பீகார் மாநில சிபிஐ(எம்எல்) கட்சியின் 12-வது மாநில மாநாடு மே 15-17, 2026 தேதிகளில் நடைபெற்றது. அம் மாநாட்டில் பீகார் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) பெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதன் பின்னணியில், பீகாரைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் மே 16, 2026 ஒரே மேடையில் கூடியது முக்கியத்துவம் பெற்றது. தர்பங்காவின் லஹேரியாசராய் பகுதியில் உள்ள போலோ மைதானத்தில் 2026 மே 15 அன்று பேரணியுடன் தொடங்கியது.
“புல்டோசர் ராஜ்ஜியத்திற்கு எதிரான ஜனநாயகக் கேள்வி” என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றிய சிபிஐ(எம்எல்) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் , அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் சுதந்திரத்தை மீட்டெடுக்க நாட்டு மக்கள் புதியதொரு சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேற்கு வங்கத்தில் பாஜகவின் தேர்தல் வெற்றி ஒரு பெரிய கருத்தியல் வெற்றியும் கூட பாஜகவின் ஆட்சியால் வரையறுக்கப்படும் ஒரு புதிய யுகத்தில் மக்கள் வாழ்ந்து வருவதாகவும், இங்கு ‘நல்லாட்சிக்கு’ (சுசாசன்) பதிலாக புல்டோசர்களை கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவது பற்றி பகிரங்கமாக விவாதிக்கப்படுகிறது என்று கூறினார். மேற்கு ஆசியப் போரைக் குறிப்பிட்ட அவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளையும் பணிய வைக்க மக்கள் காட்டிய சக்தி ஈரானில் தெளிவாகத் தெரிந்தது என்றார். அதற்கு நேர்மாறாக, இந்திய அரசு பின்பற்றும் வெளியுறவுக் கொள்கை இந்திய நாட்டின் பிம்பத்தை உலக அரங்கில் கெடுத்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், “தேசபக்தி என்ற பெயரில் பிரதமர் மோடி மக்களுக்கு விடுக்கும் கோரிக்கைகள், தற்போதைய நெருக்கடியின் சுமையை திசைதிருப்புவதற்கான ஒரு தந்திரமே ஆகும்; இந்த நெருக்கடிக்கு மோடி அரசே முழு பொறுப்பு” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறப் போராடி வருகின்றனர். மாணவர்கள் நடத்திய இயக்கங்கள், குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான போராட்டங்கள் மற்றும் விவசாயிகள் இயக்கம் ஆகியவற்றை இந்த நாடு கண்டுள்ளது. ‘இந்தியா’ (INDIA) கூட்டணி இந்த இயக்கங்களின் மத்தியிலிருந்தே உருவானது. கூட்டுச் சக்திக்காக இந்த அனைத்து எதிர்ப்பு சக்திகளுடனும் நாம் நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும்.” என்றார்.
மாநாட்டின் பொது அமர்வில், சிபிஐ(எம்எல்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மாநாட்டிற்கான மத்தியக் குழுவின் பார்வையாளருமான தோழர் வீ.சங்கர், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) பீகார் மாநிலத் தலைவர் மங்கனி லால் மண்டல் சிபிஐ மாநிலச் செயலாளர் தோழர் ராம்நரேஷ் பாண்டே, காங்கிரஸ் மேலவை உறுப்பினர் (MLC) மதன் மோகன் ஜா விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) தலைவர் பால்கோவிந்த் பிந்த், காராகாட் தொகுதி சிபிஐ(எம்எல்) நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாராம் சிங் சிபிஐ(எம்எல்) கட்சியின் அரா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுதாமா பிரசாத் உள்ளிட்டோரும் உரையாற்றினர். மிதிலா மண்டலத்திற்கான சிபிஐ(எம்எல்) பொறுப்பாளர் தீரேந்திர ஜா பொது மாநாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
