ஆணாதிக்க வன்முறையின் தொடர்ச்சி:

பெண் சிசுக்கொலை, மணப்பெண் கடத்தலில் இருந்து வணிகமாகிவிட்ட திருமணம் வரை

$articleData->title

ஆணாதிக்க வன்முறையின் தொடர்ச்சி:

சில நாட்களுக்கு முன்பு, உத்தரகாண்ட் பாஜக தலைவர் கிரிதாரி லால் சாஹு, கட்சித் தொண்டர் மத்தியில் பேசும்போது, ​​ஒரு தொண்டரிடம் அவருக்குத் திருமணமாகிவிட்டதா என்று கேட்டு, அவருக்குத் திருமணமாகவில்லை என்பதை அறிந்ததும், பீகாரில் 20,000 முதல் 25,000 ரூபாய்க்குப் பெண்கள் 'கிடைக்கிறார்கள்'  என்று நக்கல் செய்ததுடன், தானே அவரின் திருமணத்திற்காக பீகாரில் இருந்து ஒரு பெண்ணை 'வாங்கித் தருவதாக' வாக்குறுதியும் அளித்தார்.

பீகார் பெண்களை வணிகப் பொருளாக்கி அவமானப்படுத்திய கிரிதாரி லால்லின்  அந்த பேச்சுக்கு பீகாரில் கடுமையான கண்டனமும் எதிர்ப்பும் கிளம்பியது. ஆனால் என்னுடைய கேள்வி : இது உத்தரகாண்ட் ஆண்களுக்கு ஒரு அவமானம் இல்லையா? எந்த மாதிரியான நாகரீக சமூகத்தில் நாம் வாழ்கிறோம்? மனைவியானவள் ஒரு ஆணுக்கு சமமான துணையாக இல்லாமல், அவனுடைய பாலியல் தேவைக்காக, அவனது குழந்தைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக, அவனது வீட்டு வேலைகளைச் சுமப்பதற்காக  விலைக்கு வாங்கப்பட்ட அடிமையாக இருக்கிறாள். ஒரு ஆணுக்கு அவள் இச் செயல்களைச் செய்கிற சதையும் இரத்தமும் கொண்ட ஒரு இயந்திரம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லையா?  இது உத்தரகாண்ட் ஆண்களின்  சுயமரியாதையின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் இல்லையா? அவர்கள் ஒரு அன்பான துணைக்காக அல்லாமல் தன் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு மனித பொருளுக்காகத்தான் திருமணம் செய்கிறார்களா?

நம் நாட்டில், இளைஞர்கள் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ளும்போது, ​​அவர்கள் "ஆணவக் கொலைகளை" எதிர்கொள்கிறார்கள், ஆனால், ‘பாதுகாவலர்கள்’ என்போர் மணப்பெண்களை விலைக்கு வாங்கி கொடைவள்ளல்களாகிறார்கள்! இது பெண்களை எல்லா விதத்திலும் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற நமது ஆணாதிக்க சமூகத்தின் உண்மையான குணத்தை வெளிப்படுத்துகிறது. இத்தகைய சாதிய, மனுவாத சித்தாந்தத்தில் ஊறிய ஒரு சமூகம், பெண் சிசுக்களை கொலை செய்யும்,  திருமணத்திற்காகப் பெண்களை விலைக்கு வாங்கும் இழிவான செயலிலும் ஈடுபடுகிறது. இச் சமூகம் மணப்பெண்களை விலைக்கோ அல்லது கடும் வரதட்சணை பெற்றோ கொள்முதல் செய்கிறது. பெண்கள் இரண்டாம் தர மனிதர்களாகவே இருக்கிறார்கள்.

கிரிதாரி லாலுக்கு முன்பு, நிதீஷ் குமார் இரண்டாவது முறை பதவி வகித்த காலகட்டத்தில், ஹரியானா பாஜக தலைவர் ஒருவர் சட்டமன்றத் தேர்தல்களின் போது இளம் வாக்காளர்களிடம், "சுஷில் மோடி எங்கள் நண்பர்; அவர் பீகாரில் இருந்து பெண்களை ஏற்பாடு செய்வார்" என்று கூறினார். மனைவியை ஏற்பாடு செய்து கொடுப்பதுகூட அவர்களின் தேர்தல் வாக்குறுதியாக இருந்துள்ளது. இவையெல்லாம் தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாமல் தொடரும் அவர்களின் வாக்குறுதிகள்.

பல பத்தாண்டுகளாகவே, ஹரியானாவின் பாலின விகிதம் அபாயகரமாக சீரற்று உள்ளது, இப்போது உத்தரகாண்டும் அதே பாதையில் செல்கிறது. ஒரு காலத்தில், உத்தரகாண்டின் கிராமப்புறங்களில் 1000 ஆண்களுக்கு 1000 பெண்கள் இருந்தனர், ஆனால் இந்த பாலின சமநிலை தொடர்ந்து சிதைந்து வருகிறது.  நிதி ஆயோக்கின் 2021 அறிக்கையின்படி, 1000 ஆண் குழந்தைகளுக்கு 840 பெண் குழந்தைகளே பிறந்துள்ளனர். இது மோசமான, தேசிய சராசரியை விடவும் குறைவானதாகும்.

பீகாரைப் பொறுத்தவரை, பெண்கள் "விற்பனைப் பொருட்கள்" என்கிற சொல்லாடலுக்கும் அப்பால் பார்த்தால், இரட்டை நெருக்கடி வெளிப்படுவதைக் காணலாம். பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் கடுமையாகக் குறைந்து வரும் அதேவேளையில், அங்கு ஆட்கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2022 ஆம் ஆண்டின் அறிக்கை ஒன்று ஆள் கடத்தல் வழக்குகளில் பீகார் தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் இருப்பதாகக் கூறுகிறது. பீகாரில் 20 ஆண்டுகளாக நடைபெறும் பாஜக கூட்டணி ஆட்சியில், பெண் குழந்தைகளைக் கடத்துவது தொடர்ந்து அதிகரித்துள்ளது. இப்போது உறுதியான தரவுகள்கூட வெளிவருவதில்லை.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆழமடைந்து வரும் இந்தக் காலகட்டத்தில், பீகாரின் பெரும்பகுதி மக்கள் கடுமையான வறுமையுடன் போராடி வருகின்றனர், பெண் குழந்தைகள் ஒரு சுமையாகக் கருதப்படுகிறார்கள். திருமணங்கள் அல்லது வேலைவாய்ப்புகளை ஏற்பாடு செய்வதாகக் கூறி, ஏழைப் பெற்றோரிடம் சொற்ப தொகையைக் கொடுத்துவிட்டு, அவர்களின் மகள்களைக் கடத்திச் சென்று விற்கும் தொழில் செழிப்பாக நடைபெறுகிறது. பெண்களை, குழந்தைகளைக்  கடத்துவது அருவருப்பான லாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளது. இது பற்றி எப்போதாவது  வெளியிடப்படும் செய்திகள், பின்னர் அவை வழக்கமான செய்திகளாக மறைந்துவிடுகின்றன. பீகார் மட்டும் அல்ல. வடகிழக்கு மாநிலங்களிலும் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற வறுமையான மாநிலங்களிலும் பெண்களுக்கு இதுபோன்ற நிலைதான். இங்கும் பெண் குழந்தைக் கடத்தல் திருமணச் சந்தைகளுக்கும் முக்கியமாக, வணிக ரீதியான பாலியல் சுரண்டலுக்கும் தீனி போடுகிறது.  பேரழிவை உண்டாக்கும் இந்த யதார்த்தத்தை புறந்தள்ளிவிட்டு, பெண்களின் கண்ணியத்தைப் பற்றிப் பேசுவது அப்பட்டமான பாசாங்கு என்பதைத் தவிர வேறில்லை.

மீனா திவாரி

12 February, 2026