ஊராட்சிகளை போராட்ட மய்யங்களாக ஆக்குவோம்; கிராமப்புர தொழிலாளரை அரசியல் சக்தியாக மாற்றுவோம்!

$articleData->title

தூய்மைப் பணியாளர் போராட்டம்

“மாற்றம்” எனும் முழக்கத்தோடு ஆட்சியைப் பிடித்த தவெக, கிராமப்புர சமுதாயத்தை புறக்கணிக்கும் பெரும் ‘ஏமாற்றத்தோடு’ அதன் முதல் நிதிநிலை அறிக்கையை தந்துள்ளது. 

தமிழ்நாடு மிக வேகமாக நகர்மயமாகி வரும் மாநிலம். ஆனால் 3.72 கோடி பேர் கிராமப்புர சமூக மக்கள். இந்த 51.55 % மக்களை புறக்கணிப்பதாகவே ஆட்சி வழிப்பாதை உள்ளது. ஆட்சி தொடங்கியது முதலே போராடத் தொடங்கிய விவசாயிகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். விவசாய நிதிநிலை அறிக்கை என்னும் திமுக ஆட்சி போட்ட பாதையில் தொடர்ந்து செல்லும் தவெக திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ரூ 32,264 கோடி குறைவாக ஒதுக்கியுள்ளது. விவசாயத்தையும் விவசாய சமூகத்தையும் எந்த அளவு இந்த ஆட்சி புறக்கணிக்கிறது என்பதற்கு இது தெள்ளத் தெளிவான எடுத்துக் காட்டு.

கடுமையான வேலை இன்மையும் கொடுமையான கடன் சங்கிலியும் பிடித்தாட்டும் கிராமப்புர தொழிலாளர் பற்றி இன்னும் மோசமான புறக்கணிப்பைக் காட்டுகிறது தவெக ஆட்சி. வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டங்களோ, கடன் வலையிலிருந்து ஏழைகளை மீட்கும் திட்டங்களோ எதுவும் இல்லை. ஒன்றிய மோடி அரசு 125 நாள் கிராமப்புர வேலை தருவதாகக் கூறி ஒருபுறம் கிராமப்புர வறியவர்களை வஞ்சிக்கிறது. மறுபுறம் மாநில அரசுகள் மீது 40 விழுக்காடு நிதிச் சுமையை ஏற்றி தள்ளாட வைக்கிறது. இதைப்பற்றி கேள்வி எழுப்ப மறுக்கும் நிதிநிலை அறிக்கை, “வரலாறு காணாத வகையில்”, தனது சொந்த நிதியாக 5000 கோடி ஒதுக்கியுள்ளதாக பெருமை பேசிக் கொள்கிறது. கூடுதல் வேடிக்கை என்னவென்றால், மேலும் 25 நாட்கள் வேலை வழங்க ரூ. 100 கோடி ஒதுக்கி தன் முதுகில் தானே தட்டிக் கொள்கிறது. மிக முக்கியமான ரகசியம் 125 நாட்கள் வேலை செய்தவர்களுக்குதான் இந்த கூடுதல் 25 நாள் வேலை வழங்கப்படுமாம். மோடி ஆட்சியில் 125 நாள் வேலை வழங்கப்போவதில்லை. எனவே தவெக ஆட்சிக்கு கூடுதலாக 25 நாள்கள் வேலை வழங்கும் அவசியம் ஏற்படப் போவதில்லை. இந்த ஆட்சி கிராமப்புர வறியவர்களை எவ்வாறு குரூரமாக ஏமாற்றுகிறது என்பதற்கு இது ஆணித்தரமான எடுத்துக் காட்டு.

அறுபது ஆண்டு திராவிட ஆட்சிகள் கிராமப்புர பெரும் பணக்காரர்களை (குலாக்குகள்) மய்யமாகக் கொண்டு செயல்படுத்திய தவறான பொருளாதாரக் கொள்கைகள் தீராத விவசாய நெருக்கடியை விளைவித்தது. அதை ஏழை சிறு, குறு விவசாயிகளும் விவசாயத் தொழிலாளரும்தான் அறுவடை செய்தனர். ‘90 களில் தொடங்கப்பட்ட தவறான நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் பலவகையிலும் விவசாயத்தை முற்றிலும் அழித்து வருகின்றன. அழிவுகரமான இந்தப் பாதையை ஒரு நிதிநிலை அறிக்கையிலோ அல்லது ஒரு அய்ந்தாண்டிலோ தலைகீழாக மாற்றிவிட முடியாதுதான். ஆனால், மாற்றுவதற்கான விருப்பமோ, உறுதியோ தெரியவேண்டும். அது கிஞ்சித்தும்  நிதிநிலை அறிக்கையில் தெரியவில்லை. மாறாக திராவிடக் கட்சிகளைவிடவும் மிக வேகமாக, வெகு தீவிரமாக இந்த தவறான பொருளாதாரப் பாதையில் இந்த ஆட்சி செல்லத் துணிந்து விட்டது. விவசாய பொருளாதாரத்தையும் கிராமப்புர விவசாய சமூகத்தையும் ஏகாதிபத்திய-கார்ப்பரேட் கூட்டங்களின் வேட்டைக் காடாக்கும் ஒன்றிய அரசின் கொள்கைளைத் தடுத்து நிறுத்தி விவசாயிகளை பாதுகாக்க வேண்டியது மாநில ஆட்சியின் கடமைப் பொறுப்பு. பல பத்தாண்டுகளாக ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பு நெருக்கடியால் உருவான பெரும் துயரத்தை அதே வழியில் தீர்க்க முடியாது. நிலச் சீர்திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாய சீர்திருத்தம், விலை வீழ்ச்சியிலிருந்து பாதுகாப்பு, லாபகரமான வருமானம், வேலை வாய்ப்பு, வாழ்வாதார பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்த வேண்டும். இதுவே மாற்றுப்பாதை. மாற்றத்துக்கான வழி. சுதந்திரத்துக்குப் பிறகு வந்த காங்கிரஸ் ஆட்சி உட்பட கடந்த ஆட்சிகள் செய்யத் தவறியதை செய்யத் துணிவதே இப்போதைய தேவை. அப்படி ஒரு பொறுப்பு, துணிச்சல் இந்த அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. 

தமிழ்நாட்டின் நீண்ட சமூகப் பொருளாதார விழுமியங்களில் வேர் கொள்ளாத தவெக, பெரும்பாலான சமூக மக்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் புரிந்துகொள்ள முடியவில்லை. அல்லது புரிந்துகொள்ள விரும்பவில்லை. அதிகாரப் பசி, ஆட்சிக்கான போட்டி என்பது பிரதானமாக இருந்தாலும் விவசாயிகள், தொழிலாளர், மாணவர், பெண்கள் என வெகுமக்கள் இயக்கங்களையும் போராட்டங்களையும் திராவிட ஆட்சிகள் எதிர்கொண்டன. ஒருபக்கம் ஆளும் வர்க்கங்களின் அன்பை பெறுவதிலும் மறுபக்கம் ஏழை பாழைகளின் வாக்குகளைப் பெறுவதிலும் காட்டிய திறமையே ‘தொழில் வளர்ச்சியும் நலத்திட்ட அரசியலும்’. அவ்வப்போது வறியவர் நலனை எதிரொலிப்பதைப் போல காட்டிக் கொண்டனர்.

தவெகவுக்கென்று குறிப்பிட்ட வர்க்க, சமூக அடையாளம் ஏற்படாத நிலையில் அதை சரிக்கட்டும் திசையில் தான் தவெக தூய்மைப் பணியாளர் பிரச்சனையில் தன்னை நிரூபித்துக் கொள்ள பெரிதும் பாடுபடுகிறது. ஆனாலும் அது நங்கூரமிட்டிருப்பது ‘அண்ணன் சீர்’, ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ (கொள்கைத் தலைவர் பெரியார் ஆசிர்வதிக்கட்டும்) போன்ற பின்னோக்கிய நலத்திட்டங்கள் மீதே.

கிராமப்புர உண்மை நிலையைப் புரிந்து கொண்ட தவெக, தனது நகர்ப்புர நங்கூரத்துக்கு இணையாக கிராமப்புரங்களிலும் காலூன்ற முயற்சிக்கிறது. ஆனால் அங்கும் கூட அதிமுகவிலிருந்து ஆட்களை உருவும் வேலைக்கு கூடுதலாக, வேறுபல கட்சிகளிலிருந்தும் உருவி உருவம் கொள்ள முயலுகிறது. முக்கிய கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள் எளிதில் ஆதாயம் தேடும் லும்பன்சக்திகள் தவெக நோக்கி திரும்புகின்றன. தவெகவும் அவர்களுக்கு கை கொடுக்கிறது. கோட்டை‌ அதிகாரம் மட்டும் போதாது. குக்கிராம அதிகாரமும் தேவைப்படுகிறது. தவெகவின் எதிர்காலம் பெரிதும் இதைத்தான் நம்பியிருக்கிறது. 

எனவே, கிராமங்களில் புதிய சூழலை எதிர்கொள்ளும் “மாற்றத்துக்கான” சக்திகள், குக்கிராமங்களில் ஏழைகளுடன், பலவகை தொழிலாளருடன் வலுவாக கரம் கோர்க்க வேண்டும்; வலுப்பெற வேண்டும்.

நீடித்த, உறுதிமிக்க, சலிக்காத, ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் தூய்மைப் பணியாளர் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பேசுபொருளாகி உள்ளனர். அரசியல் அரங்கில் கால்பதித்துள்ளனர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட விவசாய கிராமப்புர தொழிலாளரும் அரசியலில் கால்பதிக்க முடியும். பாஜக, தவெக ஆட்சிகளை நோக்கி சக்தியை திரட்டிட வேண்டும். அதற்கு ஊராட்சிகளை ஏழைகள் அணிதிரளும் போராட்ட மய்யங்களாக மாற்ற வேண்டும். எதிர்வரும் அவிகிதொச மாநில மாநாடு இதற்கான ஒத்திகையின் துவக்கமாக இருக்க வேண்டும்.

13 October, 2026