நீங்கள் கடைசியாக இங்கு எப்போது வந்தீர்கள்?
நான் கடைசி நாளுக்கு முந்தைய நாள் இங்கு இருந்தேன். அதாவது, அந்த மனிதர் பதவி விலகியதற்கு முந்தைய நாள்.
அப்போது நிலைமை எப்படி இருந்தது?
அங்கே மிக நீண்ட வரிசை இருந்தது; என்னால் கூட்டத்தின் மய்யத்துக்குச் செல்ல முடியவில்லை. நான் வெளியில் சுற்றிக்கொண்டிருந்தேன். முகக்கவசம் அணிந்திருந்தேன். அந்த இடம் குப்பையாக இருந்தது, மகிழ்ச்சி தந்தது. நகைச்சுவை, அரசியலின் சாரம் என்று நான் கருதுகிறேன்.
24 ஆண்டுகளாக பிரதமர் நெருடலான ஒருவராக இருந்திருக்கிறார்; எனவே, இந்த செய்தி ஆசுவாசப்படுத்துவதாக இருந்தது. இப்படியொன்று நடப்பதை பார்ப்பதற்கு முன்பு இறந்துவிடுவேன் என்று நினைத்திருந்தேன். அற்புதம். ஆனால் இப்போது அது சற்று அச்சம் தருகிறது. இப்படி எதுவும் நடக்கவில்லை என்பது போன்ற அமைதி நிலவுகிறது.இதை உண்மை என்றே நம்ப முடியவில்லை. எல்லாம் ஒரு வார காலத்துக்குள் நடந்துவிட்டது. அதற்கு முன்பே அது உருவாகிக்கொண்டிருந்தது. ஆனால் கடைசி வாரத்தில்தான் அது உச்சத்தை எட்டியது.
தொடக்க நாட்களில் நீங்கள் இங்கு வந்திருந்தீர்களா?
தொடக்க நாட்களில் நான் வந்தேன். அதன் பிறகு சில நாட்கள் வரவில்லை. தோற்றத்தில் குறிப்பிட்ட ஒரு கோரிக்கையைக் கொண்டதாகத் தெரிகிற இந்த இயக்கம், தீவிரமானவை என்று கருதப்படும் எனது எழுத்துகளுடன் இணைத்துப் பார்க்கப்படக் கூடாது என்று நான் கருதினேன். அதனால்தான் இந்த இயக்கம் இவ்வளவு பரந்த ஆதரவைப் பெற்றிருந்தது. இந்த இயக்கம் என்னுடன் இணைத்துப் பார்க்கப்படாமல் இருப்பதில் நான் கவனமாக இருந்தேன்.
கரப்பான் ஜனதா கட்சி தொடர்பாக நடப்பவை பற்றி, தொடக்கத்தில் எச்சரிக்கையாக இருந்ததாக கடந்த வாரம் நீங்கள் எழுதிய ஒரு கட்டுரையில், சொல்லியிருந்தீர்கள். அதில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆம். அன்னா அசாரே இயக்கமும், அதில் வலதுசாரிகள் ஊடுருவியிருந்ததும் எனக்கு எச்சரிக்கை உணர்வைத் தந்தன. இந்த இயக்கத்தில் ஈடுபட்டிருந்த சில இளைஞர்கள் அந்தச் சூழலில் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் எனக்குத் தெரியும். என்ன நடக்கிறது, என்ன முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன, என்ன குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன என்று பார்க்க வேண்டும் என்று கருதினேன். என் பெயர் காலித் என்று இருந்திருந்தால், அவர்கள் என்னை போராட்டம் நடத்த அனுமதித்திருக்க மாட்டார்கள் என்று அபிஜித் திப்கே சொன்னபோது எனக்கு நம்பிக்கை வந்தது. மிக ஆழமான ஒரு விசயத்தை அவர் மிகவும் எளிமையாகச் சொன்னார்.
நாம் அனைவரும் சந்தித்துக்கொண்டிருக்கும் கொடூரமான தேசியவாத, இந்து தேசியவாத வெற்றுப் பேச்சை அது நேரடியாக எதிர்கொண்டது. அது எனக்கு நம்பிக்கையளித்தது. அப்போதுதான் நான் இங்கு வர முடிவு செய்தேன்.
எல்லாமே ஒரு நகைத்துணுக்கிலிருந்து தொடங்கியது. அதுதான் இன்னும் நம்ப முடியாததாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட, சன்கிளாஸ் அணிந்த கரப்பான் பூச்சியின் படத்துடன், சமூக ஊடக நையாண்டியாகத்தானே இது தொடங்கியது?
இந்த மிகப்பெரிய விவாதத்தில், சில விதங்களில், பிரதான ஊடகங்களால் ஓரஞ்சாரத்திற்கு தள்ளப்பட்டவர்களாக, சாத்தான்மயமாக்கப்பட்டவர்களாக இருந்த நம் அனைவருக்கும் இது புதிது. இது கட்டமைக்கப்பட்ட விதங்கள் புதிது. இதிலிருந்தும், இவர்களிடமிருந்தும் மக்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
அவர்கள் நமக்கு ஒரு பரிசைக் கொடுத்திருக்கிறார்கள். அது என்னவாக மாறப்போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. அதன் இலக்கை விட கூடுதலாகவே அது சாதித்துவிட்டது. ஏனென்றால், கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பது ஒரு வகையில் ஒரு சம்பிரதாய கோரிக்கை. அதை வென்றுவிட்டார்கள். ஆனால், நமக்குத் தெரியும்; புதிய கல்வி அமைச்சர் வந்திருக்கிறார்; ஏய், நீதான் புதிய கல்வி அமைச்சர் என்று அவருக்குப் பணிக்கிறார்கள். இப்படித்தான் அவர்கள் செயல்படுகிறார்கள். மலக்குன்றின் மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய அடையாளம் தட்டிவிடப்பட்டு, அதற்குப் பதிலாக இன்னொரு அடையாளம் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த மலக்குன்று அப்படியே இருக்கிறது. கல்வியை மட்டுமே எடுத்துக்கொண்டாலும், தனியார்மயம், வினாத்தாள் கசிவு, நீட்.... எல்லாம் தொடர்கிறது.
தலித், பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் மாணவர்கள் அங்கிருந்து படிப்படியாக வெளியேற்றப்படுகிறார்கள். ஒட்டுமொத்த பாடத்திட்டமும் ஒருவித முடக்குவாதமாக மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் முட்டாள்களை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அதில் தோற்றுப் போகிறார்கள். ஏனென்றால், வீதியில் திரண்ட இந்த இளம் தலைமுறை, அளவுகடந்த நகைச்சுவை உணர்வும் நம்ப முடியாத திறனும் கொண்டது என்பதை காட்டியிருக்கிறது. ஆனால் அமைச்சகத்தில், கல்வி முறையில், இன்னும் தீர்க்கப்படாமல் பல பிரச்சனைகள் உள்ளன. பதவி விலகிய அமைச்சரை பாஜகவின் சமூக ஊடகக் கணக்குகள் பாராட்டுகின்றன. அவர் அவமானப்படுத்தப்பட்டு பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டவர்; ஆனால், மாணவர் நலனுக்காகத் தியாகம் செய்த தியாகி போல அவரை காட்டுகிறார்கள். இரண்டு பக்கங்களிலும், ஆட்டம் இப்போதுதான் தொடங்குகிறது. அப்படித்தான் நான் நம்புகிறேன்.
இந்தத் தலைமுறை அளவுகடந்த நகைச்சுவை உணர்வு கொண்டது என்று நீங்கள் சொன்னீர்கள். ஊடகங்கள், திரைப்படங்கள், பாடப்புத்தகங்கள் மூலம் அவர்களுக்கு பெரிய அளவில் தகவல்கள் புகுத்தப்பட்டுள்ளன. இதையெல்லாம் அவர்கள் எப்படிப் புரிந்துகொண்டு அவற்றின் ஊடாகப் பார்க்கிறார்கள்?
தொடக்கத்தில் இந்த இயக்கம் அவ்வளவு தேர்ந்து தெளிந்ததாக இல்லை. மிகவும் சாதாரணமானதாக இருந்தது; அந்தக் குழந்தைகள் எதுவும் செய்துவிட முடியாது என்று பலரும் கருதினார்கள். ஆனால், அவர்கள் செய்து முடித்தார்கள். பரப்புரை சீக்கிரமே காலாவதியாகிவிடும். டில்லியில் வீடுகளும் குடிசைகளும் புல்டோசர்களால் இடிக்கப்பட்ட போதும், நாங்கள் மீண்டும் மோடிக்கு வாக்களிப்போம் என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். ஆனால், அவர்கள் சொன்னதை செயல்படுத்த முடியுமா என்ற கேள்வி வருகிறது; ஏனென்றால், மறுபுறம் யதார்த்தம் இருக்கிறது. மோடியின் பக்தர்களாக இருக்கும் பெற்றோர்கள்கூட தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் அழிக்கப்படுவதைப் பார்க்கிறார்கள். நீட் அல்லது மற்ற தேர்வுத்தாள் கசிவுகளுக்கு எதிராகப் போராடுகிறீர்கள். ஆனால் மருத்துவமோ, பொறியியலோ, வேறு எந்தப் படிப்பாக இருந்தாலும், ஐந்து ஆண்டுகள் படித்து முடித்த பிறகும் வேலைவாய்ப்புகள் இல்லை.
அப்படியானால், உங்கள் எதிர்கால வாய்ப்புகள்தான் என்ன?
எதிர்கால வாய்ப்புகள்தான் என்ன? பழங்குடியினர் தங்கள் நிலங்களில் இருந்து அகற்றப்படுவது பற்றி நாம் எழுதுகிறோம். இப்போது நர்மதையின் நீர்மட்டம் உயர்கிறது; அந்த வெள்ளம் நடுத்தர வர்க்கத்தையும் எட்டியுள்ளது. தனியார்மயம் மய்யப்படுத்தப்படுவதால் வணிகர்களும் கூட பாதிக்கப்படுகிறார்கள். அதானி அம்பானி தவிர மற்றவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். ஆக, வெவ்வேறு மட்டங்களில், எல்லோரும் நடப்பதைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.விவசாயிகள் இயக்கத்தின் போது ஒருவர் சொன்னார்: நாட்டை நான்கு பேர் நடத்துகிறார்கள்; அவர்களில் இரண்டு பேர் வாங்குகிறார்கள்; மற்ற இரண்டு பேர் விற்கிறார்கள்; அந்த நான்கு பேரும் குஜராத்திகள் - நரேந்திர மோடி, அமித்ஷா, கவுதம் அதானி, முகேஷ் அம்பானி. இது உருவகம் அல்ல. இது உண்மை.
அழுகல் எல்லா இடங்களிலும் இருக்கிறது. புள்ளிவிவரங்கள்கூட பொய்களாக இருக்கின்றன. அவர்கள் தங்களுடைய பொய்களையே, தங்கள் பொய்ப் பிரச்சாரத்தையே நம்பத் தொடங்குகிறார்கள். எனது மனதில் இருக்கும் கேள்வி என்னவென்றால்: தன்னைப் பற்றி என்ன சொல்லப்படுகிறது என்பது மோடிக்குத் தெரியுமா? அல்லது அவை பற்றி அவருக்குத் தெரிவதே இல்லையா? இதில் எது மோசமானது? நீங்கள் பிரதமராக இருக்கிறீர்கள்; நீங்கள் எப்படி கேலிக்குள்ளாகிறீர்கள் என்பது பற்றி உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் தெரிகிறது. ஆனால், உங்களுக்குத் தெரியவில்லையா? அல்லது தெரியுமா?
எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை, இந்த இயக்கத்தின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால், 24 ஆண்டுகளாக, உண்மையில் 2002ல் இருந்து, தனது பிம்பத்தை மிகவும் கவனமாக உருவாக்கிய ஒருவர், பத்திரிகையாளர் சந்திப்பையே எதிர்கொள்ளாத ஒருவர், ஒரு டெலிப்ராம்ப்டர் உதவியுடனோ அல்லது ஒரு துண்டுச் சீட்டின் உதவியுடனோ பேசிக்கொண்டிருக்கும் ஒருவர், இன்னமும் விஷ்வ குரு, விஷ்ணுவின் அவதாரம் என்று எல்லாம் அழைக்கப்படுகிற ஒருவர், திடீரென்று இரண்டே வாரங்களில் இந்தக் குழந்தைகளால் உரித்துப்போடப்பட்டுவிட்டார்.நான் யோசித்துப் பார்க்கிறேன். இன்ஸ்டாகிராம் இப்போதுதான் வந்தது. ஆனால், வரலாற்றில் இதுவரை எந்த ஒரு மனிதரும், இந்த அளவுக்கு ஏளனம் செய்யப்பட்டதில்லை.
அப்படியானால், அவர் எப்படி வெளியே வந்து மக்களை எதிர்கொண்டு மீண்டும் அதே முட்டாள்தனமான விசயங்களையெல்லாம் சொல்லப்போகிறார்? அவரது பழைய உரைகளை மீண்டும் வெளியே எடுத்து அவர்கள் ஏளனம் செய்தார்கள்; உருண்டு புரண்டு சிரித்தார்கள். இது முந்தைய தலைமுறையையும் கொஞ்சம் முட்டாள்தனமானதாகக் காட்டுகிறது. ஏனென்றால், நீங்கள் உண்மையிலேயே இந்தக் குப்பையையெல்லாம் விழுங்கினீர்கள் அல்லவா?
என்னைப் பொறுத்தவரை, இது ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதைவிடப் பெரிய விசயம். தெளிவாக சராசரி அறிவாற்றல்கூட இல்லாத, நமது பிரதமராக இருக்கும் ஒருவரைச் சுற்றி உருவாக்கப்பட்டிருந்த அறிவற்ற சுவரை அகற்றிவிட்டார்கள்.
மோடி இப்போது இளைஞர்களுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவருடைய இன்ஸ்டா வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
வேடிக்கை அது மட்டுமல்ல, அந்த வீடியோ எத்தனை பார்வைகளைப் பெற்றிருக்கிறது என்று பெருமை வேறு பேசுகிறார்கள்.
ஓர் உலக சாதனை.
வெறுப்புடன் பார்ப்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த வீடியோவை இப்படிச் செய்யக்கூடாது, இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சின்னக் குழந்தைகள் கூட வீடியோக்கள் உருவாக்கி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
வாசிலி கிராஸ்மன் என்ற ரஷ்ய எழுத்தாளர், ஸ்டாலின்கிராட் என்ற அற்புதமான நூல் எழுதியுள்ளார். ரஷ்யப் போர்முனைக்கு அனுப்பப்பட்ட ஒரு ஜெர்மானிய ஜெனரல், ரஷ்யாவுக்குள் நுழைவது, ஜெர்மனியின் முடிவின் துவக்கம் என்று உணர்ந்து கொள்வதுடன் தொடங்குகிறது. எனவே, ரஷ்யாவுக்குள் நுழைவது ஒரு மோசமான யோசனை என்று ஹிட்லரிடம் சொல்ல பெர்லினுக்குத் திரும்பி வருகிறார். ஆனால் ஹிட்லரைச் சந்திக்கும்போது, அவரது ஒளிவட்டத்தாலும் அதிகாரத் தோற்றத்தாலும் மிகவும் பயந்து, திகைத்துப் போய் விடுகிறார். எனவே அந்த மோசமான செய்தியைச் சொல்ல அவர் துணியவில்லை. அவரால் அதைச் செய்யவே முடியவில்லை. அதன் பிறகு என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும்.
எனவே, "ஏதோ ஒன்று மாறிவிட்டது” என்று இந்த மனிதரிடம் சொல்வதற்கு உள்நாட்டில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் யாருமே இல்லை. அனைவருக்கும் இது தெரிந்துவிட்டது. ஆஸ்திரேலியாவில், இந்தோனேசியாவில் மக்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். உங்கள் மிகச் சிறந்த நண்பர் டொனால்ட் டிரம்ப் உங்களை ஒரு குழிக்குள் தள்ளிவிட்டார். ஆக, நீங்கள் இந்தியாவை இழிவுபடுத்துகிறீர்கள். இந்த ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் அனைத்தும் விவசாயிகளை அழிவுக்குத் தள்ளுகின்றன. இளைஞர்களின் இந்தப் போராட்டம் தீர்க்கப்பட வேண்டிய அனைத்தையும் பிரித்து ஆராயவில்லை. ஆனால் இவை அனைத்திற்கும் காரணமாக இருக்கும் அந்த நபரின் முகமூடியையே உரித்தெறிந்தது என்பது நாட்டுக்குச் செய்த மிகப்பெரிய சேவை என்று நான் நினைக்கிறேன்.
போராட்ட களத்தில் சீற்றத்துக்குப் பதிலாக நகைச்சுவையுணர்வே மிகுந்திருந்தது.
சீற்றத்துக்கும் நகைசுவையுணர்வுக்கும் இடையில் பெரிய செங்கல் சுவர் எதுவும் இல்லை. நகையுணர்வுதான் அரசியலின் மிகவும் நுட்பமான சாரம். நிச்சயமாக அது சீற்றம்தான். ஆனால், நாம் மனதில் நினைத்துக் கொண்டிருந்தவற்றை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்கள். ஒரு தனியாளாக அப்படிச் சொல்ல முடியாது. ஆனால் கூட்டத்தில், எது அவர்களைத் தடுக்கப் போகிறது?
இப்போது, இசுலாமியர் சிலரை காவல்துறையினர் கைது செய்கின்றனர். மக்களுக்கு உணவு வழங்கிக்கொண்டிருந்த முகமது ஜுனைத் என்பவரை குடும்பத்துடன் கைது செய்திருக்கிறார்கள். அவரது கண்களைக் கட்டி அடித்திருக்கிறார்கள். ஓரஞ்சாரங்களில் இருந்தவர்களை அவர்கள் எப்படி கைது செய்யப் போகிறார்கள்? பீகாரில் பெரிய அளவில் தடுப்புக் காவல் நடவடிக்கைகள் நடந்துள்ளன. இந்த விசயங்கள் கவலை தருகின்றன.
ஆம், தடுப்புக் காவல், கைது நடவடிக்கைகள் இரண்டும் நடக்கின்றன.
இது மிகப்பெரிய பழிவாங்கும் நடவடிக்கை. பிரதான் பதவி விலகியபோது இந்து சேனா வந்தது. அரசாங்கம் எழுந்து நின்று அவரை வழியனுப்பியது. யாரும் அவருக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. தேர்வுத்தாள் கசிவுகளுக்காக யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. யாரும் பொறுபேற்கவில்லை. ஆட்டம் இன்னும் முடியவில்லை. நமது எதிர்க்கட்சிகள் போராட்டத்தை பெரிய அளவில் ஆதரிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் செய்ய முடியாததை இந்த இளைஞர்கள் செய்தார்கள். ஏதோ போகிற போக்கில் அங்கீகரித்தார்கள். அது அங்கீகரிப்பதே அல்ல. இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. அங்கே என்ன நடக்கப் போகிறது? தேர்தல்களைத் தங்களுக்கு சாதகமாக கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் அந்த ஆணவத்தில் இருந்தார்கள். தேர்தல்களில் வெற்றி பெறுவது கடினம்தான். அவர்களிடம் ஊடகம் இருக்கிறது; அது ஊடகமே அல்ல. தணிக்கை பற்றி கவலைப்படும் ஒரு குழுவாகக் கூட அது இல்லை. பாசிச தேசியவாதச் செய்தியை உற்சாகமாகப் பெருக்கிப் பரப்பும் ஒரு குழுவாக அது இருக்கிறது.
இந்தியா காஷ்மீரின் ஓர் அங்கமாக மாறப்போகிறது என்று சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதியிருந்த கட்டுரையில் சொல்லியிருந்தேன். உங்களுக்குத் தெரியும், ஸ்ரீநகரிலிருந்து பெல்லட் துப்பாக்கிகள் இங்கு வந்துவிட்டன.
காத்திரமான அரசியல் நடவடிக்கை இல்லாமல் போனால் இந்த ஆற்றல் கலைந்து போகக் கூடும் என்று உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதன் அறிகுறிகள் ஏதும் இருந்ததா? எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமரின் வீட்டுக்கு வெளியே, காவல்துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டார். இதைப் பயன்படுத்திக்கொண்டு அரசாங்கத்துக்கு ஒரு தீவிரமான சவாலை எதிர்க்கட்சி முன்வைக்க முடியுமா?
எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், பிரிந்து நிற்பதற்குப் பதிலாக இன்னும் அதிகமான ஒற்றுமை வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இப்போது நாம் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறோம். எதிர்க்கட்சியும் தனது உள்கட்சிச் சண்டைகளிலும், பதவிக்கான போட்டிகளிலும், மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. அதன் இருத்தலே கேள்வியாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறது. தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டால்... அது பின்னடைவுகளைச் சந்திக்கும்; பாஜக கடுமையாக வேலை செய்யத் தொடங்குகிறது. எதிர்க்கட்சி தூங்கப் போய்விடும்.
எனவே, எனக்குத் தெரியவில்லை. ஆனால் கடந்த சில நாட்களில் இங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. இந்த நாட்டின் தலைவர் எவற்றை எல்லாம் கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொண்டிருந்தாரோ அவையனைத்தையும் ஒரு தேர்தலால் அகற்றியிருக்க முடியாது. குறைந்த அறிவாற்றல் கொண்ட ஒருவர், சதித்திட்டங்களால் இவ்வளவு காலம் இவ்வளவு பேரை ஏமாற்றியதே அதிசயம்தான். கொடூரமான ஒடுக்குமுறை இருந்தது; சீக்கிய பயங்கரவாதிகள் என்று விவசாயிகள் அழைக்கப்பட்டார்கள்; இந்த இளைஞர்களைக்கூட பாகிஸ்தானியர்கள் என்றார்கள். ஆனால் விவசாயிகள், குடியுரிமைப் போராட்டக்காரர்கள், மணிப்பூர், காஷ்மீர் இங்கெல்லாம், துப்பாக்கிச் சூடு நடத்த அவர்கள் தயங்கவில்லை. டெல்லியில் அப்படி நடக்கவில்லை. ஏனென்றால், இவர்கள் அவருடைய தொகுதியைச் சேர்ந்தவர்கள்.
ஆம். அவர்களை சாத்தான்களாகச் சித்தரிக்க அவர்களால் முடியவில்லை.
கொடூரமான ஒடுக்குமுறை ஏவப்பட்டது. ஆனால், இசுலாமியர் மீதோ, சீக்கியர் மீதோ, கிறிஸ்தவர் மீதோ, ஏழைகள் மீதோ, பழங்குடியினர் மீதோ, தலித்துகள் மீதோ ஏவிய அளவுக்கு கொடூரமானதாக இல்லை. இளைஞர்களின் இந்த எழுச்சியைக் காண்கையில், ஒரு சோகம் இருந்தது; அவர்களில் மிகவும் அறிவார்ந்தவர்களில் ஒருவர் ஐந்து ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் இருக்கிறார். உமர் காலித், ஷர்ஜீல் இமாம்... எதிர்க்கட்சியால் "இசுலாமியர்” என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியவில்லை. "சிறுபான்மையினர்” என்று சொல்ல வேண்டியிருக்கிறது. பெரிய அரசியல்வாதிகளிடம் கொஞ்சம் நேர்மை இருந்தால் நன்றாக இருக்கும். அவரது பெயரைச் சொல்லக் கூட அஞ்சுகிறார்கள். அவர் ஊடகங்களால் சாத்தானாகச் சித்தரிக்கப்பட்டார். அவரை சிறையில் அடைக்கும் முன்பே அவரைக் கொல்ல முயற்சி நடந்தது. அவர் சிறைக்குச் சென்றபோது ஒரு சிறுவனாக இருந்தார். இப்போது அவர் ஓர் ஆண். உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோரை நாம் மறந்துவிட முடியாது. குடியுரிமை மசோதா எதிர்ப்புப் போராட்டங்களில் இசுலாமியர்கள் கொல்லப்பட்டார்கள், பின்னர் அவர்கள் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டது.
தேசிய கீதம் பாடச் சொல்லி நான்கு இசுலாமிய இளைஞர்களை காவல்துறையினர் அடித்து உதைத்த அந்தக் காட்சியை மறந்துவிட முடியாது. அவர்களில் ஒருவரான ஃபைசான் பின்னர் இறந்துவிட்டார். அதை நான் மறக்க முடியாது. அது என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. குஜராத்தின் குல்பெர்க் சொசைட்டியில் ஈசான் ஜாஃப்ரியும் மற்றவர்களும் படுகொலை செய்யப்பட்டதையும், நான் மறக்க முடியாது. நான் கோபமாக இருப்பதாக என்னிடம் சொல்கிறார்கள். ஆம், நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். நீண்ட காலமாக கோபமாக இருக்கிறேன். ஆனால் அந்த மாணவர்கள் செய்ததைப் போல, கோபத்தில் சிரிக்கிறேன்.
மோடி பற்றிய ஒரு நகைத்துணுக்கைப் பகிர்ந்ததற்காக பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
உண்மைதான். ஆனால் திடீரென்று அங்கே நகைத்துணுக்குகளைத் தவிர வேறு எதுவுமே இல்லை. அதுதான் எனக்கு இதில் மிகவும் பிடித்த விசயம். பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியர் என்பதில் பெருமை கொண்டேன். ஏனென்றால், பெரும்பாலான நேரம், மக்கள் ஏற்றுக்கொள்ளும் விசயங்களைப் பார்த்து எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. குடியுரிமை பறிப்பு மசோதா எதிர்ப்புப் போராட்டங்கள் நினைவிருக்கிறதா? இசுலாமியர்கள் கும்பல் படுகொலைக்கு உள்ளானார்கள். சிலர் அதை கைதட்டி வரவேற்றார்கள்; வீடியோக்கள் வெளியிட்டார்கள். இப்போது திடீரென்று இப்படி ஒன்று நம்மைச் சுற்றி நடக்கிறது. இனி நான் நிம்மதியாக சிரித்துக்கொண்டே உயிர்விடுவேன். இது போன்ற ஒரு போராட்டத்தை என் வாழ்நாளில் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை. இந்த இளைஞர்களால்தான் அது சாத்தியமானது.
மிகவும் கற்பனை வளமுள்ள ஒரு எழுத்தாளர்கூட இப்படிப்பட்ட ஒரு கதைக்களத்தை எழுதியிருக்க முடியாது, இல்லையா?
ஒரு நீதிபதி, ஒரு நகைத்துணுக்கு இரண்டும் சேர்ந்ததால் உருவானது இது. அதைக் கொண்டாட முடியாதவர்கள், இது நடக்கப்போகிறது, அது நடக்கப்போகிறது” என்று அடுத்து என்ன நடக்கும் என்று யோசிக்கத் தொடங்குபவர்கள் பற்றி எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஒரு தருணத்தை கொண்டாடும் திறனைக் கூட இழந்துவிட்டோம். மகிழ்ச்சி என்றென்றும் நீடிப்பதில்லை. அரசியல் வேகமாக மாறுகிறது. இது நமது தரப்பிலிருந்து தரப்பட்ட ஒரு மிகப்பெரிய அடி. அதை மிக அழகான அந்த இளைஞர்கள் செய்தார்கள். நான் 24 ஆண்டுகளாக எனக்குக் கவலை அளிக்கும் அனைத்தையும் பற்றி எழுதி வருகிறேன். ஆனால் இது அற்புதம்.
