இந்தியாவின் டிஜிட்டல் தளங்கள் நெடுக கரப்பான் பூச்சி ஜனதா கட்சிப் (சிஜேபி) புயல் தொடர்ந்து வீசுகிறது.
2011ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஆம் ஆத்மி கட்சி எழவும், நரேந்திரமோடி 2014ல் பதவிக்கு வரவும் ஏவு தளமாக அமைந்தது; அதனால் சிஜேபி
நிகழ்வுப்போக்கு தொடர்பாக, அது தோன்றுவதற்கான காரணங்கள் அதன் தாக்கம், அது எதை நோக்கிச் செல்லும் என்ற விசயங்களில் சந்தேகங்களும்
விவாதங்களும் எழுவது இயல்பானதாகும்.
புயல் வீசும் போது, இந்த நிகழ்வு தொடர்பாக பலரும் கவனித்து விவாதித்து வரும் போது, துவக்கத்திலேயே சில விஷயங்களை சொல்வது அவசியமாகிறது.
கூடுதலான வெளிப்படைத் தன்மையையும் பொறுப்பேற்றலையும் கோருவதற்காக, சமூக ஊடக மேடைகள், தகவல் அறியும் உரிமை ஆகிய கருவிகளை பயன்படுத்தும், மாற்றுக் கருத்து உள்ளவர்களை, இந்திய தலைமை நீதிபதி சூரியகாந்த், கரப்பான் பூச்சி, ஒட்டுண்ணி போன்ற சொற்களால், இகழ்ந்து பேசியிருக்காவிட்டால், சிஜேபி என்ற நிகழ்வு நடந்திருக்காது. சில தினங்களுக்கு முன் 22 லட்சம் நீட் தேர்வு விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் எதிர்காலத்தை பாதிக்கும், மேலும் ஒரு வினாத்தாள் கசிவு நடந்தது; இந்த அனுபவமும் சிஜேபி புயல் தீவிரத்திற்கு காரணமாகும்.
இது, ஒரு தனி மனிதரின் கருத்து என்பதிலிருந்து, சில மணி நேரத்தில் சில நாட்களில், ஒன்றிணைந்த டிஜிட்டல் முன் முயற்சியானது; லட்சோப லட்சம் இணையவாசிகள், இந்த முன் முயற்சியை ஆகப் பெரிதாக மாற்றினார்கள்.
சிஜேபி உருவாக உடனடி உந்து விசையாக இருந்த விஷயங்கள் தாண்டி, இதற்கு Z தலைமுறையிடம் மிகப்பெரிய பிணைப்பு ஏற்பட்டதற்கான சூழலையும் நாம் காண வேண்டும். “நல்ல நாட்கள்” “இந்திய உலகளாவிய பெரிய சக்தி” என்ற மோடி அரசாங்க வெற்று வாக்குறுதிகளின் பலூன் உடைந்தது, முறை சார்ந்த விதத்தில் அடுத்தடுத்த தேர்தல்கள் திருடப்படுவது, இந்தியாவின் நிறுவனங்கள் சரிந்து நொறுங்கியது, குறிப்பாக மேலோங்கிய ஊடகங்களும் நீதித்துறையும் சரிந்தது, ஆம் ஆத்மி பரிசோதனை மோசமாக சரிந்தது என நிலவிய சூழல் காணத்தக்கதாகும்.
மோடி அரசாங்கமும் சங்பரிவாரும், இந்த டிஜிட்டல் புரட்சியால் கலகலத்துப் போயுள்ளனர். சிஜேபியின் X தள கணக்கை முடக்கினார்கள். அயல்நாட்டில் இருந்து இயங்கும் சக்திகள் இந்தியாவை சீர்குலைக்க மேற்கொள்ளும் சதி என்கிறார்கள். கரப்பான் பூச்சி கொல்லியான, கருப்பு மற்றும் சிவப்பு ‘ஹிட்' தெளித்து அழித்துவிடுவோம் என்ற உருவகம் மூலம் மிரட்டுகிறார்கள்.
சிஜேபியின் அய்ந்து அம்ச அறிக்கை, நம் காலத்து அய்ந்து அடிப்படையான புரையோடிப் போயுள்ள தீமைகளிலும், அவற்றிற்கான தீர்வுகளிலும் கவனம் குவிக்கிறது. தகுதியுள்ள எல்லா வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை, ஊடக சுதந்தரத்தையும், நிறுவனங்களின் தன் ஆட்சி சுதந்திரம் காப்பது, குறிப்பாக நீதித்துறை சுதந்திரம் காப்பது, அனைத்து சட்டமியற்றும் அவைகளிலும் அமைச்சரவைகளிலும் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு, பாஜக சலவை இயந்திரத்தை தடுக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சி மாறலை தடுக்க, 20 ஆண்டுகள் தகுதி நீக்கம், இவையே அந்த அய்ந்து அம்சங்கள்.
இந்தியா முழுவதும் மாணவர்கள் மத்தியத்துவப்படுத்தப்பட்ட நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகாமை அமைப்பை கலைக்க வேண்டும் என ஏற்கனவே கோரி வருகிறார்கள். அதற்கேற்பவே, பொருத்தமான விதத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது, உடனடி இயக்க கோரிக்கையாகி உள்ளது.
இந்த டிஜிட்டல் சீற்றமும் நடவடிக்கையும் உணரத்தக்க விதத்தில் மாற்றத்திற்கான கூட்டு நிர்ப்பந்தமாக மாறுமா, எப்போது மாறும் என்பவையே, முக்கியமான விஷயங்களாகும். களத்தில் நடக்கும் நேரடி போராட்டங்கள் டிஜிட்டல் உலகில் பெரிதாக மாறுவதை, நாம் கண்டுள்ளோம். மிகச் சமீபத்தில் டிஜிட்டல் போராட்டம் பெரிய களப் போராட்டமாவதையும் கண்டுள்ளோம்.
சம குடியுரிமை கோரும் இயக்கம் அரசமைப்பு சட்ட முகவுரை வாசிப்பை கொள்கை முழக்கமாவதையும், ஹம் தேக்கங்கே (நாம் காண்போம்) அல்லது காகஜ் நகி திக்கயங்கே (ஆவணங்களை காட்ட மாட்டோம்) போராட்டப் பாடல்களாக மாற்றியதையும் கண்டோம். வரலாற்றுச் சிறப்புமிக்க, விவசாயிகள் போராட்டம் டிராக்டர் மற்றும் மூவர்ணக் கொடி பேரணிகள், வெவ்வேறு போராட்டங்களின் ஒருமைப்பாடு சங்கமங்களை உருவாக்கியதையும் கண்டோம்.
நல்வாழ்வு தரும் கூலிக்கான, எட்டு மணி நேரத்திற்கான தொழிலாளர் எதிர்ப்புகளுடன், திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கையின் வலிகளால் அவதிப்படும் பொது மக்களுடன், மனச்சாட்சிப்படி நடந்தற்காக சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்கான கோரிக்கையுடன், வீடுகளை கடைகளை இடிக்கிற வாழ்வாதாரங்களைப் பறிக்கிற புல்டோசர் நிறுத்தப்பட வேண்டும், பல லட்சம் இந்திய இஸ்லாமியர்களைக் குறிவைக்கும் வெறுப்பு இயக்கம் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சிஜேபி என வடிவம் எடுத்துள்ள வெளிப்படுகிற டிஜிட்டல் இயக்கம் நெருக்கமாக்கிக் கொள்ளுமா? புள்ளிகளை கோலமாக்குவதும் இணைப்புக்களை வலுப்படுத்துவதும் போராட்டங்களோடு ஏற்கனவே தொடர்புடைய செயல்வீரர்களின் பொறுப்பாகும். அதன்மூலம் இந்த டிஜிட்டல் கோபமும் உறுதியும் கூட்டுக் கனவாக நம்பிக்கையாக ஒருமைப்பாடாக வளர வேண்டும்.
