செப்டம்பர் 25 அன்று ஜந்தர் மந்தரில் அமைதியான மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்திய தேர்தல் அமைப்பின் அரசமைப்புச்சட்ட அடித்தளமான, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் உள்ள கடுமையான முறைகேடுகளை அம்பலப்படுத்திய, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் அதிரடியான புலனாய்வு அறிக்கைதான் இந்தப் போராட்ட அழைப்பிற்கான பின்னணி. தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் தில்லி, தற்போது அதிர்ச்சியளிக்கும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையையும் எதிர்கொண்டு வருகிறது. தில்லியில் உள்ள ஒவ்வொரு இரண்டு பேரில் ஒருவர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் அல்லது ‘தர்க்கரீதியான குறைபாடு’ என்ற குற்றச்சாட்டுகளைத் தீர்க்க உரிய ஆதாரங்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
இச்சூழலில், ஜந்தர் மந்தரில் மக்கள் போராட்டத்திற்கான அழைப்பு மிகவும் இயல்பானதே. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தில்லி காவல்துறை வேறுவிதமாக எண்ணியது. ஜந்தர் மந்தருக்குச் செல்லும் ஒவ்வொரு சாலையையும் தெருக்களையும் காவல்துறை தடுப்புகளை அமைத்து தடுத்தது. முழுப் பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டது. ஆர்.ஏ.எஃப் (அதிரடிப்படை), பி.எஸ்.எஃப் (எல்லைக் காவல் படை), ஐ.டி.பி.பி (இந்தோ திபேத்தியன் எல்லைக் காவல்படை) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டு, பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். அவர்களுள் பலரிடம் பேட்ஜ்களோ, பெயர்ப் பட்டைகளோ இல்லை. போராட்டக்காரர்களை ஜந்தர் மந்தருக்குள் நுழைய விடாமல் தடுத்ததோடு காவல்துறை நின்றுவிடவில்லை; ஜந்தர் மந்தர் அருகே இருந்த போராட்டக்காரர்களைப் பிடித்து, இழுத்துச் சென்று பேருந்துகளில் அடைத்து, தில்லி எல்லையோர காவல் நிலையங்களுக்குக் கொண்டு சென்று பல மணிநேரம் சிறைவைத்தனர்.
இவ்வாறு தில்லியின் நன்கறியப்பட்ட போராட்டக் களம் காவல் முகாமாக மாற்றப்பட்டு வருகிறது; அத்துடன் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் அடிப்படை அரசமைப்புச் சட்ட உரிமை பலவந்தமாக மறுக்கப்படுகிறது. உண்மையில், பாசிசம் என்பது மக்களைக் கட்டுப்படுத்துவதும், ஒரு கடும் ஒடுக்குதலுக்கு ஆளான ஒரு சமூகத்தை உருவாக்குவதுமாகும். முழுமையான கட்டுப்பாடுகளும், அடக்குமுறைகளும் கொண்ட ஆட்சியைச் செயல்படுத்த, மோடி-ஷா அரசு, இந்தியாவை ஒரு அச்சம் நிறைந்த குடியரசாக, விலங்கிடப்பட்ட ஒரு குடியரசாக திட்டமிட்டு மாற்றி வருகிறது. “அச்சமற்ற மனதையும், நிமிர்ந்த தலையையும்” கொண்ட ஒரு சுதந்திரக் குடியரசைத் தாகூர் கற்பனை செய்திருந்தார்; ஆனால் பயங்கரவாத பாசிச ஆட்சியின் ஆதரவாளர்களுக்கோ அது முற்றிலும் வெறுக்கத்தக்கதாகும்.
மக்கள் போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் என்ற எண்ணத்திற்கே இந்த அரசாங்கம் எதிராக உள்ளது. மக்களின் போராட்டங்களையும், ஒரு சுதந்திர குடிமகன் தனது அறிவையும் மனசாட்சியையும் பயன்படுத்தி எப்போதும் விழிப்புடன் இருந்து தனது சுதந்திரத்தைப் பாதுகாக்கும் எண்ணத்தையும் கேலி செய்யும் வகையில் ‘ஆந்தோலன்ஜீவி’, ‘திமாகி நக்சல்’ போன்ற முத்திரைகளை குத்துகிறது. காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற நீண்ட நெடிய போராட்டத்தை நடத்த வேண்டியிருந்த ஒரு நாட்டில், ‘ஆசாதி’ (சுதந்திரம்) என்ற முழக்கத்தைப் பயன்படுத்துவதையே இந்தப் பாசிச ஆட்சி குற்றமயமாக்குகிறது; குடிமக்கள் அடிமைகளாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், அடிமைத்தனத்தைக் கொண்டாட வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது போலும்.
விவாதங்கள் மற்றும் மாற்றுக் கருத்துகளுக்கான வெளி, திட்டமிட்டுச் சுருக்கப்பட்டு வருகிறது. ‘ஒதுக்கப்பட்ட போராட்ட இடங்களிலும்’, வீதிகளிலும், மட்டுமல்ல, பல்கலைக்கழக வளாகங்களிலும், ஊடகங்களிலும் மட்டுமல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டங்களை இயற்ற வேண்டிய, ஜனநாயக ஆட்சி முறை காத்திட, மக்கள் நலன் சார் கொள்கைகள் வகுத்திட வேண்டிய சட்டமன்ற, நாடாளுமன்ற அரங்குகளிலும் கூட, விவாதங்கள் மற்றும் மாற்றுக் கருத்துகளுக்கான வெளி திட்டமிட்டுச் சுருக்கப்பட்டு வருகிறது. பாரபட்சமான குடியுரிமைச் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக அமைதியான போராட்டங்களை ஒருங்கிணைத்ததற்காகவோ அல்லது தொழிலாளர்களுக்கான சட்டபூர்வமான குறைந்தபட்ச ஊதியத்தைக் கோரியதற்காகவோ சமூகச் செயற்பாட்டாளர்கள் பல மாதங்களாகவும் ஆண்டுக் கணக்கிலும் சிறையில் வாடுகின்றனர்.
இப்போது, போராட்டங்களை ஒடுக்கிட, அரச அடக்குமுறைக் கருவிகளை மட்டுமே சார்ந்திருக்கவில்லை இந்த அரசு; சட்டவிரோத வன்முறைக் கும்பல்களின் வன்முறை வெறியாட்டத்தை பயன்படுத்துவது போன்ற பல்வேறு வகையான சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. தில்லியில் சிஏஏ (குடியுரிமை திருத்தச் சட்டம்) எதிர்ப்புப் போராட்டங்களை ஒடுக்க, போலீஸ் அடக்குமுறையையும், மதவெறிவாத வன்முறையையும் சேர்த்தே இந்த அரசு எப்படி கட்டவிழ்த்து விட்டது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். மிகச் சமீபத்தில், நொய்டாவில் தொழிலாளர்களின் போராட்டங்களும் கூட வன்முறையைத் தூண்டி, நசுக்கப்பட்டன.
ஆனால் இதே பாணியிலான திட்டம், நமது காலத்தில் நிகழ்ந்த மற்ற இரு சக்திவாய்ந்த போராட்டங்களில் பலிக்கவில்லை – ஒன்று, தில்லி எல்லையில் கூடாரங்கள் அமைத்து ஓராண்டு காலம் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டம்; மற்றொன்று, ஜந்தர் மந்தரில் நிகழ்ந்த இளைஞர்களின் எழுச்சி (ஐந்து வார கால உள்ளிருப்புப் போராட்டம், இருபத்து மூன்று நாள் உண்ணாவிரதம், மற்றும் பல்லாயிரக்கணக்கான அமைதியான, நிராயுதபாணியான இளைஞர்கள் மற்றும் பெண்கள் நடத்திய நாடாளுமன்றம் நோக்கிய பேரணி அரசாங்கத்தை மண்டியிட வைத்தது).
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடந்த ஜந்தர் மந்தர் போராட்டங்களின் செய்தி, நாடு முழுவதும் எதிரொலித்து வருகிறது; பலதரப்பட்ட மக்கள் தங்களின் எதிர்ப்புக் குரலை எழுப்புவதற்கு உத்வேகம் பெற்றுள்ளனர். பல ஆண்டுகளாக புறக்கணிப்புக்கு உள்ளான அரசுப் பள்ளிகளில், செயலூக்கமான ஒரு கல்வி முறை வேண்டும் என்று வலியுறுத்துவதன் மூலம், வருங்காலத்தின் கேள்வி கேட்கும் குடிமக்களாக ஜென் ஆல்பா மாணவர்கள் உத்வேகமூட்டும் முன்மாதிரிகளாக உருவாகி வருகின்றனர்.
கடந்த எண்பதாண்டு கால இந்திய ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அதே தேர்தல் முறையை, மோசடியாக கைப்பற்றுவதன் மூலம், மக்கள் போராட்டங்கள், கேள்வி கேட்கும் குடிமக்களிடமிருந்து தன்னை நிரந்தரமாகப் பாதுகாத்துக் கொள்ள, ஆட்டம் கண்டுள்ள மத்திய அரசு இப்போது முயற்சிக்கிறது. தேர்தல் ஆணையத்தைத் தேர்ந்தெடுப்பதில் ஆளும் அரசாங்கத்திற்கு முழுச் சுதந்திரத்தை வழங்கியதோடு, தேர்தல் ஆணையர்களுக்கு வாழ்நாள் முழுவதுமான சட்ட விலக்கு அளித்த 2023 ஆம் ஆண்டின் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்திலிருந்துதான் இந்தச் சீரழிவு தொடங்கியது.
அதைத் தொடர்ந்து எஸ்.ஐ.ஆர் வந்தது; முறைகேடுகளுக்கான ஆதாரங்கள் பெருகிய போதிலும் உச்ச நீதிமன்றம் தலையிட மறுத்தது. இந்தச் சீரழிவைத் தேர்தல் ஆணையம் தொடர அனுமதித்தது. இப்போது நாம், நடுநிலைமை, வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்றல் ஆகியவற்றின் சாயல் துளி கூட இல்லாத, இயல்பாகவே முறைகேடாகச் செயல்படக்கூடிய ஒரு தேர்தல் ஆணையத்தை, எண்ணற்றோரின் வாக்குரிமை பறிப்பை, பல அடுக்குகளிலான தேர்தல் மோசடிகளை கொண்ட ஒரு அதிர்ச்சியான யதார்த்தத்தை எதிர்கொண்டுள்ளோம்.
வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை மற்றும் சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்ற வாக்குறுதியே இப்போது பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது. அரசாங்கமே தனது வாக்காளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும், மக்களின் கோபத்தை அலட்சியப்படுத்திடவும், தேர்தலில் தோற்றுவிடுவோம் என்கிற அச்சம் எதுவுமின்றி, பாதுகாப்பாக, அதிகாரத்தில் அமர்ந்திருக்க அரசுகள் அனுமதிக்கப்பட்டால், ஜனநாயகம் அதன் முழு அர்த்தத்தையும் இழந்துவிடும்.
இப்படி முழுமுற்றாக வலுப்பெற்றுள்ள பாசிசம் என்ற பூதத்தை வீழ்த்த இந்தியா எவ்வாறு தனது எதிர்ப்புக் குரலை எழுப்பப் போகிறது? இந்தக் கேள்வி, காலனித்துவ இந்தியாவில் நமது முன்னோர்கள் எதிர்கொண்ட சவாலுக்கு ஒப்பானதாகும். அவர்கள் அந்தச் சூழலுக்கு எதிராக வீறுகொண்டு எழுந்து அந்தச் சவாலை முறியடித்ததைப் போலவே, இன்றைய இந்தியாவின் மக்களாகிய நாமும் முன்னோக்கிச் செல்வதற்கான வழியைக் கண்டறிய வேண்டும்.
அபரிமிதமான துணிவு, மக்களின் உறுதி, ஒற்றுமை ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்படும் இன்னும் பல போராட்டங்கள் வளர்ந்து தழைக்கட்டும். ஆயிரம் ஜந்தர் மந்தர்கள் தோன்றட்டும்.
