2026-ஐ இந்திய ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் ஆண்டாக்குவோம்!

$articleData->title

2026-ஐ இந்திய ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் ஆண்டாக்குவோம்!

இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 75-வது ஆண்டை, 2025-ம் ஆண்டு குறிக்கிறது. 1949 நவம்பர் 26 அன்று அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கு முந்தைய நாள், பாபாசாஹேப் அம்பேத்கர், அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுத் தலைவராக ஆற்றிய தனது இறுதி உரையில் மிகத் தீர்க்கமான சில கருத்துகளை முன்வைத்தார். அந்தக் கருத்துகளில் ஒன்று, அரசமைப்புச் சட்டத்தை நிர்வகிக்கும் நபர்களின் தன்மை குறித்து நம்மை எச்சரித்ததாகும். "ஒரு அரசமைப்புச் சட்டம் எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும், அதை செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால், அது நிச்சயம் மோசமானதாகவே மாறும்," என்று டாக்டர் அம்பேத்கர் எச்சரித்தார். இது நமது சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் உரிமைகளை உறுதிப்படுத்தவும் இந்தியக் குடியரசின் அரசமைப்புச் சட்ட அடித்தளம், மதச்சார்பற்ற ஜனநாயகத் தன்மை, சமதர்ம நோக்குநிலையை வலுப்படுத்த "இந்திய மக்களாகிய நாம்” எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கான அவருடைய அழைப்பாகும். அம்பேத்கர் எந்தளவிற்கு தீர்க்கதரிசியாக இருந்தார் என்பதை இன்று கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் நமக்கு நினைவூட்டுகிறது.


2025-ம் ஆண்டில் எந்தவொரு  சட்டத் திருத்தமும் வெளிப்படையாக மேற்கொள்ளப்படாமலேயே அரசமைப்புச் சட்டத்தின் மீது மிகவும் நயவஞ்சகமாக சில தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதைக் கண்டோம். அரசமைப்புச் சட்டத்தைச் சீர்குலைக்கும் செயல் பல்வேறு மட்டங்களில் நடைபெற்று வருகிறது. அரசமைப்புச் சட்ட அடிப்படைகளான குடிமக்களுக்கு அதிகாரமளித்தல், அரசின் பொறுப்புடைமை, அதிகாரப் பகிர்வு என்பவற்றிலிருந்து, அரசு  குடிமக்களை கட்டுப்பாடின்றி டிஜிட்டலில்  கண்காணிக்கும் அதிகாரம், அதன் மூலம்  குடிமக்களுக்கான கடமைகளை தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டே போவது,  நிர்வாகத்தின் கைகளில் குவிக்கப்படும் கட்டுக்கடங்காத அதிகாரம் என்பதாக மாற்றப்பட்டு வருகிறது. இப்போது அதிகார வர்க்கம்  நீதித்துறையை மீறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி  சட்டமியற்றும் சபையையும்  நசுக்கி தரைமட்டமாக்குகிறது; அதேவேளையில், அதிகார வர்க்கத்தைக்  கண்காணிக்கும் பாத்திரத்தின் மூலம்  உண்மையை வெளிக் கொணர வேண்டிய நான்காவது தூணானது (ஊடகங்கள்) அதிகார வர்க்கத்திற்குச் சிறப்பாகச் செயல்படும் பரப்புரைக் கருவியாக மாற்றப்பட்டுள்ளது.


அதிகார வர்க்கத்தின் இந்த  அடக்குமுறைக்கு  எதிராகச் செயல்படக்கூடிய ஒரே தடுப்பு அரணாக மக்கள் போராட்டங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறும் தேர்தல்களும் மட்டுமே உள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியா சில சக்திவாய்ந்த மக்கள் போராட்டங்களைக் கண்டது; குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கையகப்படுத்துவதற்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் இயக்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.  சக்திமிக்க இப்போராட்டங்களும்  அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை பாஜக மாற்றுவதைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என மக்களிடத்தில் பரவலாக வளர்ந்த உறுதிப்பாடும், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பலத்த அடியைக் கொடுத்து, பாஜகவின் இடங்களை  240 ஆக குறைத்து  இந்திய மக்கள் வெற்றி பெற்றனர். டெல்லியில் ஆட்சியைத் தக்கவைக்க ஆந்திராவின் தெலுங்கு தேசம், பீகாரின் அய்க்கிய ஜனதா தளம் போன்ற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு பாஜகவை தள்ளினர். 2024ம் ஆண்டில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் லட்சியத்திற்கு ஏற்பட்ட பின்னடைவால் அதிர்ச்சியடைந்த பாஜக, அதற்கு பின் அரசு ஒடுக்குமுறை மற்றும் தேர்தல் தில்லுமுல்லு ஆகிய இரட்டை வியூகங்களைக் கூர்மைப்படுத்தி, பாசிசத் தாக்குதலை முற்றிலும் மிக அபாயகரமான உச்சங்களுக்கு கொண்டு சென்றுள்ளது.


2025-ல், 'ஆபரேஷன் காகர்' என்ற பெயரில் மாவோயிஸ்ட் நீரோட்டத்தை வேட்டையாடும் பகிரங்கமான நடவடிக்கையையும் செயல்பாட்டாளர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) போன்ற கொடூரமான சட்டங்களை வரைமுறையின்றிப் பயன்படுத்தி, விசாரணையோ பிணையோ இன்றி நீண்டகாலச் சிறைவாசத்திற்குள்ளாக்குவதையும் கண்டோம். மூத்த மாவோயிஸ்ட் தலைவர்கள் சட்டவிரோத மோதல்களில் கொல்லப்படும் அதே வேளையில், நிலம் மற்றும் வன உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை நீதி, சமூக, பொருளாதார சமத்துவம், சிறுபான்மையினர் உரிமைகள், பண்பாட்டுச் சுதந்திரம் அல்லது தனி மாநில கோரிக்கை போன்ற பலதரப்பட்ட ஜனநாயகப் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுக்கும் செயல்பாட்டாளர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டு, பிணை அல்லது விசாரணையின்றி மாதக்கணக்கிலும் ஆண்டுகணக்கிலும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அமைதியான முறையில் கூடுவதற்கும் போராடுவதற்குமான அரசமைப்புச் சட்டப்படியான  உரிமை இன்று கடுமையான அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கிறது; குடிமக்களின் அரசமைப்புச் சட்ட உரிமைகளை நிலைநாட்டுவதற்குப் பதிலாக, நீதிமன்றங்கள், குடிமக்கள் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதைத் தடுத்தும்  ஊக்கமிழக்கச் செய்யவும் தொடங்கியுள்ளன.  எதைப் பற்றிப் பேச வேண்டும் என்றும்கூட அறிவுறுத்துகின்றன.


போராட்டங்களை ஒடுக்கும் இந்த நடவடிக்கையுடன், இப்போது பொறுக்கி எடுக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் குழுவின் மூலம்  திட்டமிட்டு வாக்காளர் நீக்கமும் தேர்தல் மோசடிகளும் இணைந்து கொண்டுள்ளன. 'வாக்குகள் அடிப்படையில் வெற்றி' (First Past the Post) என்ற தேர்தல் முறை எப்போதுமே அதற்கே உரிய முரண்பாடுகளைக் கொண்டிருந்தது; மேலும் பணபலமும் ஆட்பலமும் இந்தியத் தேர்தல்களில் எப்போதும் முக்கியப்பங்கு வகித்து வந்துள்ளன. ஆனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு  தீவிரத் திருத்தம் என்ற பெயரில் இப்போது நடத்தப்படும் பெருமளவிலான வாக்குரிமை பறிப்பும் தேர்தல் ஆணையத்தின் வெளிப்படையற்றத்தன்மையும் பொறுப்பின்மையும் தேர்தல்களை சுதந்திரமற்றதாகவும் நியாயமற்றதாகவும் மாற்றியுள்ளன.

சங் பரிவார்-பாஜகவின் பாசிசத் திட்டமான ஒரு  கட்சி ஆட்சி  நாடாக இந்தியாவை மாற்றிட, பாஜக/தேஜகூட்டணி இன்னும் பல பத்தாண்டுகளுக்கு ஆட்சி அதிகாரத்தில்  ஆழமாக வேரூன்றி நிலைத்திருப்பதற்கான  நிரந்தரப் பெரும்பான்மையை உறுதி செய்திட நடக்கும் தேர்தல்களில் எல்லாம்  முடிவுகளை திட்டமிட்டு உருவாக்குகிறது இது அபாயகரமானதாகும்.


75 ஆண்டு இந்திய குடியரசு, இத்தருணத்தை எப்படி எதிர்கொள்ள போகிறது? சிக்கலான இச்சூழலில் இருந்து வெளியேற எளிய பாதை எதுவுமில்லை என்பது கண்கூடு. இந்திய ஜனநாயகத்திற்கு  ஏற்பட்டுள்ள மிகப் பெரும்  சவாலை வெற்றி கொள்ள, சமூக சமத்துவம், பகுத்தறிவு, மனிதநேயம் ஆகியவற்றிற்கான தேடல், இந்தியாவின் பன்முகக் கலாச்சார நெறிமுறைகளின் வலிமை, மிக நீண்ட காலனிய எதிர்ப்பில் எழுச்சியுற்ற தேசிய உணர்வில் உருவான ஒற்றுமை மற்றும் இயங்காற்றல், சுதந்திரத்திற்குப் பிந்தைய இத்தனை ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் இருக்கும் ஜனநாயகத்தின் செழுமையான அனுபவம் உள்ளிட்ட இந்திய குடியரசின் அனைத்து அடிக்கட்டுமான பலத்தையும் நாம் ஒன்று திரட்ட வேண்டும். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து நமக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தது "இந்திய மக்களாகிய நாம்" என்ற உறுதியான பிரகடனமே. இறையாண்மை கொண்ட சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்ற நமது அரசமைப்புச் சட்டத்தின் கனவை மீட்டெடுக்க, அதே அளவிலான தேசம் தழுவிய மற்றொரு எழுச்சி நமக்குத் தேவைப் படுகிறது. பாசிசத்திற்குப் பெரும் வெற்றிகள் கிடைத்த ஆண்டாக 2025 இருந்தது; இந்தியாவின் ஜனநாயக சக்திகள், மீட்சிக்கான ஆண்டாக 2026-அய் மாற்றுவோம்!


18 January, 2026