மேற்கு வங்கம், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களின் நாடகத்தனமான முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் கடந்துவிட்டது. எஸ்ஐஆர் மூலம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தனது வெற்றியை, அச்சத்தின் வெற்றி அல்ல, அது நம்பிக்கையின் வெற்றி என பாஜக முன்னிறுத்திய போதிலும், தேர்தலுக்குப் பிந்தைய மிகப்பெரிய வன்முறையையும் சூறையாடல்களையும் மேற்கு வங்கம் இந்த ஒரு வார காலத்தில் சந்தித்துள்ளது. சாதாரண இஸ்லாமியர்களின் உயிர்களும் வாழ்வாதாரமும் எதிர்க்கட்சி அலுவலகங்களும் செயல்பாட்டாளர்களும் லெனினின் சிலைகளும் மட்டுமல்லாமல் வங்கத்தின் இஸ்லாமிய பாரம்பரிய அடையாளங்களான சித்து-கானு ஆகியோரின் சிலைகள், நிலப்பிரபுத்துவ-காலனித்துவ எதிர்ப்பு போராளிகளின் நினைவிடங்கள், காவிமயமாக்கப்படும் அபாயத்திற்கு உள்ளாகியுள்ள வங்கத்தின் மாபெரும் சிந்தனையாளர்களின் உருவப்படங்கள் ஆகியவை பயங்கரத்தின் இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. இந்த வெற்றிச் செருக்கின் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் அடிப்படையிலான தேர்தல்களை மேற்பார்வையிட்ட அதிகாரிகளுக்கு கைமாறாக வெகுமதி அளிக்கும் வகையில், மாநில நிர்வாகம் அப்பட்டமாக மறுசீரமைக்கப்படுவதையும் நாம் காண்கிறோம். தேர்தல் சிறப்புப் பார்வையாளர் சுப்ரதா குப்தா இப்போது புதிய முதலமைச்சரின் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்; அத்துடன் தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் புதிய தலைமைச் செயலாளராகியுள்ளார்.
வன்முறையின் பொதுவான வகைமாதிரியிலிருந்தும் திசையிலிருந்தும் மர்மமான விதிவிலக்காக சந்திரநாத் ரத்தின் கொலை அமைந்திருந்தது. அவர் இந்திய விமானப்படையின் முன்னாள் தொழில்நுட்ப பணியாளர். கடந்த ஆறு ஆண்டுகளாக சுவேந்து அதிகாரியின் நிர்வாக உதவியாளராகப் பணியாற்றி வந்தார். மே 6 ஆம் தேதி நடந்த சந்திரநாத் ரத்தின் கொலை, கடந்த காலத்தில் சுவேந்து அதிகாரிக்காகப் பணியாற்றிய மூன்று பேரின் - 2013 இல் பிரதீப் ஜா, 2018 இல் சுபப்ரதா சக்ரவர்த்தி, 2021 இல் புலாக் லஹிரி - மர்ம மரணங்கள் குறித்த நினைவுகளை மீண்டும் கிளறியுள்ளது. இந்தத் தொடர் மரணங்கள் அனைத்தும் இன்னும் மர்மமாகவே நீடிக்கின்றன. இப்போது சுவேந்து அதிகாரி மேற்கு வங்க முதல் பாஜக அரசின் முதலமைச்சராகிவிட்ட நிலையில், இந்த ஒட்டுமொத்த தொடர் நிகழ்வுகள் குறித்து நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
2016 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, சுவேந்து அதிகாரி லஞ்சம் வாங்குவதை அம்பலப்படுத்திய ரகசிய நடவடிக்கையின் காணொளி (ஸ்டிங் ஆபரேஷன்) பரவலானபோது, அவர் தேசிய அளவில் கவனம் பெற்றார். பிரதமர் மோடி, அப்போதைய பாஜக தலைவர் அமித் ஷா இருவருமே திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிரான பரப்புரைக்கு இந்த காணொளியைப் பயன்படுத்தினர். ஆனால், பாஜகவில் இணைவதற்கு முன்பு அக்கட்சியினரால் ஊழலின் உருவகமாகக் குறிவைக்கப்பட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, சுவேந்து அதிகாரியும் 2020-ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். தற்போது அசாமில் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பீகாரில் சாம்ராட் சவுத்ரி, மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி என, முறையே காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் தங்களது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, தங்கள் மீது கடுமையான ஊழல், கிரிமினல் குற்ற புகார்களைக் கொண்டிருந்த இந்த மூன்று அரசியல்வாதிகளுக்கும் பாஜக அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்களாக மறுவாழ்வு அளித்துள்ளது. மேலும், இவர்கள் அனைவரும் யோகி பாணியிலான புல்டோசர் ஆட்சியின், வெறுப்பைக் கக்கும் சின்னங்களாக உருவெடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில், அதிக இடங்களை பெற்ற தனிப்பெரும் கட்சி அல்லது தேர்தலுக்கு முந்தைய கூட்டணியின் தலைவரை ஆட்சியமைக்க அழைக்கும் அரசியலமைப்பு மரபிலிருந்து விலகிய ஆளுநர், தவெக தனது பெரும்பான்மை ஆதரவிற்கான எழுத்துப்பூர்வமான ஆதாரத்தை அளிக்கும் வரை காத்திருந்தார். காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஐ(எம்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன், தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இறுதியாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இந்தியக் குடியரசின் கூட்டாட்சிக் கட்டமைப்பை நிலைநிறுத்தும் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக சக்தியாக தவெக தன்னை முன்னிறுத்திக் கொள்வதை ஆரம்பகால அறிகுறிகள் உணர்த்துகின்றன. அந்த வகையில், தென்னிந்தியாவில் பாஜகவின் தேர்தல் ரீதியான முன்னேற்றத்தைத் தமிழ்நாடும் கேரளமும் தொடர்ந்து நிராகரித்தும் தடுத்தும் நிற்கின்றன என்று நாம் கூறலாம்.
மே 4 தேர்தல் முடிவுகளின் அரசியல் விளைவுகளுக்கு அக்கம்பக்கமாக, மோடி அரசாங்கத்தால் திணிக்கப்பட்டுள்ள அறிவிக்கப்படாத பொருளாதார அவசரநிலையையும் இப்போது நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயுவின் மிகப்பெரிய விலை உயர்விலும் அது ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் சங்கிலித்தொடர் விளைவுகளிலும் தொடங்கி, பிரதமரின் முழுமையான புதிய சிக்கன அறிவுரைகளின் தொகுப்பை நாம் இப்போது எதிர்கொள்கிறோம். குறைந்தது ஐம்பது வாகனங்கள் கொண்ட அணிவகுப்பில் பயணிக்கும் பிரதமர், 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு விமானத்தில் பறக்கும் பிரதமர், மக்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும், குறைந்த அளவு பெட்ரோலையும் அதைவிடக் குறைந்த அளவு சமையல் எண்ணெயையும் பயன்படுத்த வேண்டும், மேலும் அடுத்த ஓராண்டுக்கு வெளிநாட்டுப் பயணம் எதையும் மேற்கொள்ளக்கூடாது என்று விரும்புகிறார். அரசாங்கத்தின் வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கைத் தோல்விகளால் - குறிப்பாக, நாட்டின் வெளியுறவுக் கொள்கையையும் வர்த்தக நலன்களையும் அமெரிக்க-இஸ்ரேல் அச்சுக்கு அடமானம் வைத்ததால் - இந்தப் பொருளாதார நெருக்கடி மேலும் ஆழமடைந்துள்ளது. இப்போது அரசாங்கம் இந்த நெருக்கடியின் சுமையை சாதாரண மக்கள் மீது சுமத்தும் வேலையில் மும்முரமாக உள்ளது. அறிவிக்கப்படாத பொருளாதார முடக்கமும் அப்பட்டமான ஜனநாயக சீர்குலைவும் மக்களின் தேர்தல் உரிமைகளை மறுக்கும் போக்கும் ஒன்றிணைந்து பாசிச அச்சுறுத்தலின் புதிய மட்டத்தை குறிக்கின்றன. இடதுசாரி, முற்போக்கு, பாசிச எதிர்ப்பு சக்திகள், இந்தத் தீவிரமான தாக்குதலை புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடனும் உறுதியுடனும் ஒற்றுமையுடனும் எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்.
தமிழாக்கம்: விஜி
