இடைத் தேர்தல்:
தவெக நடத்திய ஜனநாயகப் படுகொலையின் விளைவு
தமிழ்நாட்டில் தற்போது மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தல் இயல்பானது அல்ல. திட்டமிட்டு மக்கள் மீது திணிக்கப்பட்டது. பெரும்பான்மை பெறாத தவெக தனது சட்டமன்றப் பெரும்பான்மையை எட்டுவதற்காக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஜனநாயகப் படுகொலை செய்ததன் ஒரு பகுதியாக விளைந்ததுதான் இந்த இடைத் தேர்தல்கள். முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி தவிர, முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சி.விஜய பாஸ்கர் (விராலிமலை), எம். ஆர். விஜய பாஸ்கர் (கரூர்) ஆகியோரும் தவெகவில் இணைவதற்காக ராஜினாமா செய்த அந்தத் தொகுதிகளுக்கு இன்னும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அந்தத் தொகுதிகளில் வெற்றி குறித்தே வழக்குகள் இருப்பதால் சென்னை உயர் நீதிமன்றம் அத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்துள்ளது.
ஏற்கனவே அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று, வேண்டுமென்றே ராஜினாமா செய்த அதே சட்டமன்ற உறுப்பினர்களை தவெக வேட்பாளர்களாக நிறுத்தி இருப்பது, இது ஒரு ஜனநாயகப் படுகொலை என்பதை உறுதி செய்கிறது. டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிட்ட, குறைந்தபட்ச ஊதியம் கூட கிடைக்காமல் போன கடைநிலை ஊழியர்கள் குறித்த விசயத்தில் அவர்களை பணி இடை நீக்கம் செய்து ஊழலுக்கு எதிரானவராக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தவெக, மேல்மட்ட ஊழல்கள், கார்ப்பரேட் ஊழல்கள், ஊழல் மூலம் நடக்கும் ஜனநாயகப் படுகொலைகள் ஆகியவற்றைப் பற்றி வாய் திறக்க மறுக்கிறது. இப்படிப்பட்ட பின்னணியில் நடக்கும் இந்தத் தேர்தலில், அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான இந்நாள் தவெக வேட்பாளர்களை அந்தத் தொகுதி மக்கள் தோற்கடித்திட வேண்டும். அது ஒரு முக்கியமான ஜனநாயகக் கடமை.
பொய்த்துப் போன, நீர்த்துப் போன வாக்குறுதிகள்
தவெக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் இந்த இடைத் தேர்தலில் அம்பலப்படுத்தப்பட வேண்டும். தொழிலாளர் விரோத பிஜேபியின் தொகுப்புச் சட்டங்களுக்கு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற திமுக அரசு தயாராக இருக்கவில்லை. ஆனால், குறைந்தபட்சம் அதை நடைமுறைப் படுத்துவதை தள்ளிப் போடும் நோக்கில், அறிவிக்கப்பட்ட மாநில நகல் விதிகளை இறுதிப்படுத்தாமல் தள்ளி வைத்தனர். தேர்தல் காரணமாக கூட இருக்கலாம். திமுக தற்காலிகமாக நிறுத்தி வைத்த பணியை தற்போது தன் சிரம்மேல் ஏற்று தவெக துவங்கி இருக்கிறது. தொழிலாளர் அடிமைச் சட்டங்களை நிறைவேற்ற மாநில விதிகள் உருவாக்க முயற்சிப்பதன் மூலம் பிஜேபி-அதிமுக-திமுகவைப் போலவே தாமும் கார்ப்பரேட் சேவகர்கள்தான் என்பதை நிரூபிக்கிறார்கள்.
கிராமப்புற மக்களிடமிருந்து நூறு நாள் வேலை உரிமையைத் தட்டிப் பறிக்கும் மோடி அரசுக்கு எதிராக தவெக எதுவும் பேசவில்லை என்பது மட்டுமல்ல, அதற்குப் போதுமான நிதியை மோடி அரசைப் போலவே, தவெக அரசும் ஒதுக்கவில்லை. அதை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்திட வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றாகி விட்டது.
சமூக நீதி என்ற பெயரில் துறை மட்டும் இருக்கிறதே தவிர பஞ்சமி நில மீட்பு பற்றி, வழக்கமான செயல்படா ஆணைய அறிவிப்பு தவிர வேறு எந்த தீவிர முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. தேர்தல் வாக்குறுதியான விவசாயிகள் கடன் தள்ளுபடியும் கண்துடைப்பாக முடிந்து போய்விட்டது.
தூய்மைப் பணியாளர்கள் பணிநிரந்தரம் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கும்போது, அந்தப் பணிகளை தமிழ்நாட்டின் எல்லா மாநகராட்சிகளிலும் தனியாரிடம் கொடுப்பது என அரசாணை வெளியிட்டு, பின்னர் உழைப்போர் உரிமை இயக்கம் - ஏஐசிசிடியு உள்ளிட்ட சங்கங்கள் போராடியதால் அது கைவிடப்பட்டது. சமீபத்தில் நடந்த தூய்மைப் பணியாளர் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிப்பதாகச் சொல்லும் தவெக அரசாங்கம், சென்னை மாநகராட்சியில் வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை மாநிலம் முழுவதும் வழங்குவோம் என அறிவிக்கத் தயாராக இல்லை.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், கேலிக்கூத்து என்னவென்றால், அந்த நிலம் தொழில்துறைக்கு, சிப்காட்டுக்கு பயன்படுத்தப்படுமே தவிர அந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு திருப்பி அளிக்கப்பட மாட்டாது என்பதுதான். விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதனால், பரந்தூர் மக்களுக்கு பயன் ஏதுமில்லை.
மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பறித்து பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டமன்றம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.
5 ஆண்டு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், காலி இடங்களை நிரப்புவது, ரூ. 4000 வேலையில்லா நிவாரணம், பெண்களுக்கு மாதம் ரூ 2500 உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
பெருமையாக அறிவிக்கப்பட்ட பெண்களுக்கான கட்டணமில்லா மாநிலப் பயணத் திட்டம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருக்கிறது. மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, 100 யூனிட் ஆக குறைத்தது போல, (2 மாதத்திற்குத்தான் 200 யூனிட்) ஆறு சிலிண்டர் மூன்றாக குறைந்து அதுவும் எப்போது வரும் என்று தெரியவில்லை.
இத்தகைய பின்னணியில் நடக்கும் இடைத் தேர்தல்களில் தவெக அரசின் வெற்று வாக்குறுதிகளை அம்பலப்படுத்தி, அதை நிறைவேற்றக் கோரி போராடுவதற்கு மக்களை தயார் செய்வதை முக்கிய நிகழ்ச்சி நிரலாக மாற்றிட வேண்டும்.
ஒன்றரை டிரில்லியன் டாலர் பொருளாதாரம் பற்றி பேசி, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கத் தயாராக இருக்கும் தவெக அரசாங்கம் உழைக்கும் மக்கள் உரிமைகளைப் புறக்கணிக்கிறது.
எழுந்துவரும் இடதுசாரிகள்
தமிழ்நாட்டு தேர்தல் அரசியல் வரலாற்றில், 1962க்குப் பிறகு, சுமார் 63 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன் முறையாக கம்யூனிஸ்டுகள் 2026ல் மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்களில் தனித்துக் களம் காண்கிறார்கள். 2016ல் மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் விசிக, மதிமுக, தேமுதிகவோடு இணைந்து திமுக – அதிமுகவுக்கு மாற்றணி என்கிற பெயரில் மூன்றாவது அணியாக போட்டியிட்டாலும், அது ஒரு மூன்றாவது அணிதானே தவிர இடதுசாரி அணி அல்ல.
இம்முறை 2026ல், சிபிஐ, சிபிஐஎம், சிபிஐ எம்-எல் லிபரேசன் இணைந்து தமிழ்நாட்டில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட இடதுசாரி ஒருங்கிணைப்பின் சார்பில் இரு தொகுதிகளிலும் இடதுசாரி வேட்பாளர்கள் தனித்துப் போட்டியிடுகிறார்கள். இது தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் சிறப்பு மிக்க, இடதுசாரிகளின் அரசியல் செயல் தந்திரத்தின் குறிப்பிடத் தக்க நிகழ்வாகும்.
கேரளத்தில், மேற்கு வங்கத்தில், திரிபுராவில் பல்லாண்டுகாலமாக செயல்பட்டு வந்த இடது ஜனநாயக முன்னணி, இடது முன்னணி ஆகியவற்றிலிருந்து தமிழ்நாட்டு இடது ஒருங்கிணைப்பு மாறுபட்டது. ஏனென்றால், இது ஒரு முன்னணி அல்ல, ஓர் ஒருங்கிணைப்பு. இதில் சிபிஐ, சிபிஐஎம் கட்சிகளோடு, சிபிஐ(எம்எல்)லிபரேசனும் இணைந்திருக்கிறது. போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தற்போது அதன் நீட்சியாக இடைத் தேர்தலில் போட்டியிடுகிறது. அகில இந்திய அளவில், அத்தகைய ஒருங்கிணைந்த செயல்பாடு இருக்கிறது என்றாலும், மேற்கு வங்கத்தில் கடந்த முறை சேர்ந்து தேர்தல் களம் கண்டிருக்கிறோம் என்றாலும், தமிழ்நாட்டில் உருவாகி இருக்கும் இடது ஒருங்கிணைப்பு, ஒரு நீண்டகால பார்வையையும் ஓர் இடதுசாரி மாற்றணியாக தமிழ் நாட்டில் பரிணமிப்பதையும் நோக்கமாகக் கொண்டது. போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவாக மட்டுமே உருவான அணி, இந்த இடைத் தேர்தல்களில் தேர்தல் அணியாகவும் பரிணமித்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் நிகழ்வாகும். இடதுசாரி வேட்பாளர்களை சிபிஐஎம்எல் ஆதரிக்கிறது. வெற்றிக்காகப் பாடுபடுகிறது.
சிபிஐ, சிபிஐஎம் கட்சிகள், தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் அதே வேளை, தேர்தலில் இடது ஒருங்கிணைப்பின் சார்பாக களம் காண்பது, திமுக – அதிமுக – பிஜேபிக்கு மட்டுமல்ல, தவெகவுக்கும் இடதுசாரிகளே ஒரே மாற்று எனக் காட்டும் விதத்தில் தேர்தல் களம் காண்பது தமிழ்நாட்டு இடதுசாரி அரசியலில் ஒரு முக்கிய திருப்பம் ஆகும்.
சில விவாதங்கள்
இதனை அனைத்து தரப்பினரும், குறிப்பாக இடதுசாரி தொண்டர்கள், இடதுசாரி அரசியலின்பால் அக்கறை கொண்ட ஜனநாயக சக்திகள் உட்பட, வரவேற்கின்றனர். ஆனாலும், இடதுசாரிகள் வாக்குகளைப் பிரித்து விடக் கூடாது என்று பயந்து தேர்தல் களத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள் என சிலர் ஆலோசனை வழங்குகின்றனர். தமிழ்நாட்டின் தலைவிதியை, தமிழ்நாட்டின் முகத்தை மாற்றியமைக்கும் திறன் படைத்த ஒரே அரசியல் இடதுசாரி அரசியல் தான் என நன்றாகத் தெரிந்தும் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள். தவெகவை வீழ்த்த, திமுகவையோ அதிமுகவையோ தேர்தலை தவிர்க்க அவர்கள் அறிவுரை வழங்கவில்லை. இடதுசாரிகள் மட்டும் விலக வேண்டும் என்கிறார்கள்.
எவ்வளவு வாக்குகள் பெற்றிட முடியும் என்கின்றனர். வாக்குகள் என்னவாக இருப்பினும் தமிழ் நாட்டின் சமூக, பொருளாதார, கலாச்சார பாதை குறித்த ஒரு மாற்றுப் பார்வை கொண்ட கம்யூனிஸ்டுகள், அதில் என்னதான் நிறை-குறைகள் இருப்பினும், தனித்து ஒரு மாற்றணியாக உருவெடுக்க முயல்வதை ஊக்குவிக்க வேண்டுமே தவிர அதற்கு எதிராகப் பேசுவது கார்ப்பரேட் ஆதரவு, மதவெறி ஆதரவு சக்திகளைத்தான் ஊக்குவிப்பதாக இருக்கும்.
தவெக பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து விடும் என நம்பியவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத்தான் பரிசாகத் தந்திருக்கிறது. பிஜேபியை எதிர்த்து வரும் ஒரு மெல்லிய குரல் கூட சட்டப்பேரவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது. திமுக-அதிமுக-பிஜேபியின் அதே நவதாராளவாதக் கொள்கைகளைத்தான் தவெகவும் பின்பற்றுகிறது என்பதை அதன் 2026 பட்ஜெட் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட கல்வி தனியார்மயமாக்க மசோதா அதை உறுதிப்படுத்துகிறது. நவதாராளவாதக் கொள்கைகளும் தனியார்மயமாக்கமும் அவுட்சோர்சிங், தொழில் முறைமையகற்றல் (இன்ஃபார்மலைசேசன்) ஆகியன மதவெறி ஆதிக்க, கார்ப்பரேட் ஆதிக்க, சாதிவெறி ஆதிக்க அரசியலுக்கு வலுசேர்ப்பனவே தவிர வேறேதுமில்லை. பொருளாதாரக் கொள்கைகளை ஒரங்கட்டிவிட்டு, மதவெறி எதிர்ப்பு அரசியலுக்கு வலுச் சேர்க்க முடியாது. இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை. நவதாராளவாதக் கொள்கைதான் மதவெறி அரசியலுக்கு ஆதரவான கள வீரர்களை உருவாக்குகிறது. இதை குஜராத் முதல் மகாராஷ்டிரா வரை நேரடியாகக் கண்டிருக்கிறோம். தமிழ்நாட்டிலும் அத்தகைய சூழலை தவெகவின் பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கி வருகிறது. சென்னை விமான நிலையத்தை தனியார் வசம் ஒப்படைக்கக் கோரி தமிழ்நாட்டு முதல்வர் விஜய் பிரதமர் மோடிக்கு எழுதிய ரகசிய கடிதம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
இந்தப் பின்னணியில், இடதுசாரி அரசியல் மாற்றணி வலுப்படுவது, இடதுசாரி அரசியலை அறுதியிடுவது தமிழ்நாட்டின் பிரச்சனைகளை, தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மிக அவசியமான ஒன்றாகும்.
இடதுசாரி அரசியல் என்பது தேர்தல் அணிதானா?
இடதுசாரி அரசியல் என்பது தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் மட்டுமே வலுப் பெறுவதில்லை. தேர்தல் பங்கேற்பு என்பது வீதிப் போராட்டங்களின் ஒரு நீட்சியாக மட்டும்தான் இருக்க முடியும். அந்தப் போராட்டங்களின் மூலம் பெறப்படும் பரந்த மக்கள் செல்வாக்குதான் வளர்ச்சிக்கு அடிப்படையானது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் சுதந்திர இருத்தலையும் சுதந்திர செயல்பாட்டையும் சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமையையும் சுதந்திரமாக அறுதியிட்டு எழுவதையும் ஒருபோதும் காவுகொடுக்க முடியாது. வர்க்கப் போராட்டங்கள், அனைத்து வகை ஆதிக்கங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், மக்கள் உரிமைப் போராட்டங்கள் எந்த அளவுக்கு வலுப்பெறுகிறதோ அந்த அளவுக்குத்தான் தேர்தல் வாக்குகளும் தேர்தல் வெற்றியும் அமைய முடியும். இதில் எந்த மாயையும் இல்லை. இதற்கு எந்த மாற்றும் இல்லை.
1952 ஒன்றுபட்ட சென்னை மாகாண சட்டப்பேரவைத் தேர்தலில் 131 தொகுதிகளில் போட்டியிட்டு 62 தொகுதிகளில் வென்றது கம்யூனிஸ்ட் கட்சி. அன்றைய காலகட்டத்தில், கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்கி நடத்திய தொழிலாளர் போராட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் நடந்த விவசாயத் தொழிலாளர் போராட்டங்கள், தலித் மக்களின் சம உரிமை, சமூக மரியாதைக்கான போராட்டங்கள் அதன் விளைவாக எட்டப்பட்டதுதான் அந்த மாபெரும் வெற்றி. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரதான எதிர்க் கட்சியாக தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிதான் இருந்தது.
அதற்குப் பிறகு 1957ல் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்டுகள் பெரும் தேர்தல் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் மக்கள் போராட்டங்களைக் கட்டமைக்கும், ஆளும் வர்க்கங்களுக்கு சவால் விடுக்கும் மாபெரும் கட்சியாக கம்யூனிஸ்டு கட்சிதான் இருந்தது.
60கள் காலகட்டத்தில், தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு எதிரான மொழி உரிமைக்கான போராட்டங்கள், அடையாள அரசியல் போராட்டங்கள் எழுந்த பின்னணியில், திமுக முதன்மையான எதிர்க்கட்சியாக எழுந்து, 67 தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. 1967 தேர்தல் முதல் 2026 தேர்தல் வரை, சிபிஐ, சிபிஐஎம் கட்சிகள் தனித்தோ, கூட்டாகவோ திமுக அல்லது அதிமுகவோடு இணைந்துதான் தேர்தல் களம் கண்டனர். இந்த இடைத் தேர்தலில் ஓர் இடதுசாரி மாற்றணியாக எழத் துணிந்திருப்பது தமிழ் நாட்டு மக்களுக்கு, தமிழ்நாட்டின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஒரு புதிய பாதையைக் காட்டுகிறது.
இடதுசாரி மறுமலர்ச்சி
இந்த இடைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஓர் இடதுசாரி அரசியல் மறுமலர்ச்சிக்கு, இடதுசாரி இயக்க எழுச்சிக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்திட வேண்டும். அத்தகைய ஒரு மாற்று அரசியல் பார்வையோடுதான், ஓர் இடதுசாரி அரசியல் அறுதியிடலை தமிழ்நாட்டில் நிகழ்த்திட வேண்டும் என்றுதான் சிபிஐஎம்எல் லிபரேசன், சிபிஐ, சிபிஐஎம் கட்சிகள் இணைந்து ஓர் இடதுசாரி ஒருங்கிணைப்பைக் கூட்டாக வடிவமைத்திருக்கிறது.
பிஜேபியின் பாசிச எதிர்ப்பு அரசியலையும், அதன் பல்வேறு மாநிலப் பரிமாணங்களையும் வீழ்த்திடும் விதத்திலும், மாநில உரிமைகள் என்ற பெயரில், மாநில வளர்ச்சி என்ற பெயரில் புறக்கணிக்கப்படும், நசுக்கப்படும் உழைக்கும் மக்கள் உரிமைக் குரலை எழுப்பிடும் விதத்திலும் இடதுசாரிகள் தமிழ்நாட்டில் தமது பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். அதில் ஒரு மைல் கல்லாக இந்த இடைத் தேர்தல் அமைந்திட வேண்டும்.
இடதுசாரிகளுக்கு வாக்களிப்போம்!
ஆகவே, மதுராந்தகத்தில் சிபிஐஎம் வேட்பாளர் தோழர் பி. சுகந்தி அவர்களுக்கு அரிவாள்- சுத்தியல்- நட்சத்திரம் சின்னத்திலும் தாராபுரத்தில் சிபிஐ வேட்பாளர் பி.லட்சுமணன் அவர்களுக்கு கதிர்-அரிவாள் சின்னத்திலும்
அந்தத் தொகுதி மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வந்த திமுக, அதிமுக-பிஜேபி கூட்டணிகளையும் அதே பாதையில், புதிதாக வளர்ந்து வரும் தவெகவையும் தேர்தலில் தோற்கடித்திட வேண்டும் என அந்தத் தொகுதி மக்களுக்கு சிபிஐஎம்எல் லிபரேசன் அறைகூவல் விடுக்கிறது.
