மாண்புமிக்க வாக்காளர்களே,
ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் போர் ஒவ்வொரு நாளும் உக்கிரம் அடைந்து வருகிறது. உலகப் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைக்கும் இந்தப்போர், நம்மையும் நாட்டையும் சுற்றி வளைத்துள்ளது. அணிசேரா கொள்கை மரபை தூக்கியெறிந்துவிட்ட மோடி, போர்க் குற்றவாளி ட்ரம்ப்பிடம் முழுமையாக சரணடைந்து விட்டார். மோடியின் 56 இன்ச் மார்பு 5- 6 ஆக சூம்பி விட்டது!
“கொரோனா காலம் போல் எதற்கும் மக்கள் தயாராக வேண்டும்” என பிரதமர் மோடி அச்சுறுத்துகிறார். விளக்கு ஏற்றுங்கள்; எரிவாயு அடுப்பு எரியும். தட்டுகளைத் தட்டுங்கள்; சாப்பாடு வந்துவிடும் என்று சொல்கிறார். 12 ஆண்டுகளாக ஆண்டு வரும் பாஜக ஆட்சி, “இந்திய மக்களாகிய நம்மை” கைவிட்டுவிட்டது. நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்று சொல்லிவிட்டார் மோடி. போரின் விளைவுகள் நம்மை சுட்டெரிக்கிறது. பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலை, வருமானம் இழப்பு கடுமையாக அச்சுறுத்துகிறது. இந்த நிலையில்தான், சுட்டெரிக்கும் வெப்ப அலைக்கு நடுவே 5 மாநில தேர்தல் போரை எதிர்கொள்கிறோம்.
துரோகக் கூட்டணி பாஜக-அதிமுக:
இது, வழக்கமான தேர்தல்தான். ஆனால் வழக்கத்துக்கு மாறான தேர்தல். அனைத்து திசைகளிலும் தனது ஆக்டோபஸ் கரங்களால் விழுங்கத் துடிக்கும் பாஜக, அதிமுக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை விழுங்கி காவிமயமாக்கி வருவதைப் பார்க்கிறோம். அதிமுக ஆட்சி, என்று எடப்பாடி திரும்பத் திரும்பச் சொல்கிறார். மோடியோ தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் என்று சொல்லி வருகிறார். கூட்டணிக்கு தலைமை அதிமுக என்று சொல்லப்படுகிறது. ஆனால், அமித்ஷா தான் தில்லியில் கூட்டணியை முடிவு செய்கிறார். ‘திராவிடக் கட்சி’ அதிமுக வின் கடிவாளம் காவிக் கட்சியின் கையில் இருக்கிறது. அபாயகரமான ‘இரட்டை என்ஜின் ஆட்சி’ யை தமிழ்நாட்டிலும் கொண்டுவர பாஜக துடிக்கிறது.
பாஜக வுக்கு பகல் கனவாக இருந்து வரும் தமிழ்நாட்டை அபகரிக்க சங்க் பரிவார் சக்திகள் சதிசெய்து வருகின்றன. பாஜக அரசியல் தமிழ்நாட்டுக்கு எதிரானது. தமிழ்நாட்டு அடையாளத்துக்கே எதிரானது. ‘தமிழ்நாட்டின் அயோத்தி திருப்பரங்குன்றம்’ என்று வெளிப்படையாக அறிவித்து ரத்தக்களரி ஏற்படுத்தவும் துணிச்சல் பெற்றுள்ளது. அதிமுக, தமாகா, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் அமைதி காத்தன, பாசிச சக்திகளுக்கு ஊக்கம் தந்தன. ஆனால், தமிழக மக்களும் முற்போக்கு சக்திகளும் தமிழ்நாடு அரசும் பாஜகவின் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தனர்; மத நல்லிணக்கத்தை பாதுகாத்தனர்.
நூறாண்டு வரலாறு கொண்ட ஜனநாயகம், சமத்துவம், சமூகநீதி, மனுநீதி பார்ப்பனிய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண்விடுதலை, மதச்சார்பின்மை, கூட்டாட்சி மாண்புகள் ஆழமாய் வேர்கொண்ட தமிழ்நாட்டு கோட்டையை தகர்க்க முடியாமல் தடுமாறும் பாஜக, அதிமுக, பாமக போன்ற துரோகக் கும்பல் துணையுடன் கோட்டைக்குள் நுழைந்து விடலாம் எனத் திட்டம் போடுகிறது. அதிமுக கூட்டணி கட்சிகள் பலவும் தாமரை சின்னத்திலேயே போட்டியிடுவதையும் பார்க்கிறோம்.
தமிழ்நாடு மக்கள் பாஜகவை கடுமையாக எதிர்க்கிறார்கள். அதற்காக தமிழ்நாடு மக்கள்மீது தனது வன்மத்தை, லஞ்சத்தை வஞ்சகத்தை ஏவி வருகிறது மோடி ஆட்சி. வரிப் பகிர்வில் வஞ்சம். வெள்ள நிவாரண நிதி தருவதில்லை. கல்விக்குரிய நிதியை தராமல் புதிய கல்விக் கொள்கையை, மும்மொழிக் கொள்கையை திணிக்க அச்சுறுத்தல். தமிழ் மன்னன் ராஜேந்திரன் என்று நம்புவதை இந்து மன்னன் ராஜேந்திரன் என்று கூறி பிளவுப் பண்பாட்டை திணிக்கும் சூழ்ச்சி. தமிழ்நாட்டின் அடையாளமான பெரியாரை அவமதிக்கும் சனாதன அரசியல்.
இத்தகைய வஞ்சனைகளையும் அநீதிகளையும் செய்துவரும் பாஜகவை தோளில் தூக்கி திரிகிறார் துரோகத்தின் சின்னம் எடப்பாடி. அதிமுக ஆதரித்ததால்தான் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான, மத அடிப்படையிலான குடியுரிமைச் சட்டம் இந்தியாவின் மீது திணிக்கப்பட்டது. 4 தொழிலாளர் சட்டத் தொகுப்பு, மின்சார திருத்தச் சட்டம், விவசாயிகளின் பாரம்பரிய உரிமையை, பண்பாட்டை பறிக்கும் விதைகள் சட்டம், தொழிலை, வேலை வாய்ப்பை அழிக்கும் இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் இவை அனைத்தையும் அதிமுக ஆதரிக்கிறது. தேசவிரோத? பாஜகவும் தமிழக விரோத அதிமுகவும் கொள்கை கூட்டணியாக களத்துக்கு வந்துள்ளன. அதை பாமக-தமாகா-புநீக-அய்ஜெகே உள்ளிட்ட கட்சிகள் தாங்கிப் பிடிக்கின்றன.
தமிழ்நாட்டுக்கெதிரான சதித் திட்டத்தை தவிடுபொடியாக்குவோம்!
தமிழ்நாட்டு மக்களாகிய பெண்கள், ஆண்கள், பால்புதுமையர் அனைவரும் ஒரு மனிதராய் நின்று, ஒரு முடிவாய் நிமிர்ந்து, ஒரு குரலாய் எழுந்து நிற்க ஒலிக்க வேண்டும். மக்கள் ஜனநாயக குரல் பாசிசத்தை விரட்டியடிக்க வேண்டும். பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு பூஜ்யத்தைக் கொடுத்த பாஜக-அதிமுக-பாமக-தமாக கூட்டணிக்கு தேர்தலில் பூஜ்யத்தைக் கொடுத்து படுதோல்வி அடையச் செய்ய வேண்டும். சிங்காரவேலர், சீனிவாசராவ், பெரியார், அம்பேத்கர், பகத்சிங் கூரிய கொள்கை வேல் கொண்டு சாவர்க்கர், ஹெக்டேவார், கோட்சே, மோகன் பாகவத், ராமகோபாலன் கூட்டங்களை தகர்த்திட வேண்டும். தமிழ்நாட்டுக்கெதிரான இந்தக் கூட்டணியின் சதித் திட்டத்தை தவிடுபொடியாக்கவேண்டும்!
பாஜக பாசிசத்துக்கு எதிரான முன்கள போராளி மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி!
8931 நாட்கள் அரசாங்கப் பதவியில் இருந்து மோடி “சரித்திரம்” படைத்துவிட்டதாக சங்க்பரிவாரம் கொண்டாட்டம் நடத்துகின்றன. அவரது சாதனை சரித்திரத்தை குஜராத் படுகொலை சொல்கிறது. உச்சநீதிமன்றம் வரை ஏறி இறங்கிய பில்கிஸ்பானுவின் துயரக்கதை சொல்கிறது. சிறையில் கொல்லப்பட்ட பாதிரியார் ஸ்டேன்சாமி சொல்கிறார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியதற்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் உமர் காலித் சொல்கிறார். மூன்று வேளாண் சட்டங்கள் கூடாது என ஓராண்டுக்கு மேல் போராடி, உயிர் துறந்த 600க்கு மேற்பட்ட விவசாயிகள் கூறுவார்கள். கல்விக் கூடங்களில் சாதிபாகுபாடு கூடாது. சமத்துவம் வேண்டும் என்று போராடியதற்காக திகார் சிறையில் அடைக்கப்பட்ட 14 ஜெஎன்யூ மாணவர்கள் சொல்வார்கள். நாளும் சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு சொல்கிறது.
இத்தகைய பாசிச பாஜக ஆட்சியை எதிர்த்து, நாடு தழுவிய அளவில், மக்கள் போராட்டங்களை வளர்த்து வருகிறது மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி. விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகி நின்ற சங்பரிவார் பாஜகவிடமிருந்து அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும், இந்தியாவையும் பாதுகாக்க நாடு முழுவதும் கூர்மையான அரசியல் கிளர்ச்சிகளை நடத்திவரும் கட்சி. பீகார், ஜார்க்கண்ட், உத்திர பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளம், பஞ்சாப், ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலாளர், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர், தலித்துகள், பெண்கள், ஜென்ஸி இளைஞர்கள், விளிம்பு நிலைப்பிரிவினர் என சமூகத்தின் முதன்மை சக்திகளை சங்க்பரிவார் சக்திகளுக்கு எதிரான அரசியல் சக்தியாக அணிதிரட்டி பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் முன்களப் போராளியாக விளங்கி வருகிறது மா லெ கட்சி. தேர்தல் களத்திலும் இந்த அரசியல் பணியை தனித்துவமான வகையில் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறது.
அரசியல் சட்டத்தை, தேர்தல் ஆணையத்தை, அரசியல் கட்சிகளை, பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை, சிதைத்து காவிப் பாசிச இந்து ராஷ்ட்ரா அரசியல் திட்டத்தை வெளிப்படையாக அரியணை ஏற்றத் துடிக்கிறது ஆர்எஸ்எஸ்-பாஜக. இந்தக் கொடூர திட்டத்தின் ஒரு பகுதியாக, குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது மோடி ஆட்சி. இப்போது தேர்தல் ஆணையத்தை கைத்தடியாக வைத்துக் கொண்டு, விரும்பியவாறு குடிமக்களின் வாக்குரிமையை பறித்து மக்கள் விருப்பத்துக்கு மாறாக பாஜக ஆட்சிகளைத் திணித்து வருகிறது. பாஜக-ஜெடியூவின் இந்த “வாக்குத்திருட்டு” தில்லுமுல்லை அம்பலப்படுத்தி, முன்களப் பணியாளராக செயல்பட்டு பீகாரில் மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டியது மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி. இந்தியா முழுவதும் விழிப்புணர்வு கொள்ள வைத்தது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு க ஸ்டாலின், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியோடு கரம் கோர்த்தனர்.
தமிழ்நாட்டில் இந்த வாக்குத் திருட்டை, வாக்குரிமை பறிப்பை தடுத்து நிறுத்தும் நோக்கில், தூத்துக்குடியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியின் 12 வது மாநில மாநாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து ஒத்த கட்சிகளையும் அழைத்து மாபெரும் எதிர்ப்புக் கருத்தரங்கை நடத்தியது.
அதானி, அம்பானி, டாடா, வேதாந்தா போன்றவர்கள்தான் மோடி-அமித்ஷாவுக்கு இந்தியா. ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலை போராட்ட மரபை கைகழுவி விட்டு, போர்க்குற்றவாளி ட்ரம்ப் ஏகாதிபத்தியத்திடம் கைகட்டி நிற்பதுதான் இந்தியாவின் ‘வெளியுறவு கொள்கை’ என்கிறது பாஜக. இத்தகைய தேசவிரோத, தமிழ்நாடு விரோத கட்சியுடன் ‘நான்தான் எல்லாம், எனக்கே எல்லாம்’ என்ற கொள்கை உடைய பழனிசாமியும் அன்புமணியும் கூட்டு சேர்ந்துள்ளனர். இவர்களது ‘கொள்கை கூட்டணி’ தமிழ்நாட்டுக்கு எதிரான கூட்டணி.
மக்கள் போராட்டங்களால் தமிழகத்தை மாற்றுவோம்!
‘மக்களே முதன்மை, மக்கள்தான் எல்லாம்’ என்ற கொள்கை உடையது மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி. நிலவுடைமை எதிர்ப்பு, நிலச் சீர்திருத்தம், பஞ்சமி நிலம் மீட்பு என்ற கொள்கைப் போராட்டமும் கோவில்களில் வழிபாட்டு உரிமை, தீண்டாமை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு போராட்டங்களுக்காக அறியப்பட்டது மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி. இன்றும் வீட்டுமனை, வீடு போராட்டத்தை நிலவுடைமை குவிப்புக்கு எதிராக நிலச் சீர்திருத்தம் கோருகிற போராட்டமாக தமிழ்நாட்டின் கிராமப்புர வறியவர்களையும் நகர்ப்புர ஏழைகளையும் அணிதிரட்டி வருகிறது மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி. தாறுமாறான தொழில் வளர்ச்சியாலும் தறிகெட்ட நகர்ப்புர மயமாக்கத்தாலும் அழிந்துவரும் விவசாயம், வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து கடனிலிருந்து விடுதலை; வேலையில்லா திண்டாட்டத்திலிருந்து விடுதலைப் போராட்டத்தை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடிக்கு மேற்பட்ட விவசாயத் தொழிலாளர், ஏழை விவசாயிகள் வாழ்வாதாரத்துக்கு கைகொடுத்து வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்ட மோடி ஆட்சி விபி-கிராம்-ஜி சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதை எதிர்த்து விவசாய, கிராமப்புர தொழிலாளரை ஏழை விவசாயிகளை அணிதிரட்டி போராடி வருகிறது மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி. தமிழ்நாட்டின் 11.19% பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாக, குருதியும் சதையுமாக இருக்கும் தொழிலாளர் உரிமைக்காக, பாதுகாப்புக்காக, மோடி அரசு கொண்டுவந்துள்ள 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கு எதிராக தமிழக தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டி வருகிறது. வெற்றிகரமான பிப்ரவரி 12 அகில இந்திய வேலைநிறுத்தம் உள்ளிட்ட நகர்ப்புர, கிராமப்புர உழைக்கும் வர்க்கத்தை அணிதிரட்டியது மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் கட்சி. தொழிற்சங்க ஜனநாயகம், தொழிலாளர் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பிரிக்கால் தொழிலாளரின் முன்னுதாரணமிக்க போராட்டத்தை நடத்திய ஏஅய்சிசிடியூவுக்கு தோள் கொடுத்துப் போராடியது. சென்னை தொடங்கி தமிழகம் முழுவதும் தூய்மைப் பணித் தொழிலாளரை போராட்ட சக்தியாக திரட்டிய, சென்னையில் 165 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி, பலதரப்பட்ட முற்போக்கு ஜனநாயக சக்திகளின் ஆதரவைப் பெற்று தொழிலாளர் கோரிக்கைகளை அரசையும் மாநகராட்சி நிர்வாகத்தையும் ஏற்க வைத்த போராட்டத்தை வழி நடத்திய உஉஇ, ஏஅய்சிசிடியு போராட்டங்கள் வெற்றிபெற பாடுபட்டது. பன்னாட்டு முதலாளிகளின் கோட்டை திருபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை பகுதியில் தொழிலாளர் கூடுவதெற்கென்றே தொழிலாளர் உருவாக்கிய “மக்கள் மாமன்றம்” முயற்சிகளுக்கு துணை நிற்கிறது மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி.
நாளாவட்டத்தில் திராவிட கருத்தியல், அரசியல் பின்னுக்குச் சென்றதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட சங்க்பரிவார் வளர்ச்சியால், பெண்ணுரிமை திராவிட அடித்தளம் பெண் வெறுப்புக் களமாக மாற்றப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து, பெண்ணுரிமை போராளிகள் பெரியார், அம்பேத்கரின் கொள்கையுடன் மனுநீதி, பார்ப்பனிய அரசியலை எதிர்த்து, போராடி வருகிறது. பெண்களின் சமத்துவம், பாதுகாப்பு, அச்சமற்ற சுதந்திரத்துக்காக கிராமப்புர, நகர்ப்புர உழைக்கும் பெண்களை அணிதிரட்டி போராடி வருகிறது மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி.
இயற்கை வளங்களை சூறையாடி, சுற்றுச்சூழலை நாசப்படுத்தி, மனித வாழ்வுக்கே எதிரான உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் திட்டங்களான கூடங்குளம் அணுமின் நிலையம், ஆழ்கடல் மீத்தேன் ஹைட்ரோகார்பன் எடுப்பு, ஸ்டெர்லைட் ஆலை, கடலையும் கடலோடிகளையும் கார்ப்பரேட்டுகளுக்கு இரையாக்கும் சாகர் மாலா திட்டம், டங்க்ஸ்டன் சுரங்கம் ஆகியவற்றுக்கு எதிராக தனித்தும் போராட்ட அமைப்புகளுடனும் கரம் கோர்த்து போராடி வருகிறது மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி; தொடர்ந்து போராடும். ஏகாதிபத்திய, லாபவெறி முதலாளித்துவத்தால் உருவாகியுள்ள காலநிலை மாற்றத்தால் நிலவளம், நீர்வளம் சிதைக்கப்பட்டு வெப்பநிலை அதிகரித்து விவசாயத்தையும் உணவுப்பாதுகாப்பையும் அச்சுறுத்தும் கொள்கைகளுக்கு எதிராக காலநிலை நீதிக்காக போராடி வருகிறது மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி. மக்கள் போராட்டங்களால் தமிழகத்தை உழைக்கும் மக்கள் அரசியலை மதவெறி பாசிச எதிர்ப்பு அரசியலை முதன்மை இடத்திற்கு கொண்டுவர உறுதி கொண்டுள்ளது மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் கட்சி. இடது, ஜனநாயக, முற்போக்கு சக்திகளே இந்த போராட்டத்தில் உறுதியான மாற்று அரசியல் சக்தியாக வரவேண்டுமென பாடுபடுகிறது மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி.
சாதிவெறி, மதவெறி வலதுசாரி சக்திகள் அரசியலில் வளர்ந்து வருவதன் விளைவாகவும் ஆட்சியாளர்களின் உறுதியற்ற தலைமையாலும் பெண்கள், தலித்துகள், விளிம்புநிலை மக்கள் மீதான வன்கொடுமைகள் பெருகி வருகின்றன. வேங்கைவயல், நாங்குநேரி, வடகாடு, நெல்லை, தூத்துக்குடி வன்கொடுமைகள் நின்றபாடில்லை. தலித்துகள், பெண்களது சமத்துவம், கவுரவம், பாதுகாப்பு சமூகத்தில் முதன்மையானது என்பதை உயர்த்திப் பிடிக்கும் வகையில் போராடி வருகிறது மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி. மாற்றுப்பாலினத்தவர், விளிம்புநிலைப் பிரிவினர் உள்ளிட்ட சமூகத்தின் ஒவ்வொரு பிரிவின் அடையாளத்தை அழித்து, உரிமையை பறித்து வரும் பாஜக-ஆர்எஸ்எஸ் ஆட்சியை எதிர்த்து போராடும் அந்தமக்களுடன் கரம் கோர்த்து போராடி வருகிறது மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் கட்சி.
சமூகநீதி, மதச்சார்பின்மை, கூட்டாட்சி பதாகையை உயர்த்திப் பிடித்து ‘மதச்சார்பற்ற முற்போக்கு அணி பாஜக-அதிமுக கூட்டணிக்கு எதிரான வலுவான அரசியல் சக்தியாக விளங்குகிறது. கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுக ஆட்சி மகளிர் மய்ய கல்வி மய்ய வரவேற்புக்குரிய சில நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. ஆனால், கிராமப்புர, நகர்ப்புர ஏழைகள் உள்ளிட்ட சாமான்ய மக்களின் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தலான வலுவான கார்ப்பரேட் திட்டங்களை 1 ட்ரில்லியன் பொருளாதாரப் என்ற பெயரில் செயல்படுத்தி வருவது பெரும் கவலை அளிக்கிறது. இதற்கு எதிராக உறுதிமிக்க வெகுமக்கள் போராட்டங்களை நடத்த உறுதி பூண்டுள்ளது மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி. அதேவேளை தேசத்தின் முதன்மை ஆபத்து பாஜக, தமிழ்நாட்டில் எவ்வகையிலும் காலூன்றி விடக்கூடாது என்ற அரசியல் நோக்கம், இந்த தேர்தலில் இடது, ஜனநாயக, முற்போக்கு, மதச்சார்பற்ற சக்திகளின் முதன்மை கடமையாக இருக்கிறது. அந்த அடிப்படையில், மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி போட்டியிடாத தொகுதிகளில், திமுக தலைமையிலான “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு” வாக்களிக்குமாறும் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது,
2026 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. கட்சிகளின் வாக்குறுதிகள், சுனாமியால் சுழன்று சுழன்று வீசுகின்றன. ஆனால், மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி மக்களது அடிப்படை உயிராதாரமான, பின்வரும் சமூக, பொருளாதார, அரசியல் கோரிக்கைகளை முன்நிறுத்தி தேர்தல் களத்தில் உங்களை சந்திக்கிறது. தமிழக மக்களின் உடனடி, நீண்டகால நலனுக்கான இந்த கோரிக்கைகள் மீது வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கவும் எமது கட்சிக்கும் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கவும் வேண்டுகோள் விடுக்கிறது. இந்த கொள்கை கோரிக்கைகள் நிறைவேற்றப்பட எமது கட்சியும் வேட்பாளர்களும் சட்டப்பேரவைக்குள்ளும் வெளியிலும் இடைவிடாது போராடுவார்கள் என்றும் உறுதி கூறுகிறது.
வீடு, நிலம், வேலை, அடிப்படை வசதிகள்
1.தமிழ்நாட்டில் வீட்டுமனை, வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனை வீடு வழங்குவதை மாநில அரசு முன்னுரிமைக் கொள்கையாக அறிவிக்க வேண்டும். வீடு பெறும் உரிமை அடிப்படை உரிமையாக்கி சட்டம் கொண்டுவர வேண்டும். நகர்ப்புரம், கிராமப்புரத்தில் வீடற்றவர் கணக்கெடுப்பு முழுமையாக நடத்திட வேண்டும். அதற்கான நிலக் கொள்கையை உருவாக்கி, அரசு நிலங்கள், அனைத்துவகை கோவில், சர்ச், வக்ஃப் வாரிய நிலங்கள், மடங்கள், அறக்கட்டளை நிலங்களை கையகப்படுத்தி வீடு கட்டும் திட்டங்களை உருவாக்கிட வேண்டும். பெரும் பெரும் மனை வணிக நிறுவனங்களுக்கு உச்சவரம்பு கட்டுப்பாடு கொண்டு வரவேண்டும். மேம்படுத்தப்பட்ட சமத்துவபுர குடியிருப்புகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்கிட வேண்டும்.
2.கோவில், மடங்கள் நிலங்களுக்கு நிலச்சீர்திருத்த சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும். உச்சவரம்பு அளவை குறைக்க வேண்டும். அவற்றை பயிரிடும் குத்தகை விவசாயிகளுக்கு நிலமற்ற ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். பறிக்கப்பட்டுள்ள பஞ்சமர் நிலங்களை நீதிமன்ற தீர்ப்பினடிப்படையிலும் அரசு ஆவணங்கள்படியும் ஓராண்டுக்குள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க, முதலமைச்சர் நேரடி பார்வையின் கீழ் சிறப்பு பிரிவை உருவாக்கிட வேண்டும்.
3. விவசாயிகளின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ள “நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை” ரத்து செய்ய வேண்டும். தொழில் திட்டங்களுக்கு விவசாய நிலங்களை கண்மூடித்தனமாக ஒப்படைப்பதை நிறுத்த வேண்டும். கடும் நீர்பற்றாக்குறை உள்ள தமிழ்நாட்டில், மழைக்கால நீர் சேமிப்பு ஆதாரங்களாக உள்ள ஆற்று மணல் கொள்ளை முழுவதுமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அய்ஏஎஸ் சகாயம் அறிக்கையை வெளியிட வேண்டும. ஆற்றுமணல், குவாரி மாபியாக்கள் முதுகெலும்பு உடைக்கப்பட வேண்டும். ஆறுகள், கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் ஏரிகள் உள்ளிட்ட அனைத்து வகை நீராதாரங்களையும் பாதுகாக்க வேண்டும். காவிரி- குண்டாறு-வைகை திட்டம் போன்றவற்றை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
4. தொழில் வளர்ச்சியில் முதல் மாநிலம், 11.19% வளர்ச்சி என்ற பெருமிதங்கள் இருந்தாலும் நகரத்திலும் கிராமத்திலும் வேலை இல்லா திண்டாட்டம் மிகத் தீவிரமடைந்துள்ளது. அதன் விளைவாக கடன் நெருக்கடி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சுற்றிவளைத்திருக்கிறது. கடனிலிருந்து விடுதலை; வேலை இல்லா திண்டாட்டத்திலிருந்து விடுதலை பெறுகிற வகையில் வேலை கோரும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ரூ 35,000 வழங்க வேண்டும். அரசுப் பணியில் உள்ள 5 லட்சம் காலிப் பணியிடங்களை ஓராண்டு காலக் கெடுவுக்குள் நிரப்பிட வேண்டும். நுண் கடன், கல்விக் கடன், விவசாயக் கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். உடனடி நிவாரணமாக குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் ரூ 25,000 வழங்க வேண்டும்.
5.ஒன்றிய ஆட்சி கொண்டு வந்துள்ள 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை செயல்படுத்தமாட்டோமென அமைய உள்ள புதிய அரசு அறிவிக்க வேண்டும். எட்டுமணி நேர வேலை, 5 நாள் வாரவேலையை அறிமுகப்படுத்த வேண்டும். ஸ்விகி, சொமோட்டா, ஊபர், ஓலா போன்றவற்றில் பணிபுரியும் இளைஞர்களை தொழிலாளராக அறிவித்து. பணி வரைமுறை, பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமைகளை வழங்கிட வேண்டும். சமவேலைக்கு சம ஊதியக் கொள்கையை அனைத்து தளங்களிலும் விரைந்து செயல்படுத்திட வேண்டும். தனியார்துறை நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை செயல்படுத்திட வேண்டும். கோவையிலுள்ள சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவிடத்தில் அரசு, மணிமண்டபம் எழுப்பிட வேண்டும்.
தொழிலாளர் பாதுகாப்பு, நிலவளம், நீர்வளம், உணவுப்பாதுகாப்பு, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, காலநிலை மேம்பாடு இவற்றை மய்யமாகக் கொண்டு தொழிற் கொள்கை முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
6.கிராம ஊராட்சிகள் ஒவ்வொன்றிலும் வீடு, குடிதண்ணீர் முதல் சுடுகாடு/இடுகாடு வரை அனைத்து அடிப்படை வசதிகளையும் உருவாக்கிட வேண்டும். 50 கிலோ விலையில்லா அரிசி, பால், பருப்பு எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மலிவு விலையில் வழங்கி பொதுவிநியோகத் திட்டத்தை வலுப்படுத்திட வேண்டும்.
7.நகர்ப்புர, கிராமப்புர தூய்மைப் பணியாளர்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தற்காலிக ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர், மருத்துவர்கள் அனைத்துவகை ஒப்பந்த ஊழியர்கள் அனைவரையும் நிரந்தரப்படுத்தி அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். ஒப்பந்தமுறை, தொகுப்பூதிய முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட வேண்டும். அதில் பணியாற்றும் ஊழியர்களை அரசுப்பணியில் அமர்த்த வேண்டும்.
பெண்கள்-தலித்துகள் பாதுகாப்பு, கவுரவம், சமூகநீதி
8. திறந்த வெளி கழிப்பிடமே தூத்துக்குடி மாணவியின் கொடூர கொலைக்கு வாய்ப்பாக இருந்துள்ளது. கிராமப்புர, நகர்ப்புரங்களில் தனிநபர் கழிப்பறைகள், சுகாதார வளாகங்களை ஏற்படுத்தி திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழித்து பெண்கள் கவுரவத்தை, பாதுகாப்பை ஆரோக்கியத்தை உறுதி செய்ய வேண்டும். பெண் ஊழியர் தொழிலாளருக்கு மாதவிடாய் விடுமுறையை புதிய அரசு சட்டமாக்கிட வேண்டும்.
9.கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில் தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றீசல் போல் பெருகி ஏழை, சாமான்ய, நடுத்தர குடும்பங்களை ஓட்டாண்டியாக்கி வருகின்றன. குற்ற நிகழ்வுகளும் (சிறீமதி) நடந்துவருகின்றன. தனியார் கல்வி நிறுவனங்களை முனைப்பாக கட்டுப்படுத்த அரசு கல்வி நிறுவனங்களை பெரும் எண்ணிக்கையில் ஏற்படுத்திட வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசமான, தரமான கல்வியை வழங்குவதை உண்மையாக்க வேண்டும். அரசு, அரசு உதவிபெறும், தனியார் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், விடுதிகளில் நிர்வாகத்தை ஜனநாயகப்படுத்தும் வகையில் மாணவர் பேரவைத் தேர்தல்களை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர தொடர்ந்து போராடுவதோடு, ஒன்றிய ஆட்சியின் புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மக்கள்நேய மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்திட வேண்டும். நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழை அலுவல் மொழியாக கொண்டுவர துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
10. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு படுகொலையில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ள அருணா ஜெகதீசன் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தில் கொல்லப்பட்ட தியாகிகளுக்கு நினைவுச்சின்னம் எழுப்பிய வேண்டும். சாத்தான் குளம் தொடங்கி மானாமதுரை வரை காவல்நிலைய சித்திரவதை மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். காவல்நிலைய மரணம் தொடர்பான பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளையும், பரிந்துரைகளையும் செயல்படுத்திட வேண்டும். காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கும் முறையை முழுவதுமாக தடைசெய்ய வேண்டும்.
11. வேங்கை வயல் சம்பவத்தை மறு விசாரணைக்கு உட்படுத்தி உண்மைக் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும். கே என். பாஷாவின் அறிக்கையை விரைந்து பெற்று சட்டப்பேரவையில் முன் வைக்கவேண்டும். பொதுவிவாதத்திற்கு உட்படுத்தி செயல்படுத்திட வேண்டும். சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். கல்விக் கூடங்களில் சாதிய பாகுபாடுகளை ஒழிப்பது தொடர்பான நீதியரசர் சந்துருவின் அறிக்கையை சட்டப்பேரவையில் முன்வைத்து, தாமதிக்காமல் பரிந்துரைகளை செயல்படுத்திட வேண்டும்.
12.நிர்வாகக் காரணங்களைக் காட்டி உள்ளாட்சித் தேர்தல்களை முடக்கி வைக்கக் கூடாது. உள்ளாட்சி நிர்வாகத்தில் தலித்துகள், பெண்கள் உரிமையை தடுத்து நிறுத்துவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் நடக்கும் இடங்களில் அதற்கு மாவட்ட ஆட்சியரை பொறுப்பாக்கிட வேண்டும்.
13.பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பிரிக்கால் தொழிலாளர் மணிவண்ணன், ராமமூர்த்தி இருவரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும். வெகு நீண்டகாலமாக சிறையிலிருக்கும் இஸ்லாமியர்கள், விசாரணையின்றி சிறையிலிருப்போர், தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில் உள்ளோர்களை கண்டறிந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். முன்கூட்டியே விடுதலை என்ற சிறப்புரிமையை அரசு தெளிவான விதிகளின் அடிப்படையில் பயன்படுத்த வேண்டுமே ஒழிய தன்னிச்சையாக (மேலவளவு) பயன்படுத்தக் கூடாது. இதற்கென சிறப்பு நிபுணர் குழுவை அமைத்து அதன் பரிந்துரைப்படி விடுவிக்க வேண்டும்.
கடலோடிகள்-புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு
14. பலவீனமான ஒன்றிய அரசே தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட காரணம் என்று மோடி சொன்னார். பலமான ஆட்சி எனச் சொல்லிக் கொள்ளும் மோடி ஆட்சியில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தாக்கப்படுகின்றனர். கொல்லப்படுகின்றனர். சிறைபிடிக்கப்படுகின்றனர். படகுகள் சேதப்படுத்தப்படுகின்றன. மீனவர்கள் தொடர்ந்து போராடியும் தமிழ்நாடு அரசாங்கம் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தியும் இந்தக் கொடூரம் நின்றபாடில்லை. மோடி அரசாங்கம் இலங்கை அரசுடன் பேசி இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலுக்கும் மீனவர்களின் முடிவில்லா துயரத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும்.
15.போர்ச்சூழலில் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழ்நாட்டினரை பாதுகாப்புடன் திரும்பக் கொண்டுவரவும் இங்குள்ள அவர்களது குடும்பங்களுக்கு அவசியமான உதவிகளை செய்து கொடுக்கவும் வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களின் சமூக, பொருளாதார வாழ்வை அனைத்து நிலைகளிலும் முன்னேற்றும் இந்தப் போராட்ட பிரகடனம் நிறைவேற மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் கட்சியும் அதன் உறுப்பினர்களும் சட்டப்பேரவையிலும் வெளியிலும் மக்கள் துணையுடன் போராடுவார்கள் என்று உளமார உறுதி கூறுகிறோம். மேற்கண்ட அடிப்படையான மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநில அரசிடம் வலியுறுத்திப் போராடவும் மக்களை அணிதிரட்டி அழுத்தம் தரவும் பாஜக-அதிமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும். நடைபெற உள்ள 5 மாநில தேர்தல்களில் பாஜக ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் எதிர்க்கட்சிகள் ஆளும் கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களையும் கைப்பற்றி ‘ஒரேதேசம், ஒரே கட்சி திட்டத்தை’க் கொண்டுவரவும் பாஜக துடிக்கிறது. டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டம், கூட்டாட்சி, ஜனநாயகத்தை முற்றிலுமாக சீர்குலைக்க திட்டமிடும் சதித்திட்டத்தை முறியடிக்கவும் பாஜக-அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்காக மட்டுமின்றி இந்தியாவுக்காக வரும் பாஜக-அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் கட்சி அழைப்பு விடுகிறது.
“மக்களே முதன்மை மக்கள்தான் முதன்மை” என்ற கொள்கை நோக்குடன் செயல்படும் கட்சி வேட்பாளர்களை பின்வரும் தொகுதிகளில் நிறுத்தியுள்ளோம். அவர்களுக்கு மூன்று நட்சத்திர கொடிச் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாடு விரோத, பாசிச பாஜக -அதிமுக- பாமக கூட்டணியை தோற்கடிப்போம்!
மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வோம்!!
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்போம்!!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (லிபரேஷன்)
தமிழ்நாடு மாநிலக் கமிட்டி
3பி/254, ஜீவா தெரு,
சென்னை-48
