புதுச்சேரியில் இல்லாமல் போன இந்தியா கூட்டணி?

$articleData->title

புதுச்சேரியில் இல்லாமல் போன இந்தியா கூட்டணி?

  2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பீகாரில் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி  I N D I A   (Indian national developmental  inclusive alliance ) block  பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் வரையில் ஏறக்குறைய ஒரு வகையில்  நீடித்தது என்றே சொல்லலாம். பீகார் தோல்விக்கு பின்னர் இந்தியா கூட்டணி ஒருமுறை கூட  தேர்தல் முடிவுகளை  விவாதித்ததாக தெரியவில்லை. 

     மேற்கு வங்கத்தேர்தலில், தற்போது இந்தியா கூட்டணி, குறைந்தபட்சம் இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியுடன் கூட இணைந்து இல்லை. இடது முன்னணியில் முதல்முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் ) விடுதலை பத்து இடங்களில் தொகுதி உடன்பாடு கண்டு போட்டியிடுகிறது.


 கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி தனியாகவும்,காங்கிரஸின் ஐக்கிய ஜனநாயக முன்னணி தனியாகவும் ஓர் அணியை எதிர்த்து மற்றொரு  அணி என இந்த இரு அணிகளுக்கும் பொது எதிரியாக பாஜக உள்ளது.


 தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இந்தியா கூட்டணி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் என்ற வடிவத்தில் இயங்குகின்றது. தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு திமுக தலைமை ஏற்கிறது.


 தேர்தல் கூட்டணி பேச்சுக்கள் துவங்கியதிலிருந்து புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு எவர் தலைமை ஏற்பது?  என்ற பேச்சு முன்னுரிமை பெற்றது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரும் கூட்டணிக்கு எவர் தலைமை? என்பது விடையே காண முடியாத விடயமாக இறுதி வரை மாறிப்போனது.  இறுதியில் புதுச்சேரியின் மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் 16 தொகுதிகள் இந்திய தேசிய காங்கிரசுக்கும் 14 தொகுதிகள் திமுக கூட்டணி கட்சிகளுக்கும் என ஒரு புரிதல் ஏற்பட்டது என்றுதான் சொல்லலாம்.   கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 13 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும் போட்டியிட்டன. இந்த முறை 16 இடங்களை திமுகவுடன் தனியே வாதாடி காங்கிரஸ் கட்சி பெற்றுக் கொண்டது.13 இடங்களை குறைத்துக் கொள்ள விரும்பாத திமுக  விசிக விற்கு ஒரு தொகுதி (உழவர்கரை ) ஒதுக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை கடைசி நேரத்தில் கழட்டி விட்டு விட்டது. 

   

   வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு  இறுதி நாள் வரை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதிகள்  பங்கீடு பற்றிய விபர உடன்பாடு காணப்படாததால் காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளிலும் திமுக கட்சி 13 தொகுதிகளிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து கொண்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு தொகுதிகளில் மனுதாக்கல் செய்தது.      கடைசி நேரம் வரையில் திமுக இக்கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடே  செய்யவில்லை. திமுகவிடம் தட்டாஞ்சாவடி தொகுதியை   இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி கேட்ட நிலையில் தேசிய ஜனநாயக முன்னணி யின்   முதல்வர் ரங்கசாமி என். ஆர் காங்கிரஸ் கட்சி சார்பிலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான வெ.வைத்திலிங்கம்  தட்டாஞ்சாவடி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தட்டாஞ்சாவடி தொகுதியை வலியுறுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எவரும் எதிர்பாராத வகையில் தட்டாஞ்சாவடி தொகுதியில் வேட்பு மனுவை திரும்ப பெற்றுக் கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் உழவர் கரை தொகுதியில் போட்டியிடுவது  என உறுதி செய்து கொண்டது. அதே உழவர் கரை தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளரும் வேட்பு மனுவை திரும்ப பெறவில்லை. மதச்சார்பற்ற முற்போக்கு   கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மூவரும் அதாவது விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்தனியே என்.ஆர்   காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு எதிராக? தேர்தல் களத்தில் உள்ளனர்

 இந்திய தேசிய  காங்கிரஸ் வேட்பாளர்கள் ஐந்து தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை எதிர்த்து நட்பு போட்டி என்ற பெயரில் தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை எதிர்ப்பதாக வாக்காளர்களை நம்ப வைக்க முயற்சி செய்கிறார்கள்.  தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக ,என் ஆர் காங்கிரஸ் ,லட்சிய ஜனநாயக கட்சி, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆகியவன அங்கம் வகிக்கின்றன .

 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி எதுவும் ஒதுக்கப்படாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) கேரள மாநிலம் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தின் தொகுதிகளில் ஒன்றான மாகே வில் சுயேட்சை வேட்பாளரை ஆதரிக்கிறது. தொகுதி ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காத இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி பகுதியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க் சிஸ்டையும் ஒரு தொகுதியில் தனித்துப் போட்டியிடும்  suci (c) கம்யூனிஸ்ட் கட்சியையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை  உழவர்கரை தொகுதியில் எதிர்த்துப் போட்டியிட்டுக் கொண்டே விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஆதரிப்பதாக சொல்கிறது. தொகுதிகளில் நல்ல வேட்பாளர்களை ஆதரிப்பதாக அறிவிப்பு செய்து  பாசிச எதிர்ப்பு  என்ற மைய நிலைப்பாட்டிலிருந்து  நழுவி அரசியல் அராஜக நிலை எடுத்துள்ளது.


இந்திய தேசிய காங்கிரஸ், திமுக, என். ஆர்.காங்கிரஸ், பாஜக , அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த முன்னணி தலைவர்கள் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்  , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்  அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கு எதிரான கட்சிகளில் இணைந்து தேர்தல் களத்தில் வேட்பாளர்களாகவும்  , சுயேட்சை  வேட்பாளர்களாகவும் நிற்பது உண்மையில் குறிப்பிடத்தக்க நகை முரணே. விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கீடு பெற்றும் இரண்டு தொகுதிகளில்  அங்கீகாரத்துடனும்,  வேறு ஒரு தொகுதியில் சுயேட்சையாகவும் களத்தில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. 


விடுதலை சிறுத்தைகள் கட்சி,  வேட்பாளர்களுக்கு  அங்கீகரிக்கப்பட்ட சின்னம் கூட வழங்கப்படாதால்  சுயேட்சைகளைப் போல வலம் வருகின்றனர். இது போன்ற நிலைப்பாடுகள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளை மேலும் சிக்கலாக்கி உள்ளன. 


 புதுச்சேரி மாநிலத்தில் 2006 ஆம் ஆண்டுக்கு முன்பாக 33 ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல்களே நடைபெற்றது இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்்)  இதர ஜனநாயக இயக்கங்களுடன் இணைந்து 2006 ஆம் ஆண்டுக்கு முன்பாக பல கட்ட போராட்டங்களை உள்ளாட்சித் தேர்தல் நடத்த கோரியத்திற்கு பின்பாகவே முதன்முறையாக 2006 இல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரி மாநிலத்தில் ஐந்து நகராட்சிகள் ,10  கம்யூன் பஞ்சாயத்துகள், 98 ஊராட்சிகள் 815 ஊராட்சி வார்டுகள் 98 கம்யூன் பஞ்சாயத்து   வார்டுகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி  மன்ற பொறுப்புக்கள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல்கள் நடந்துள்ளன. தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்கள் நடத்தப்படாத தனாலேயே  தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில்  ஈசல் போல் வேட்பாளர்களாக மாறி அரசு அதிகாரத்தை கைப்பற்றும் நோக்குடன் கட்சிகள் மாறி வேட்பாளராக மாறுவதும் எந்த கட்சியிலும் இடம்பெற முடியாதவர்கள் சுயேட்சசை வேட்பாளர்களாக களம் காண்பதுமே இந்தியா கூட்டணி இல்லாத கூட்டணியாக மாறுவதற்கும், தேசிய ஜனநாயக முன்னணி வந்தேறி வேட்பாளர்கள் கூடாரமாக மாறி இருப்பதற்கும் காரணமாகும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெறுவது ஒன்றே இடதுசாரிகளுக்கு ஜனநாயக சக்திகளுக்கு இடம் அளிப்பதாகவும், அதிகாரப் பரவலை உள்ளடக்கியதாகவும் அமையும்.

08 April, 2026