அனைத்துக்கும் நிலமே ஆதாரம். வளர்ச்சி, முன்னேற்றத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்று பேசப்படுகிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் கடுமையான பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகத் தீவிரமாக உள்ளது. சமத்துவமின்மைக்கும் சமூக அநீதிக்கும் நிலம் முதன்மைக் காரணமாய் உள்ளது. உழவர்கள் கைகளில் நிலம் இல்லை. ஆனால் கோயில்கள், மடங்களுக்கு பல லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. வீட்டுமனை, வீடு இல்லாத தமிழக ஏழைக் குடும்பங்கள் கோடியைத் தாண்டும். ஆனால், தொழிற்பேட்டைகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவ நிறுவனங்கள் நிலங்களை விழுங்கி வருகின்றன. 12 லட்சம் ஏக்கர் நிலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் எதுவும் அவர்கள் கையில் இல்லை. நீர் வளத்துக்கு ஆதாரமான ஆறுகள், ஏரிகள், கண்மாய்கள் வேகமாய் அழிக்கப்பட்டு வருகின்றன. எனவே புதிய அரசிடம் அனைத்துக்கும் ஆதாரமான. நிலப்பிரச்சனையை முதன்மைப் பிரச்சனையாக எழுப்புகிறவாறு, மதுரை மாவட்டம் மேலூரில் 21.7.2026 அன்று நடைபெற்ற நில உரிமை மாநாடு இருந்தது.
“நிலம் எங்கள் உரிமை!” என்ற முழக்கத்துடன், தலித் மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) விடுதலையும் அனைத்திந்திய விவசாய கிராமப்புர தொழிலாளர் சங்கமும் மேலூர் சட்டமன்றத் தொகுதி அளவிலான ‘நில உரிமை மாநாடு’ வெற்றிகரமாக நடைபெற்றது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பஞ்சமி நிலப் போராட்ட ஆர்வலர் மருத்துவர் குப்பன் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உற்சாகத்துடன் வாழ்த்திப் பேசினார்.
தீர்மானங்கள்:
134 ஆண்டுகளுக்குப்பிறகும் பல லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் தலித்துகளுக்கு சென்று சேரவில்லை. 1994ல் காரணை பஞ்சமி நிலப் போராட்டமும் தியாகிகள் ஜான் தாமஸ், ஏழுமலை படுகொலையும் பஞ்சமி நிலப் போராட்டத்தை முதன்மையான போராட்டப் பிரச்சனையாக்கியது. இடதுசாரி அமைப்புகள், முற்போக்கு ஜனநாயக அமைப்புகளின் தொடர் போராட்டங்கள், அழுத்தங்கள் உயர்நீதிமன்ற தீர்ப்புகள் இவற்றாலும் தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்தது. ஜெயலலிதா- சசிகலா சிறுதாவூர் பஞ்சமி நிலத்தில் பங்களா கட்டியிருந்தது மருதமுத்து ஆணையத்துக்கு வழிவகுத்தது. ஆனால், ஆணையமும் பரிந்துரையும் காணாமல் போயின. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக ஒரு சர்ச்சை எழுந்தது. அந்த வகையிலும் பஞ்சமி நிலம் மீண்டும் பேசு பொருளாகி ஓய்ந்துள்ளது. இத்தகைய நீண்ட நெடிய வரலாறு கொண்ட பஞ்சமி நிலங்களை மீட்டு ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிடர் மக்களிடம் ஒப்படைக்க தவெக ஆட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகநீதி பேசிய திராவிட ஆட்சிகள் செய்யத் தவறியதை தவெக ஆட்சி செய்திட வேண்டும். சமூகநீதித்துறை என்ற பெயர்மாற்றம் கண்டுள்ள அந்த துறை அமைச்சரை இதற்கென பொறுப்பாக்கி நிறைவேற்றிட வேண்டும். 134 ஆண்டுகளின் துயரக் கதையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
மேலூர் தொகுதியில் 2,800க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பலவிதமான ஆக்கிரமிப்பில் உள்ளன. அரசின் கைகளிலும் சுமார் 600 ஏக்கர்கள் உள்ளன. பிஆர்பி கிரானைட் நிறுவனமும் பஞ்சமி நிலங்களை அபகரித்துள்ளது. சில கிராமங்களில் தலித் மக்கள் பஞ்சமி நிலத்தை வீடுகட்டி அனுபவித்து வந்தாலும் அவை சட்டரீதியாக பட்டா உரிமை வழங்கப்படவில்லை. எனவே, மேலூர் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரும் உயர்கல்வித்துறை அமைச்சருமான திரு விஸ்வநாதன் இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிலங்களை தலித் மக்களுக்கு ஒப்படைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது.
வருவாய்த்துறையின் கால தாமதம் இழுத்தடிப்புகளைத் தவிர்க்கவும், நிலம் பஞ்சமி நிலம் அல்ல என்பதை நிரூபிக்கும் பொறுப்பை ஆக்கிரமிப்பாளர் மீதே சுமத்தவும் தனி ‘சிறப்பு நீதிமன்றம்’ உருவாக்கப்படவும் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
பெரியார் கால்வாய் திட்டம், கிரானைட் முறைகேடுகளால் முடக்கப்பட்ட நிலங்களை மீட்டு, விவசாயிகளுக்கும் வீடற்ற ஏழைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் பகிர்ந்தளிக்க வேண்டும்.
வீட்டுமனை, வீடு: மாநிலம் முழுவதும் சொந்த வீடற்ற குடும்பங்களின் கணக்கெடுப்பை அரசு நடத்திட வேண்டும்; பெண்களது கவுரவம் காக்கும் வகையில் கிராமப்புர, நகர்ப்புர பொது, தனிநபர் கழிப்பறை வசதி போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்தித் தர வேண்டும்.
தூய்மைக் காவலர்களுக்கு அரசாணை 62-ன்படி தூய்மைப் பணியாளர்களுக்கு பஞ்சப்படியுடன் நாளொன்றுக்கு ரூ. 722 வழங்கப்படுவதை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் உறுதி செய்ய வேண்டும்.
மேலூர் அரசுக் கல்லூரியை மேம்படுத்திட உயர்கல்வித் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்;
விபி ஜி ராம் ஜி சட்டத்தை ரத்து செய்து மேம்படுத்தப்பட்ட வகையில் மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்தை மீண்டும் கொண்டுவரவும் கண் கருவிழிகள் படம், கைரேகை எடுப்பதை தடை செய்யவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி வரும் பட்ஜட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தவெக அரசை மாநாடு வலியுறுத்துகிறது.
நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிபந்தனைகள் எதுவுமின்றி (தொகுதி மறு வரையறை, மக்கள்தொகை கணக்கெடுப்பு) மோடி அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த சட்டப்பேரவைத் தீர்மானம் வாயிலாக ஒன்றிய அரசை வலியுறுத்திட வேண்டும்.
பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு மிகக்கொடூரமான தாக்குதலை எதிர்கொண்ட தோழர் முத்துராஜ் அவர்களுக்கு உரிய இழப்பீட்டையும், சட்ட உதவிகளையும் தமிழ்நாடு அரசு அளிக்க வேண்டும்.
மாவட்டக் கமிட்டி உறுப்பினர் S. சந்திவீரன் மாநாட்டுக்கு தலைமை தாங்கினார்.
மாநிலக் கமிட்டி உறுப்பினர் தேவராஜ் வரவேற்புரையாற்றினார்.
தோழர்கள் பாலசுந்தரம், அகில இந்திய மாணவர் கழகத்தின் பாண்டிக்குமார், சிவகங்கை மாவட்டக்குழு உறுப்பினர் மதிவாணன் உள்ளிட்ட பலர் பேசினர்
மாநாட்டுத் தீர்மானங்களை, மாவட்டச் செயலாளர் மெய்யர் முன்மொழிந்து நிறைவேற்றினார்.
கீழவளவு கிராமத்தைச் சேர்ந்த தோழர்கள் லட்சுமி, சின்னப்பிள்ளை, திடீர்நகரைச் சேர்ந்த நாகேஸ்வரி, ரெங்கசாமிபுரத்தைச் சேர்ந்த காலம்முத்து, பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து உரையாற்றியது ஒட்டு மொத்த மாநாட்டின் கவனத்தை ஈர்த்தது. தோழர் திலகர் மேடையில் இருந்தார்.
