ஜனவரி 23 ல் திருச்சியில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், பிப்.12 நாடுதழுவிய வேலை நிறுத்தத் தயாரிப்பு மாநாடு நடைபெற்றது. ஏஐசிசிடியு, தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ், ஐஎன்டியுசி, ஏஐயுடியுசி, யுடியுசி, எம்எல்எப், எல்எல்எப் ஆகிய மைய தொழிற்சங்கங்களின் மாநிலத் தலைவர்களும், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தலைவர்கள் பாலகிருஷ்ணன், சந்திரமோகன், மேரிலில்லி பாய் உள்ளிட்டோரும் உரையாற்றினர். ஏஐசிசிடியு சார்பாக மாநில சிறப்புத் தலைவர் தோழர் சங்கரபாண்டியன், ஏஐசிசிடியு மாநில பொதுச் செயலாளர் ஞானதேசிகன் கலந்து கொண்டனர்.
தோழர் ஞானதேசிகன் தனது உரையில், மோடி அரசு மூன்று விவசாய சட்டங்களைக் கொண்டு வந்த போது நாட்டின் ஒட்டு மொத்த விவசாய சமூகமும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடியது. ஆனால், சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவானவையே என்று மோடி அரசு சொல்லியது. இப்போது மோடி அரசு கொண்டு வந்துள்ள 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில் 5 வேலை நிறுத்தங்களை நடத்திவிட்டன. ஆனால், இச் சட்டங்கள் தொழிலாளருடைய நன்மைக்கே என்று கோயபல்ஸ் பிரச்சாரம் செய்கிறது மோடி அரசு. ஜிக், பிளாட்பார்ம் தொழிலாளருக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டு வந்து விட்டோம் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு தொழிலாளி என்ற அங்கீகாரமே இல்லை. வெறும் காப்பீட்டுத் திட்டத்தை மட்டும் அறிமுகப்படுத்திவிட்டு சமூகப் பாதுகாப்பு என்று சொல்வது கேலிக்கூத்து. சமூகப் பாதுகாப்புத் திட்டங்களான வருங்கால வைப்பு நிதியும் ஈட்டுறுதியும் காணாமல் போகிறது. மற்றொரு சமூகப் பாதுகாப்பு என்பது ஓய்வூதியம் ஆகும். ஆனால், சிக்கன நடவடிக்கை என்ற பெயரால், உலக வங்கி கட்டளை என்ற பெயரால் ஓய்வூதியம் வெட்டிச் சுருக்கப்படுகிறது. நிரந்தர வேலை வாய்ப்புகளை ஒழித்துக் கட்டிவிட்டு, ஓராண்டு வேலை செய்தாலே பணிக்கொடை என்று சொல்லி பம்மாத்து வேலை செய்கிறது. பெரும்பான்மை உழைக்கும் வர்க்கத்தினருக்கு ‘தொழிலாளி‘ என்கிற அடையாளத்தையே அழித்துவிட்டு, பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக பிப்ரவரி 12 அன்று தெருக்களில் அணிதிரள்வோம். பொது வேலை நிறுத்தத்தை பெரும் வெற்றி பெறச் செய்வோம் என்று அறைகூவல் விடுத்தார்.
அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் மாநில பொதுச் செயலாளர் தோழர் சந்திரமோகன் தனது உரையில், வரலாற்று சிறப்புமிக்க மேலூர் டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டத்தின் முன்பு மோடி அரசு மண்டியிட்டு, திட்டத்தைத் திரும்பப் பெற்ற சன 23ல் திருச்சியில், இந்த பிப். 12 வேலை நிறுத்தத்திற்கான ஆயத்த மாநாடு நடைபெறுகிறது.
தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளைப் பறிக்கும் நான்கு சட்டத் தொகுப்புகள், விவசாயத் தொழிலாளரை கொத்தடிமைகளாக்கும் விபி கிராம் ஜி சட்டம், விதைகள் சட்டம் 2025, மின்சார திருத்தத் சட்டம் 2025 ஆகியவை மட்டுமல்லாமல்.... ஒன்றிய மோடி அரசால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்தச் சட்டம், வனப் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் திருத்த விதிகள் அனைத்தும் விவசாயிகள், பழங்குடியினருக்கு மட்டுமின்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் விரோதமானவை, கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ஆதரவானவை.
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் வளர்ச்சி & ஒழுங்குபடுத்துதல் சட்டத் திருத்தம் 2023 அடிப்படையில் தான் விவசாய நிலத்தை மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் 38,500 ஏக்கர் பரப்பளவில் உள்ள கனிமங்களைக் கண்டறிந்தது. இச் சட்டத்தின் மூலம், டங்ஸ்டன் போன்ற முக்கிய கனிமங்களை ஏலம் விட மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய சுரங்கங்கள் அமைச்சகம் மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரத்தில் உள்ள நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியை ஏலத்திற்கு அறிவித்தது. மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக, மோடி அரசாங்கம் நாயக்கர்பட்டி ஏலத்தை 2025 சன 23 ல் திரும்பப் பெற்றது,
மாலிப்டினம் சுரங்கத் திட்டங்கள் வரக் காத்துக் கொண்டு இருக்கிறது. மோடி அரசின் மேற்படி சட்டங்கள் தொடர்ந்தால் பழனி, ஒட்டன்சத்திரத்தில் 1 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பறிபோகும். மதுரையில் டங்ஸ்டன், பழனியில் மாலிப்டினம் என நாடு முழுவதுமுள்ள கனிம வளங்களை கார்ப்பரேட் பெருமுதலாளிகள் சூறையாட வழிவகுக்கும். கனிமங்களை எடுக்க இனிமேல் கிராம சபை ஒப்புதல் அவசியம் இல்லை. பொதுமக்களின் கருத்துகளை அறிய கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தத் தேவையில்லை. சுற்றுச்சூழல் பாதிக்கும் பகுதிகளிலும், பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் கூட, சுரங்கச் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கு இது வழிவகுக்கின்றது ; விவசாயிகள், பழங்குடி மக்கள் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. தொழிலாளர், விவசாயிகளுக்கு விரோதமான, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான சட்டங்கள் ரத்து செய்யப்பட ஒன்றிணைவோம்! பிப். 12 பொது வேலைநிறுத்தம் வெல்லட்டும்! என்று கூறினார்.
