5.12.2025 அன்று குல்பிசா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிபா உர் ரெஹ்மான், முகமது சலீம் கான், சதாப் அகமது ஆகியோருக்கு பிணை வழங்கிய இந்திய உச்ச நீதிமன்றம் உமர் காலித்திற்கும் சர்ஜீல் ரஹ்மானுக்கும் பிணை வழங்க மறுத்துவிட்டது. அவர்கள் இருவரும் உபா சட்டம் 1967ன் கீழ் குற்றவாளிகள் என்பதற்கு போதுமான ஆவணங்கள் இருக்கின்றன என்று காரணம் சொல்லியுள்ளது. இவர்கள் இருவரும் விசாரணை இல்லாமலேயே கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். இதில் இன்னும் அநியாயம் என்னவென்றால், இருவரின் பிணை மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது மட்டுமின்றி, இவர்கள் இருவரும் பிணைக்கான அடுத்த மனுவை ஓராண்டு கழித்தோ அல்லது முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்பட்டுவிட்ட பின்னரோ தாக்கல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் படி ‘ஜெயில் அல்ல, பெயில்’ என்று சொல்லியிருக்கும் உச்சநீதிமன்றமே அடுத்த பிணை மனுவை தாக்கல் செய்வதற்குக் கூட காலக் கெடுவை விதித்துள்ளது என்றால், இது நீதியின் கேலிக் கூத்தையும் தாண்டிவிட்டது.. இனி எங்கு சென்று நீதியைத் தேடுவது. 2020 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த கலவரத்தின் போது டெல்லி காவல் துறையால் புனையப்பட்ட பொய் வழக்கு. டெல்லி உயர்நீதிமன்றம் இந்த இரு இளைஞர்களுக்கும் பிணை மறுத்துவிட்ட பின்னர், உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மாற்றுக் கருத்து சொல்வதற்கான உரிமை, குடியுரிமைகள் அடிப்படையில் இவர்களுக்கு பிணை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றமே கூட அடிப்படை உரிமைகளை மறுக்கிறது என்கிற போது, ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியுள்ளது. ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய நிறுவனங்கள் செல்லரித்துப் போகும் போது ஜனநாயகத்தைக் காப்பாற்றும், அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் கடமை நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது. உமர் காலித்தையும் சர்ஜீல் ரஹ்மானையும் விடுதலை செய்ய அனைவரும் தொடர்ந்து குரலெழுப்புவோம்.
3.12.2025 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மத்தியக் குழு உறுப்பினரும் உத்தரப் பிரதேச மாநிலச் செயலாளருமான தோழர் சுதாகர் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் ஜீரா பாரதியையும் உத்தரப் பிரதேச யோகி ஆதித்யாநாத் அரசு கைது செய்து சிறையிலடைத்துள்ளது. மிர்சாபூர் மாவட்டத்தில் ஆதிவாசி மக்களுக்கு பறிக்கப்பட்ட உரிமையை வன உரிமைச் சட்டத்தின் படி மீண்டும் வழங்க வேண்டும், ஆதி வாசி மக்களை அவர்களின் வாழ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தக் கூடாது, அம் மக்களின் வாழ்விடத்தை புல்டோசர் கொண்டு அழிக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினார்கள் என்பதற்காக தோழர்கள் சுதாகரையும் ஜீரா பாரதியையும் பொய் வழக்குகளில் கைது செய்து சிறையிலடைத்துள்ளது புல்டோசர் ராஜ்ஜியம் நடத்தும் பாஜகவின் யோகி அரசு. இந்த அராஜகச் செயல்களுக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
பாசிச பாஜக அரசுகள் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக சட்டங்களை மாற்றுகிறது. வனங்களை, இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க ஆதிவாசிகளை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து விரட்டுகிறது. எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்களை பொய் வழக்கு போட்டு சிறையிலடைக்கிறது. நாட்டில் நிர்வாகத்தில் உள்ள எல்லா துறைகளையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது மட்டுமின்றி, நீதிமன்றங்களையும் தன்னுடைய விருப்பங்களுக்கு நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப செயல்பட வைத்துக் கொண்டிருக்கிறது. அரசின் அராஜகச் செயல்களைக் கண்டிக்க வேண்டிய நீதிமன்றங்கள், அரசமைப்புச் சட்டங்களை உயர்த்திப் பிடிக்க வேண்டிய நீதிமன்றங்கள், அரசமைப்புச் சட்டத்திற்கு நேர் மாறாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. உமர் காலித் சர்ஜீல் ரஹ்மான் போன்றவர்கள் விசாரணையே இல்லாமல் பல ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்கள். ஆனால், உன்னாவ் பாலியல் குற்றவாளி பாஜகவின் செங்காருக்கு விசாரணையின் கொடுக்கப்பட்ட தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார். இந்த அராஜகச் செயல்களுக்கு எதிராக ஒன்றுபட்டு க் குரலெழுப்புவோம்.
