முதலாளித்துவத்தையும் பார்ப்பனியத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!

தொழிலாளர் உரிமைக்கான போராட்டமும் பெண்ணுரிமைக்கான போராட்டமும் முதன்மையானது!

$articleData->title

மார்ச் 8, 2026 அன்று நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் இகக(மா லெ) விடுதலையில் இணைந்த விழாவில் இகக(மா லெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் ஆற்றிய உரை

தோழர் குமாரசாமி, தோழர் சங்கர், உள்ளிட்ட மேடையில் உள்ள அனைத்து தோழர்களுக்கும், இங்கே கூடியுள்ள அனைவருக்கும் மார்ச் 8, சர்வதேச உழைக்கும் பெண்கள் நாளில் எனது செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்! இன்று இந்த புதிய அலுவலகத் திறப்பு விழாவில் உங்களோடு இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 

இந்தப் புதிய அலுவலகம், தொழிலாளரது அலுவலகமாக, தொழிலாளருக்காக, தொழிலாளரால் உருவாக்கப்பட்ட அலுவலகமாக இருக்கும் என்று தோழர் குமாரசாமி என்னிடம் கூறினார். இது 'மக்கள் மாமன்றம்' என அழைக்கப்படும் என்றும் கூறினார். இந்த அலுவலகம் இவ்வளவு பெரிய வரவேற்பையும், ஆதரவையும் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தோழர் குசேலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த 90 வயதில், இவ்வளவு தூரம் வந்து தனது ஒருமைப்பாட்டையும், ஆதரவையும் தெரிவித்தது உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது. இது மிகவும் சிறந்த தருணம்.

இன்று இன்னுமொரு சிறப்பான தருணமும்கூட. தமிழ்நாட்டில் நாம் ஒரே கட்சியாக இருந்தோம். பிரிக்கால் போராட்டம் நடந்தபோது, எட்டு பிரிக்கால் தோழர்கள் தலைவர்கள் துன்புறுத்தப்பட்டனர். பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவாக ஒடுக்குமுறைக்கு எதிராக ஒட்டுமொத்தக் கட்சியும், இந்தியா முழுவதுமுள்ள ஏஐசிசிடியுவும் ஒரே மனிதராக ஒரே குரலில் ஒலித்தது. ஆனால், மான்சா கட்சி காங்கிரசுக்குப் பின், கட்சி பிளவுபட்டது. இப்போது நாம் மீண்டும் ஒன்றுபடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இந்தியா முழுவதுமுள்ள ஒட்டுமொத்தக் கட்சிக்கும் இது மிகச் சிறந்த செய்தியாகும். இதன்மூலம் கட்சி தமிழ்நாட்டிலும் இந்தியா முழுவதும் அதிக வலிமை, போராடும் ஆற்றலுடன் முன் செல்ல நமது அனைத்துத் தோழர்களையும் உற்சாகப்படுத்தும் ஒரு மிகச் சிறந்த நிகழ்வாக இருக்குமென்று நினைக்கிறேன்.

இந்த நிகழ்வுக்காக நீங்கள் மார்ச் 8-ஐத் தேர்ந்தெடுத்தது மிகவும் சிறப்பானது. கம்யூனிஸ்ட்டுகளாகிய நமக்கு மார்ச் 8, சர்வதேச மகளிர் நாள், சர்வதேச தொழிலாளர் நாளான மே 1-க்கு இணையான நிகழ்வாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளாகும். மார்ச் 8ல், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில், பெண் தொழிலாளர்களும், அவர்களுக்கு அக்கம் பக்கமாக ஆண்களும் கூடியிருப்பது உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த மரபு தமிழ்நாட்டில் மேலும் வலுவடையட்டும். இன்று உண்மையான தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை உருவாக்க என்ன தேவை? அமைப்புசார்ந்த, அமைப்புசாராத் தொழிலாளரை ஒன்றிணைப்பது  மிக அவசியம்தான். அது போதுமா? நிரந்தர, தற்காலிகத் தொழிலாளர், ஒப்பந்த, பிற தொழிலாளரை ஒன்றிணைப்பது மிக முக்கியம்தான். என்றாலும் இது மட்டுமே போதுமா? ‘சாதி, உழைப்புப் பிரிவினை அல்ல, அது உழைப்பாளர்களின் பிரிவினை’ என்று  ​​பாபாசாகேப் அம்பேத்கர் சாதியைப் பற்றி மிகவும் பொருத்தமானதொரு கருத்தை முன்வைத்தார். எனவே, தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றிணைக்க விரும்பினால், மூலதனம், சாதி ஆகிய இரண்டிற்கும் எதிராக நீங்கள் போராட வேண்டும். முதலாளித்துவம், பார்ப்பனியம் ஆகிய இரண்டிற்கும் எதிராக, அம்பேத்கர் சுதந்திரத் தொழிலாளர் கட்சியை உருவாக்கியபோது அவர் வலியுறுத்திய கருத்தும் அதுவே. கம்யூனிஸ்டுகளும் அதே கருத்தையே பகிர்ந்து கொள்கின்றனர். எனவே இன்று, தொழிலாளர் வர்க்கத்தை ஒரு வர்க்கமாக நாம் ஒன்றுபடுத்த விரும்பினால், அனைத்து வகையான சாதிய ஒடுக்குமுறைகள், சாதியப் பாகுபாடுகள், சமூக அநீதிகளுக்கும் எதிராக போராட வேண்டியது அவசியம்.

இரண்டாவதாக, பெண் தொழிலாளருக்கு சம வேலைக்கு சம ஊதியம் கிடைக்க ஆண்கள் போராட முடியாவிட்டால், பணியிடங்களில் பெண் தொழிலாளர் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் அல்லது பாதுகாப்பற்ற நிலைக்கு எதிராக ஆண்கள் போராட முடியாவிட்டால், அது ஒரு ஒன்றுபட்ட தொழிலாளர் வர்க்கமாக இருக்க முடியாது. அது உணர்வுபூர்வமான தொழிலாளர் வர்க்கமும் அல்ல. எனவே ஆண்கள் அதிக கூருணர்வு மிக்கவர்களாக மாறுவது, பெண் தொழிலாளரின் உரிமைகள் குறித்து அதிக அக்கறை கொள்வதும் அவர்களின் உரிமைகளுக்காகப் பெண் தொழிலாளரோடு தோளோடு தோள் நின்று போராடுவதும் தொழிலாளர் வர்க்க ஒற்றுமைக்கு இன்றியமையாதது. இன்று, பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், மதத்தின் அடிப்படையில் நாம் பிளவுபடுவதை அனுமதிக்க முடியுமா? மொழியின் அடிப்படையில் தொழிலாளர் பிளவுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா? பாஜக, பிரித்தாளும் சூழ்ச்சியால், தொழிலாளர் வர்க்கத்தைப் பிரிக்கிறது, மதத்தின் அடிப்படையில் பிரிக்கிறது, மொழியின் பெயரால் பிரிக்கிறது. எனவேதான் புலம்பெயர்ந்த தொழிலாளரும் இங்கு இருப்பதைக் காணும்போது எனக்கு மிகவும் நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. பீகார் தொழிலாளர், மேற்கு வங்க தொழிலாளர் இங்கு இருந்தனர். இந்த அலுவலகத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்ட பிர்பூம் கட்டுமானத் தொழிலாளரை இங்கு கவுரவித்தீர்கள். இது உண்மையிலேயே மிகுந்த நம்பிக்கையளிக்கும் செயலாகும். இதை ஏன் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், இன்று  வடக்கு-தெற்கு என்ற பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்தி பேசும் தொழிலாளரை தமிழ் பேசும் தொழிலாளருக்கு எதிராக நிறுத்த முயற்சிக்கிறார்கள். போலி காணொளிகள் பரவி வருகின்றன. வங்க மொழி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர் அதுவும் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால், வங்கதேசத்தவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்; கொல்லப்படுகிறார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர் கும்பல் வன்முறைக்கு  பலியாகி வருகின்றனர். மொழியின் பெயராலும் மதத்தின் பெயராலும் உருவாக்கப்படும் இந்த வெறுப்பும், பிரிவினையும் தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு எந்த அளவுக்கு விஷமாக மாறியுள்ளது என்றால், கேரளாவில் சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒரு தொழிலாளி கொல்லப்பட்டதை பார்த்தோம். அவர் வங்கதேசத்தவர் என்று சந்தேகிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அந்தத் தொழிலாளி வங்க மொழி பேசுபவர் அல்ல, இந்தி பேசுபவர். அவர் முஸ்லிம் அல்ல, ஒரு இந்து. அவர் பெயர் அமரன் பாகேல். தொழிலாளர் வர்க்கம் மதத்தின் பெயராலும் மொழியின் பெயராலும் பிளவுபட்டு, இதுபோன்ற நச்சு எண்ணங்களை உள்வாங்கினால், இந்தியத் தொழிலாளர் வர்க்கம், மதத்தின் பெயராலும் மொழியின் பெயராலும் பிளவுபடும். இப்படிப்பட்ட சூழலில் யாருக்கு வேண்டுமானாலும் இந்த கதி ஏற்படலாம். எந்த நேரத்திலும் எவரும் பலியாகக் கூடும். எனவே இன்றைய சூழலில், தொழிலாளரை ஒரு வர்க்கமாக நாம் ஒன்றிணைக்க விரும்பினால், நாம் சாதிக்கு எதிராகப் போராட வேண்டும், அனைத்து வகையான பாலின அநீதிகளுக்கும் எதிராகப் போராட வேண்டும். அனைத்து வகையான மத வெறுப்பு, அனைத்து வகையான மொழிப் பிரிவினைகளுக்கும் எதிராகப் போராட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. இன்று இந்த அலுவலகத் திறப்பு விழாவும், பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த தொழிலாளரின் வருகையும், ஒன்றுபட்ட, வலிமையான தொழிலாளர் வர்க்கத்தை நோக்கிய இத்திசையில் நாம் பயணிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் உறுதியையும் நமக்கு அளிக்கிறதென்று நம்புகிறேன்.

இன்று மார்ச் 8, அடுத்த சில வாரங்களில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். உங்களில் எத்தனை பேர் உங்கள் வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்தீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. தீவிர வாக்காளர் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) இந்திய மக்களின் வாக்குரிமைக்கு எதிரான ஒரு மிகப்பெரிய தாக்குதலாகும். லட்சக்கணக்கான இந்திய மக்கள் வாக்குரிமையை இழந்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் தோராயமாக இரண்டு கோடி மக்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். கேரளா, தமிழ்நாடு மற்ற பிற மாநிலங்களிலும் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால்,  உங்கள் வாக்குரிமைக்காக போராடுங்கள். தேர்தல் ஆணையமோ அல்லது வேறு எவருமோ நமது வாக்குரிமையுடன் விளையாடுவதை சும்மாவிட்டுவிட முடியாது. 

இந்தியாவில் பா.ஜ.க இன்னும் அதிக அளவில் ஊடுருவ முடியாத சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்பதை உறுதி செய்வதும் முக்கியம். தமிழ்நாட்டில் பா.ஜ.க மேலும் கால்பதிக்காமல், அவர்களை அதிகாரத்திலிருந்து தள்ளிவைப்பதில் தமிழ்நாட்டு மக்கள் வெற்றி பெறுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். தமிழ்நாட்டில் பா.ஜ.க எந்தவொரு அரசியல் சதியிலும் ஈடுபடுவதற்கு சின்னதொரு வாய்ப்பும் கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்தாக வேண்டும். நாடு நெருக்கடியான தருணத்தில் உள்ளது. அதேசமயம், நெருக்கடியான தருணம் நமக்கான தைரியத்தின் தருணம், எதிர்ப்பின் தருணம், ஒற்றுமையின் தருணமும்கூட. சில பிரச்சினைகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பிப்ரவரி 12-ஆம் அன்று, அகில இந்திய வேலைநிறுத்தம் நடைபெற்றது. மத்திய தொழிற்சங்கங்களும், விவசாயிகள் அமைப்புகளும் ஆதரவளித்தன, சிபிஐ (எம் எல்) கட்சியும் ஆதரவளித்தது. இந்த வேலைநிறுத்தம் முதன்மையாக நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக நடைபெற்றது. இவை தொழிலாளரை அடிமைகளாக்கும் சட்டத் தொகுப்புகள். சுதந்திரமான உழைப்பை, கொத்தடிமை உழைப்பாகவும் அடிமை உழைப்பாகவும் மாற்றிவிடும் சட்டங்களாகும். அங்கே தொழிலாளர் வர்க்கம் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் சுதந்திரம் இருக்காது. இந்த வேலைநிறுத்தத்திற்குப் பிறகு, புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிரான தொழிலாளர் வர்க்கத்தின் ஆவேசத்தின் தொடக்கத்தை காணமுடிகிறது. ஹரியானாவில், பானிபட்டில் உள்ள இந்தியன் ஆயில் ஒப்பந்தத் தொழிலாளரின் காணொளியை பலர் பார்த்திருப்பீர்களென நம்புகிறேன். ஆயிரக்கணக்கானோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, இந்த தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிராகக் கொந்தளித்துள்ளனர். வரும் நாட்களில், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக இது போன்ற பல தொழிலாளர் போராட்டங்களை, தீவிரக் கிளர்ச்சிகளை காணப் போகிறோம். தொடர்ச்சியான ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு எதிரான, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மூன்று வேளாண் சட்டங்களிலிருந்து விடுபடுவது இந்திய விவசாயிகளால் முடியுமானால், இந்த நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளிலிருந்து விடுபட ஒரு தீவிரமான, ஒன்றுபட்ட, தொடர்ச்சியான, உறுதியான போராட்டத்தை நடத்துவது நமது அனைத்துத் தொழிற்சங்கங்களுக்கும் சாத்தியமாக வேண்டும்.

பல்கலைக்கழக மானியக் குழு, சில சமத்துவ விதிமுறைகளைக் கொண்டு வந்தது. பல்கலைக் கழகங்களில், ரோகித் வெமுலா போன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க; எந்தவொரு இந்திய மாணவரோ, ஆராய்ச்சியாளரோ, எந்தவொரு தலித்தும் ரோகித் வெமுலா சந்தித்ததை இனி எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காக; பாயல் தத்வி சந்தித்ததை எந்தவொரு ஆதிவாசி மாணவரும் சந்திக்கக் கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்டது. ஆனால், யு.ஜி.சி இந்த விதிமுறைகளை வெளியிட்டபோது, ​​பா.ஜ.க, பார்ப்பனிய சக்திகள், மனுவாதி அமைப்புகள்   அதற்கெதிரான போராட்டத்தை உருவாக்கினார்கள். இதைக்காட்டி, உச்ச நீதிமன்றம் அந்த யு.ஜி.சி விதிமுறைகள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்த விதிமுறைகளுக்காகப் போராடிய ஜே.என்.யு தலைவர்கள் 14 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இப்போது அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இது பல்கலைக்கழகங்கள் முழுவதும் உள்ள ஒன்றுபட்ட மாணவர் இயக்கத்திற்கான ஒரு புதிய தருணமாகும். பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் டிஅய்எஸ்எஸ், பம்பாய் பல்கலைக்கழகத்திலும், இன்னபிற இடங்களிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் வெளிப்படுத்துவதிலிருந்து தடுக்கப்படுவதை பார்க்கிறோம். பல்கலைக்கழகங்கள் முழுவதும் உள்ள இந்திய மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் தங்கள் சுதந்திரத்திற்காகவும், சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகவும் போராடி வருகின்றனர். இது தொழிலாளருக்கும் மாணவர்களுக்கும் ஒரு மிக முக்கியமான தருணமாகும், அவர்கள் ஒன்றுசேர்ந்து ஒன்றுபட்ட எதிர்ப்பில் இணைய வேண்டும்.

மேலும் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் உள்ளது, இதன் பொருள் இந்திய விவசாயம் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியைச் சந்திக்கும் என்பதாகும். இந்திய விவசாயத்தின் நலனுக்கும், இந்தியாவின் ஜவுளித் தொழில், பருத்தி விவசாயிகளின் நலனுக்கும் முற்றிலும் எதிரான இந்த வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து விவசாயிகள் மீண்டும் ஒன்றிணைந்து அணிதிரண்டு வருகின்றனர். எனவே தேசவிரோத, மக்கள் விரோத வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக நமது உரிமைகளையும், நமது பொருளாதாரத்தையும், கண்ணியத்தையும் நாம் பாதுகாத்தாக வேண்டும்.

ஈரான் மீதான இந்தக் குற்றமய போரின்  9-வது நாள் இன்று. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானைத் தாக்கிவருகின்றன. அவர்கள் அங்கு ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவர விரும்புகிறார்கள். ஈரானியப் பெண்களை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பதற்காக இதைச் செய்வதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் பெண்களை விடுவிப்பதாகக் கூறிக்கொண்டு, அவர்கள் பள்ளிக் குழந்தைகளைக் கொன்றுள்ளனர். ஒரு தொடக்கப்பள்ளியில் குண்டுவீசி 165 மாணவிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மரபுக்கும் நமது சொந்த நலனுக்கும் எதிராக, நமது இந்திய அரசாங்கம் இஸ்ரேல், அமெரிக்காவின் பக்கம் நிற்கிறது. எரிவாயு சிலிண்டர் விலை நேற்றுதான் உயர்த்தப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள ஒரு கோடி இந்தியத் தொழிலாளர் பணிபுரிகின்றனர். அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். இந்தியாவின் அழைப்பின் பேரில் சர்வதேசக் கடற்படை அணிவகுப்பில் கலந்துகொள்வதற்காக விசாகப்பட்டினம் வந்த ஈரானியக் கப்பல், திரும்பிச் செல்லும் வழியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல்முறையாக இப்படி நடந்துள்ளது. ஆனால் இந்திய அரசாங்கம் மவுனம் காத்தது. ஈரானியக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதையோ, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதையோ, ஈரான் பள்ளிக் குழந்தைகள் கொல்லப்பட்டதையோ கண்டிக்க அவர்களிடம் வார்த்தைகள் கூட இல்லை. எனவே இந்திய அரசாங்கத்தின், மோடி அரசாங்கத்தின் இந்த மவுனமும், அமெரிக்க-இஸ்ரேல் குற்றமய கூட்டணியுடன் அவர்களுக்குள்ள கூட்டுச்சதியும் நமது சொந்த தேசிய நலனுக்கு படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது.

நாளையோ, மறுநாளோ நாடாளுமன்றம் மீண்டும் தொடங்கப்போகிறது. நமது சுதந்திர இயக்கத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், நமது அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், நமது உரிமைகளைப் பாதுகாக்கவும் இந்தியா முழுவதும் பல போராட்டங்கள் நடைபெறும். 

எனவே இன்று தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த இணைப்பு, வரும் நாட்களில் நமது போராட்டங்களை அதிக வலிமையுடன் எதிர்கொள்வதற்குத் தேவையான வலுவையும், ஆற்றலையும், தைரியத்தையும், உறுதியையும் நமக்கு அளிக்குமென்று நினைக்கிறேன். நாம் பிரிந்து சென்றபோது, நிச்சயமாக அது நம் அனைவருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் தோழர்கள் அந்த அதிர்ச்சியைத் தாண்டி வந்தனர். நாம் பிரிந்திருந்தபோதும், நல்ல பணிகளை, சிறந்த பணிகளைச் செய்து கொண்டிருந்தோம். கட்சி வளர்ந்து கொண்டிருந்தது, புதிய போராட்டங்கள் நடந்தன. தூய்மைப்பணி தொழிலாளர் வீரதீரத்துடன் போராடினார்கள். மேலும் இந்த இணைப்புக்கு முன்னரே, கடந்த கட்சி மாநில மாநாட்டின் போது சுமார் 12,000 கட்சி உறுப்பினர்கள் இருந்ததைக் கண்டேன். தமிழ்நாடு கட்சியின் வரலாற்றில் இது மிகப்பெரிய உறுப்பினர் எண்ணிக்கையாகும். இவை நல்ல அறிகுறிகள் ஆகும். ஒன்றுபட்ட நமது கட்சி தமிழ்நாட்டில் மீண்டும் புதிய உச்சங்களை எட்டும் என்றும், இந்தியா முழுவதும் உள்ள சிபிஐ (எம்எல்)-க்கு இது மிகுந்த ஊக்கத்தையும், ஆற்றலையும், உத்வேகத்தையும், வலிமையையும் அளிக்குமென்றும் நம்புகிறேன். அதற்காக, தமிழ்நாட்டு தோழர்கள் அனைவருக்கும் எனது புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் வருங்காலப் போராட்டங்கள் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி!

 

 

 


30 March, 2026