பக்கத்தில் வந்து விட்ட போர்!
பிப்ரவரி 28 அன்று 200 அய்க்கிய அமெரிக்க விமானங்கள், ஈரானில் 2000 இலக்குகள் மீது குண்டு வீசின. 2026 ஆம் ஆண்டின் மிகப்பெரிய போர் துவங்கி விட்டது. குண்டு வீச ஈரானில் இடமே இல்லை என்று டிரம்ப் சொல்லும் அளவுக்கு, தீவிரமாக போர் நடந்தது. டிரம்போடு உடன் நின்று, அய்க்கிய அமெரிக்காவுக்கு இராணுவ தளங்கள் அமைக்க இடம் தந்த எல்லா நாடுகளையும், ஈரான் தாக்கியது. ஹோர்முஸ் நீரிணை மூலம் எண்ணெய் கப்பல்கள் செல்ல முடியாத நிலை வந்தது. இப்போது 14 வது நாளை போர் எட்டியுள்ள நிலையில், நம் சமையல் அறைக்குள் போர் நுழைந்து விட்டது. நம் உணவுத் தட்டை போர் தொட்டுவிட்டது. எரிவாயு உருளை தட்டுப்பாடு வந்ததால், ஆம்லெட் இல்லை அவித்த முட்டை மட்டுமே உண்டு என, உணவகங்கள் சொல்கின்றன. தொழிற்சாலை உணவகங்களில், சாம்பார் காணாமல் போய்விட்டது. முழு சாப்பாட்டின் இடத்தை, கலவை சாப்பாடு பிடித்து விட்டது. நாள் செல்ல நாள் செல்ல, பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால், விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி, மக்கள் கழுத்தை நெரிக்கும்.
போருக்குச் சொல்லப்படும் காரணம்
"இதிகாச சீற்றம்" "சிங்கத்தின் கர்ஜனை" என்று போர் நடவடிக்கைகளுக்கு அய்க்கிய அமெரிக்காவும் இஸ்ரேலும் பெயர்கள் வைத்தனர். ஈரானால் அணு ஆயுத ஆபத்து என இஸ்ரேல் சொல்ல, அய்க்கிய அமெரிக்காவும் அனுமதிக்கவே மாட்டேன் என ஆர்ப்பரித்தது. ஈரான் சில வாரங்களில் சில மாதங்களில் அணு ஆயுதம் தயாரித்து விட உள்ளது என்ற கதையை 90களிலிருந்தே இஸ்ரேல் சொல்லி வந்தது. அப்போதிலிருந்தே, அதிகபட்சம் அடுத்த ஆண்டில் தயாரித்து விடும் என்றது. 35 ஆண்டுகள் ஆன பின்பும், அணு ஆயுதம் எதுவும் தயாராகவில்லை. அய்க்கிய அமெரிக்கா 2025 ல் ஈரான் மீது வான்வெளி தாக்குதல் நடத்திய போது, ஈரானின் அணு ஆற்றலை முற்றிலுமாக ஒழித்து விட்டோம் என்று பெருமை பேசியது. அப்படியானால், அணு ஆயுத ஆபத்தை ஒழிக்க போர் என்பது பொய்யான காரணமாகும்.
தற்போதைய ஆட்சியை மாற்றி அங்கே எடுபிடிகளை அமர்த்த முடியுமா எனவும் எண்ணினார்கள். இஸ்லாமியர்களுக்கு புனிதமான நோன்பிருக்கும் ரம்ஜான் காலத்தில், காமெனியைக் கொன்றதால், 165 பெண் குழந்தைகளைக் குண்டு வீசிக் கொன்றதால், ஆட்சி மாற்றம் என்பது பற்றி ஈரான் மக்கள் யோசிக்கக்கூட மாட்டார்கள் என, அய்க்கிய அமெரிக்க உளவுத்துறை இப்போது சொல்கிறது. மேற்கு ஆசியாவின் மீது மேலாதிக்கம், எரிசக்தி வளத்தைக் கைப்பற்றுவது, ஈரானின் இறையாளுமையைப் பறிப்பது, நீண்ட காலத்திற்கு ஈரானின் போரிடும் ஆற்றலை அழிப்பது என்பதற்காகவே இந்த போர் நடக்கிறது.
அய்க்கிய அமெரிக்கா - இஸ்ரேல் வெற்றி அடைந்து விட்டனவா?
ஈரான், 10 கோடி மக்கள் வாழ்கிற, தொன்மையான நாகரீகம் கொண்டுள்ள, பரந்து விரிந்த ஒரு பெரிய நாடு. ஆப்கானிஸ்தானில், ஈராக்கில், செய்தது போல் நேரடி ஆக்கிரமிப்பை (BOOTS ON THE GROUND) அய்க்கிய அமெரிக்கா செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அதனுடைய இராணுவ வீரர்களின் சடலங்கள் அடங்கிய பைகள் (BODY BAGS), அய்க்கிய அமெரிக்காவுக்கு வர ஆரம்பிக்கும். டிரம்ப் ஆதரவாளர்களே அதனை ஏற்க மாட்டார்கள். கார்ல்சன் டிரக்கர் போன்ற கிறிஸ்தவ மத போதகர்கள், இந்தப் போர் கூடாது என அய்க்கிய அமெரிக்காவில் பேசுகிறார்கள். டிரம்ப் முகாமில் இருந்தே, டிரக்கருக்கு ஆதரவு வலுக்கிறது. அய்க்கிய அமெரிக்காவால் தங்களை பாதுகாக்க முடியாது என, சவுதி அரேபியா, அய்க்கிய அரபு அமீரகம், குவைத், குவெத்தார் பகரின் நாடுகள் உணரத் துவங்கி விட்டன. அவர்களது விமான நிலையங்கள், இராணுவ முகாம்கள் தாக்கப்படுகின்றன. எண்ணெய் வயல்கள், எரிசக்தி மய்யங்கள் தீப்பிடித்து எரிகின்றன. நச்சுப்புகை காலாகாலத்திற்கும் சூழலுக்குக் கேடு உருவாக்கும்.
ஈரானின் தாங்கும் திறனையும், தாக்கும் திறனையும் டிரம்பும் நெதன்யாகுவும் சரியாகக் கணிக்கவில்லை. அய்க்கிய அமெரிக்காவின் விமானங்கள், எண்ணெய் கப்பல்கள், போர்க்கப்பல்கள் தாக்கப்படுகின்றன. இஸ்ரேலின் டெல் அவீவ் உட்பட கடுமையான தாக்குதலைச் சந்திக்கிறது. தயாரிப்பு மதிப்பு குறைவாக உள்ள விண்ணில் செலுத்தும் சிறிய ஆயுதங்கள் கொண்டு, அய்க்கிய அமெரிக்காவின் பிரமாண்டமான விலை உயர்ந்த அதி நவீன ஆயுதங்களுக்கு ஈரான் சேதம் உருவாக்குகிறது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பாலஸ்தீன பகுதிகளையும் சேர்த்து பார்த்தால், யூதர்கள் எண்ணிக்கைக்கும் இஸ்லாமிய / அரபு பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கைக்கும் இடையில் பெரிய வேறுபாடு கிடையாது. சீனாவும் ரஷ்யாவும், ஈரான் மீதான ஆக்கிரமிப்பைக் கண்டிக்கிறார்கள். ஸ்பெயினும், இத்தாலியும் கண்டிக்கிறார்கள். டிரம்ப் - நெதன்யாகு கூட்டணியின் கொடூரமான நடவடிக்கைகளுக்கு, உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது. அரபு தெருக்களும், இஸ்லாமிய உலகமும் உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டுள்ளன. போர் வெற்றி என்பது, டிரம்ப் - நெதன்யாகு கூட்டணிக்கு, சமீப எதிர்காலத்தில் சாத்தியம் இல்லை. இஸ்ரேல், தனது மேலாதிக்கத்தை அப்படியே தொடர்வதும் அரபு உலகம் அடங்கியே இருப்பதும் இனி சாத்தியமாவது கடினம்.
மேற்கத்திய நாகரிகமே மேலான நாகரிகம் என்று சொல்லும் மோசடி
ஹிட்லர் டிரம்ப் நெதன்யாகு போன்றவர்கள் தான் தீயவர்கள். மற்றபடி அய்க்கிய அமெரிக்காவும் அய்ரோப்பாவும் போர் வெறியர்கள் அல்ல என்று சொல்ல முடியுமா?
இரண்டு உலகப் போர்களிலும், மேற்கத்திய நாடுகள் தான் ஈடுபட்டன. கிறிஸ்டோபர் கொலம்பஸ், அமெரிந்தியர்களை முதலில் கண்ட 1492 ல், அவர்கள் 6 கோடி பேர் இருந்தனர். அய்ரோப்பாவின் ஒரு நூற்றாண்டு காலனிய முயற்சியில், 5.5 கோடி பேர் அமெரிந்தியர் மடிந்தனர்.
1500லிருந்து 1900 வரை 1.5 கோடி ஆப்பிரிக்க மக்களை கடத்தி அடிமைகளாக்கியது, மேற்கத்திய நாடுகளே ஆகும்.
1765லிருந்து 1938 வரை 47 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள செல்வத்தை, பிரிட்டிஷார் இந்தியாவில் இருந்து சூறையாடினார்கள். சர்ச்சில் கால கொள்ளையால் வந்த பஞ்சத்தால் 37 லட்சம் இந்தியர்கள் மடிந்தார்கள்.
மேற்கத்திய நாடுகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை ரத்த சகதியில் நனைந்துள்ளன. ஏகாதிபத்தியம் என்றால் போர் என்பதை, நோபல் பரிசுக்கு ஆசைப்பட்ட டிரம்பும் மீண்டும் நிரூபித்துள்ளார்.
இந்தியா என்ன செய்ய வேண்டும்?
மேற்காசியாவில் உள்ள ஒரு கோடி இந்தியர்கள் பற்றி இந்தியா யோசித்திருக்க வேண்டும். அவர்களது வாழ்வும் வளமும், இஸ்லாமிய நாடுகளோடு பின்னிப் பிணைந்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேலும் அய்க்கிய அமெரிக்காவும் போர் தொடுக்க திட்டமிட்டு இருந்த நேரம் மோடி, இஸ்ரேல் சென்றிருக்கக்கூடாது. 70,000 க்கும் மேற்பட்டவர்களை காசாவில் படுகொலை செய்த நெதன்யாகுவை, மோடி ஆரத் தழுவியது அநீதியாகும்.
காமெனி படுகொலையை, பெண் குழந்தைகள் 165 பேரை குண்டு வீசி கொன்றதை, இந்தியாவில் பயிற்சி எடுத்து திரும்பிய ஈரானிய கப்பல் மூழ்கடிக்கப்பட்டதை, இந்தியா கண்டித்திருக்க வேண்டும். இந்தியா, இப்போது பிரிக்ஸ் நாடுகளுக்கு தலைமை தாங்குகிறது.
30 நாட்கள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கிப் பிழைத்துக்கொள் என்று ட்ரம்ப் பேசும் சூழலுக்கு, நிலைமைகள் சீரழிய இந்தியா அனுமதித்திருக்கக் கூடாது. அய்க்கிய அமெரிக்காவிலிருந்து 300 பில்லியன் டாலர் கட்டாய இறக்குமதிக்கு, இந்தியா ஒப்புக்கொண்டிருக்கக் கூடாது. சீனாவைப் போல் அய்க்கிய அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தை எதிர்கொள்ள, இந்தியா தயாராக வேண்டும்.
டிரம்பும் அய்க்கிய அமெரிக்காவும், நெருக்கடியில் உள்ளனர். 300 பில்லியன் டாலரை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்காக அம்பானி முதலீடு செய்வார், வேலை வாய்ப்பும் வளமும் அய்க்கிய அமெரிக்காவில் பெருகும் என டிரம்ப் சொல்லும்போது, அம்பானி அதனை இதுவரை உறுதி செய்யவில்லை.
டிரம்பின் வெற்றிக் கூச்சல், வெற்றுக் கூச்சல் என உணர்ந்து, இந்தியா செயல்பட வேண்டும். (ஈரான் தனக்கு நட்பு நாடு என்று சொல்லி ஏதோ ஒரு விதத்தில் ஹோர்முஸ் நீரிணை மூலமாக இந்தியாவுக்கு கப்பல்களில் எண்ணெய் வர துவங்கியுள்ளது நல்ல விஷயமாகும்)
நூற்று நாற்பது கோடி மக்கள் உள்ள நமது மாபெரும் நாடு, எந்த நாட்டிடமும் மண்டியிடக்கூடாது; எந்த நாடும் இந்தியாவைக் கண்டு அஞ்சிடக்கூடாது.
இந்தியா, ரஷ்யாவோடு, சீனாவோடு, பிரேசிலோடு, தென்னாப்பிரிக்காவோடு சேர்ந்து கொண்டு, போரை உடனே நிறுத்துங்கள் என, டிரம்ப் - நெதன்யாகுவிடம் வலியுறுத்த வேண்டும். நீதியின் பக்கம் அமைதியின் பக்கம் இந்தியா எப்போதும் நிற்க வேண்டும்.
