புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நேரத்தில் வன்முறை களமாக்க பாஜக சதித்திட்டம்?

$articleData->title

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் 2026

இரண்டு வாரங்களுக்கு முன்பு தில்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவின் பயன்கள் பன்னாட்டு உச்சி மாநாட்டின் உள்ளரங்கில் இந்திய தேசிய இளைஞர் காங்கிரசார் மேல் சட்டைகள் இன்றி திடீரென்று பிரதம அமைச்சருக்கு எதிராக சமன் அற்ற இந்திய  - அமெரிக்க வணிக ஒப்பந்தத்தை கைவிட கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் பன்னாட்டு அரசியல் சமூகத்தினரின், கார்ப்பரேட்டுகளின் கவனத்தை ஈர்த்தது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறி இளைஞர் காங்கிரசாரை டில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பன்னாட்டு அளவில் இந்தப் போராட்டம் மோடியின் புகழை குறைத்து விட்டதாகவும், உலகளாவிய அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கமென்றும் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், குபேந்தர் யாதவ் உள்ளிட்டோர் விமர்சித்தது மட்டுமின்றி தேச விரோதமானது என்றும் ஊதிப் பெருக்குகின்றனர். 

தில்லியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு எதிர்ச் செயலாக புதுச்சேரியில் பாஜக இளைஞர் அணியினர் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி இரவு கும்பலாகத் திரண்டு காங்கிரஸ் கட்சி அலுவலகம் எதிரில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்து அவசியமற்ற பதற்றத்தை, தேர்தல் நேரத்தில்  மோதல் போக்கைத் தூண்டி வருகின்றனர். புதுச்சேரிக்கு பிரதமர் வருகை புரிவது ஒட்டி பாஜகவினர் தங்கள் விசுவாசத்தை காட்டிக்கொள்ள வன்முறையை ஆயுதமாக்கத் துணிந்து விட்டனர்.

அடுத்த நாள்,  எதிர்வினையாக  இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பாஜக அலுவலகம்  எதிரில் திரண்டு முற்றுகையிட ஆயத்தமாகினர். அவர்களுடன் முன்னாள் முதல்வர் நாராயணசாமி  மகிளா காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் கூடியிருந்தனர்

காங்கிரஸ் கட்சியினரை பார்த்த பாஜக கட்சியினர் உருட்டு கட்டைகளாலும், கற்களாலும், செருப்புகளை வீசியும்  அவர்களை தாக்க ஆரம்பித்தார்கள். வீதி சண்டையில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், காவல்துறையினர் என்று சிலர் கூட காயமடைந்தனர். போராட்டத்தின் போது பிரதமர் மோடியின் உருவ பொம்மையை காங்கிரஸார் எரித்துவிட்டனர்.

மகிளா காங்கிரஸ் தலைவி நிஷா தலைமையில் பெண்கள் பாஜக அலுவலகம் அருகில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நிஷா உள்ளிட்ட பெண்கள் சேர்ந்து போராடிய இடம், தரையில் அமர்ந்த இடம் 'தீட்டு ' பட்டு விட்டதாக பெண்களை ஆபாசமாக வசைபாடி மஞ்சள் தண்ணீர் ஊற்றி கழுவி, பாஜக மகளிர் அணியினர் பெண் அடிமை, பிற்போக்கு, மனுதர்ம கருத்துகளைத் தூக்கிப் பிடித்து புதுச்சேரியின் குடிமைச்  சமூகத்தில் பெரும் பதற்றத்தையும், போராட்டத்தையும் கிளறிவிட்டனர்.

ஒரு அரசியல் கட்சியின் போராட்டம் இதர அரசியல் கட்சிகளுக்கு எதிராக இருக்கும்  எனில் எதிர் கருத்து கட்சிகளின் அலுவலகம்  எதிரில் போராட்டம் நடத்துவது புதுச்சேரி மாநிலத்தில் வழமையான ஒன்று அல்ல.

பாஜக கட்சி மாற்றுக் கருத்து உள்ள அரசியல் கட்சிகளின் அலுவலகம் எதிரில் வன்முறை போராட்டம் நடத்தி புதிய வகை வன்முறை கலாச்சாரத்தை நாடு முழுவதும் நடத்தி வருவதன் ஒரு பகுதியே புதுச்சேரியில் காங்கிரஸ் அலுவலகம் எதிரில் பாஜகவினர் நடத்திய அராஜக வன்முறை போராட்டம்.

கருத்தை கருத்தால் எதிர்கொள்வது  என்பதற்கு மாறாக ஜனநாயகக்  கருத்துகளை வன்முறையால் எதிர்கொள்வது,   தெருச்சண்டைகளில்  கட்சி அணியினரை, அப்பாவி மக்களை ஈடுபடுத்தி குளிர் காய்ந்து பாசிச நச்சு விதைகளை நடுவது, வெறுப்பு அரசியலுக்கு தூபம் இடுவது பாசிஸ்டுகளின் வாடிக்கை என்பதை புதுச்சேரி மண்ணிலும் அந்த நச்சு அரசியலை தூவ முயற்சிக்கிறார்கள். மேலும்  இப்படிப்பட்ட நச்சு வித்துக்களை நட முயற்சிக்கும் பாஜகவினருக்கு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்களில் நல்ல பாடம், நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி மக்கள் புகட்டியது போல் மீண்டும் புகட்டிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. பாசிஸ்ட்களை மக்கள் விரைவில்  அப்புறப்படுத்துவார்கள்.


08 March, 2026