை மட்டுமே கொண்டிருக்கிற கபே வெர்டே நாடு, போட்டியை வென்ற ஸ்பெயினை, தனது முதல் ஆட்டத்திலேயே டிரா செய்தது. அர்ஜென்டினா, இந்த சிறிய நாட்டிற்கு எதிராக தட்டு தடுமாறி 3-2 என்ற கோல் கணக்கில் தான் வென்றது. 2022 உலகக்கோப்பை வென்ற அர்ஜென்டினா அணி, 2026 ல் தொடர்ந்து தடுமாறியது. அரை இறுதி போட்டியை எட்டும் வரை தரவரிசையில் முதல் 15 நாடுகளை அவர்கள் சந்திக்கவில்லை. அர்ஜென்டினா எகிப்திடமும், இங்கிலாந்திடமும் தடுமாறியே வெற்றி பெற்றது. ஸ்பெயின், சவுதி அரேபியா, உருகுவே, போர்ச்சுகல், பெல்ஜியம், ஆஸ்திரியா மற்றும் பிரான்சை எளிதாக வென்று, இறுதி போட்டிக்குள் சென்றது. இங்கிலாந்து காங்கோ ஜனநாயக குடியரசுடன் ஆடிய ஆட்டம் தவிர தவிர்த்து மற்ற ஆட்டங்களில் சிறப்பாகவே விளையாடியது. அர்ஜென்டினா உடன் ஆடியபோது, கடைசி நேரத்தில் முனைப்பிழந்து, நிச்சய வெற்றியை தோல்வியாக மாற்றிக் கொண்டது. போட்டி நெடுக, ஆதிக்கமும் வேகமும் கொண்டிருந்த பிரான்ஸ், அரையிறுதியில் ஸ்பெயினிடமும், மூன்றாவது இடத்திற்கான போட்டியில், இங்கிலாந்திடமும் தோற்றது.
கருப்பினத்தவர்களும் கால்பந்தும்
உலக கோப்பையில் விளையாடிய 48 நாடுகளில், அர்ஜென்டினா அணியில் மட்டுமே, ஒரு கருப்பின வீரர் கூட இல்லை. அர்ஜென்டினா இனவெறி நிறவெறிக்காக அவப்புகழ் பெற்றிருந்தது. அர்ஜென்டினாவின் ரசிகர்கள் இனவெறி, நிறவெறி கேலிக்காக, அவப்புகழ் பெற்றிருந்தனர். கால்பந்து விளையாட்டில் மந்திர திறமைகள் கொண்ட லியானல் மெஸ்ஸியை, இனவெறி நிறவெறியை திட்டவட்டமாக கண்டிக்கவில்லை என்ற ஒரு களங்கம் நிழலாக பின் தொடர்கிறது.
பிரான்சின் 26 ஆட்டக்காரர்களில் 21 பேர் கருப்பினத்தவர்கள். இங்கிலாந்து ஆட்டக்காரர்களில் 15 பேரும், நெதர்லாந்தில் 14 பேரும், பெல்ஜியத்தில் 9 பேரும், ஜெர்மனியில் 9 பேரும் கருப்பினத்தவர்கள். ஸ்பெயின் அணியின் சிறந்த இரு இளம் வீரர்களான லேமின் யமாலும், நிக்கோ தாமஸும் ஆப்பிரிக்கா வம்சாவளியினரே ஆவார்கள். உலகத்தின் ஆகப்பெரிய விளையாட்டில், ஆகப்பெரும் எண்ணிக்கையில், ஆகச்சிறந்த கருப்பின வீரர்கள் ஆடுகிறார்கள் என்பது, நிறவெறிக்கு இனவெறிக்கு பலத்த அடியாகும்.
கால்பந்தும் வணிக மயமும்..
கால்பந்தில் வணிக மயம் நிகழ்வது புதிய விஷயம் அல்ல. ஆனால் இப்போது அது புதிய உயரங்களை தொட்டு விட்டது என்று சொல்ல முடியும். வீரர்களின் வசதிக்காக என்பதை காட்டிலும், விளம்பர நேர வருமானத்திற்காக, தண்ணீர் அருந்த என்று சொல்லி, இரண்டு புதிய இடைவேளை நேரங்கள் புகுத்தப்பட்டன. குளிரூட்டப்பட்ட மைதானங்களிலும், ஆட்டத்தின் ஓட்டத்திற்கு தடை போடும், இந்த இடைவேளைகள் இருந்தன. அய்க்கிய அமெரிக்காவில் நடைபெற்ற போட்டிகளில், ஒரு போட்டிக்கு ஒரு டிக்கெட் ரூ 11 லட்சத்திற்கு விற்கப்பட்டது, பரவலான கண்டனத்தை பெற்றது. 2026 உலகக்கோப்பையில் விளையாடுபவர்களில், பிரிட்டிஷ் கால்பந்து கிளப்புக்காக விளையாடுபவர்கள் 200 பேர், ஜெர்மனி கிளப்புகளுக்காக விளையாடுபவர்கள் 109 பேர், பிரான்ஸ் கிளப்புகளுக்கு விளையாடுபவர்கள் 86 பேர், ஸ்பெயின் கிளப்புகளுக்கு விளையாடுபவர்கள் 86 பேர், இத்தாலி கிளப்புகளுக்கு விளையாடுபவர்கள் 71 பேர். மொத்த வீரர்களில் 552 பேர் அய்ரோப்பிய கிளப்புகளுக்கு ஆடுபவர்கள். இந்த கிளப்புகளில் 20 கிளப்புகளை, அய்க்கிய அமெரிக்க செல்வந்தர்கள் நடத்துகிறார்கள். 20 பெரிய அய்ரோப்பிய கிளப்புகளுக்கு, அரபு எமிரகமும் அபுதாபியும் ஸ்பான்சர் செய்கிறார்கள். பல ஆட்டங்களை கேலியாக, அபுதாபி எத்திகாத் எதிர் துபாய் ஃப்ளை எமிரேட்ஸ் ஆட்டங்கள் என, அழைக்கிறார்கள்.
எடுவர்டோ கலியானோ, உருகுவே அணியின் கால்பந்து சாம்பியனான கருப்பு அதிசயம் என்று அழைக்கப்பட்ட ஜோஸ் பாரிஸில் இருந்து திரும்பும் போது, ஒரு பட்டு கிமோனோ, சாம்பல் கையுறைகள், ஒரு கைக்கடிகாரம் மட்டுமே 1924 ல் கொண்டு வந்தார் என்றும், இறுதி காலங்களில் பதக்கங்களை விற்று, செய்தித்தாள்களை வீதியில் விற்று வாழ்பவராக இருந்ததாகச் சொல்கிறார். அப்போது ஒரு புட்டி மதுவிற்காக, கொண்டாட்டத்திற்காக, புகழுக்காக கால்பந்து விளையாடப்பட்டது. இன்று போச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஓராண்டு வருமானம் 300 பில்லியன் டாலரும், அர்ஜென்டினாவின் மெஸ்ஸி 140 மில்லியன் டாலரும், பிரான்சின் கிளியன் எம்பாபே 100 மில்லியன் டாலரும், நார்வேயின் எர்லிவ் ஹாலந்த் 80 மில்லியன் டாலரும், பிரேசிலின் வினிசியல் ஜூனியர் 60 மில்லியன் டாலரும், எகிப்தின் முகமது சாலே 55 மில்லியன் டாலரும், செனிகலின் சாடியோ மெனோ 54 மில்லியன் டாலரும், இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்காம் 44 மில்லியன் டாலரும், பிரான்சின் லாமின் யமால் 43 மில்லியன் டாலரும், இங்கிலாந்தின் ஹேரிகேன் 41 மில்லியன் டாலரும், வருமானமாக ஈட்டுகிறார்கள். (ஒரு மில்லியன் என்பது ரூ 9.7 கோடி ஆகும்.) வணிகமயமான பிறகும், நட்சத்திர வீரர்கள் கோடி கோடியாய் சம்பாதிக்க வாய்ப்பு உள்ள போதும், கால்பந்து விளையாட்டு மக்களால் நேசிக்கப்படும் மக்களை ஈர்த்துக் கொள்ளும் விளையாட்டாக உள்ளது. தமது மாறுபட்ட அணுகுமுறைகளுக்காக அணிகளும் ஆட்டத்திறமைக்காக வீரர்களும் கொண்டாடப்படுகிறார்கள்.
பிரான்சின் இரண்டு தோல்விகளும் நட்சத்திர ஆட்டக்காரர்களும்.
கடைசியாக கூட்டி கழித்துப் பார்த்தால் போடுகிற கோல்களே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். அசாத்திய வேகம், விளையாட்டு பற்றிய அறிவுத்திறன், அனுபவம், பாதகமான நிலைமைகளை துணிச்சலுடனும் உறுதியுடனும் கடப்பது என்ற விஷயங்களில், முதல் நிலையில் இருந்ததால்தான் எம்பாபே இந்த உலகக் கோப்பையில் 10 கோல்கள் போட முடிந்தது. 40 வயது ஆன நிலையிலும், மெஸ்ஸியின் கால்களும் உடலும் மனமும் துடிப்புடன் இருந்ததால்தான், மெஸ்ஸி இந்த உலகக் கோப்பையிலும் அற்புதமான 8 கோல்களைப் போட்டார். சில கோல்கள் போட உதவினார். இங்கிலாந்தின் ஜூட் பெர்லிங்ஹாம் 7 கோல்களும், அதே நாட்டின் ஹாரி கேன் 6 கோல்களும், நார்வேயின் எர்லிங் ஹாலந்து 7 கோல்களும், பிரான்ஸ் நாட்டின் டெம்ப்ளே 6 கோல்களும் போட்டு, பார்வையாளர்களைக் களிப்படையச் செய்தனர்.
பிரான்சின் இரண்டு தோல்விகள் கால்பந்து ஆர்வலர்களை வருத்தப்படவைத்தது. இந்த உலகக் கோப்பையை பிரான்ஸ் வெல்லும் என்று நினைக்க வைக்கும் அளவுக்கு, அதன் ஆட்டம் காலிறுதி வரை இருந்தது. எம்பாபே, டெம்ப்ளே, ஒலிசி என்ற பிரான்சின் மூவர், எந்த தடுப்புகளையும் தகர்ப்பவர்களாகத் தோன்றினார்கள்.
ஆனால் பிரான்சும் ஸ்பெயினும் சந்தித்தபோது ஆறு ஆட்டங்களில் 13 கோல்களை போட்ட, 10 கோள்கள் போட உதவிய பிரான்சின் எம்பாபே, டெம்ப்ளே ஒலிசி ஆகிய மூவரும், மங்கிப் போன நிழல்களாகவே களத்தில் நின்றனர். ஸ்பெயின் ரோட்ரியும், ரூய்சும் நடுகளத்தை கட்டுப்படுத்தினர். பா குப்ரேசியும் அய்மரிட் லாபோர்டும் எம்பாபேவை நகர விடாமல் தடுத்து விட்டார்கள். பிரான்ஸ் வீரர்கள் 408 முறை பந்தை அடுத்தவரிடம் அனுப்பினர் என்றால், ஸ்பெயின் வீரர்கள் 487 முறை பாஸ் செய்தனர். ஸ்பெயினின் வசம் பந்து 51 சதமும் பிரான்சின் வசம் 49 சதமும் இருந்தது. ஆனால் சிறந்த ஆட்ட முறையும் அணி ஓர்மையும் இருந்ததால் ஸ்பெயின் வெற்றி பெற்றது. ஒரு பெனால்டி, பதிலி ஒருவர் போட்ட கோல் என ஸ்பெயின் 2-0 என வென்றது.
இங்கிலாந்து பிரான்ஸ் ஆட்டம் போட்டியில் ஆகக் கூடுதலாய் 10 கோள்கள் போடப்பட்ட ஆட்டமாக இருந்தது. இடைவேளை வரை இங்கிலாந்து, 3, 18, 37, 45 ஆவது நிமிடங்களில் கோல்களைப் போட்டு 4-0 என முன்னிலை வகித்தது. பிரான்சுக்கு இடைவேளை முடிந்த பிறகு எம்பாபே இரண்டு கோல்கள், பர்கோலா ஒரு கோல், டெம்ப்ளே ஒரு கோல் போட்டனர். 87 ஆவது நிமிடம் புகாயோ சகா மூன்றாவது கோல் இங்கிலாந்துக்காகப் போட, பதிலியாக களம் இறங்கிய ஜூட் பெல்லிங்ஹாம் 98 ஆவது நிமிடம் கோல் போட இங்கிலாந்து 6-4 என வென்றது. கோல் மழை ஆர்வலர்களை நன்றாகவே நனைத்தது.
ஸ்பெயின் வெற்றி - தனி நபர் பொறுப்பேற்றலும் கூட்டு முயற்சியுமே காரணம்.
ரோட்ரி, யாமல், நிக்கோ உள்ளிட்ட ஸ்பெயின் வீரர்கள் உலகத்தரம் வாய்ந்த ஆட்டக்காரர்கள். பெல்ஜியம், போர்ச்சுக்கல், அர்ஜென்டினா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் பதிலிகளே கோல் போட்டு, வெற்றி தேடித் தந்தனர்.
இந்த உலகக் கோப்பையில் பந்தை அடுத்த ஆட்டக்காரருக்குக் கடத்துவதில் ஸ்பெயின் ரோட்ரி, அயமெரிக் லபார்டே மற்றும் பா குப்ராசியே முதல் மூன்று இடங்களில் இருந்தனர். தம் வசம் இருந்த பந்தை இழந்த பிறகு, சராசரியாய் 11.75 வினாடிகளுக்குள், ஸ்பெயின் வீரர்கள் பந்தைத் திருப்பி பறித்துக் கொண்டனர்.
அர்ஜென்டினா 17, பிரான்ஸ் 16, இங்கிலாந்து 13 கோல்கள் அரை இறுதி வரை போட்டிருந்த நிலையில், ஸ்பெயின் மொத்தம் 11 கோல்கள் தான் போட்டது. ஆனால் ஸ்பெயினுக்கு எதிராக போட்டி முழுவதும் ஒரு கோல் மட்டுமே போடப்பட்டது.
தாக்குதலுக்கும் தற்காப்பிற்கும் இடையில் சுலபமாக மாறி சென்ற, தனி ஆட்டக்காரரை விட அணியை ஆட்ட முறையை சார்ந்திருந்த ஸ்பெயின் வெற்றி பெற்றது. திறமையாளர்கள் அணியின் வெற்றிக்குப் பங்களிப்பு செய்தனர்.
