ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரை எதிர்ப்போம்; ஈரானின் இறையாளுமைக்கு துணை நிற்போம்

$articleData->title

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரை எதிர்ப்போம்

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் குற்றமய போர் நடவடிக்கை, மேற்கு ஆசியாவை கடுமையான நெருக்கடிக்குள், நிச்சயமற்ற சூழலுக்குள் தள்ளியுள்ளது. கடந்த முறை ஜூன் 2025-ல் இஸ்ரேல் ஈரானைத் தாக்கியபோது, அது இஸ்ரேல் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை. அதோடு இஸ்ரேலை மீட்பதற்காக அமெரிக்காவும் போரில் இறங்க வேண்டியிருந்தது. இம்முறையோ,  போரின் தொடக்கம் முதலே இஸ்ரேல் அமெரிக்காவையும் போரில் இழுத்துக் கொண்டுள்ளது. ஆனால் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டின் இராணுவ பலம், நிதி பலம், மேற்கு ஆசியா மீதான அதன் அரசியல் ஆதிக்கம் (மேற்கத்திய உலகைக் குறிப்பிடவேத் தேவையில்லை) வலுவாக இருந்தபோதிலும் இம்முறையும் நெதன்யாகு - டிரம்பின் விருப்பப்படி போர் நகர்வதாகத் தெரியவில்லை.


அமெரிக்காவில் உள்ள தனது சொந்த ஆதரவாளர்களிடம் கூட, இப்போரை நியாயப்படுத்தும் நிலையில் டிரம்ப் இல்லை. உண்மையில் சொல்லபோனால், பொருளாதாரத்தில் கவனம் செலுத்த போவதாகவும் போருக்குச் செல்ல போவதில்லை என்றும் உறுதியளித்தே 2024 அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் பாதுகாப்பிற்கோ அல்லது அதன் எந்தவொரு நேட்டோ கூட்டாளிகளின் பாதுகாப்பிற்கோ ஈரான் அச்சுறுத்தலாக விளங்குகிறது என்ற அமெரிக்கவின் பொய்யை யாரும் நம்பவில்லை. ஈரான் மீதான கடந்த ஜூன் தாக்குதலுக்குப் பிறகு, ஈரானின் அணுசக்தித் திட்டத்தை அழித்துவிட்டதாக டிரம்பே மார்தட்டிக் கொண்டார். ஈரானின் எஞ்சியுள்ள அணுசக்தித் திறனைக் கட்டுப்படுத்துவது மட்டுமே நோக்கமாக இருந்தால், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஈரான் தயாராகவே இருந்தது. உண்மையில் சொல்வதானால் ஓமனில் ஒரு உடன்படிக்கைக்கான  ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு கூட்டுத் தாக்குதலைத் தொடங்கி இஸ்ரேலும் அமெரிக்காவும் தான் அதை சீர்குலைத்துள்ளன.


(ஈரானில்) ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்காவின் வேட்கையே டிரம்ப்-நெதன்யாகுவின் “ஆபரேஷன் எபிக் ஃபியூரி”க்குப் பின்னாலுள்ள உண்மையான காரணம் என்பது இந்த உலகத்துக்கே நன்றாக தெரியும். பிப்ரவரி 1979 இல் அமெரிக்க ஆதரவு ஷா ஆட்சி (ஈரானில்) அகற்றப்பட்டதிலிருந்து, ஈரான் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெற அமெரிக்கா ஒரு வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தது. ஈராக், லிபியா, சிரியாவில் நிகழ்ந்த தொடர்ச்சியான ஆட்சி மாற்றங்களுக்குப் பிறகு, இதேபோன்றதொரு படையெடுப்புக்கு ஈரானும் தயாராக இருப்பதாக அமெரிக்க-இஸ்ரேல் அச்சு நினைத்தது. உண்மையில் ஈரானும் மாற்றத்திற்கான சக்திவாய்ந்த போராட்டங்களைக் கண்டு வருகிறது. ஆட்சியைத் தக்கவைக்க காமேனி அரசும் மிருகத்தனமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ஈரானின் ஆணாதிக்க-இறையாட்சி அமைப்புக்கு எதிரான ஈரானியப் பெண்களின் வீரமிக்க போராட்டம், உலகளாவிய மகத்தான நம்பிக்கையைத் தூண்டியது. ஆனால் ஈரானின் உச்சத் தலைவரும் அவரோடிருந்த பல முக்கிய நபர்களும் படுகொலை செய்யப்பட்ட பிறகு, ஈரானிய மக்கள் ஆட்சிஅதிகாரத்தைக் கையிலெடுத்துக்கொள்ள வேண்டுமென்ற டிரம்பின் அழைப்பு ஈரானுக்குள் எந்த கிளர்ச்சியையும் தூண்டவில்லை.


மேற்கத்திய நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த ஈரானியர்களின் சில பிரிவினரிடையே மகிழ்ச்சி நிலவினாலும் ஈரானுக்குள் அயதுல்லா காமேனியின் வீரமரணமும் ஆரம்பப் பள்ளியில் ஈரானியப் பெண்குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதைக் குறித்து பெருமளவில் துயரமும் கோபமும் வெளிப்படுவதைக் காணமுடிகிறது. இது காசாவில் குழந்தைகள், பெண்களின் இனப்படுகொலையை ஒத்த வன்முறைச் செயலாகும். இஸ்ரேலாலும் அதனை பாதுகாக்கும் அமெரிக்காவாலும் எழுதப்பட்ட ஆட்சி மாற்றச் சதிக்கு, தங்களது எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் இறையாளுமை உரிமையை ஈரானிய மக்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. பல பத்தாண்டுகளாக அமெரிக்க-இஸ்ரேல் அச்சின் பொருளாதாரத் தடைகளுக்கும் இராணுவ அழுத்தங்களுக்கும் ஈடுகொடுத்து நிற்கும் ஈரானிய மக்கள், அமெரிக்காவின் தற்போதைய கொடூரமான இராணுவ தாக்குதல் அல்லது மொசாட், சிஅய்ஏ-வின் அச்சுறுத்தலான நடவடிக்கைகளுக்கும் பணிய வாய்ப்பில்லை.


ஈரானைச் சுற்றியுள்ள அமெரிக்கத் தளங்களுக்கு எதிரான ஈரானிய பதிலடி நடவடிக்கை நிச்சயமாக அமெரிக்க-இஸ்ரேல் போர் இயந்திரத்திற்கு கடும் சவால்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. குவைத்தில் ‘நட்பு ரீதியான தாக்குதலில்” தான் இழந்து விட்டதாகக் கூறப்படும் மூன்று இராணுவ விமானங்கள் உட்பட சில பெரிய இழப்புகளை அமெரிக்கா ஏற்கனவே ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. ஈரானில் விரைவான ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற டிரம்ப்-நெதன்யாகுவின் கனவு, குறைந்தபட்சம் பல வாரங்கள் நீடிக்கும், சில அமெரிக்கர்களின் உயிர்களை காவுவாங்கும் என வெறுப்புடன் ஒப்புக்கொள்ள நிர்ப்பந்தித்துள்ள போராக உருவெடுத்துள்ளது. ஆனால் இது போரில் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான் என்று டிரம்ப் இப்போது மழுப்புகிறார். வளைகுடா நாடுகளோ போரின் இராணுவ, பொருளாதாரச் செலவுகள் குறித்த தங்கள் கவலையை வெளிப்படுத்த தொடங்கியுள்ளன. அவர்களது சொந்த அமெரிக்கச் சார்பு ஆட்சிகள் நிலைகுலையக்கூடும் என்பதை சொல்ல வேண்டிய தேவையில்லை.


போர் நீண்ட காலம் தொடர்ந்தால், உலகப் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் பேரழிவுகரமாக இருக்கும். எண்ணெய், எரிவாயு விலை கடுமையாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. விநியோக வழித்தடங்கள் இடையூறுகளுக்கு உள்ளாகும். ஏற்கனவே இதுவொரு பிராந்தியப் போர் போலத் தோன்றுகிறது. ஈரானின் “இறையாளுமை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு, தேசத்தின் கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாப்பதில்” ஈரானை ஆதரிப்போமென சீனா தெரிவித்துள்ள கருத்திற்கு ஏற்ப சீனா நடந்து கொள்ளுமானால், உலகம் மூன்றாம் உலகப்போர் நோக்கிச் செல்வதற்கான உள்ளார்ந்த ஆற்றல் அதிகரிப்பதையே உலகம் காணநேரிடும். இந்தியாவின் எரிசக்தி விநியோகம் கொந்தளிப்பான மேற்காசியப் பகுதியை பெரிதும் சார்ந்திருப்பதாலும் அங்கு சுமார் ஒரு கோடி இந்தியர்கள் பணிபுரிவதாலும் இந்தியாவின் கவலை மிகப் பெரியது, மிகவும் குறிப்பானது.


இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பும் பெருமளவிலான வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலாளரின் பாதுகாப்பும் குறித்து எழுந்துள்ள பிரச்சினைக்கு, ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர இந்தியா மிகத் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்பதே தீர்வாக அமையும். ஆனால் அனைத்து ஆரம்ப அறிகுறிகளும் மோடி அரசாங்கத்தின் உரத்த மவுனத்தை மட்டுமல்ல, அது குறிப்பிட்டளவு உடந்தையாக இருப்பதையும் உணர்த்துகின்றன. மோடி இஸ்ரேலுக்கு மேற்கொண்ட அதிர்ச்சியூட்டும் அரசுமுறைப் பயணத்தில் நெதன்யாகு உடன் மோடியின் வெட்கமற்ற நெருக்கத்திற்குப் பிறகான சில நாட்களிலேயே ஈரான் மீதான தாக்குதல் தொடங்கியது. மேலும் ஈரானின் உச்சத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட பின்னரும் மோடி அரசாங்கம் கண்டனத்தையோ அல்லது கவலையையோ கூட தெரிவிக்கத் தவறிவிட்டது. போருக்கு இராணுவ ஒத்துழைப்பை வழங்க இந்தியா மறைமுகமாக இழுக்கப்படுவதாகவும்  செய்திகள் உள்ளன.


இலங்கை உடனான இந்தியாவின் கடல் எல்லைக்கு அருகில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் ஈரானிய போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் டேனா மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இது,போர் ஏற்கனவே இந்தியாவிற்கு மிக அருகில் வந்துவிட்டது குறித்த தீவிரமான சந்தேகங்களை எழுப்புகிறது. பிப்ரவரி 16 அன்று இந்தியாவின் அழைப்பின் பேரில் சர்வதேச கடற்படை பயிற்சியில் பங்கேற்பதற்காக ஈரானிய போர்க்கப்பல் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்தது. மேலும் பயிற்சியின் பின்னர் தாயகம் திரும்பும் வழியில் நீர்மூழ்கி ஏவுகணையால் அது தாக்கப்பட்டுள்ளது. ஐஆர்ஐஎஸ் டேனாவில் இருந்த 180 பேரில், இதுவரை 87 உடல்கள் இலங்கை மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளன. 78 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 31 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்தியா, நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளராக இருந்தபோதும் கூட, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் குற்றச் செயலை கண்டிக்கத் தவறிவிட்டது.

தூதரக உறவுகளுக்கு அப்பால், இந்தியாவும் ஈரானும் நீண்ட கால நெருக்கமான கலாச்சாரப் பிணைப்புகளையும் தொடர்புகளையும் கொண்டுள்ளன. சமகால சர்வதேச உறவுகளிலும் கூட,  ஈரான் இந்தியாவின் நம்பகமான கூட்டாளியாக இருந்து வருகிறது. ஈரானின் மிக மோசமான நெருக்கடி காலத்தில், அமெரிக்க-இஸ்ரேல் அச்சுடன் இந்தியா அணிசேர்வது நியாயப்படுத்த முடியாத வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்பதோடு சக நட்பு நாட்டிற்கும் சக பிரிக்ஸ் உறுப்பு நாட்டிற்கும் (ஆதரவாக நிற்க வேண்டிய) இந்தியா தனது பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாகும். 


பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை, பாலஸ்தீன மக்களின் இனப்படுகொலை தொடர்பான பிரச்சினையில் மோடி அரசாங்கத்தின் இழிவான பங்கோடு இணைந்து, ஈரான் மீதான போரில் அமெரிக்க-இஸ்ரேல் அச்சுக்கான ஆதரவு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு களங்கம் என்பதோடு இந்தியாவின் சொந்த தேச நலன்களுக்கும் துரோகம் விளைவிப்பதாகும். இந்திய மக்களாகிய நாம் ஈரானிய மக்களின் இறையாளுமைக்கும் கண்ணியத்திற்கும் துணை நிற்க வேண்டும். ஈரானுக்கு எதிரான அனைத்து வன்முறை நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வலியுறுத்த வேண்டும். அத்துடன் மோடி அரசின் பொறுப்பற்ற, நியாயப்படுத்த முடியாத பங்கிற்காக அதைப் பொறுப்பேற்க செய்யவும் வேண்டும்.     


தலையங்கம், எம்எல் அப்டேட்.    

தமிழாக்கம்: விஜி


08 March, 2026