நமது அன்பிற்குரிய கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-ன் 57 வது துவக்க நாளை, உண்மையிலேயே கொந்தளிப்பானதொரு உலகச் சூழலில் கடைப்பிடிக்கிறோம். ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் இரண்டாவது திங்களை எட்டியுள்ள நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கத்திற்கு உண்மையிலேயே மிகப் பெரியதொரு அடியாக மாறியுள்ளது. உயர்மட்டத் தலைவர்களோடு, பள்ளிக் குழந்தைகளையும் பொதுமக்களையும் குறிவைத்து கொடூரமாக தாக்கிக் கொன்று, ஈரானை வீழ்த்தி, ஒரு சில நாட்களிலேயே அங்கு எளிதாக ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்துவிடலாமென ட்ரம்ப்பும் நெதன்யாகுவும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், ஈரான் மாபெரும் தாங்குதிறனை காட்டியுள்ளதுடன் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட தலைவர்கள், அதிகாரிகளின் இடத்தில் புதிய தலைவர்களையும், அதிகாரிகளையும் வெகுவிரைவாகவே கொண்டுவந்து அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்தது. இந்த மீள்திறனோடு கூடவே, அமெரிக்க-இஸ்ரேல் ராணுவ இலக்குகளைத் தாக்கி தொடர் சேதங்களை ஏற்படுத்துவதில் கணிசமான ராணுவ மதிநுட்பத்தையும் ஆற்றலையும் காட்டியிருக்கிறது. ஹோர்முஸ் நீரிணையை மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாகவும் மாற்றிக் காட்டியுள்ளது.
இதன் விளைவு, ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக அமெரிக்காவிலேயே வெகுமக்களின் கோபம் வெடித்துப் பெருகி வருகிறது. அமெரிக்காவின் அய்ரோப்பிய கூட்டாளிகளும் கூட ட்ரம்ப் ஆட்சி நிர்வாகத்திடமிருந்து ஒதுங்கி இருக்கத் துவங்கியுள்ளன. பல நாடுகள், அமெரிக்காவின் போர்க் கூச்சலுக்கு ஒத்துழைப்புத்தர மறுத்து விட்டன. அமெரிக்கா ராணுவத் தளங்கள் அமைக்க இடமளித்துள்ள அரபு நாடுகளும் வளைகுடா நாடுகளில் இருந்து செயல்படும் உலகளாவிய பகாசுர தொழில்நுட்ப நிறுவனங்களும் அதிகரித்த அளவில் போரின் வெப்பத்தை உணரத் தொடங்கியுள்ளன.
போரை நடத்தும் அமெரிக்கா-இஸ்ரேலுடன் மோடி அரசாங்கம் கொண்டுள்ள நெருக்கம், பேரழிவுக் கூட்டின் காரணமாக இந்தியாவும்கூட அதிக விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு கோடி இந்தியத் தொழிலாளரும், தொழில் வல்லுநர்களும் நாடு கடந்து மேற்கு ஆசியாவில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் எல்லாரும் மிக மோசமான நிச்சயமற்ற, பாதுகாப்பற்ற நிலைமையில், பயத்தின் நிழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் போர் இந்தியாவில் எரிபொருள், உரங்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பல பத்து லட்சம் புலம்பெயர் தொழிலாளருக்கு, பிழைக்க வழியின்றி முற்றிலும் சவாலாகிப் போன கோவிட் கால பொதுமுடக்கத்தின் நிலைமை திரும்பி வந்து விட்டது போலுள்ளது. ஆழமான பொருளாதார நெருக்கடியும், வெளிநாட்டுக் கொள்கையின் படுதோல்வியும் சேர்ந்து இந்தியாவில் நமது போராட்டங்களுக்கான புதிய நிலைமையை குறிப்பிட்டுக் காட்டுகிறது; அதற்கேற்ப நாம் துணிச்சலுடன் ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
நாம், நமது கட்சியின் 57 வது ஆண்டினை கடைப்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இந்திய மக்கள் மத்தியில் அமைதியின்மைக்கான புதிய அறிகுறிகளைக் காண முடிகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதிலிருந்து, பல தலைமுறை இந்தியர்கள் அனுபவித்து வந்த மிக முக்கியமான அடிப்படை ஜனநாயக உரிமையான வாக்குரிமைக்காக, இந்தியா முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான மக்கள், தங்கள் வாக்குகளை செலுத்துவதற்காகப் போராட வேண்டியிருக்கிறது. புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கு எதிராக, அதிலும் குறிப்பாக வேலை நேரத்தை அதிகரித்துள்ளதற்கு எதிராக தொழிலாளர் மத்தியில் எதிர்ப்புகள் வெடித்துக் கிளம்புகின்றன. அமெரிக்காவுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயத்துக்கு பேரழிவை ஏற்படுத்த உள்ளது; இந்திய விவசாயத்தை ஏகாதிபத்திய அபகரிப்பிலிருந்து பாதுகாக்க தீர்மானகரமான போராட்டம் நடத்த விவசாயிகள் தயாராகி வருகின்றனர். மகாதேஊவேஉச ஒழித்துக் கட்டப்படுவதை அடுத்து, ஊரக வேலைவாய்ப்பு உறுதி பிரச்சினை புதிய வகையில் கவனத்தை ஈர்த்து வருகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதானது பொருளுள்ள சமூக நீதிக்கான வேட்கையை தூண்டி விட்டுள்ளது.
2026-27 ஆண்டு, இந்திய சாதி எதிர்ப்பு இயக்க வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளை எதிர்கொள்கிறது; அவை நூற்றாண்டு காணும் இரண்டு முக்கிய நிகழ்வுகள். மகத் அறப்போராட்டம் (20 மார்ச் 1927), மனுநீதி எரிப்பு போராட்டம் (25 டிசம்பர் 1927); அதோடு கூடவே சமூக சமத்துவம், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை வேட்கையின் மாபெரும் முன்னோடியான ஜோதிபா பூலேவின் இருநூறாவது ஆண்டும் வரவிருக்கிறது.
மாபெரும் நக்சல்பாரி விவசாயிகள் எழுச்சியில் உதித்தெழுந்த கட்சி இகக(மாலெ). இகக(மாலெ), ஒட்டுமொத்த கம்யூனிச இயக்கத்தின் புரட்சிகர மரபுகளையும் பெருமையுடன் வரித்துக்கொண்ட கட்சி; எல்லாவித பாதகமான நிலைமைகளுக்கு மத்தியிலும் மக்களது வலிமை, துணிச்சல், முன் முயற்சியில் ஊட்டம் பெற்று தொடர்ந்து தன்னை புதுப்பித்துக் கொண்டு வருகிற கட்சி. உலகம் முழுவதுமுள்ள ஆளும் வர்க்கத்தினர், அவ்வப்பொழுது கம்யூனிஸ்ட் இயக்கம் தோற்றுவிட்டதாக இரங்கலுரை எழுதிக் கொண்டிருந்தாலும் அத்தகைய வெற்(றி)று அறிவிப்புகளையெல்லாம் தூக்கியெறிந்து கம்யூனிச இயக்கம் மீண்டெழுந்து வருகிறது.
இன்று ஏகாதிபத்தியத்தின் ஆசியுடன் இந்திய பாசிச ஆட்சியாளர்கள் உண்மையை மறைத்து, கம்யூனிஸ்ட்கள் மீது அவதூறைப் பரப்பி நம் நாட்டிற்கும் மக்களுக்கும் துரோகமிழைத்து வரும் வேளையில், இகக(மாலெ) கம்யூனிஸ்ட் பதாகையை உயர்த்திப் பிடித்து உண்மையான இறையாளுமை கொண்ட, மதச்சார்பற்ற சோசலிச ஜனநாயக குடியரசுக்கான போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திட வேண்டும். நமது மாபெரும் தியாகிகளின் கனவுகளை நிறைவேற்றிடவும் நமது மாபெரும் மக்களின் நலன்களுக்காகப் பணியாற்றவும் இகக(மாலெ) வை சாத்தியமான அனைத்து வழியிலும் விரிவுபடுத்துவோம்; வலுப்படுத்துவோம்.
