சேலம் மாவட்டம், அத்திப்பட்டி, சூரியூர் ஏழை விவசாயிகளின் தொடர் போராட்டம் வெல்லட்டும்!

$articleData->title

அத்திப்பட்டி, சூரியூர் ஏழை விவசாயிகளின் தொடர் போராட்டம்

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், அத்திப்பட்டி  சூரியூர் சார்ந்த பழங்குடி, பட்டியல் சாதியினர், மிகவும் பிற்பட்ட சமூகம் சார்ந்த சுமார் 600 ஏழை விவசாயக் குடும்பங்கள், சுமார் 1400 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்துவந்தனர்.


அவர்களிடம் பட்டா ஆவணங்கள் எதுவுமில்லாததால், உள்ளூர் ஆதிக்க சக்திகள், பணக்கார விவசாயிகள், அதிமுக பிரமுகர்கள் கூட்டு சதியால் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கின் தீர்ப்பு பாதகமாக வந்தது. தீர்ப்பை  முன்வைத்து, கடந்த 2004 அக். 2ல், அதிமுக ஆட்சியில், விவசாயிகளுக்கு 'வெளியேற்றும் அறிவிப்பு'  எதுவும் தராமல், காவல்துறையை குவித்து, அதிகாரி பொன். மாணிக்கவேல் தலைமையில் வன்முறையை ஏவி, தாக்குதல் நடத்தி பலவந்தமாக ஏழை விவசாயிகளை வெளியேற்றியது; ஏழை விவசாயிகள் சாகுபடி செய்த விவசாய நிலங்களை சேலம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.


சட்டரீதியான போராட்டம் நடத்திய முன்னணிகள் மேற்கொண்ட முயற்சிகளால், தகவல் அறியும் சட்டம் 2005 உருவான பிறகே பல்வேறு ஆவணங்களைப் பெற முடிந்தது. 1985 ம் ஆண்டு UDR ல் வருவாய் துறை ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளது உட்பட பல்வேறு ஆவண மோசடிகளை சேகரிக்க முடிந்தது. 


இந்தப் பின்னணியில், பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகள், 2023 ல், அகில இந்திய விவசாயிகள் மகாசபையில் இணைந்து போராட்டத்தை தொடர உறுதியேற்றனர். 'எங்கள் நிலம் எங்கள் உரிமை'  என அத்திப்பட்டி, சூரியூர் ஏழை விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக,  பலமுறை ஆர்ப்பாட்டங்கள், அனுமதி மறுக்கப்பட்டபோதும் முற்றுகைகள், தர்ணாக்கள், போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளனர்; எனினும், ஏழை விவசாயிகளுக்கு நீதி வழங்க எந்தவிதமான நிர்வாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.


எனவே, பனமரத்துப்பட்டி ஒன்றிய அகில இந்திய விவசாயிகள் மகாசபை (AIKM) சார்பில், கடந்த 9-2-2026 ல்  தொடர் காத்திருப்புப்  போராட்டம் துவங்கியது.  AIKM விவசாய சங்க ஒன்றியக்குழு தோழர்கள் கண்ணன், ஜீவா, சின்னுசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். AIKM மாவட்டத் தலைவர் தோழர் P. அன்பு, AICCTU மாவட்டத்  தலைவர் தோழர் V. பாலு மற்றும் CPI ML மாவட்டச் செயலாளர் தோழர் R. வேல்முருகன் வழிநடத்தினர். 300க்கும் மேற்பட்ட ஏழை விவசாயிகள் ஆண்கள், பெண்கள் தொடர் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டனர்.


போராட்டம் துவங்கி, 6 நாட்களாக அரசு அதிகாரிகள் எவரும் பேச்சுவார்த்தை நடத்த வராததால், பிப்.14 காலை 11.30 மணியளவில், 'நீதி கேட்டு நிலம் கேட்டு', தாங்கள் உரிமை கோரும் நிலங்களை நோக்கி, 300 க்கும் மேற்பட்ட ஏழை விவசாயிகள் செங்கொடிகள் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்; நிலங்களுக்குள் செல்ல முயன்றபோது காவல்துறை தடுக்கவே, 'நில மீட்பு போராட்டத்தை தொடர்வோம்' என்ற உறுதியுடன், கோவில் அருகில் தங்கள் காத்திருப்புப் போராட்டத்தை தொடர்ந்தனர். சேலம் தாலுகா தாசில்தார், வருவாய் துறை, மாநகராட்சி அதிகாரிகள், 

பனமரத்துப்பட்டி காவல் ஆய்வாளர் முன்னிலையில், AIKM மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன், மாவட்டச் செயலாளர் வி.அய்யந்துரை மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரதிநிதிகள் மஞ்சமுத்து, கண்ணன் ஆகியோர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.


'அத்திப்பட்டி, சூரியூர் சுமார் 1400 ஏக்கர் நிலத்தின் மீதான உரிமைகள் தொடர்பான வழக்குகள், விவசாயிகளின் கோரிக்கைகள் இருப்பதாலும், அரசு  ஆவணங்களில் பல்வேறு வேறுபாடுகள் நிலவுவதால், 'கள ஆய்வு செய்து உண்மை நிலை அறிய', சேலம் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அரசின்

வருவாய் துறை, மாநகராட்சி துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்று அமைக்க வேண்டும்.' என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியருக்கு இந்தப் பரிந்துரையை எடுத்துச் செல்ல அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மகாசபை இருதரப்பினராலும் முடிவு செய்யப்பட்டது.


அதேசமயம், பிரச்சினைக்குரிய நிலத்தில் உரிய அனுமதிகள் பெறாமல், 20 ஏக்கர் நிலத்தில் செடிகள் வைக்க குரால்நத்தம் ஊராட்சி சார்பில் பணிகள் நடைபெற்றதால், இரவிலும் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தை தொடர்ந்தனர்; எனவே, அரசு அதிகாரிகள் இரவில் மீண்டும் வந்து பேசினர். இரவிலும் போராட்டம் தொடர்ந்தது. 

எனவே, 15-2-2026 காலை 11-30 மணியளவில் காவல்துறை பெண்கள் உட்பட சுமார் 100  விவசாயிகளை கைது செய்து மண்டபத்தில் சிறை வைத்தது. விவசாயிகள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவே, மாலையில் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர். AIKM மற்றும் CPI ML தலைவர்கள் 16.2.2026 அன்று, சேலம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து ஆய்வுக்குழு அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர். 


20 February, 2026