பாலின சமத்துவத்தை முன்னிறுத்தும் தொழிற்சங்கங்கள்: தலைமைத்துவம், பிரதிநிதித்துவம் மற்றும் செல்வாக்கை உருவாக்குதல்

$articleData->title

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (அய்எல்ஓ)

பாலின சமத்துவத்தை முன்னிறுத்தும் தொழிற்சங்கங்கள்: தலைமைத்துவம், பிரதிநிதித்துவம் மற்றும் செல்வாக்கை உருவாக்குதல் என்ற தலைப்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (அய்எல்ஓ) ஜூலை 27-28 தேதிகளில் கொச்சியில் பயிற்சிப்பட்டறை நடத்தியது. ஏஅய்சிசிடியு, சிஅய்டியு, ஏஅய்டியுசி, ஏஅய்யுடியுசி, சேவா, எல்பிஎப், எச்எம்எஸ், அய்என்டியுசி, பிஎம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 52 பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்களில் 32 பேர் நேரடியாகவும், 12 பேர் இணையவழியாகவும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், டெல்லி மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். இந்தப் பயிற்சிப்பட்டறை நடத்தும் பொறுப்பை அய்எல்ஓ - ஜப்பான் ஏற்றுக்கொண்டிருந்தது.

டெல்லியைச் சேர்ந்த அய்எல்ஓ குழுவின் துணை இயக்குநர், தொழிலாளர் செயல்பாடுகள் தொடர்பான நிபுணர், கண்ணியமான வேலை (டீசன்ட் ஒர்க்) குழுவின் மூத்த திட்ட அலுவலர் மற்றும் பாலின சமத்துவம், பாகுபாடின்மை மற்றும் உள்ளடக்கம் தொடர்பான மூத்த வல்லுநர் ஆகியோர் பயிற்சியை நடத்தினர்.

அய்எல்ஓவின் தரப்புகள், பெண்கள் கூடுதலாக தொழிற்சங்கத் தலைமைப் பொறுப்புகளிலும், முடிவெடுக்கும் அமைப்புகளிலும் இடம்பெறுவதற்கான நடவடிக்கைகளை வடிவமைத்து செயல்படுத்துவது, பெண்தொழிலாளர்களுக்கான கொள்கைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வது ஆகியவற்றில் இந்தப் பயிற்சிப்பட்டறை கவனம் செலுத்தியது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற 114ஆவது சர்வதேச தொழிலாளர் மாநாடு (அய்எல்சி), வேலைவாய்ப்பு உலகில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்தும் மாற்றத்திற்கான செயல் திட்டம் குறித்து விவாதித்து, அதை விரைவுபடுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, உறுப்புநாடுகள் பணியிட பாலின சமத்துவம் தொடர்புடைய அய்எல்ஓ  ஒப்பந்தங்களை அங்கீகரிப்பதை ஊக்குவிப்பதும், அந்த நோக்கத்தை அடைவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது.

பயிற்சிப்பட்டறையின் முதல் நாளில், பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடல் மிகவும் உயிரோட்டமாக அமைந்தது. இதில் அனைத்து பிரதிநிதிகளும் எந்தத் தயக்கமும் இன்றி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இது பயிற்சிப்பட்டறையின் மய்ய நோக்கத்தை நோக்கி நகர்வதற்கான  சூழலை உருவாக்கியது.

பாலின சமத்துவம், பாகுபாடின்மை மற்றும் உள்ளடக்கம் தொடர்பான அய்எல்ஓவின் மூத்த வல்லுநர், இந்தியா அங்கீகரித்துள்ள அய்எல்ஓ ஒப்பந்தங்கள் 29, 100, 111, 105, 138 மற்றும் 182 ஆகியவற்றின் முக்கிய அம்சங்களை விளக்கினார். மேலும், உறுப்புநாடுகளில் பல இன்னும் அங்கீகரிக்காத, ஆனால் பெண்தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க முக்கியத்துவம் வாய்ந்த சில உடன்படிக்கைகள் பற்றியும் எடுத்துரைத்தார். அவற்றில், இல்லப் பணியாளர்களின் நலன் தொடர்பான அய்எல்ஓ ஒப்பந்தம் சி189, இந்தியா இன்னும் அங்கீகரிக்காத ஒன்றாகும். இந்த அமர்வு, அய்எல்ஓ ஒப்பந்தங்கள் குறித்த புரிதலைப் பங்கேற்பாளர்களுக்கு வழங்கியது.

அய்எல்ஓவின் கண்ணியமான வேலை (டீசன்ட் ஒர்க்) குழுவின் மூத்த திட்ட அலுவலர், அய்எல்ஓ தரப்பினரால் முன்வைக்கப்படும் பிரச்சினைகளை ஆய்வு செய்து தீர்வு காணும் நடைமுறைகள் மற்றும் செயல்முறைகள் குறித்து விளக்கமளித்தார்.

பின்னர், பங்கேற்பாளர்கள் மூன்று வளையங்களாகப் பிரிக்கப்பட்டனர். உள் வளையம் தொழிற்சங்கத்தின் தலைமைத்துவத்தை, அதாவது முடிவெடுக்கும் அமைப்பைக் குறித்தது. நடு வளையம், உறுப்பினர்களின் கருத்துகளை தலைமைக்கு எடுத்துச் செல்லும் நிர்வாக நிலைத் தலைவர்களைக் குறித்தது; இவர்கள் முடிவுகள் மீது ஓரளவு மட்டுமே செல்வாக்கு செலுத்த முடியும். வெளி வளையம், தங்கள் பிரச்சினைகளை மட்டும் முன்வைக்க முடியும்; முடிவெடுப்பதிலோ, முடிவுகள் மீது செல்வாக்கு செலுத்துவதிலோ பங்கு இல்லாத சாதாரண உறுப்பினர்களைக் குறித்தது.

அதனைத் தொடர்ந்து, குறிப்பாக வெளி வளையத்தில் உள்ள உறுப்பினர்கள் தலைமை நிலையான உள் வளையத்திற்குச் செல்லும் வகையில், ஒவ்வொரு வளையமும் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் மற்றும் முன்முயற்சிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பெண்தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகள், அவற்றை முன்வைப்பதில் உள்ள தயக்கம், அச்சம் மற்றும் தடைகள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.

இரண்டாவது நாளில், ஜப்பானிலிருந்து வந்த அய்எல்ஓ கண்ணியமான வேலை (டீசன்ட் ஒர்க்) குழுவின் தொழிலாளர் செயல்பாடுகள் தொடர்பான வல்லுநர், அய்எஓ ஒப்பந்தங்கள்  87 மற்றும் 98 குறித்து விளக்கினார். தொழிற்சங்கங்களை அமைக்கும் உரிமை மற்றும் கூட்டு பேரம் பேசும் உரிமையின் முக்கியத்துவத்தை இவ்விரு ஒப்பந்தங்களும் வலியுறுத்துகின்றன. இந்தியா இந்த இரு ஒப்பந்தங்களையும் அங்கீகரித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, மாநில வாரியாகப் பங்கேற்பாளர்கள், வேலைவாய்ப்பு உலகில் பாலின சமத்துவத்தை உருவாக்கும் மாற்றத்திற்கான செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை விவாதித்தனர்.

தமிழ்நாட்டிலிருந்து ஏஅய்சிசிடியு, சிஅய்டியு, ஏஅய்டியுசி, எல்பிஎப், அய்என்டியுசி தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், 12 மாதங்களுக்கான செயல்திட்டத்தை உருவாக்கினர். பயிற்சிப்பட்டறையில் பங்கேற்றவர்கள் மற்றும் மேலும் பல தொழிற்சங்கப் பெண்தலைவர்கள், முதலாளிகள் தரப்பிலிருந்து ஒரு பிரதிநிதி மற்றும் அரசுத் தரப்பிலிருந்து ஒரு பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய குழுவை அமைத்து, தொடக்க ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, வேலைவாய்ப்பு உலகில் பாலின சமத்துவத்திற்கான மாற்றுச் செயல் திட்டத்தை உருவாக்குவது முன்மொழியப்பட்டது.

மேலும், அய்எல்ஓவின் உதவியுடன் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து துறைகளிலிருந்தும் சுமார் 150 பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநில அளவிலான பயிற்சிப்பட்டறை நடத்தி, செயல் திட்டத்தை விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பெண்தொழிலாளர்களின் தலைமைத்துவத் திறனை மேம்படுத்தும் திறன் வளர்ப்பு (கெபாசிடி பில்டிங்) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் இலக்காக, 12 மாத காலக்கெடுவின் முடிவில் மாநில அளவிலான பயிற்சிப்பட்டறையில் பங்கேற்கும் குறைந்தது 50 பெண்தொழிலாளர்கள் தங்களது தொழிற்சங்கங்களில் தலைமைப் பொறுப்புகளுக்கு உயர்த்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

ஒவ்வொரு மாநிலத்தின் செயல்திட்டங்களும் அந்த மாநில பிரதிநிதிகளால் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

குழு புகைப்படங்கள், பதாகையுடன் தனிப்பட்ட புகைப்படங்கள், செல்ஃபிகள் ஆகியவற்றுடன் பயிற்சிப்பட்டறை நிறைவடைந்தது. பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்டவர்களின் பணிகள், செயல்பாடுகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்த பங்கேற்பாளர்கள், தங்களது தொடர்பு எண்களை பரிமாறிக் கொண்டு, ஒருவரையொருவர் தங்கள் மாநிலங்களுக்கு வருமாறு அழைப்பு விடுத்து, இனிய நினைவுகளுடன் தங்கள் பயணங்களைத் தொடர்ந்தனர்.

17 August, 2026