நமது அரசியல் நிலைப்பாடுகளை நிறுவ, பொதுவாக மார்க்சிய முன்னோடிகளின் மேற்கோள்களைத் துணைக்கழைப்பதைத் தவிர்ப்பது நல்லது. நமது நிலைப்பாடுகளுக்கான காரணங்களை, மேற்கோள்கள் இல்லாமல் சொல்லும் வலிமை வாய்ந்த புரிதலும், அவற்றை திறம்பட வெளிப்படுத்துதலும் நமக்கு தேவையாகும்.
எந்த விதிக்கும் விதிவிலக்கு உண்டு அல்லவா? இந்தத் தருணத்தில், நமக்கு உடனடியாக தோழர்கள் ஸ்டாலின், லெனின், மாவோ ஆகியோர் சுட்டிக்காட்டிய சில விசயங்கள் கவனத்திற்கு வருகின்றன. ஸ்டாலின் என்றால் இறுக்கம், கறார், கடுமை என இடது சாரி தோழர்களும், அவர் ஒரு கொடிய சர்வாதிகாரி என வலது சாரி பிற்போக்களார்களும் சொல்வார்கள். தோழர் ஸ்டாலின் காலத்தில் தான், சோசலிச சோவியத் ஒன்றியம் இலக்கியங்களில் திளைத்தது என்ற விவரம் உரிய கவனத்தைப் பெறவே இல்லை. ஒரு நாடு இலக்கியங்களில் திளைக்கிறது என்றால், அங்கே கலாச்சார மட்டமும், அறிவார்ந்த புரிதலும் உயர்ந்து இருந்தன எனக் கருத முடியும் தானே!. தோழர் ஸ்டாலினின் நகைச்சுவை உணர்வுக்கும், அமைப்பு பற்றிய கரிசனத்திற்கும் ஓர் உதாரணத்தைக் காண்போம்.
தோழர் ஸ்டாலின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, இரண்டாம் உலகப் போரில் பாசிசத்தை முறியடிப்பதற்கு முன்பு, 1937 ஆம் ஆண்டு கட்சியின் 17 ஆவது பேராயத்தில் அவர் பேசியதிலிருந்து சில பகுதிகளை கவனிப்போம்:
“நான் கூறுவது வாய்வீச்சு வீரர்களைப் பற்றியது. நேர்மையான வாய்வீச்சு வீரர்கள் என்று கூடச் சொல்லலாம். (சிரிப்பு, இவர்கள் சோவியத் அரசாங்கத்திற்கு நேர்மையாகவும், விசுவாசமாகவும் இருப்பவர்கள். ஆனால் நிர்வாகிகளாக இருக்கத் தகுதியற்றவர்கள். எதையும் முறைப்படுத்தி ஏற்பாடு செய்ய இலாயக்கற்றவர்கள். சென்ற ஆண்டு இதுபோன்ற ஒரு தோழருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் மிகவும் மதிப்பிற்குரிய தோழர். ஆனால் திருத்த முடியாத வாய்வீச்சுக்காரர். தமது பேச்சு வெள்ளத்தில், முக்கியமான எதையும் மூழ்கடிக்கக் கூடிய வாய்வீச்சு வீரர் அவர்”.
நாங்கள் பேசியது இதுதான்.
நான்:விதைப்பு எந்த அளவில் இருக்கிறது, தோழரே?
அவர்:விதைப்பா, தோழர் ஸ்டாலின்? நாங்கள் எங்களைத் திரட்டியிருக்கிறோம்.
(சிரிப்பு).
நான்:சரி! அதற்குப் பிறகு?
அவர்:நாங்கள் பிரச்சினையை நேர்மையாக முன்வைத்தோம். (சிரிப்பு)
நான்:பிறகு என்ன நடந்தது?
அவர்:ஒரு திருப்பம் ஏற்பட்டது, தோழர் ஸ்டாலின்! கூடிய விரைவில் ஒரு திருப்பம் இருக்கும்.
(சிரிப்பு)
நான்:இதுவரை என்ன நடந்தது?
அவர்:முன்னேற்றத்திற்கான அறிகுறி இருக்கிறது என்று எங்களால் கூற முடியும்.
(சிரிப்பு).
நான்:எல்லாம் சரி! விதைப்பு எந்த அளவில் இருக்கிறது?
அவர்:இதுவரை விதைப்பிற்கான எந்த ஏற்பாட்டையும் நாங்கள்
ஆரம்பிக்கவில்லை தோழர் ஸ்டாலின்
(பலத்த சிரிப்பு)
“இங்கே நீங்கள் வாய்வீச்சு வீரர்களின் அங்க இலட்சணத்தைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். அவர்கள் தங்களைத் திரட்டிக் கொண்டார்கள். பிரச்சினையை நேர்மையாக முன்வைத்தார்கள். ஒரு திருப்பத்தையும் சிறிது முன்னேற்றத்தையும் ஏற்படுத்தினார்கள். ஆனால் பிரச்சினை அப்படியேதான் இருக்கிறது”.
“அண்மையில், ஒரு உக்ரேனியத் தொழிலாளியிடம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, அதற்கு குறிக்கோள் ஏதேனும் உள்ளதா என்று கேட்டபோது, ‘அவர்களுக்குக் குறிக்கோள் இருக்கத்தான் செய்கிறது; ஆனால் அவர்கள் எந்த வேலையும் செய்வதாகத் தெரியவில்லை’ என்று அந்த அமைப்பின் நிலைமையை மிகச் சரியாகவே விவரித்தார்.
(சிரிப்பு)
இதிலிருந்து அந்த நிறுவனமும் தன் பங்கிற்கு நேர்மையான வாய்வீச்சுகாரர்களைக் கொண்டிருக்கிறது என நிரூபணமாகிறது”.
“இப்படிப்பட்ட வாய்வீச்சுக்காரர்களைப் பதவிகளிலிருந்து நீக்கி, நடைமுறை வேலைகளுக்குத் தொடர்பில்லாத பணிகளில் அவர்களைப் பொருத்தும் போது, அவர்கள் தங்களது தோள்களை வியப்புடன் குலுக்கிக் கொண்டு, எங்களை ஏன் நீக்க வேண்டும்? வேலை நடப்பதற்கு அவசியமான அனைத்தையும் நாங்கள் செய்யவில்லையா? கடும் உழைப்பை தன்னார்வத்துடன் மேற்கொள்ளும் தொழிலாளிகளின் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யவில்லையா? அந்த தொழிலாளிகளின் மாநாட்டில் கட்சி மற்றும் அரசாங்கத்தின் முழக்கங்களை நாங்கள் முழங்கவில்லையா? மத்தியக் கமிட்டியின் அரசியல் தலைமைக் குழுவிலிருந்து கவுரவத் தலைமைக் குழு வரை அனைத்தையும் நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லையா?
(சிரிப்பு)
நாங்கள் தோழர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை அனுப்பவில்லையா? இன்னும் என்னதான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?”
(பலத்த சிரிப்பு).
“இந்த திருத்த முடியாத வாய்வீச்சு வீரர்களை என்ன செய்ய வேண்டும்? நடைமுறை வேலைகளில் இவர்களை நீடிக்க விட்டால், இவர்கள் தங்களது முடிவே இல்லாத பேச்சு வெள்ளத்தில் உயிருள்ள இலட்சியங்களை மூழ்கடித்து விடுவார்கள். சந்தேகத்துக்கிடமின்றி, தலைமைப் பொறுப்புகளிலிருந்து இவர்களை நீக்கி, நடைமுறைக்குத் தொடர்பில்லாத வேலைகளைக் கொடுக்க வேண்டும். நடைமுறை வேலைகளில் வாய்வீச்சு வீரர்களுக்கு இடமே இல்லை. (குரல்கள்: ஆமாம்! ஆமாம்! பலத்த கைதட்டல்)
21 ஆம் நூற்றாண்டு சோசலிசத்தை நிறுவ, இதே காலத்திற்கான கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவ, தமிழ்நாட்டில் சூரியனோடும், இலையோடும் மட்டுமல்லாமல் விசிலோடும், அரசியல் செல்வாக்குக்காக போட்டியிட்டு நமக்கான இடத்தைப் பெற வேண்டும். வெற்று வாய்வீச்சு நிச்சயம் உதவாது. தனித்தனி தோழர்களை வாய்வீச்சு வீரர்களாகக் காணாமல், செயலில் இருந்து பிரிந்த வெற்று வாய்வீச்சுக்கு முடிவு கட்டுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். தோழர் ஸ்டாலின் விளைச்சலைப் பற்றி அக்கறை கொண்டிருந்தார். நாமும், மக்கள் போராட்டங்கள் பற்றி, அவற்றை ஆழமாகவும், விரிவாகவும் முன் எடுப்பது பற்றி, கம்யூனிஸ்ட் கட்சியையும், அதன் மக்கள் திரள் அமைப்புக்களையும் கட்டி எழுப்புவது பற்றி செயலில் கவனம் செலுத்த வேண்டும். வாய் சொல் வீச்சு நம்மை ஓரடி கூட முன்னே செல்லவிடாமல், பின்னுக்கு இழுக்க மட்டுமே உதவும்.
டிரம்ப் சீனாவுக்குச் சென்று ஜீ பிங்கைச் சந்திக்க இருக்கின்ற நேரம், நமக்கு மாவோ நினைவுக்கு வருகிறார். குதிரை மேல் அமர்ந்து கொண்டே, செடியைப் பற்றி, அதன் இலை, பூ, காய், கனி பற்றி நாம் அறிய முடியாது; மாறாக குதிரையை விட்டு கீழே இறங்கி, செடிக்குப் பக்கத்தில் போய் செடியை ஆராய வேண்டும்; இலையை, பூவை, காயை, கனியை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். குதிரை மேல் அமர்ந்து கொண்டே, குதிரையை வேகமாக செலுத்திக் கொண்டே, வேலைகளை அணுகுவது நல்லதல்ல என்ற அளவில், நமக்கு மாவோ சொன்ன விசயங்கள் புரிதலை வழங்குகின்றன.
பொறுப்புள்ள விவசாயி, மண்ணைப் பதப்படுத்தி, விதை போட்டு, உரம் சேர்த்து, மருந்து அடித்து, நீர் பாய்ச்சி, கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டால் தான், நல்ல விளைச்சல் கிடைக்கும். பாட்டாளி துல்லியமாய் வேலை செய்தால்தான், உற்பத்திப் பொருளுக்கு சந்தை இருக்கும். ஒவ்வொரு நாளும் கவனித்து தரமான உற்பத்தி செய்ய வேண்டும்.
விவசாய தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், இதர பகுதி மக்கள் மத்தியிலான நமது வேலைகளை, கம்யூனிஸ்ட் கட்சி வேலைகளை, நாம் குதிரையிலிருந்து இறங்கி பார்த்து செய்ய வேண்டும். கண்ணும் கருத்துமாக, நாளும், பொழுதும் கவனித்து கட்சிப் பயிரை, இயக்கப்பயிரை வளர்க்க வேண்டும்.
தோழர் லெனின் என்ன செய்ய வேண்டும் நூலில், தொழில்முறை நேர்த்தியுடன் இயக்கப் பணி பார்ப்பது பற்றியும் கற்றுக்குட்டித்தனமாய் வேலை பார்ப்பது பற்றியும் எழுதி உள்ளார். அவர் கற்றுக்குட்டித்தனத்தை வேலைத்திறனோடு சுருக்கவில்லை. அவர், சிந்தனையில், செயல் பரப்பில் என அனைத்து தளங்களிலும் இருக்கிற குறுகிய தன்மையை, கற்றுக்குட்டித்தனம் என அடையாளப்படுத்துகிறார்.
"களைகளை எதிர்த்துப் போரிடுவது நம் பணி. பூந்தொட்டிகளில் தானியம் விளைவிப்பது நம் வேலை அல்ல. களை எடுப்பதால், நாம் தானியம் பயிர் இடுவதற்கு நிலத்தை பண்படுத்துகிறோம்."
"பூந்தொட்டிப் பயிர்களை சிலர் கவனித்துக் கொண்டிருக்கும் போது, நாம் அரிவாளை தயாரித்து வர வேண்டும் - இன்றைய களைகளை வெட்டி எறிவதற்கு மட்டும் அல்ல, நாளைய பயிர்களை அறுவடை செய்வதற்கும் கூட."
தோழர் லெனின் மேலே உள்ள விஷயங்களைக் குறிப்பிட்ட பின்னணி சற்று வேறுபட்டதாகும். ஆனால், பூந்தொட்டியில் பயிர் வைப்பதற்கும், வயலில் பயிர் வைப்பதற்கும் இடையிலான வேறுபாட்டையும் தோழர் லெனின் சுட்டிக் காட்டுகிறார். நல்லெண்ணம் கொண்ட இயக்கத் தோழர்கள் சிலர் நாம் பூந்தொட்டியில் பயிர் வைப்பது தான் விவசாயம் என நம்ப துவங்கி விடுகிறார்கள். மக்களுக்கான விவசாயத்திற்கு, நீண்ட அகன்ற விளை நிலங்கள் வேண்டும். நமது அரசியல் - அமைப்பு பணிகள், பூந்தொட்டி விவசாயமாக அமைய முடியாது.
வெற்றி நம்மைத் தேடி வராது.
நாம்தான் அதனைத் தேடி அடைய வேண்டும். நமது பிரகடனங்களும் தீர்மானங்களும் வெற்றிக்கான நமது விருப்பத்தை மட்டுமே உணர்த்துகின்றன. நமது அரசியல் வழியின் தேவைகளுக்கும், நமது அமைப்பு வேலைகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வை அகற்றுவதன் மூலமே, வெற்றி சாத்தியமாகும்.
அமைப்பு தொடர்பாக வேறு வேறு விஷயங்களைக் காணும் போது, கடைசியாக, கனவு காண்பது பற்றி தோழர் லெனின் குறிப்பிட்டதை சற்று பார்ப்போம்.
"நாம் கனவு காண வேண்டும்!" என்று எழுதினேன், எழுதிவிட்டு பயந்து போனேன். நான் ஓர் "ஒற்றுமை மாநாட்டில்" உட்கார்ந்திருப்பது போலவும் எதிரே ரபோச்சியே தேலோ ஆசிரியர்களும் கட்டுரையாளர்களும் உட்கார்ந்திருப்பது போலவும் கற்பனை செய்தேன். தோழர் மார்தீனவ் எழுந்து என் பக்கம் திரும்பி கடும் கண்டிப்புடன் "கட்சிக் கமிட்டிகளின் கருத்தை முதலில் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் சுயேச்சையுள்ள ஓர் ஆசிரியர் குழுவுக்குக் கனவு காண உரிமையுண்டா?" என்று சொல்கிறார். அவரைத் தொடர்ந்து தோழர் கிரிச்சேவ்ஸ்கி வருகிறார். (வெகு காலத்திற்கு முன்பே தோழர் பிளெஹானவை விட ஆழமாகப் பார்த்த தோழர் மார்தீனவை மெய்யறிவு விஷயத்தில் மிஞ்சி ஆழமாகப் பார்க்கும்) இவர் மேலும் கடுங்கண்டிப்புடன் "நான் இன்னும் மேலே போய் கேட்கிறேன்: மார்க்ஸின் கருத்துப்படி தன்னால் நிறைவேற்றக்கூடிய பணிகளைத்தான் எப்போதும் மனித குலம் எடுத்துக் கொள்கிறது என்பதை அறிந்திருந்தும், கட்சியோடு கூடவே வளர்கிற கட்சிப் பணிகளின் வளர்ச்சியைச் சேர்ந்த நிகழ்வுப்போக்குதான் போர்தந்திரம் என்பதையும் அறிந்திருந்தும் ஒரு மார்க்சியவாதிக்குக் கனவு காண உரிமையுண்டா?" என்கிறார்.
இந்தக் கடுங்கண்டிப்புள்ள கேள்விகளை நினைத்துப் பார்த்தாலே எனக்குப் பயமாய் இருக்கிறது. எங்காவது போய் ஒளிந்து கொள்ளலாம் போலிருக்கிறது. நான் பீசரெவிடம் தஞ்சம் புகலாம் என நினைக்கிறேன்.
கனவுகளுக்கும், எதார்த்தத்துக்குமுள்ள வேற்றுமை பற்றி பீசரெவ் எழுதியதாவது: "வேற்றுமைகளில் பலவகை உண்டு. நிகழ்ச்சிகளின் இயல்பான நடையைத் தாண்டி என் கண் முன் கனவு முன்னே ஓடக்கூடும், அல்லது நிகழ்ச்சிகளின் எந்த இயல்பான நடையும் என்றைக்கும் போகாத ஒரு திசையில் அது பாய்ந்தோடலாம். முதலில் சொன்ன வழக்கில், என் கனவு தீங்கெதுவும் செய்யாது. அது தொழிலாளியின் ஆற்றலை ஆதரித்து அதிகப்படுத்தவும் கூடும்.... உழைப்புச் சக்தியை உருக்குலைக்குவோ முடக்கவோ செய்கிற வகையில் இக்கனவுகளில் ஏதுமில்லை. மாறாக இவ்வடிவில் கனவு காணும் திறமை மனிதனிடமிருந்து முற்றாக பறிக்கப்பட்டால், தன் கைகள் உருவங்கொடுக்கத் தொடங்கியிருக்கும் பொருளைப் பற்றி மனிதன் அவ்வப்பொழுது முன்னே ஓடி ஒரு முழுமையான முடிவுற்ற சித்திரத்தை மனதில் உருவாக்கிக் கொள்ள முடியாமற்போனால், அவன் கலைத் துறையிலோ விஞ்ஞானத் துறையிலோ நடைமுறை செயல்துறையிலோ விரிவான, கடுமையான பணிகளை மேற்கொள்ளும்படி செய்யக்கூடிய தூண்டுகோல் வேறெது என்று என்னால் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை.... கனவு காண்பவர் காரியப்பற்றோடு தன் கனவை நம்பினால் போதும், வாழ்க்கையை அவர் உன்னிப்புடன் கவனித்துத் தன் ஆகாயக் கோட்டைகளுடன் தன் கூர்நோக்குகளை ஒப்பிட்டுப் பார்த்து, பொதுவாகவே தன் கற்பனைகளை யதார்த்தமாக்கிக் கொள்ள உண்மையாக உழைத்தால் போதும், கனவுக்கும் யதார்த்தத்திற்குமுள்ள வேற்றுமையினால் எந்தத் தீங்கும் விளையாது. கனவுக்கும் வாழ்க்கைக்கும் இடையே கொஞ்சம் தொடர்பிருந்தால் எல்லாம் சரி. துரதிஷ்டவசமாக, இப்படிக் கனவு காண்பது நம் இயக்கத்தில் அரிதாகவே உள்ளது."
நமது மாநிலத்தில், நமது நாட்டில், சர்வதேச அளவில், இடதுசாரி அரசியலுக்கு, இயக்கத்திற்கு, கட்சிக்கான தேவை உள்ளது. போட்டி அரசியல் களத்தில் நுழையவும், போட்டியிடவும், நாம் தயாராக வேண்டும். சிந்திக்கத் துணிவதும் போராடத் துணியவும் வெற்றி பெறத் துணியவும் இடதுசாரிகள் தயாராக வேண்டும்.
மங்கை
12.5.2026
