இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றியபோது பிறந்த தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்களை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவில் இழந்துள்ளோம்.
தோழர் ஆர்.நல்லகண்ணு, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக, ஒடுக்குமுறைகள் சிறைவாசத்திற்கு அஞ்சாமல், இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் பொதுவுடைமை இயக்கப் போராளியாக செயல்பட்டார். தலைமறைவு வாழ்க்கையில் துவங்கி, சதி வழக்குகள், சிறைவாசங்கள் எதிர்கொண்டு, தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வலுவாக கட்டியமைத்தவர். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் போராட்டங்கள் துவங்கி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, மணல், கனிமக் கொள்ளைகளுக்கு எதிரானப் போராட்டங்கள் வரை துணிச்சலாக செயல்பட்டவர். தென் மாவட்டங்களில் வெடித்த சாதிய மோதல்களில், அவரது குடும்பம் நேரடியாக பாதிக்கப்பட்ட போதும், ஒரு கம்யூனிஸ்ட் தலைவராக சாதி கடந்து நின்றவர்.
ஆர்என்கே என சிபிஐ கட்சி வட்டாரத்தில் அன்புடன் அழைக்கப்பட்ட தோழர்.ஆர். நல்லகண்ணு அவர்கள் இடதுசாரி இயக்கத்திற்குள்ளும் பொது சமூகத்திலும் மதிப்பிற்குரிய தலைவராகத் திகழ்ந்தவர்.
அப்பழுக்கற்ற, எளிமையான அரசியல் தலைவர், தகைசால் தமிழர், முதுபெரும் கம்யூனிஸ்ட் தோழர். ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு, சிபிஐ(எம்எல்) லிபரேசன் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் கமிட்டி செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.
இகக(மாலெ)விடுதலை
தமிழ்நாடு மாநிலக் குழு
