வீட்டு வேலை செய்பவர்களுக்கான நலத்திட்டங்களை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை ஜனவரி 29, 2026 அன்று விசாரிக்கும் போது, தொழிற்சங்கங்கள் தொழில்துறை வளர்ச்சிக்கு தடையாக உள்ளன என்றும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிப்பது வேலைவாய்ப்பை பாதித்து வேலைக்கு ஆள் எடுப்பதை குறைத்து விடும் என்றும் இந்தியத் தலைமை நீதிபதி வாய்மொழியாகக் கூறியதாக வெளியான தகவல்கள் குறித்து ஏஐசிசிடியு தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கிறது.
இவ்வுரைகள் முற்றிலும் தேவையற்றவை; சமூக நீதிக்குப் புறம்பானவை; நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு ஊறு விளைவிப்பவை.
தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு தொழிற்சங்கங்களோ அல்லது தொழிலாளர்களின் போராட்டங்களோ காரணமல்ல என்பது அனைவரும் அறிந்ததே. முழுக்க முழுக்க தவறாக நிர்வகிப்பதும் வேண்டுமென்றே நிதியை மடைமாற்றுவதுமே காரணமாகும். மாறாக, தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரண்டுள்ள இடங்களில் சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுகின்றன என்றும் தொழிலாளர் பாதுகாப்புகளை உறுதிப்படுத்துவதில் தொழிற்சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் பல அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
தொழிலாளர்களை விளிம்பிற்கு தள்ளுவதற்கு தொழிலாளர் நீதிமன்றங்களின் செயல்பாடுகளே காரணமாக உள்ளது; வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ளன; நீதிபதிகளின் காலியிடங்கள் நிரப்பப்படுவதற்கும் ஆண்டுகள் ஆகின்றன. இத்தகைய சூழலில், தொழிலாளர்கள் நீதியை நாடுவதற்கான கடைசி புகலிடமாக அரசியல் சாசன நீதிமன்றங்கள், குறிப்பாக உச்சநீதிமன்றம் உள்ளது.
இந்நிலையில், தலைமை நீதிபதி போன்றோர் இவ்வாறு வாய்மொழிக் கருத்துகளை வெளியிடுவது, தொழிலாளர் விரோத மனப்பாங்கையும் முன் முடிவுகளோடு கொண்ட பாகுபாட்டையும் மட்டுமே வெளிப்படுத்துகிறது. இந்தக் கருத்துகள், தொழிலாளர் வர்க்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்களையும் தியாகங்களையும் சிறுமைப்படுத்தி அழித்துவிடுகின்றன.
எட்டு மணி நேர வேலை நாள், குறைந்தபட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு, அடிப்படை தொழிலாளர் பாதுகாப்புகள் ஆகிய அனைத்தும் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாகவே கிடைத்தவை. இப்போராட்டங்கள் இல்லையெனில், அடிமைத்தனமும் கொத்தடிமை முறையும் சமூக அமைப்பாக இன்றளவும் தொடர்ந்திருக்கும்.
தொழிற்சங்கங்களைப் பொருளாதார வளர்ச்சிக்கான தடைகளாகப் பார்ப்பது என்பதானது, தொழிலாளர்களுக்கான பாதுகாப்புகள் தடையல்ல என்பதையும் நியாயமான, சமத்துவமான சமூகத்தின் அடித்தளம் என்ற பார்வையை கடந்து செல்வதாக அமைந்து விடும்.
குறைந்தபட்ச ஊதியம் தொடர்பான கருத்தும் மிகுந்த கவலைக்குரியது; ஏனெனில், குறைந்தபட்ச ஊதியத்திற்குக் குறைவாக ஒருவர் வேலை செய்வது, அரசியல் சட்டத்தின் 23வது பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்ட கட்டாய உழைப்பாகும் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது.
இன்று, அனைவருக்கும் கண்ணியமான, நியாயமான வேலைநிலைகள் வேண்டும் என்ற அரசியல் சட்டக் கனவு, மோடி அரசாங்கத்தால் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறது. தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், ஸ்ரம் சக்தி நிதி, விபி கிராம்ஜி சட்டம் ஆகியவற்றின் மூலம், “தொழில் செய்வதை எளிதாக்குதல்” என்ற பெயரில் நடைமுறையில் உள்ள தொழிலாளர் சம்பந்தப்பட்ட அமைப்பு முறைகளும் பாதுகாப்புச் சட்டங்களும் ஒழித்துக் கட்டப்படுகின்றன. நாட்டின் உழைக்கும் மக்கள், தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் எதிராக மோடி அரசாங்கம் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கும் விஷம பிரச்சாரத்திற்கும் தக்க பதிலளிக்க உறுதியாக உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, தொழிற்சங்க இயக்கத்தின் பெரும்பகுதியை ஒன்றிணைத்த கூட்டு மேடை அழைப்பு விடுத்துள்ள பிப்ரவரி 12 பொதுவேலைநிறுத்தம், சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் விவசாய-கிராமப்புற தொழிலாளர்களின் சங்க மேடையின் ஆதரவுடன், மிகப்பெரிய வெற்றியாக மாற்றப்படும்.
மோடி அரசாங்கம் விடுத்துள்ள சவாலை தொழிலாளர் வர்க்கம் எதிர்கொண்டு வருகிற இச்சூழலில், தலைமை நீதிபதி போன்றோர் இத்தகைய கருத்துகளை வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒன்றிய அரசாங்கத்தின் அரசியல் சட்டத்துக்கு முரணான, தொழிலாளர் விரோத சட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் எதிராக நிற்பதற்குப் பதிலாக, தொழிலாளர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் ஒருபக்கச் சாய்வை தொடர்ந்து பின்பற்றியே நீதிமன்றங்கள் நடக்கும் என்பதையே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியத் தலைமை நீதிபதி தனது கருத்துகளை திரும்பப் பெற வேண்டும் என்று ஏஐசிசிடியு வலியுறுத்துகிறது. அதைவிடக் குறைவான எதுவும் அரசியல் சட்டத்திற்கும் நாட்டின் உழைக்கும் மக்களுக்கும் செய்யக்கூடிய ஆகப்பெரிய கெடு செயலாகும்.
தலைமையகம்,
அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் (ஏஐசிசிடியு)
