ஜூலை 20, 2026 அய் வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கு தில்லி நினைவில் வைத்திருக்கும். புதிதாகப் பிறந்த டிஜிட்டல் அமைப்பான கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் முற்போக்கு மாணவர் அமைப்புகளும், குறிப்பாக அகில இந்திய மாணவர் கழகமும் (AISA), மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தி, மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்க நாளில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த அழைப்பு விடுத்திருந்தன. இத்தகைய பேரணிக்கு எந்த அனுமதியும் இல்லை; அனுமதியற்ற எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற காவல் துறை அறிவுறுத்தலை அரசாங்கம் வெளியிட்டது. மூன்று நாட்களுக்கு முன்பாக, தில்லி காவல் துறை ஆணையரை அமித் ஷா மாற்றியிருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த, பருவநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்கை, பேரணிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, சாதாரண உடையில் வந்த காவல் துறையினர் வெள்ளை நிறப் போர்வையால் சுற்றி குண்டுகட்டாகத் தூக்கிச் சென்றனர். இத்தகைய சூழ்நிலைமைகளில், நாடாளுமன்றம் நோக்கிய பேரணிக்குச் சாத்தியமில்லை என்று மோடியின் இந்தியாவில் ‘புதிய இயல்பாகிப்போன’ பொதுப்புத்தி உணர்த்தியது.
ஜூலை 20, பலத்த மழையுடன் விடிந்த அந்த நாளில், இது போன்றதொரு பேரணியை இதற்கு முன்பு கண்டதில்லை என்பதை தில்லி உணர்ந்தது. தில்லியின் இதயப்பகுதியில் உள்ள ஒவ்வொரு சாலையிலும் இளைஞர்கள் அலையலையாக திரண்டு வந்தனர். அனுபவம் வாய்ந்த ஓட்டப்பந்தய வீரர்கள் தடகளப் போட்டிகளில் தடைகளை எளிதாகக் கடப்பது போல, தில்லி காவல் துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை அவர்கள் எளிதாக தாண்டிச் சென்றனர். மொத்த தில்லியுமே ஜந்தர் மந்தராக மாறியிருந்தது. ஒவ்வொரு சாலையும் நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கியேச் சென்றது. மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. ஆனால் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பு முழக்கங்களுக்கு மத்தியில் அவை ஒத்திவைக்கப்பட்டது. நேரம் ஆக ஆக, தில்லி முழுவதிலுமிருந்து காவல் துறையினரின் கடுமையான தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, கல்வீச்சு சம்பவங்கள் குறித்த செய்திகள் வந்து குவியத் தொடங்கின. பல பகுதிகள் அடர்ந்த புகையால் சூழப்பட்டு போர்க்களம் போல் காட்சியளித்தன. போராட்டக்காரர்கள் பலர் பலத்த காயமடைந்தனர். ஆனாலும், மூவர்ணக் கொடியையோ, அரசமைப்புச் சட்டப் புத்தகத்தையோ கைகளில் ஏந்தியபடி தடியடிகளை எதிர்கொள்ளும் இளைஞர்களின் காணொளிகள், இந்தியாவினுடைய புதிய தலைமுறையின் துணிச்சலையும் உறுதியையும் வெளிப்படுத்தின. காவல்துறையினரால் அராஜகமாக அகற்றப்பட்டிருந்த ‘ஜந்தர் மந்தர் போராட்டக் களம்’, மாலை நெருங்க நெருங்க, மீண்டும் போராட்டக்காரர்கள் வசம் வருவதைக் காண முடிந்தது.
சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, ஜூன் 20 ஆம் தேதி ஜந்தர் மந்தரில் காத்திருப்புப் போராட்டங்கள் தொடங்கியிருந்தன. ஒரு வாரம் கழித்து, ஜூன் 28 அன்று சோனம் வாங்சுக்கும் அகில இந்திய மாணவர் கழகத்தின் ஆறு தலைவர்களும் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினர். நாட்கள் செல்லச் செல்ல, டெல்லியின் கடும் கோடை வெப்பத்தாலும் வியர்வையாலும் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியதால், பட்டினிப் போராட்டம் இருந்த ஆறு மாணவர் தலைவர்களில் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதாயிற்று. அதேவேளை, மற்ற மூவரும் உணவு மறுப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். ஆனாலும் அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. மோடிக்கு வாலாட்டும் ஊடகங்களும் போராட்டச் செய்தியை வெளியிடத் தயாரில்லை. இந்தக் கள்ள மவுனம் போராட்டக்காரர்களைச் சோர்வடையச் செய்யுமென்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும். ஆனால், வாய்வழிச் செய்தியின் வலிமையும் சமூக ஊடகங்களில் கிடைத்த பரவலான வரவேற்பும் மோடி-அடிவருடி ஊடகங்களின் இந்த வஞ்சகமான வியூகத்தை முறியடித்துவிட்டது. ஜூலை 20 அன்று திரண்ட கூட்டம் அரசாங்கத்தையும் ஊடகத்தையும் முற்றிலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
டிஜிட்டல் நையாண்டியும் உண்மையான களப் போரட்டமும் இணைந்த இப்புதிய சேர்க்கைக்கு கிடைத்த தன்னிச்சையான ஆதரவின் அளவானது இந்த இயக்கத்தில் ஈடுபட்ட அமைப்புகளின், தூரத்திலிருந்து கவனித்து வந்த எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்புகளையும் மிஞ்சி்விட்டது. 2012ல் அன்னா ஹசாரே தலைமையில் நடந்த ஊழல் எதிர்ப்பு இயக்கம் தந்த ஏமாற்றமான அனுபவத்திலிருந்து பார்க்கும்போது, சிஜேபி நிகழ்வுகள் குறித்தும் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தில் சோனம் வாங்சுக்கின் பங்கெடுப்பு குறித்தும் கணிசமான சந்தேகம் இருந்ததும் புரிந்துகொள்ளக் கூடியதே.
ஒரு கல்வியாளர், புதுமைப் படைப்பாளர், பருவநிலை ஆர்வலர் என சோனம் வாங்சுக் பரவலாக அறியப்பட்டவர்தான். என்றாலும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை ஆதரித்தது, மோடி அரசாங்கத்தின் பல கொள்கைகளுக்கு ஆதரவாக அண்மைக்காலம் வரை அவர் எடுத்த நிலைப்பாடுகளால் கல்வி-தேர்வு முறைக்கு எதிராக அவர் எடுத்த இந்தப் புதிய அவதாரத்தின் மீது அதிக நம்பிக்கை ஏற்படவில்லை. இருப்பினும் கல்வி, தேர்வுகள், வேலைவாய்ப்பு என்ற பிரச்சனைகளில் மட்டுமின்றி, அரசாங்கத்தை பொறுப்பாக்குவது என்ற கேள்வியிலும் இந்தப் போராட்டங்கள் இந்திய இளைஞர்களின் ஆழமான உணர்வுகளைத் தொட்டுள்ளன என்பதை ஜூலை 20 அழைப்புக்கு கிடைத்த மாபெரும் மக்கள் ஆதரவு தெளிவாகக் காட்டியது.
இதுவரை இல்லாத அளவிலான, உற்சாகமான மக்கள் பங்கேற்பு, குறிப்பாக முப்பது வயதுக்குட்பட்ட இசட் தலைமுறை இளைஞர் பட்டாளத்தின் பங்கேற்பு, சமூக, அரசியல் மாற்றத்திற்கான ஒரு சக்தியாக இசட் தலைமுறையினர் தங்களை அறுதியிட்டுக் கொண்டதன் தெளிவான அறிகுறியாக ஜூலை 20-அய் தனித்து நிற்கச் செய்தது. அண்டைநாடான வங்கதேசத்தில் நிகழ்ந்த ஜூலை 2024 எழுச்சி அல்லது நேபாளத்தில் செப்டம்பர் 2025-ல் நடந்த எழுச்சி, அந்த நாடுகளில் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்த அந்த இரண்டின் சாயல்களையும் ஜூலை 20 கொண்டிருந்தது. ஆனால் இங்கு, தனது கண்காணிப்பின் கீழ் செயல்படும் துறையில் தொடர்ந்து வினாத்தாள்கள் கசிந்ததற்கு பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பது மட்டுமே கோரிக்கையாக இருந்தது. மருத்துவமனையிலிருந்து சோனம் வாங்சுக் அனுப்பிய குறிப்புகளில், அந்த மையக் கோரிக்கையை அவர் தவிர்த்துவிட்டதாகவே தோன்றியது; மேலும் கல்வி குறித்த விவாதத்தை நாடாளுமன்றத்தில் தீவிரமாக முன்னெடுக்க எதிர்க்கட்சிகள் உறுதியளித்தால், தனது பட்டினிப் போராட்டத்தை முடித்துக் கொள்ளத் தயார் என்று அவர் கூறியிருந்தார். அரசாங்கத்தைப் பொறுப்பாக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சுருக்கி, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கல்விப் பிரச்சனையைக் கிளப்ப வேண்டும் (இதைத்தான் எதிர்க்கட்சிகள் அண்மையக் கூட்டத்தொடர்களில் தொடர்ந்து செய்து வந்தன) என்று கூறியது, அவரது ஆதரவாளர்களைக் குழப்பத்திலும் ஏமாற்றத்திலும் ஆழ்த்தியது.
ஜூலை 20 நாடாளுமன்றப் பேரணியில் பங்கேற்றவர்கள் பாராட்டப்பட வேண்டிய பெருமைக்குரியவர்கள். போதிய தெளிவும் ஒருங்கிணைப்பும் இல்லாவிட்டாலும் கூட, டெல்லியின் பல பகுதிகளில் பேரணியைக் களங்கப்படுத்தவும் தாக்கவும் காவல்துறையினருடன் கைகோர்த்த சங்கிப் படையினரின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளையும் காவல்துறையின் கொடூர தாக்குதல்களையும் தாங்கிக்கொண்டு பேரணியில் பங்கெடுத்தவர்கள் அமைதியாகவும் உறுதியாகவும் இருந்தனர். ஜனவரி 26, 2021 டிராக்டர் பேரணிக்குப் பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் இயக்கத்தைக் களங்கப்படுத்தவும் தடம்புரளச் செய்யவும் மோடி அரசாங்கம் செய்த சதியை இது நமக்கு நினைவூட்டியது. ஆனால் விவசாயிகள் எவ்வாறு மீண்டும் ஒன்று திரண்டு மீண்டு வந்தார்களோ, மூன்று விவசாய விரோத சட்டங்களும் திரும்பப் பெறப்படும் வரை அந்த இயக்கம் தொடர்ந்ததோ, அதே போன்று, தங்களின் முக்கியக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை முன்னேறிச் செல்ல தனது இளைஞர்களுக்கு வலிமையும் விடாமுயற்சியும் கிடைக்க இந்தியா விரும்புகிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன், ரோஹித் வெமுலாவின் அதிர்ச்சியூட்டும் நிறுவனப் படுகொலையைத் தொடர்ந்து, இந்தியாவின் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மாணவர் தலைவர்களை சிறையில் அடைத்தும் மாணவர் இயக்கத்தை தேச விரோத சதி என்று அவதூறு பரப்பியும் அரசாங்கம் எதிர் பரப்புரை செய்தது. பின்னர் 2020 ஜனவரி-பிப்ரவரியில், மாணவர்களும் குடிமக்களும் குறிப்பாக இஸ்லாமியப் பெண்கள், குடியுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட பிளவுபடுத்துகிற, பாரபட்சமான திருத்தங்களுக்கு எதிராக ஒரு எழுச்சியூட்டும் போராட்ட இயக்கத்தைத் தொடங்கினர். தில்லியில் மதவாத வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டும் சமூக செயல்பாட்டாளர்களை உபா (UAPA) சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தும் அந்த வரலாற்று சிறப்புமிக்க ஷாஹீன் பாக் போராட்ட இயக்கத்தை ஒடுக்கியது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் போன்ற இளம் அறிஞர்கள் எந்தவொரு விசாரணையும் இன்றி சிறையில் வாடுகின்றனர்.
பல்கலைக்கழக வளாகங்கள் மட்டத்தில் நடந்த கடந்த கால மாணவர் இயக்கங்கள், ஷாஹீன் பாக் போராட்டங்கள் அல்லது தில்லி எல்லையில் நடந்த விவசாயிகளின் இயக்கம் ஆகியவற்றைப் போலல்லாமல், இம்முறை இளைஞர் இயக்கம் தில்லி இதயப் பகுதியிலேயே தனது இருப்பை உணரச் செய்தது. பல்கலைக்கழக மாணவர்கள் தில்லியின் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்தனர்; பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்தனர்; சமூக, கலாச்சார எல்லைகளைத் தாண்டி இளம் பெண்கள் இளம் ஆண்களுடன் தோளோடு தோள் சேர்ந்து அணிவகுத்துச் சென்றனர்; இத்தகையதொரு ஒற்றுமைக்கான தளத்தை இது உருவாக்கியது. அகில இந்திய மாணவர் கழகமும் பிற இடதுசாரி மாணவர் அமைப்புகளின் செயல்பாட்டாளர்களும் அனைத்து தடைகளையும் தாண்டி இந்த இயக்கத்தைத் தக்கவைக்கவும் வலுப்படுத்தவும் தங்கள் முழு ஆற்றலையும் முயற்சிகளையும் அர்ப்பணிப்புடன் வெளிப்படுத்தினர். மேலும் பட்டினிப் போராட்டம் இருந்த நேஹா, தனிஷ், மணீஷ், ஆமீன், ரிஷிகேஷ், தீபக் போன்ற மாணவர் தலைவர்கள், சோனம் வாங்சுக் மற்றும் சிஜேபி தலைவர்களான அபிஜித் திப்கே, சவ்ரவ் தாஸ் போன்றவர்களுடன் எவ்வாறு இணைந்து பணியாற்ற முடியும் என்பதையும் நிரூபித்துக் காட்டினர்.
மிகப்பெரிய அளவிலான வாக்குரிமை பறிப்பு, திட்டமிட்ட வகையிலான அடிப்படை உரிமைகள் மறுப்பு, தொடர் தேர்தல் மோசடிகள், வெறுப்புப் பேச்சு மற்றும், பொய்களின் இடைவிடாத தாக்குதல்கள் மூலம் அச்சமின்றி தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் அதிகாரம் பெற்ற குடிமக்களை, அச்சங்கொண்ட, அரசாங்க விசுவாசிகளாக ஆக்கும் வகையில் எங்கும் பரவியுள்ள அச்சத்தையும் விரக்தியையும் மீறி, ஜூலை 2026-ன் ஜந்தர் மந்தர் போராட்டமும் ஜூலை 20-ன் நாடாளுமன்றப் பேரணியும் சமூகத்தின் பெரும் பிரிவினரை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த அச்சத்தையும் அக்கறையின்மையையும் தீர்மானகரமாக உடைத்தெறிந்துள்ளது என்பதின் அடையாளம் ஆகும். வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டும் கல்வி அமைச்சரைப் பொறுப்பேற்கக் கோரியும் போராட்டக்காரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டியதிருக்கிறது. அப்படியென்றால், மோடி பிரதமர் பதவியில் தொடர தார்மீக உரிமை இருக்கிறதா? இந்திய மக்கள் போதுமான து்ன்பத்தை அனுபவித்துவிட்டார்கள். இப்போது அவர்கள் அதற்கான பதில்களையும் பொறுப்பேற்பையுமே கோருகிறார்கள்.
தலையங்கம்,
லிபரேஷன்,ஆகஸ்டு 2026
தமிழாக்கம்: விஜி
