முப்பத்தியெட்டு நாட்களுக்கு மேலாக நடைபெற்ற உக்கிரமான தேர்தல் போர் முடிவுக்கு வந்துள்ளது. போரின் முடிவுகளுக்காக இந்தியாவே காத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இந்தத் தேர்தல் “வழக்கத்துக்கு மாறான தேர்தலாக” இருந்தது. பாஜக தேர்தலில் போட்டியிடுவதும் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதும் புதிதில்லை. ஆனால், 12 ஆண்டுகால போர் உக்கிரம் நிறைந்த ஒன்றிய ஆட்சியின் கீழ், மனம் திருந்திய மைந்தனாக அதிமுக, பாஜக வுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்ட நிலையில், இரட்டை என்ஜின் ஆட்சி; தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்ற முழக்கங்கள் முதல் முறையாக ஒலித்தன. இந்த வகையில் இது வழக்கமான தேர்தலாக இல்லை.
இந்த வகையில் பாசிச பாஜக - அதிமுக கூட்டணிக்கும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் இடையிலான போர்க்களமாக காட்சியளித்தது. சட்டப்பேரவை தேர்தலில், “டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான தேர்தல்” என்று, மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, பிரபலமாக ஒலித்ததும் இதுதான் முதல்முறை. எனவே இது வழக்கமான தேர்தலாக இல்லை. சமூகநீதி, கூட்டாட்சி, மதச்சார்பின்மை கொள்கைகளால் பாஜகவுக்கு கடும் சவாலாக விளங்கும் தமிழ்நாட்டை, தகர்க்கும் மோசடித் திட்டங்களுடன் களத்துக்கு வந்தது பாஜக - அதிமுக கூட்டணி. மறுபுறம், திராவிட மாடல் கூட்டணி. இவற்றுக்கிடையே, கார்ப்பரேட்-காவிப்பாசிச எதிர்ப்பு, சுதந்திரமான இடது அரசியலுடன் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி தனித்து தேர்தல் களத்தில் முனைப்பாக களமாடியது. அருவமான மாற்றம் தேடும் இளம் தலைமுறையை முதன்மையாக திமுக எதிர்ப்பை நோக்கி திருப்ப முயன்ற தவெக, போலி தமிழ்ப்பெருமிதத்தால் தமிழ்த்தேசியம் பேசிய, தனித்து களம் கண்ட நாதக, உட்கட்சி பிளவால் காயம்பட்ட, வட்டார சமூக அடையாளத்தைக் கொண்ட ராமதாஸ்-சசிகலா கூட்டணி போன்றவை பலதுருவ அரசியல் போல தோன்றினாலும் காத்திரமான பாஜக-அதிமுக-பாமக எதிர்ப்பு ‘மக்கள் ஜனநாயக அரசியலை’ வெளிப்படுத்தவில்லை. இந்தப் பின்னணியில், சுழன்றடிக்கும் தேர்தல் வாக்குறுதிகள் சுனாமிக்கு மத்தியில் “மக்கள் போராட்ட பிரகடனத்துடனும்” வெப்ப அலையை விஞ்சிய தேர்தல் கூச்சல்களுக்கு மத்தியிலும் தேர்தல் போராட்டத்தை, “பாசிசத்துக்கும் மக்கள் ஜனநாயகத்துக்கும் இடையிலான போராக” முன்னெடுக்கும் முன்களப்பணியாளராக மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி 13 தொகுதிகளில் களத்தில் நின்றது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் அடாவடிப்போரால் இந்திய மக்கள் அவதியுறுவதற்கு ட்ரம்ப் முன்பு மோடி மண்டியிட்டதே காரணமென்று பாஜக -அதிமுக கூட்டணியை மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி தோலுரித்துக் காட்டியது.
ஏனைய கூட்டணிகள், கட்சிகள் போல் பணபலம், படைபலம், ஊடக பரபரப்பு செல்வாக்கு இல்லாத போதிலும் தேர்தல் போராட்டத்தில் நாட்டுப்புர, நகர்ப்புர உழைக்கும் பெரும்பான்மை மக்கள், வறிய விவசாயிகள், பெண்கள், மாணவர், இளைஞர்கள், ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்பட்ட சமூக மக்கள், மலைவாழ் மக்கள், விளிம்புநிலை பிரிவினரின் கார்ப்பரேட்-காவிப்பாசிச எதிர்ப்பு “மக்கள் ஜனநாயக அரசியலை” மய்யகளத்துக்கு கொண்டுவர ஆனமட்டும் பாடுபட்டது.
மா லெ போட்டியிட்ட தேர்தல் களத்திலிருந்து சில முக்கிய தெறிப்புகளை வாசகர்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறது தீப்பொறி ஆசிரியர் குழு.
இராமநாதபுரம், மேலூர், வேடசந்தூர், புதுக்கோட்டை தொகுதிகள் பெரிதும் ஒரேமாதிரி தன்மை கொண்டவை. வறண்ட பூமி, மானாவாரி விவசாயம், கனிமவளக்கொள்ளை, ஆண், பெண் இளைஞர்களை நகரங்களுக்கு விரட்டும் வேலையின்மை, வாழ்வாதாரத்துக்காக திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு புலம்பெயர்தல், கழுத்தை நெரிக்கும் கந்துவட்டி, வீட்டுமனை, வீடு, திறந்தவெளி கழிப்பிடம், நீர்ப்பாசனம், குடிதண்ணீர் இவை இந்தத் தொகுதிகளின் பொதுவான முக்கிய பிரச்சனைகள். திராவிட மாடல் ஆட்சி முதல், அதற்கு முன் இருந்த எந்த ஆட்சியும் இந்த அடிப்படை பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவில்லை. மாறாக இந்தப் பிரச்சனைகள் நீடிக்க காரணமானவர்களே தேர்தலுக்கு தேர்தல் இந்தப் பிரச்சனைகளை தீனியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பெரிய எண்ணிக்கையில் விலகி சமீபத்தில் மாலெ கட்சியில் சேர்ந்து கட்சி வரைபடத்தில் இடம்பெற்று சில மாதங்களே ஆன இராமநாதபுரம் தொகுதியில், சிபிஐஎம்எல் மாவட்டச் செயலாளர் முருகபூபதி வேட்பாளராக முனைப்புடன் களமாடினார். இகக வில் பல ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராக செயல்பட்டதன் மூலம் மாவட்டம் முழுவதும் பரவலாக அறியப்பட்ட தொகுதி வேட்பாளர், முருகபூபதி எதிர்பாராத வகையில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடிய நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டார். ஏப்ரல் 4, அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற மா லெ கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திற்கு அனுமதி பெறப்பட்டிருந்தது. அன்றே அதே இடத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளும் திமுக நிகழ்ச்சியைக் காண வந்தவர்கள் நமது கூட்ட நிகழ்ச்சியை கலையாமல் நின்று கேட்டனர். வேட்பாளரை அறிமுகப்படுத்தி, பாஜக - அதிமுக கூட்டணியை சாடிப் பேசிய பாலசுந்தரம் உரையை திமுகவினர் சிலர் வெளிப்படையாகவே வரவேற்றனர்.
இராமேஸ்வரம், கீழக்கரை, இராமநாதபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை உள்ளடக்கி கிராமங்கள், சிறு நகரங்களில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டன. மீனவர்கள் பிரச்சினை - கடலட்டை தடை, இலங்கை கடற்படையால் தொடர் தாக்குதல், கைது, வாழ்வாதார பறிப்பு, இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஆகியவற்றை முதன்மைப்படுத்திய நமது பரப்புரை, ஒன்றிய பாஜக-அதிமுக அணியை கடுமையாக அம்பலப்படுத்தியது. தோழர் சிம்சனின் கூர்மையான உரை கடலோடி சமூக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏப்ரல் 13 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற தெருமுனை பரப்புரையில் மாநிலச் செயலாளர் கலந்து கொண்டு பேசினார். ஏப்ரல் 14, அம்பேத்கர் பிறந்த நாளில் தொகுதி முழுவதும் வாகன பரப்புரை நடத்தப்பட்டது. …அன்று பரப்புரையின் போது நமக்கு அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் நமது பரப்புரைக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பாஜகவினர் இடைநிறுத்தாமல் பாடல், உரை ஒலிபரப்பு செய்தனர். எடுத்துச் சொல்லியும் கேட்காத நிலையில் நமது தோழர்கள் சாலைமறியலில் ஈடுபட்டு பாஜகவினரை அம்பலப்படுத்தினர். நீண்ட தூரத்துக்கு போக்குவரத்து நின்று போன நிலையில் காவல்துறையினர் தலையிட்டு பாஜகவினரை எச்சரித்து கலைத்தனர். அச்சு, மின்னணு ஊடகங்களில் செய்தியானது. வாக்குப் பதிவன்று வேட்பாளர் முருகபூபதியை சந்திக்க நேர்ந்த பாஜக வேட்பாளர் நாகேந்திரன் தனது கட்சியினர் செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.
ஏப்ரல் 18 அன்று இராமேஸ்வரத்தில் நடைபெற்ற இறுதிகட்ட பரப்புரை கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் வீ. சங்கர் கலந்து கொண்டு பேசினார். இகக, இகக(மா) முன்னோடிகள் பேச்சால் ஈர்க்கப்பட்டனர். கூட்டத்திலேயே நிதியும் அளித்தனர். கடந்தகால ஆட்சிகளில் அரசு மேல்நிலைப்பள்ளி கொண்டு வராதது, நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு கவனம் செலுத்தாதது போன்ற மக்கள் பிரச்சினைகளை வலியுறுத்தப்பட்ட அதேவேளை, தமிழ்நாட்டிற்கு ஆபத்தான பாஜக-அதிமுக கூட்டணி முதன்மையாக எதிர்க்கப்பட்டது.
மாலெ கட்சி முடிவை இடதுசாரி வட்டாரத்தைச் சேர்ந்த பலரும் வரவேற்று பேசினர். இகக (மா லெ) போல் தனித்துப் போட்டியிடுவது, போட்டியிடாத இடங்களில் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பது என்று மற்ற இரண்டு இடதுசாரிகளும் கூட முடிவு செய்திருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
அமைப்புக் கட்டமைப்பு இன்னும் முறையாக உருவாகாத நிலையிலும் வெகு சில முன்னணித் தோழர்கள் தீவிரமாக பணியாற்றி குறுகிய காலத்தில் தொகுதி முழுவதும் கட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது சிறப்பான அனுபவமாகும். தொகுதியில் செய்த வேலை, மாவட்டத்தில் பல இடங்களில் இருந்து இடதுசாரி கட்சிகளிலிருந்து இன்னும் பல முன்னணித் தோழர்கள் வருவதற்கு கதவுகளை அகலத் திறந்துள்ளது.
கார்ப்பரேட் டங்க்ஸ்டன் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தில் நமது தலையீட்டை ஒட்டி அறிமுகமான மேலூர் தொகுதியில் நமது போட்டி, புதிய விசயமாக பார்க்கப்பட்டது. கக்கன் போன்ற காங்கிரஸ் ஆளுமையால் அறியப்பட்ட இந்தப் பகுதியில் காங்கிரஸ், அதிமுக, திமுக என மாறி மாறி களம் கண்ட இந்தத் தொகுதியில் மா லெ கட்சி போட்டியிட்டது புதிய வரவாகவே பேசப்பட்டது. மக்கள் போராட்டத்தால் டங்க்ஸ்டன் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டாலும் பாஜகவின் கார்ப்பரேட் ஆபத்து முழுவதுமாக கைவிடப்பட்டதாக கருத முடியாது. விழிப்பாக இருக்க வேண்டும். விவசாயிகள் விரோத விதைகள் சட்டம், மின்சார திருத்தச் சட்டம் போன்றவையும், அவற்றை ஆதரித்து பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள அதிமுக துரோக கூட்டணியும் தோற்கடிக்கப்பட வேண்டுமென ஏப்ரல் 8 அன்று மேலூரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் வேட்பாளர் மெய்யருடன் மதிவாணன், மாநிலச் செயலாளர் ஆசைத்தம்பி, பாலசுந்தரம் ஆகியோரும் உரையாற்றினர்.
பிஆர்பி கனிமவளக் கொள்ளையில் அரசுக்கு ரூ 1,76,000 கோடி இழப்பு என அறிவித்துள்ள அய்ஏஎஸ் சகாயம் அறிக்கை வெளியிடவேண்டும், மேலூர் அரசு கல்லூரியை பல்துறை கல்வி வளாகமாக உயர்த்த வேண்டும், அபகரிக்கப்பட்ட பஞ்சமர் நிலங்கள் மீட்கப்பட்டு தலித்துகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்பது போன்ற தொகுதிக்கே உரிய முக்கிய கோரிக்கைகளும் விரிவாக எழுப்பப்பட்டது. சென்னையில் 165 நாட்களுக்கு மேல் நடைபெற்று அரசை பணிய வைத்த வெற்றிகரமான தூய்மைப் பணியாளர் போராட்டம் தமிழ்நாடு தழுவிய போராட்டமாக வளர்ந்துள்ளது. தூய்மைப் பணியாளர், தூய்மைக் காவலர்களின் தலைவர்களாக திருப்பெரும்புதூரில் தமிழரசனும் தூத்துக்குடியில் சகாயமும் போட்டியிடுவதும் வரவேற்கப்பட்டது. தொகுதியிலுள்ள இரண்டு ஒன்றியங்களிலும் வேலையை விரிவுபடுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் தயாரிப்பு கூட்டத்தில் கூட்டுத்தொகையாக ரூ 8,500 வசூலானது. தோழர் வீ.சங்கர் கலந்து கொண்ட முன்னணிகள் கூட்டமொன்றும் நடைபெற்றது. தேர்தல் நிதியாக மாநில கட்சிக்கு ரூ 10,000 நிதியும் வழங்கப்பட்டது.
புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி மா லெ கட்சி முதலில் காலூன்றிய பகுதியும் வெகுமக்கள் அரசியல் முன்னணிக்கு வித்தூன்றிய பகுதியும் பச்சைத் துண்டு விவசாயிகள் சங்கம் எழுச்சி பெற்றது வேடசந்தூர் தொகுதி. தோழர் இரவி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 12 பொதுக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் முருகேசன், மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி, மா க உறுப்பினர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விவசாயிகள் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி தெரிவித்து கூட்டம் துவங்கியது. விவசாயிகளின் பல பத்தாண்டுகால கோரிக்கையான பாசனத்திட்டங்களை நிறைவேற்றி விவசாயத்துக்கு புத்துயிர் ஊட்டுவதற்கு மாறாக கடந்த கால திராவிட ஆட்சியாளர்கள் தங்கள் சொந்த ஆதாயத்துக்காக குடகனாறு திட்டத்தை மாற்றியமைத்தது ஏன் என கூட்டம் கேள்வி எழுப்பியது. பெரும் சிமெண்ட் ஆலைகளுக்காக குவாரிக் கொள்ளையை திறந்து விட்டது ஏன் என காட்டமாக கேள்வி எழுப்பியது. பெண்கள் முன்னேற்றத்துக்கு பெரும் திட்டங்களை கொண்டு வந்து விட்டதாக சாதனை பேசும் திராவிட மாடல் அரசு, பெண் தொழிலாளரது சமவேலைக்கு சமக் கூலி, வேலை பாதுகாப்பு, மாதவிடாய் விடுப்பு போன்றவற்றை ஏன் கொண்டுவரவில்லை என்றும் பாலசுந்தரம் கேள்வி எழுப்பினார். மா லெ கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பெண் தொழிலாளர் கோரிக்கை போல வேறெந்த கட்சியும் முன்வைக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. தொகுதியில் வீடு, வீட்டுமனை போராட்டங்கள் மூலம் ஏழை மக்கள் பயன்பெற்றதையும் வேட்பாளர் இரவி எடுத்துக் கூறினார். வடமதுரை, குஜிலியம்பாறை, வேடசந்தூர் ஒன்றியங்களில் உள்ள கிராமங்கள், சிறுநகரங்களில் வாகன பரப்புரை, குடியிருப்பு பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
புதுக்கோட்டை தொகுதியில் இரண்டாவது முறையாக மா லெ கட்சி போட்டியிடுகிறது. ஒரே பெண் வேட்பாளரான தோழர் மணிமேகலையை ஏப்ரல் 16 அன்று புதுக்கோட்டை நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் தோழர் குமாரசாமி அறிமுகப்படுத்தினார். நிலைக்குழு உறுப்பினர் வீ மூ வளத்தான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி கலந்து கொண்டு பேசினார். மாவட்டச் செயலாளர் சி.ரெங்கசாமி கலந்து கொண்டார்.
இரண்டு அமைச்சர்கள் இருக்கும் இந்த மாவட்டத்தில், தொகுதியின் பின்தங்கிய நிலமை அப்படியே உள்ளது ஏன்? வேங்கை வயல் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த இழிவான செயலில், உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு பதில், மலம் கலந்த தண்ணீரைக் குடித்த தலித்துகளையே குற்றவாளிகளாக்கியிருப்பது என்ன வகையான சமூகநீதி? யாருக்கான சமூகநீதி? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. மூன்று நட்சத்திர கொடிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாலெ கட்சி மக்களவை உறுப்பினர் ராஜாராம் சிங் வேங்கை வயல் தலித்துகளை சந்தித்து, நீதிக்கான அவர்களது போராட்டத்தில் மா லெ கட்சி தொடர்ந்து துணைநிற்கும் என்று உறுதி அளித்ததை கூட்டம் நினைவுபடுத்தியது. வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும். உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற மா லெ கட்சியின் போராட்ட பிரகடனத்துக்காக தொடர்ந்து போராடுவோம் என்று உறுதி கூறப்பட்டது.
குழாய் தண்ணீர் வழங்காமலே தண்ணீர் வழங்கி விட்டதாகவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தை ஒழித்துவிட்டு 125 நாள் வேலை வழங்கப் போவதாகவும் வீடு கட்டாமலேயே வீடு வழங்கி விட்டதாகவும் தனிநபர் கழிப்பறைகள் கட்டாமலேயே திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழித்து விட்டதாகவும் மோசடி அறிக்கை வெளியிடும் பாசிச மோசடி மோடி-எடப்பாடி கூட்டணியை தோற்கடிக்க புதுக்கோட்டை தொகுதியின் முதன்மையான பாஜக -அதிமுக எதிர்ப்பு அரசியல் சக்தி மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் கட்சிக்கே வாக்களிக்க வேண்டுமென்ற செய்தி பெரும் சிரமங்களுக்கிடையே தொகுதி முழுவதும் கொண்டு செல்லப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் (தனி), பாபநாசம் சட்டமன்றத் தொகுதிகள்.
இரண்டு தொகுதிகளுமே தமிழ்நாட்டின் பாரம்பரிய விவசாயப் பகுதியாகும். கட்சிக்கு நீண்ட பாரம்பரியமிக்க கிராமப்புற வறியவர்கள் மத்தியிலான வேலை கொண்ட சட்டமன்றத் தொகுதி திருவிடைமருதூர். தியாகிகள் சந்திரகுமார், சந்திரசேகர் துவங்கி, தோழர் டிகேஎஸ் ஜனார்த்தனன் வரை மக்களோடு மக்களாக நின்று களப்போராட்டங்களை முன்னெடுத்த பகுதி. தேர்தல் போராட்டங்களிலும் தொடர்ந்து பங்கெடுத்து வரும் தொகுதி. மாவட்ட ஊழியர் கூட்டத்தில் தோழர் கண்ணையன் வேட்பாளராக முடிவு செய்யப்பட்டார்.. மாநிலச் செயலாளர் ஆசைத்தம்பி, மாநில நிலைக்குழு உறுப்பினர் ஞானதேசிகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ராஜசங்கர், தவச்செல்வன், மதியழகன், பிரபு, ஜெசிந்தா, கண்ணையன், மாசிலாமணி ஆகியோருடன் தஞ்சை நகரச் செயலாளர் எஸ்.எம் ராஜேந்திரன் உட்பட தோழர்கள் கலந்து கொண்டனர். போராட்ட வழக்குகள் பொய் வழக்குகள் என வேட்பாளர் கண்ணையன் மீது 14 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்தத் தொகுதியில் நிலப் போராட்டம், ஆதிக்க சக்திகளுக்கு எதிரான போராட்டம், விவசாய கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக அறுவடை இயந்திரங்களுக்கு எதிரான போராட்டம், 100 நாள் வேலை திட்டத்தை முறையாக அமுல்படுத்துவதற்கு, சட்டக் கூலி பெறுவதற்கான போராட்டம் என நீண்ட போராட்ட வரலாறு கட்சிக்கு உண்டு.
நமது பாரம்பரிய வேலைப்பகுதிகள், தலித் குடியிருப்புகளில் கவனம் செலுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. எம் எல் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை விளக்கி தோழர் குமாரசாமி, தோழர் ஆசைத்தம்பி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. மயிலாடுதுறை தோழர்கள் இளங்கோவன், வீரச் செல்வன் உள்ளிட்டோர் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர்.
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி:
மாவட்ட ஊழியர் கூட்டத்திலேயே வேட்பாளராக மாவட்டச் செயலாளர் மாசிலாமணி முடிவு செய்யப்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து திரளாக தோழர்கள் எம்எல் கட்சியின் இணைந்த தொகுதி இது. வறிய மக்களின் அடிப்படை கோரிக்கையான வீடு, வீட்டுமனை பட்டா, 100 நாள் வேலைத் திட்டம், மயானம், மயானத்துக்கான பாதை, ரேஷன் கடை, சாலையோரக் குடியிருப்புகள் அகற்றப்படுவதற்கு முன் மாற்று இடம் கோரிய போராட்டம், காவல் நிலைய மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் என தொடர் போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற்ற நிகழ்வுகளும் கொண்ட தொகுதி. அத்தனை போராட்டங்களிலும் தோழர் மாசிலாமணி தலைமையேற்று பங்கேற்றிருக்கிறார்.
இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் கணிசமாக வாழக்கூடிய தொகுதி. சென்ற முறை மனிதநேய மக்கள் கட்சியின் ஜவகருல்லா வெற்றி பெற்ற தொகுதி. இம்முறை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. த.வெ.க உட்பட அனைத்து கட்சிகளும் முஸ்லிம் வேட்பாளர்களையே நிறுத்தி இருக்கிறார்கள்.
பாபநாசத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் தோழர் குமாரசாமி தோழர்கள் ஆசைத்தம்பி, ஞானதேசிகன், உரையாற்றினார்கள். தொகுதி முழுவதும் சில நாட்கள் டெம்போ மைக் செட் பிரச்சாரத்தில் தஞ்சை நகர தோழர்களும், திருச்சி நகர தோழர்களும் கலந்து கொண்டனர். மாநில நிலைக்குழு உறுப்பினர் ஜானகிராமன், மாநிலக் குழு உறுப்பினர் ராஜசங்கர் முகாமிட்டு தேர்தல் வேலைகளில் ஈடுபட்டனர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் இயல்பான அடித்தளமாக விளங்கக்கூடிய உழைக்கும் மக்கள், சிறு, குறு விவசாயிகள், குத்தகை விவசாயிகள் எண்ணிக்கையில் அதிகம் இருக்கும் தொகுதிகளாக இரண்டு தொகுதிகளும் உள்ளன. இரண்டு தொகுதிகளிலுமே நமது பிரச்சாரம் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இருந்தது
ஏற்காடு சட்டமன்ற (எஸ்டி) தொகுதி : தமிழ்நாட்டில் பழங்குடியினருக்கு என ஒதுக்கப்பட்ட இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் முதன்மையானது, சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சட்டமன்ற தொகுதியாகும்.. அதிமுக ஆட்சியில், பழங்குடியினருக்கு பல்வேறு துரோகங்கள் இழைக்கப்பட்டிருந்தபோதிலும், ஏற்காடு சட்டமன்ற தொகுதி தொடர்ச்சியாக அதிமுக வின் செல்வாக்கு மிக்க பகுதியாகத் திகழ்கிறது.
1957 ல் இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பழங்குடியினர் மத்தியிலும், பரந்த ஏழை விவசாயிகள் மத்தியிலும் அமைப்பும், அடித்தளமும் இருந்தபோதிலும் கூட, இங்கு இதுவரை கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் எவரும் போட்டியிட்டது இல்லை. முதன்முறையாக, 2026 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில், சிபிஐஎம்எல் லிபரேசன் சார்பாக தோழர் சி. கோபி போட்டியிட்டார்.
ஏற்காடு தாலுகா மாரமங்கலம் ஊராட்சி உட்பட பல பழங்குடி ஊராட்சிகளில் பல்லாயிரக்கணக்கான பழங்குடியினரை வீடுவீடாக சென்று சந்தித்தோம். ஏழை விவசாயிகள், தூய்மைப் பணியாளர்கள், பட்டியல் சாதியினர் எனப் பல்வேறு பிரிவினரையும் சந்தித்து ஆதரவு கோரினோம்.
மலைப் பகுதியில், பழங்குடியினர் பாரம்பரிய நில உரிமைக்கு எதிரான அரசாணை ரத்து செய்தல், 5 வது அட்டவணையில் தமிழ்நாடு பழங்குடியினர் பகுதிகள் இணைக்கப்படுதல், நிலம், வீடு, வீட்டுமனை, கடனிலிருந்து விடுதலை தொடர்பான நமது போராட்ட பிரகடனம் வரவேற்பை பெற்றன.
மலைநாடு தேசிய மக்கள் கட்சி, பழங்குடி விவசாய முன்னேற்ற சங்கம் போன்ற பழங்குடியினர் அமைப்புகள் நமது வேட்பாளருக்கு நேரடியான ஆதரவை வழங்கின; பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டன.
நமது தேர்தல் பரப்புரை (தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் வாகன பரப்புரைகள்) மிகக்கடுமையாக பாசிச ஆட்சியை, கார்ப்பரேட் ஆதரவு, பழங்குடியினர், விவசாயிகள் விரோத அதிமுக _ பாஜக கூட்டணியின் அரசியலை, அடக்குமுறை ஆட்சிகளை விமர்சனம் செய்வதாக இருந்தது. இதனால், மாரமங்கலம் ஊராட்சி மற்றும் குறிச்சி தெருமுனைக் கூட்டங்களை நடத்துவதற்கு தொந்தரவுகள் மற்றும் மின்தடைகள் உருவாக்கப்பட்டன.
தோழர்கள் சந்திரமோகன், ஏ.கோவிந்தராஜ், வி. அய்யந்துரை, கதிரவன், டாக்டர் ரவி ஆகியோர் உரைகள் பழங்குடியினர் பிரச்சினைகள், உரிமைகளுக்கானப் போராட்டங்களின் அவசியத்தை வலியுறுத்துவது மற்றும் பாசிச மோடி - எடப்பாடி கூட்டணியை அம்பலப்படுத்துவது ஆகியவற்றை மையமாக கொண்டு இருந்தன.
வீரபாண்டி தொகுதி: சேலம் மாவட்டத்தின் 11 சட்டமன்ற தொகுதிகளில், அரசியல் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த சட்டமன்ற தொகுதி வீரபாண்டி ஆகும். இத்தொகுதியில் இடதுசாரி கட்சிகளுக்கு ஓரளவு மக்கள் அடித்தளம் உள்ளது. ஒரே ஒருமுறை மட்டும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் நலக் கூட்டணி வழியாக தனது வேட்பாளரை நிறுத்தியது. சுமார் 8000 வாக்குகளை பெற்றது.
நமது கட்சி வேலைகள் பனமரத்துப்பட்டி ஒன்றியத்தின் கிராமப்புற விவசாயிகள், பழங்குடியினர், பட்டியல் சாதி ஏழைகளை அடிப்படையாக கொண்டதாகும். இந்த ஒன்றியத்தின் முதன்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக சிபிஐஎம்எல் லிபரேசன் வளர்ந்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர், அரசு கையகப்படுத்திய தங்கள் பாரம்பரிய சாகுபடி நிலங்களை மீட்பதற்கான ஏழை விவசாயிகளின் விடாப்பிடியான போராட்டத்தின் தொடர்ச்சியாக, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் சார்பாக, தோழர். P. அன்பு @ அன்பழகன் வேட்பாளராக போட்டியிட்டார்.
பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் உள்ள, கெஜல்நாயக்கன்பட்டி, நிலவாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, குரால்நத்தம் ஊராட்சிகள் மற்றும் எருமாபாளையம் பேரூராட்சியில் 10,000 ற்கும் கூடுதலான மக்களை வீடுவீடாக சென்று சந்தித்துள்ளோம். ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரையும் சந்தித்துள்ளோம்.
வீரபாண்டி சட்டமன்ற தொகுதி போராட்ட பிரகடனம் குறிப்பாக அத்திப்பட்டி, சூரியூர், முத்தானூர் பழங்குடியினர் மற்றும் ஏழை விவசாயிகளின் பாரம்பரிய நில உரிமை, கிராமப்புற வேலைத் திட்டத்தில் 200 நாள் வேலை - 700 தினக்கூலி மற்றும் வீடு, வீட்டுமனை, நிலம் மீதான உரிமைகள், கடனிலிருந்து விடுதலை தொடர்பான நமது வாக்குறுதிகள் வரவேற்பை பெற்றன.
எஸ்யூசிஐ (சி), ஆர்எஸ்பி உள்ளிட்ட ஒரு சில இடதுசாரி அமைப்புகள் தங்களுடைய ஆதரவை நமக்கு வழங்கின.
தலைமை தோழர்கள் சந்திரமோகன், R.வேல்முருகன், திருப்பூர் முத்து, தருமபுரி முருகன், கே.கோவிந்தராஜ் ஆகியோர் பரப்புரைகள், பாசிச மோடி ஆட்சியை அம்பலப்படுத்தியதுடன், நிலம், வீடு, வேலை கூலி, பழங்குடியினர் உரிமைகளுக்கானப் போராட்டக் குரல், கோரிக்கைகள் சட்டமன்றத்தில் ஒலிக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாகவும் இருந்தன.
சிவகாசி சட்டமன்றத் தொகுதி வேட்பு மனு தாக்கல் துவங்கிய உடனேயே, முதலாவதாக, சிபிஐஎம்எல் கட்சி வேட்பாளர் டிமிட்ரோவ் மனு தாக்கல் செய்தது அனைத்து பத்திரிகைகளிலும் இடம்பெற்றது.
பட்டாசு, பீடித் தொழிலாளர் போராட்டங்களின் தொடர்ச்சியாக, அவர்களது உரிமைக் குரலை எழுப்பும் விதத்தில் சிவகாசி தொகுதியில் நமது தேர்தல் பங்கேற்பு இருந்தது. இந்தத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர் பாதுகாப்பு, விபத்து தடுப்பு, குறைந்தபட்ச ஊதியம், இஎஸ்ஐ, பிஎஃப் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு, தொழிலாளர் குடியிருக்க வீடு, வீட்டு மனை உள்ளிட்ட கோரிக்கைகள் நமது பரப்புரையின் மையமாக இருந்தன.
பல குழுக்களாக, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதுடன், வேட்பாளரும் தொடர்ச்சியாக வீடு வீடாகவும், வாகனங்களில் சென்றும் வாக்கு சேகரித்தார். சிவகாசி மாநகராட்சியின் 45 வார்டுகள், சிவகாசி ஒன்றியம் உட்பட தொகுதி முழுவதும் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. ஏப்ரல் 12 அன்று மாலை பொதுக் கூட்டம் நடைபெற்றது. எம்எல் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர், மத்தியக்குழு உறுப்பினர் தோழர் சோ.பாலசுப்பிரமணியன், மாநில நிலைக்குழு உறுப்பினர் த.சங்கரபாண்டியன் உரையாற்றினர்.
இடதுசாரிகள் மற்றும் கடந்த காலங்களில் வீடு, வீட்டு மனைக்கான போராட்டங்களில், தொழிலாளர் அரங்க வேலைகளில் பங்கெடுத்தவர்கள் பரப்புரையின் போது அவர்களாகவே வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள்.
விருதுநகர் காட்டன்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் 25 பேர் இறந்து போனார்கள். அதையே தேர்தல் பரப்புரையாக மாற்றிட முயற்சிக்கப்பட்டது. பட்டாசு விபத்து நடந்த பகுதிக்கு சென்று பார்த்ததுடன், அந்த விபத்திற்குக் காரணமானவர்களைக் கண்டித்தும், தொழிலாளர் மரணத்திற்கு காரணமான லாபவெறி பிடித்த பட்டாசு முதலாளிகள், துணைபோகும் ஒன்றிய, மாநில அரசுகளையும், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பட்டாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளைப் பொறுப்பாக்கிட வேண்டுமென வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில், விருதுநகர் பட்டாசு தயாரிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஒரு கோடி, காயமடைந்தோருக்கு 50 லட்சம் நஷ்ட ஈடாக வழங்கிட வேண்டும்; பட்டாசு தொழில் நடத்த போதிய பாதுகாப்பு உடைய, பட்டாசு தயாரிப்பு வளாகங்களை அரசே உருவாக்கி, ஏற்று நடத்திட வேண்டும்; பாதுகாப்பான பட்டாசு தயாரிப்பு உள்கட்டுமானத்திற்கு, தொழிலாளர் பாதுகாப்புக்கு அரசே பொறுப்பேற்றிட வேண்டும்; கெமிக்கல் கலவைப் பணியை நவீனப்படுத்திட வேண்டும்; மனிதர்களுக்குப் பதிலாக அத்தகைய பணிகளுக்கு எந்திரங்களை பயன்படுத்திட வேண்டும்; 23 பேருக்கும் மேல் இறந்து போன மாபெரும் துயரத்தின் பின்னணியில், விருதுநகர் மாவட்ட தேர்தல்களை தள்ளி வைத்திட வேண்டும் என கோரப்பட்டது.
போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் சிபிஐ(எம்-எல்)லிபரேசன் முதன்முறையாக தேர்தல் களம் கண்டது; வேட்பாளர் முனைவர் சுப.பாண்டிக்குமார். தேர்தல் வரலாற்றில் ஓர் இடதுசாரிக் கட்சி இந்தத் தொகுதியில் போட்டியிடுவது இது இரண்டாவது முறை; இதற்கு முன் சிபிஐ(எம்) ஒரு முறை போட்டியிட்டுள்ளது.
அடையாளபூர்வ, பொய்யான, வெற்று தேர்தல் வாக்குறுதிகளோடும் பணபலத்தோடும் மற்ற கட்சிகள் மக்களை அணுகியபோது சிபிஐ(எம்-எல்) போடிநாயக்கனூர் தொகுதி மக்களின் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத, உயிராதாரமான கோரிக்கைகளின் மக்கள் போராட்டப் பிரகடனத்துடன் மக்களைச் சந்தித்தது.
ஊராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும், போடி நகரிலும் வீடு வீடாகவும், வாகனத்திலும் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. பரப்புரையின்போது மாற்றுக் கட்சியினரால் சில இடையூறுகளும் ஏற்பட்டன. பரப்புரையின் கடைசி நாளில் செய்தித்தாள் வழியாக துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. ஓர் ஆட்டோவும் ஒரு டெம்போவும் எழுச்சிமிக்க பாடல்களுடன் பரப்புரைக்குப் பயன்படுத்தப்பட்டன. கோவையிலிருந்து தோழர்கள் பெரோஸ்பாபு, சண்முகம், ஜான், நவாஸ், மெஜோ 4 நாள்களும். மாநில நிலைக்குழு உறுப்பினர் தோழர் பாலசுப்பிரமணியன், மாநிலக்குழு உறுப்பினர் பிலோமினா 10 நாள்களும் தங்கி இருந்து பரப்புரையில் ஈடுபட்டனர்.
போடியில், ஏப்ரல் 14, அன்று வேட்பாளர் தோழர் சுப.பாண்டிக்குமாரை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் சிபிஐ. (எம்-எல்) ஒன்றிய செயலாளர் தோழர் சிவக்குமார் தலைமையில், மாவட்டக்குழு தோழர்கள் கென்னடி, ஈஸ்வரன், கோவிந்தராஜ், உதுமான், அழகுமலை, சுருளி, விஜய் முன்னிலையில் நடைபெற்றது. மத்திய குழு தோழர் சந்திரமோகன், மாநிலக் குழு தோழர்கள் இராமச்சந்திரன், இளையராஜா உள்ளிட்டோர் உரையாற்றினர். தோழர் சிவராமன் நன்றி கூறினார்; ஏப்ரல் 19 அன்று, இரு சக்கர வாகன, ஆட்டோ ஊர்வலம் நடைபெற்றது. கிராமப்புரத்தில் பரப்புரைக்குச் சென்றபோது, பொதுக்கூட்டம், வாகன ஊர்வலம் பற்றி சிலர் பேசியது, நகர்ப்புரத்தில் மட்டுமல்ல, நகரத்திற்கு வந்து செல்வோரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது என்பதை அறிய முடிந்தது. நமது பரப்புரை மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியையும் மய்யமாகக் கொண்டிருந்தது. கட்சித் தோழர்களுடன் வேட்பாளர் பாண்டிக்குமாரின் நண்பர்களும் பரப்புரையில் கலந்து கொண்டனர். கிராமப்புரங்களில் புதிய அறிமுகங்கள், கட்சி விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் வந்திருக்கின்றன.
குளச்சல் தொகுதியில் தேர்தல் தேதி அறிவிப்பு வருவதற்கு முன்பே வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. குளச்சல் சட்டமன்றத் தொகுதி மக்களின் பிரச்சனைகள் மீது பரப்புரை நடைபயணம், ஆர்ப்பாட்டம் என தேர்தல் போருக்குத் தயாராகிவிட்டனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தோழர் எஸ்.எம்.அந்தோணிமுத்து வேட்பாளராக குமரி மாவட்டக்குழுவால் தேர்வு செய்யப்பட்டார். மார்ச் 23, பகத்சிங் நினைவு நாள் அன்று முதல் தேர்தல் பரப்புரை தொடங்கியது. அதிகமான பெண் தோழர்களைக் கொண்ட மாவட்டக் குழு என்பதால், தேர்தல் பரப்புரையிலும் கணிசமான அளவுக்கு பெண் தோழர்கள் கலந்து கொண்டனர். மீனவர்கள் பிரச்சினை, கனிம வளக் கொள்ளை, அதானிக்கு குமரிக் கடற்கரையைத் தாரை வார்க்கும் மோடி அரசின் திட்டத்திற்கு எதிராக பரப்புரையில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. அதிமுக கூட்டணியில் குளச்சல் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. அதனால், தனித்துப் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சி என்கிற அடிப்படையில் நம் எம்எல் கட்சியின் பரப்புரை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. ஏப்ரல் 14 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் குமரி மாவட்டச் செயலாளர் தோழர் சுசீலா தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் தோழர் கார்மல் உட்பட பலர் பரப்புரைகளில் கலந்து கொண்டு மூன்று நட்சத்திரக் கொடிச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
தூத்துக்குடி தொகுதியின் இகக(மாலெ) வேட்பாளர் தோழர் த.சகாயம். கன்டைனர் லாரி ஓட்டும் தொழிலாளி. தூத்துக்குடியை நாசப்படுத்திய ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டத்தில் முன்நின்றவர். தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அவர்லேண்ட் என்கிற தனியார் நிறுவனத்தால் சுரண்டப்பட்டு வருகிற நிலையில் அந்த தொழிலாளர்களின் சங்கம் தோழர் சகாயத்தின் முயற்சியால் ஏஐசிசிடியுவுடன் இணைக்கப்பட்டது. இகக(மாலெ)யின் 12ஆவது மாநில மாநாடு தூத்துக்குடியில் சமீபத்தில் நடைபெற்றபோது, மாநாட்டு பரப்புரையிலும் நிதி வசூலிலும் முன்நின்று செயல்பட்ட பெண் தூய்மைப் பணியாளர்கள், சட்டமன்றத் தேர்தலில் தோழர் சகாயத்திற்காக வாக்குகள் சேகரித்தார்கள். தங்களுடைய வீடும் வாக்குரிமையும் பக்கத்து தொகுதியான ஓட்டப்பிடாரம் தொகுதியில் இருந்த போதும், அதிகாலை 4 மணிக்கே எழுந்து 6 மணிக்கு தங்கள் தூய்மைப் பணியைத் தொடங்கி மதியம் 2 மணி வரை ஓடிக் கொண்டே இருக்கும் அவர்கள், மதிய உணவை முடித்துவிட்டு, தங்கள் வீட்டிற்குச் சென்றுவிட்டால் திரும்ப வரமுடியாது என்பதால், மாலை 3.30 – 4 மணிக்கு தாங்கள் தூய்மைப் பணி செய்யும் பகுதியில் மூன்று நட்சத்திரக் கொடிச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்கள். மதிய வேளையில், சுட்டெரிக்கும் வெயிலில், வீடு வீடாகச் சென்று, ‘அம்மா, அக்கா கொஞ்சம் வெளியே வாங்க, வேட்பாளர் வந்திருக்கார், எங்க தலைவர் வந்திருக்கார், மூன்று நட்சத்திரக் கொடிச் சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்க’, ‘அக்கா என்ன பார்க்குரீங்க, அடையாளம் தெரியலையா? யுனிபாரத்தில வந்தா தெரியும், காலைல குப்பை எடுக்க வந்தம்லா, இப்ப எங்க தலைவருக்கு ஓட்டு கேட்டு வந்திருக்கோம், ‘எங்களுக்கு சம்பளம் உயர்த்தி வாங்கிக் கொடுத்தார், போனஸ் வாங்கிக் கொடுத்தார், உங்க பிரச்சனைக்காகவும் போராடி செய்து கொடுப்பார் , எங்க தலைவர் சகாயத்திற்கு மூன்று நட்சத்திரக் கொடிச் சின்னத்தில மறக்காம ஓட்டு போட்டுருங்க,‘ மத்தவங்க அவங்க குடும்பத்ததான் வளப்பாங்க, எங்க தலைவர் உங்களுக்காக இருப்பாரு’ என்று எந்தவொரு தயக்கமும் இல்லாமல், நாள் முழுவதும் தொடர்ந்து நின்று கொண்டே பணி செய்ததால் ஏற்பட்ட தங்களின் உடல் வலியையும் தாங்கிக் கொண்டு வாக்கு சேகரித்தார்கள். தேர்தல் அன்று கூட தோழர்கள் பொன்ராஜ், பாலமுருகப் பெருமாள், கற்பகம் உள்ளிட்டோர் வாக்குச் சாவடிக்கு செல்பவர்களிடம் வாக்கு சேகரித்தனர். கடுமையான நிதி நெருக்கடியில்தான் தேர்தலைச் சந்தித்துள்ளார்கள். தேர்தல் பணிக் குழு தலைவரான மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எம்.சுந்தர்ராஜ் நெல்லையிலிருந்து தூத்துக்குடி சென்று தேர்தல் பணியைச் செய்தார். தூய்மைப் பணியாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் போடப்பட்டுள்ள வழக்கின் சாதமான நிலை பற்றி தொழிலாளர்கள் மத்தியில் நாள்தோறும் அதிகாலை ஆறு மணிக்கே டிவிசன்களுக்குச் சென்று எடுத்துக் கூறப்பட்டது. ஸ்டெர்லைட் போராளிகளை சுட்டுக் கொன்ற காவல் துறை அதிகாரிகளுக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைப் படி தண்டனை வழங்க வேண்டும் என்று எம்எல் கட்சி மட்டுமே பரப்புரை செய்தது, ஆட்டோவின் மூலம் செய்யப்பட்ட ஒலிபரப்பு பரவலாகச் சென்றது. ஏப்ரல் 15 அன்று தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் எம்.முருகன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர், கட்சியின் மாநில நிலைக்குழு உறுப்பினரும் ஏஐசிசிடியு ஆலோசகருமான தோழர் எஸ்.குமாரசாமி, மாலெ தீப்பொறி ஆசிரியர் ஜி.ரமேஷ் உரையாற்றினர். திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் கணேசன், தென்காசி மாவட்டச் செயலாளர் வேல்முருகன், திருநெல்வேலி மாவட்டக்குழு உறுப்பினர்கள் சண்முகம், செய்யதலி பாத்திமா, துர்கை முத்து, தூத்துக்குடி மாவட்டக் குழு உறுப்பினர்கள் சிவராமன், சண்முகப் பெருமாள், ராமர், தூய்மைப் பணியாளர் சங்க முன்னணித் தோழர்கள் லட்சுமி, வெங்கடேஷ்வரி, அமுதவல்லி பரப்புரையில் முக்கிய பங்காற்றினர். ஏப்ரல் 21 அன்று இறுதி நாள் தொகுதியின் முக்கிய இடங்களுக்கு வாகனத்தில் வேட்பாளருடன் சென்று பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
திருபெரும்புதூர் தொகுதியின் இகக(மாலெ) வேட்பாளர் தோழர் தமிழரசன். தொழிலாளர் உரிமைக்கான போராட்டத்தில் முன்னணியில் நின்றதால், பன்னாட்டு நிறுவனமான மதர்சன் ஆலை நிர்வாகத்தால் பழி வாங்கப்பட்ட தொழிலாளி். தான் பழிவாங்கப்பட்ட போதும் தொடர்ந்து தொழிலாளர் உரிமைக்காகப் போராடி வருபவர் தோழர் தமிழரசன். திருபெரும்புதூர் தொகுதி தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதி மட்டுமல்ல. பெரும் பகாசுர நிறுவனங்களால் ஒட்டச் சுரண்டப்படும் உழைக்கும் மக்கள் வாழ்கின்ற தொகுதி. தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் ஒருமைப்பாடு மன்றத் தோழர்கள் மக்கள் மாமன்றத்தில் ஒன்று கூடினார்கள். தோழர் தமிழரசனை வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுத்தனர். பன்னாட்டு, உள்நாட்டு ஆலைப் பாட்டாளிகள் களமிறங்கினார்கள். நிதி வசூல், பரப்புரை என சுற்றிச் சுழன்றார்கள். சென்னை தூய்மைப் பணியாளர் போராட்டத்திற்கு பல்வேறு வகைகளிலும் ஆதரவுக் கரம் நீட்டிய அந்த ஆலைத் தொழிலாளர்கள், தொழிலாளர் வர்க்கத்தின் அறுதியிடலை உறுதி செய்வதற்காக தேர்தல் போர்க்களம் கண்டார்கள். இகக(மாலெ) நிலைக்குழு உறுப்பினரும் ஏஐசிசிடியு ஆலோசகருமான தோழர் எஸ்.குமாரசாமி வழிகாட்டுதலில் பரப்புரைப் பயணம் தொடங்கியது. ஆட்டோ பிரசாரம், வாகனப் பிரச்சாரம், தெரு முனைக் கூட்டங்கள் நடைபெற்றன. தொழிலாளத் தோழர்கள் வேட்பாளரை அழைத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்கள். கட்சியின் மாநில நிலைக்குழு உறுப்பினர்கள் இரணியப்பன், புவனா, மாநிலக் குழு உறுப்பினர்கள் ராஜகுரு, ராஜேஷ், ஏஐசிசிடியு தலைவர்கள் பாரதி, அதியமான், மோகன், முனுசாமி, ்கோபால் உள்பட நூற்றுக்கணக்கான தோழர்கள் பரப்புரை பயணத்தில் பங்கெடுத்தனர். கடைசிக்கட்ட பரப்புரையில் இரு சக்கர வாகன ஊர்வலம் நடத்தப்பட்டது. ஏப்ரல் 18 அன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் தோழர் எஸ்.குமாரசாமி சிறப்புரையாற்றினார்.
