தமிழ்நாட்டில் நம்முடைய போராட்டங்களின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக பாசிச எதிர்ப்பையும் கட்டமைப்போம்.

(சிபிஐ எம் எல் கட்சியின் 12 ஆவது தமிழ்நாடு மாநில பிரதிநிதிகள் மாநாட்டில் தோழர் திபங்கர் ஆற்றிய துவக்க உரையிலிருந்து சில பகுதிகள்)

$articleData->title

(சிபிஐ எம் எல் கட்சியின் 12 ஆவது தமிழ்நாடு மாநில பிரதிநிதிகள் மாநாட்டில் தோழர் திபங்கர் ஆற்றிய துவக்க உரையிலிருந்து சில பகுதிகள்)

தோழர் நடராஜன் நம்முடன் இருந்த கடந்த மாநாடு எனக்கு நினைவுக்கு வருகிறது. அவர் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில மாநாட்டிற்குப் பிறகு, மத்தியக் குழு கூட்டம் நடந்தது; அந்தக் கூட்டத்திற்குப்பின்னர் அவர் அகால மரணமடைந்துவிட்டார். ஒட்டுமொத்த கட்சியும் தோழர் நடராஜன் அவர்களுக்கும் கடந்த மாநாட்டிற்குப் பிறகு மறைந்த  அனைத்து கட்சித் தலைவர்களுக்கும்  கட்சி ஊழியர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் அஞ்சலி செலுத்தினோம்.

1990-களிலிருந்து தமிழ்நாட்டில் நடைபெற்ற பெரும்பாலான மாநில மாநாடுகளில்  கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் பகுதிகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்த 12-வது மாநாடு தமிழக கட்சி வரலாற்றிலேயே மிகப்பெரியதாக இருக்கலாம். நாம் இப்போது 10,000 கட்சி உறுப்பினர்களைத் தாண்டிய ஒரு நிலையை எட்டியுள்ளோம்.

கட்சி நிச்சயமாகப் பெரிதாக வளர்ந்து வருகிறது. கட்சி இன்னும் பெரியதாகவும் அதே நேரத்தில் வலிமையானதாகவும் மாற வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். வலிமையானது என்று நான் கூறும்போது, ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் வலிமைக்கான அனைத்து அம்சங்களையும் மனதில் கொண்டே சொல்கிறேன். வெகுஜன செல்வாக்கின் அடிப்படையில் மட்டுமின்றி, உண்மையிலேயே அதிக ஒற்றுமையுடன், அதிக இயங்காற்றல்மிக்கதாக, அதிக செயல் துடிப்புள்ளதாக  இன்னும் பெரியதாக, வலிமையானதாக கட்சி வளர்வதையே அது குறிக்கும்.

நிச்சயமாக, இந்த மாநாட்டு அரங்கத்தைப் பார்க்கும் போது கூட கட்சியின் சில பலவீனங்களும் வெளிப்படையாகத் தெரிகின்றன. ஆண்களை விடப் பெண்கள் மிகக் குறைவாக இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. நமக்கு அதிகப் பெண்கள் தேவை. வரும் நாட்களில் அதிகப் பெண் ஊழியர்கள் உருவாக வேண்டும். மேலும், இளைஞர்களையும் அதிகம்  காண முடியவில்லை. நேபாளப் போராட்டங்களுக்குப் பிறகு ஜென் இசட் ( Gen Z) என்ற சொல் எல்லா இடங்களிலும் பிரபலமாகியுள்ளது. இது 27 வயது வரை உள்ள இளம் பருவத்தினரைக்  குறிக்கிறது. கட்சியை முன்னோக்கி எடுத்துச் செல்ல இன்னும் பல இளம் தோழர்களும் மாணவர்களும் கட்சியில் நிச்சயமாகச் சேர்க்க வேண்டும். இவை இரண்டும் கட்சியினுடைய   வெளிப்படையாகத் தெரியும் குறைபாடுகளும் பலவீனங்களும் ஆகும்.  வரும் நாட்களில் இந்த இரண்டு பிரிவினர் மத்தியில் கட்சியை வலுப்படுத்த நாம் இன்னும் தீவிரமான முயற்சிகளை எடுத்தாக வேண்டும்.

 

இந்திய சமூகத்திலும் அரசிலும் பாசிசம் தன்னை ஆழமாக நிலைநிறுத்திக் கொள்ள முயன்றுகொண்டிருக்கும்  சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். 1992 டிசம்பர் 6 அன்று, அரசியலமைப்பு சட்டத்தை மீறி பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதே, இந்தியாவில் பாசிசம் தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது என்பதை நாம் அடையாளம் கண்டோம்.

அப்போது நாம் தலைமறைவு கட்சியாக இருந்தோம்; இந்திய மக்கள் முன்னணி (IPF) வெளிப்படை அமைப்பாக செயல்பட்டு வந்தது. கட்சி மெதுவாக வெளிப்படையான செயல்பாட்டுக்கு வந்து கொண்டிருந்த நேரம். 1992 டிசம்பர் 6 நிகழ்வு, பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்துவதற்காக கட்சியை ஒரு வெளிப்படை அமைப்பாக மாற்றும் முடிவை எடுக்கத் தூண்டியது. 1992 முதல் இப்போது 2025 வரை, 33 ஆண்டுகள் கடந்துவிட்டன. 2014 முதல் 11 ஆண்டுகளாக மோடியின் ஆட்சி நடந்து வருகிறது. 33 ஆண்டுகால இந்துத்துவ  மூர்க்கத்தனம் மற்றும் 11 ஆண்டுகால மோடி ஆட்சியில், இந்து தேசியவாதம் என்பது மூர்க்கத்தனமாக மேலெழுந்து வந்திருக்கிறது.

இந்த மாநாடு முடிந்த உடனே தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்கள் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கின்றன. தமிழ்நாட்டில் பாசிச சக்திகள் வலுப்பெற்று வருவதை பார்க்கிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஒரு காலத்தில் பாஜக வளர்வது கடினம் என்று கருதப்பட்டது. அதற்கு தமிழ்நாட்டின் கலாச்சாரம், மொழி, வரலாறு என பல காரணங்கள் இருப்பதாக கருதப்பட்டது. அதேபோல பாஜகவை ஒரு வட இந்திய கட்சி என்றும், விந்திய பகுதியைத் தாண்டி தெற்கு பகுதிகளில் அது வளர்வது கடினம் என்றும் கருதப்பட்ட காலம் இருந்தது. ஆனால், இப்போது அவர்கள் அதையெல்லாம் தாண்டி வளர்ந்து வருகிறார்கள். கர்நாடகாவில் உயிரார்ந்த சக்தியாக இருக்கிறார்கள். அவர்கள் மாநில ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். இப்போது தோல்வியடைய செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அவர்கள் அதிகாரத்தை பிடிக்கக்கூடும். தெலுங்கானாவில் அவர்கள் வேகமாக வளர்ந்து வரும் ஒரு சக்தி. ஆந்திராவில் இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள். தெலுங்கு தேசம் கட்சியினால் மாத்திரம் அல்ல ஜனசேனா என்ற கட்சியின் உதவியுடனும் அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்போது அதிமுக கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். வருங்காலங்களில் விஜய்யுடனும் கூட்டணி வைக்கலாம்; யார் அறிவார்கள்? கேரளாவைப்  பொருத்தவரை அவர்கள் சில சமூக அளவிலான கூட்டணியை வைத்திருக்கிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் அரசியல் கூட்டணியும் கூட கேரளாவில் இருக்கிறது.

அவர்களுக்கு இங்கு  முற்றிலும் மாறிய சூழல் இருக்கிறது. பல வழிகளைப் பயன்படுத்தி அவர்கள் வளர்வார்கள். தமிழ்நாட்டில் எல்லா வகைப்பட்ட பிரச்சனைகளையும் கையில் எடுத்து தலை தூக்கப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில், கேரளாவில், கர்நாடகாவில் ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தியை, கோபத்தைப் பயன்படுத்தி சூழ்நிலையை வசப்படுத்தப் பார்க்கிறார்கள்.

ஒரே சமயத்தில்  இரண்டு முனைகளில் போராட வேண்டிய ஒரு சூழலை நாம் கண்டிப்பாக எதிர்கொள்கிறோம். இரண்டும் வேறு வேறு யுத்த களங்கள் அல்ல. பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை ஏதோ ஒன்றிய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமாகவோ, நாக்பூரில் இருக்கும் ஆர்எஸ்எஸ் க்கு எதிரான போராட்டமாகவோ அல்லது குஜராத்தில், உத்தரப்பிரதேசத்தில், இந்தி பிரதேசத்தில் அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்களோ அதற்கு எதிரான  போராட்டமாகவோ இனிமேலும் கருத முடியாது. பாஜக, ஆர் எஸ் எஸ், அவர்களின் கூட்டாளிகள், அவர்களின் சித்தாந்தம் என எல்லாம் இப்போது தமிழ்நாட்டுக்குள் வந்துவிட்டன. எனவே இதை தமிழ்நாட்டுக்கு வெளியிலான ஒரு போராட்டமாக இனிமேலும் நாம் எடுத்துக் கொள்ள முடியாது. ஆகவே இங்கு, தமிழ்நாட்டுக்குள்ளேயே பாசிச எதிர்ப்பு யுத்தத்தை நாம் நடத்த வேண்டி உள்ளது. மாநில திமுக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை முதலில் நடத்துவோம்; அதற்குப் பின் மத்திய பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்திக் கொள்வோம் என்பதாக நிலைமை இல்லை. இரண்டையும் நாம் இணைத்துக் கொள்ள வேண்டும். ஏன் என்று சொன்னால் பாஜக, ஒவ்வொரு சித்தாந்தத்தையும் காலி செய்து அதன் மூலம் வளர்கிறது. அவர்கள் தலித் இயக்கங்களை வலுவிழக்கச் செய்கிறார்கள். அவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வலுவிழக்கச் செய்கிறார்கள். அவர்கள் காங்கிரஸ் கட்சியை துண்டாடுகிறார்கள். அவர்கள் பிராந்திய கட்சிகளைப்  பலவீனப்படுத்துகிறார்கள். ஆகவே, நாம் வளர வேண்டும் என்று சொன்னால் , பாஜகவை சவாலுக்கு இழுத்து அதன் கொள்கைகளை, கருத்தியலை, அதன் நடவடிக்கைகளை, அதன் அமைப்பை, அதன் சங்கிலி பிணைப்பை இப்படி எல்லாவற்றையும் எதிர்கொள்வதன் மூலம் தான் வளர முடியும்.

இப்படி இருக்கையில், இரண்டு விதமான போராட்டங்களையும் அனைத்தும் தழுவிய ஒரு முழுமையின் கீழ் தமிழ்நாட்டில் எப்படி இணைப்பது? இந்தக் கேள்வி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான மேற்கு வங்கத்திற்கும், கேரளாவுக்கும், அதுபோல் எதிர்க்கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து, பாஜக வளர்ந்து வருகிற ஒவ்வொரு மாநிலத்திற்கும் கூட பொருந்தும். இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பாஜக பலவீனப்பட்டுக் கொண்டிருக்கவில்லை. பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்கள் உட்பட எல்லா இடங்களிலும் பாஜக வளர்ந்து வருகிறது. ஆகவே பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களில் எல்லாம் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை கொஞ்சம் கிடப்பில் வைக்கலாம், அல்லது அந்தப் போராட்டத்தை நாளை அல்லது நாளை மறுநாள் நடத்தலாம் என்று நாம் நினைக்க முடியாது, அல்லது ஒரு வேறுபட்ட தளத்தின் அடிப்படையில் அந்தப் போராட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் அந்தப் போராட்டத்தை இன்றே இப்போதே நடத்த வேண்டும். தமிழ்நாட்டுக்குள் நடத்த வேண்டும். ஆகவே தான், இந்த இரண்டு சவால்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் ஒரு செயல் தந்திர வழியை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.

திமுக அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு மக்கள் பிரிவினருக்கு பல்வேறு குறைகள் உள்ளன. அவர்கள் செய்யத் தவறிய விசயங்களும் மக்களுக்கு எதிராக செய்த நடவடிக்கைகளும் உள்ளன. நிச்சயமாக திமுக அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராகப் போராட வேண்டும். ஆனால், அதேசமயம் ஒவ்வொரு தருணத்திலும் தமிழ்நாட்டில் பாஜக தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்குள் பாஜகவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியமும் நமக்கு உள்ளது. தமிழ்நாட்டுக்குள் பாஜகவுக்கு எதிரான போராட்டம் குறித்த எவ்வித சுய திருப்தி மனப்பான்மையும் நமக்கு இருக்கக் கூடாது. ஆகவே, இந்த இரண்டு போராட்டங்களையும் கட்சியின் ஒரே செயல் தந்திர வழியின் ஒருங்கிணைந்த பகுதியாக இணைக்க வேண்டும்.

ஏற்கனவே சொன்னது போல இந்தப் போராட்டம் என்பது மிகவும் சவால் மிக்கது, கடினமானது. தேசிய சூழல் தொடர்பாக, தமிழ்நாட்டுக்குள் பாஜகவின் நிகழ்ச்சி நிரல் தொடர்பாக, அதுபோலவே திமுக தலைமையிலான அரசாங்கம் செய்யத் தவறிய, அதுபோல் செய்த மக்கள் விரோத செயல்கள் பற்றியும்  நாம் எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும். நாம் இந்தியா கூட்டணியின் ஓர் அங்கமாக தேசிய அளவில் இருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டில் நாம் கூட்டணியில் இடம் பெறவில்லை. இருந்தபோதிலும் ஏதோ ஒரு வகையில் ஊடாடல் என்பது இருக்கிறது. நம்முடைய துவக்க மாநாட்டிற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்துச் செய்தி அனுப்பி இருக்கிறார். திமுக அமைச்சர் கலந்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் தேர்தல்  கூட்டணி என்ற வரையறையில்  நாம் இல்லை. இப்போதைக்கு இதுதான் நிலைமை. வருங்காலங்களில் தேர்தல் கூட்டணி விசயங்களில் என்ன மாறுதல் வருகிறது என்று பார்க்கலாம். நாம் சுதந்திரமாக போட்டியிட வேண்டிய ஒரு சூழல் எழக்கூடிய வாய்ப்பும் உருவாகலாம். அப்படி இருக்கும் போது, சில தொகுதிகளிலாவது நாம் போட்டியிடுவோம். நாம் போட்டியிடும் தொகுதிகளில் சிறப்பாக செயல்பட முயற்சி எடுக்க வேண்டும். அதே நேரத்தில் நம்முடைய ஒட்டு மொத்த பிரச்சாரத்தின் அழுத்தம் என்பது பாஜக தமிழ்நாட்டுக்குள் ஊடுருவுவதைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும். பாஜக பின்வாசல் வழியாக ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து விடக் கூடாது.

ஒன்றிய அரசுக்கு எதிராக ஆகப்பெரிய உறுதியுடனும், ஆகப்பெரிய வலுவுடனும் மாநில அரசாங்கம் போராடுவதற்கான அழுத்தத்தைக் கொடுப்பதற்கான பல்வேறு வழி வகைகளை நாம் கண்டறிய வேண்டும். உதாரணத்திற்கு, தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், புதிய கல்விக் கொள்கை, நீட் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் ஆகிய இந்த மூன்று அரங்கங்களில் பாஜக தன்னுடைய தாக்குதலைத் தீவிரப்படுத்த முயற்சிக்கிறது. அவர்கள் எல்லாவற்றையும் மத்தியத்துவப்படுத்த முயற்சிக்கிறார்கள். அப்படி மத்தியத்துவப்படுத்துவதன் மூலம் கார்ப்பரேட்டுகளின் பிடியை, ஆர்எஸ்எஸ் ஸின் பிடியை, சித்தாந்தப் பிடியை தீவிரப்படுத்துகிறார்கள். மத்தியத்துவப்படுத்தப்பட்ட கட்டமைப்பு வழியாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆகப்பெரிய ஊடுருவலை அவர்கள் உறுதி செய்கிறார்கள். கல்வி மீதும், தொழிலாளர்கள் மீதும் தொழிலாளர்கள் உரிமைகள் மீதும் கார்ப்பரேட்டுகளின் ஆகப்பெரிய கடிவாளத்தைப் போடுகிறார்கள்.

ஆகவே, இது போன்ற விசயங்களில் இந்தக் கொள்கைகளுக்கு எதிராக ஆற்றல் வாய்ந்த பிரச்சார இயக்கத்தை கொண்டு செல்வது, வெகுமக்கள் விழிப்புணர்வை உருவாக்குவது; அது போல ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு தெளிவான நிலைப்பாடு, ஒரு உறுதியான நிலைப்பாடு எடுக்கச் சொல்லி மாநில அரசாங்கத்திற்கு அழுத்தம் தரவும் வேண்டும்.

மாநில அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைக் கொடுப்பதற்கு பல விசயங்கள் உள்ளன. உதாரணத்திற்கு, தலித்துகள் மீதான வன்கொடுமை, மதவாத சதிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். சில மதவாத சதிகளுக்கு எதிராக திமுக ஊக்கமாகச் செயல்படுகிறது. நாடாளுமன்றத்திலும் அவர்கள் அதை எழுப்புகிறார்கள். ஆனால் வேறு பல  பிரச்சனைகளில் இந்த அரசாங்கம் அது போல் ஊக்கமுடன் செயல்படுவதில்லை உதாரணத்திற்கு, சாதிய வன்கொடுமைகள், பெண்கள் மீதான வன்கொடுமைகள் ஆகியவற்றைச் சொல்லலாம். நாம் எல்லா சமூகப் பிரச்சினைகளிலும் செயல்துடிப்புடன், ஊக்கத்துடன், சூழ்நிலையின் சவால்களை எதிர்கொள்ள வேண்டி செயல்பட்டாக வேண்டும். அப்போதுதான் ஒரே நேரத்தில் மாநில அரசாங்கத்திற்கு எதிராக அழுத்தம் கொடுக்கவும் அதுபோல் சங்படையினர் மீது, ஒன்றிய அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கவும் முடியும்.

வருகின்ற நாள்கள் நமக்கும், கட்சியை வளர்ப்பதற்கும் வலுவாக்குவதற்கும் மேலதிக சவால் மிகுந்ததாக இருக்கும். இந்தச்  சவால்களை ஆகப்பெரிய உறுதிப்பாடு, ஆகப்பெரிய திட்டமிடல்,  ஆகப்பெரிய செயல்துடிப்பு ஆகியவை கொண்டு நாம் எதிர்கொள்ளல் வேண்டும். தமிழ்நாட்டு கட்சி அமைப்பு இந்தக் கேள்விகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு மிகவும் வலுவானதாக, மிகவும் நம்பிக்கையுடன் முன்னேறும் என்று நான் நம்புகிறேன். அதிகப்படியான வேலைகளைச் செய்வதற்கு, அதிக போராட்டங்களை நடத்துவதற்கு, மேலான விதத்தில் போராடுவதற்கு கட்சி தனது ஆற்றலை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

கட்சி அமைப்பு வலைப்பின்னலை, கட்சியின் உறுப்பினர் நிலவரத்தை, கட்சியின் தகவல் தொடர்பு கட்டமைப்பை ஒழுங்குபடுத்த பல்வேறு பரிந்துரைகள் மத்திய கமிட்டிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளன. அப்போதுதான் நாம் செயல் துடிப்புடன் இருப்போம். நம் கட்சி உறுப்பினர்களிடம் தொடர்பில் இருப்போம். தமிழ்நாட்டில் 10,000 கட்சி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் பெரும்பான்மையானவர்களிடம் கைப்பேசி உள்ளது. பலரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். முகநூல், வாட்ஸ்அப் அவர்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. நம் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சி கிளைகளில் அமைப்பாக்கப்படுவதை உறுதி செய்கின்ற அதே வேளையில் அவர்கள் கட்சியின் டிஜிட்டல் நெட்வொர்க்கிலும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். பலரையும் இந்த டிஜிட்டல் ஒருங்கிணைப்பில் நாம் கொண்டு வர வேண்டும். கட்சியின் டிஜிட்டல் தொடர்பை கூடுதல் வலுவாக்குவதும், கூடுதல் தொடர்பில் இருப்பதும் இன்னும் கூடுதல் உறுப்பினர்களை அதோடு இணைப்பதும் வருங்காலங்களில் சவால் மிக்கதாக இருக்கும். ஒட்டுமொத்த டிஜிட்டல் வலைப்பின்னலையும் மிகவும் உபயோகமுள்ள வகையில் பயன்படுத்தவும் வேண்டும். இணையவழியில் வரக்கூடிய பல்வேறு தவறான செய்திகள், பெரும் அளவிலான அரசியல் அரட்டைகள், உண்மையிலேயே குழப்பம் விளைவிக்க கூடிய செய்திகள் ஆகியவற்றால் பெரும்பாலான தோழர்கள் பல நேரங்களில் இழுத்துச் செல்லப்படுகிறார்கள். உண்மையிலேயே நம் கட்சியினுடைய வளர்ச்சி, கட்சி நிகழ்ச்சிகள், நமது வெற்றிகள் ஆகியவற்றை அதிக அளவில் நாம் முன் நிறுத்துவதில்லை. அதிக அளவில் பகிர்வதில்லை. கட்சியின் போராட்டங்களை, நம் வெகுஜன அமைப்புகளின் போராட்டங்களை பிரபலப்படுத்த இவற்றை பயன்படுத்த வேண்டும். பல பிரிவு மக்களுக்கும் நம் கட்சியை,  நம் செயல்பாட்டை, நமது இருத்தலை தெரிந்து கொள்ள வைக்க இதை பயன்படுத்த வேண்டும். நடந்து கொண்டிருக்கும் கட்சி செயல்பாடுகள் போராட்டங்களோடு உயிரார்ந்த விதத்தில் அவர்களை இணைக்க வேண்டும். வரும் நாட்களில் இது போன்ற விசயங்களுக்கு கட்சி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த மாநாட்டை துவக்கி வைப்பதன் மூலம் ஒட்டுமொத்த கட்சி சார்பாகவும் கட்சியின் மத்தியக் கமிட்டி சார்பாகவும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ்நாடு அமைப்பின் 12 ஆவது மாநில மாநாடு எல்லா வகையிலும் வெற்றி அடையட்டும்.

இன்குலாப் ஜிந்தாபாத்!

 

 

 

 

22 January, 2026