தவெக தேர்தல் அறிக்கை என்ன சொல்கிறது?

$articleData->title

தவெக தேர்தல் அறிக்கை என்ன சொல்கிறது?

முதல் தேர்தல். முதல் வெற்றி. ஆட்சியைப் பிடித்து விட்டது தவெக. அதன் தலைவர் விஜய் முதலமைச்சராகி விட்டார்! ஆனாலும் வேடிக்கை என்னவென்றால், அவரது ‘அரசியல் எதிரி’யான திமுக விலுள்ள கூட்டணிக் கட்சிகள்தான் தவெக ஆட்சியை தாங்கி நிற்கின்றன. தவெக வெற்றி, அகில இந்திய அளவில் ஆச்சரிய குரல்களை உருவாக்கியுள்ளது, எப்படி இத்தனை பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன? தேடல்கள் தொடங்கியுள்ளன. இந்தத் தேடலை தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை ஊடாக தொடங்குவோம்.

தேர்தலுக்கு, ஏழு நாள்களுக்கு முன்பு ஏப்ரல் 16 அன்று, தவெக தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் விஜய் வெளியிட்டார். அதை ஒரு விவசாயி, தொழிலாளி, நெசவாளி, மீனவர், திருநங்கை  பெற்றுக் கொண்டனர். உண்மையிலேயே இது புதுமையான முயற்சி. ஆனால், பெண் தூய்மைப் பணியாளர் எவரும் பெற்றுக் கொண்டாரா தெரியவில்லை. 

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் திருக்குறள் சொற்களை முழக்கமாகக் கொண்டு, ‘மக்களின் தேர்தல் அறிக்கை 2026’ எனத் தலைப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது தேர்தல் அறிக்கை மட்டுமல்ல. தவெக பற்றி தெரிந்துகொள்ள முதல் முறையாக கிடைத்துள்ள எழுத்துபூர்வமான கொள்கை அறிக்கை. எனவே, தேர்தல் வாக்குறுதிகள் பற்றிய விமர்சன பகுப்பாய்வாகவும் அதன் கொள்கை, செயல்திட்டம், வழிமுறை குறித்த அரசியல் விமர்சனமாகவும் அணுகலாம்.

திருக்குறளின் ஆட்சித் தத்துவம்?

தேர்தல் அறிக்கை ஒரு பின்னணிக் கதையுடன் நம்மை “மக்களின் தமிழ்நாட்டுக்கு” அழைக்கிறது. இந்த ‘முதல் தேர்தல் அறிக்கை’ “தமிழ் மண்ணின் ஆகப்பெரும் தத்துவப் பேராசான் திருவள்ளுவரால் எழுதப்பட்டு உலகிற்கே வழிகாட்டும் பொதுமறை” “திருக்குறள் அருளிய ஆட்சித் தத்துவத்தின்படி” தேர்தல் அறிக்கை வடிக்கப்பட்டுள்ளதாக தவெக கூறுகிறது. “அறம், பொருள், இன்பம்” எனும் முப்பெரும் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு “இந்தத் தேர்தல் அறிக்கையை பத்து தூண்களாக பிரித்து, வாக்குறுதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளதாக முன்னுரை கூறுகிறது.

திருக்குறள் கூறும் ஆட்சித்தத்துவத்தை, “பொருள் இல்லாத அறம், செயல்வடிவம் பெறாத நல்லெண்ணம்”, “அறம் இல்லாத பொருள் ஊழலை ஊக்குவிக்கும்”, இன்பம் இல்லாத அறம், பொருள், மக்களை மறந்த “வெற்று அரசு இயந்திரம்” என ஒரு கோட்பாட்டு உருவகத்தை தவெக முன் வைக்கிறது. அந்தக் கண்ணாடி வழியே 10 தூண்கள் ஒவ்வொன்றின் கீழுள்ள 319 வாக்குறுதிகளுக்குள் மக்களின் கவனத்தை ஈர்க்க முயல்கிறது அறிக்கை.

மன்னராட்சி கால தத்துவமான திருக்குறளை தவெக, மக்களாட்சி கால தத்துவமாக மாற்ற முயல்வது போல் தெரிகிறது. உள்ளே சென்று பார்ப்போம்.

முதல் பிரிவு அறம். அதன்படி தூண் 01ல் 39 வாக்குறுதிகள் தரப்பட்டிருக்கின்றன. இவற்றுள் ‘தமிழ்நாட்டின் நிதி மற்றும் மாநில உரிமைகள் பாதுகாப்பு’ பற்றி 14 வாக்குறுதிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. “ஒவ்வொரு சமூகத்துக்கும்  உரிய விகிதாச்சார பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூகநீதி என்பதே தவெகவின் கொள்கை” எனக் கூறி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறுகிறது. நல்லது. ஆனால் ஒன்றிய அரசின் பங்கு பற்றி எதுவும் சொல்லவில்லை. இதிலிருந்து தொடங்கி, தமிழ்நாட்டிற்குரிய நிதிப்பகிர்வு, ஜிஎஸ்டியில் நியாயமான பங்கு, கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவர சட்டப் போராட்டம், தொகுதி மறுவரையில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதுகாக்க “சட்டத்திருத்தம்”, “கொள்கை எதிரியான பாஜக, மாநில சுயாட்சி, கூட்டாட்சித் தத்துவத்தை பலவீனப்படுத்தும் ஒரேநாடு, ஒரே தேர்தல் முன்வரைவை திரும்பப் பெற முயற்சிகள்”, இருமொழிக் கொள்கை பாதுகாப்பு, நீட் தேர்வு ரத்து, உயர்நீதிமன்றங்களில் மாநில மொழி, சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை, காவிரி நதிநீர், கச்சத்தீவு மீன்பிடி உரிமைகள், இலங்கைத் தமிழர்களுக்கான நீதி, “காலனிய எச்சம்” ஆளுநர் பதவி ரத்து, பல்கலை துணைவேந்தர் நியமனத்தை மாநில அரசே மேற்கொள்ள வழிவகை என அந்த 14 வாக்குறுதிகளும் பேசுகின்றன. இவற்றை பெறுவதன் மூலம் “தமிழ் அடையாளம் பெருமை” காக்கப்படும் என்று கூறுகிறது. இவைதான், கடந்த 60 ஆண்டுகளாக தமிழக அரசியலை ஆண்டு வரும் திராவிட கருத்தியல், அரசியல் என அறியப்படுகிறது. இது எந்தவகையில் திராவிட அரசியலுக்கு மாற்று என்பதையும் இவற்றை சாதிப்பதற்கு, பாஜக ஒன்றிய ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து தவெக என்ன செய்யப்போகிறது என்பது பற்றி எந்த குறிப்பையும் அறிக்கை வெளிப்படுத்தவில்லை.

தமிழ்மொழி, கலாச்சாரம், பண்பாடு, சுற்றுலா தொடர்பாக 25 வாக்குறுதிகள் அளித்துள்ள தவெக, கீழடி ஆய்வை ஏற்றுக் கொள்ள மறுக்கும் ஒன்றிய அரசு குறித்து எதுவும் சொல்லாமலே அமைதியாக சென்றுவிடுகிறது. 13 வகையான சுற்றுலா திட்டங்கள் பற்றி அறிக்கை முன்மொழிவது புதுமையானது. ஆன்மீக சுற்றுலா, நல்லிணக்க ஆன்மீக சுற்றுலா பற்றியும் பேசுகிறது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு பல கோவில்களுக்கும் ஆலயங்களுக்கும் விஜய் சென்று வந்தது கூட இந்த ஆன்மீக சுற்றுலாவின் தொடக்கமாக இருக்கலாம். ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடரை போயஸ் தோட்டத்திலிருந்து புனித ஜார்ஜ் கோட்டைக்கு கொண்டுவந்ததும் கூட ஆன்மீகத்திலுள்ள ஆழ்ந்த நம்பிக்கை காரணமாக இருக்கலாம்.

கண்ணியமான வாழ்வு, சமூக பாதுகாப்பு!

அறத்தின் 2வது தூண் வழியாக சொல்லப்படும் 79 வாக்குறுதிகள், தமிழ்நாட்டு மக்களின் “கண்ணியமான வாழ்வு மற்றும் சமூகப் பாதுகாப்பை” உறுதிசெய்வதாக கூறுகின்றன. “வறுமை இல்லாத் தமிழகத்தை உருவாக்குவதே தவெகவின் முக்கிய குறிக்கோள் என்று பறைசாற்றும் அறிக்கை, “ஏழைக்குடும்பங்கள் கண்டறியப்பட்டு அக்குடும்பங்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்றடைவதையும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவது, சுய தொழில் வாய்ப்புகளை உருவாக்கித்தருவதும் செய்யப்படுமென்று கூறுகிறது. உலகமயக் கொள்கைகள் அறிமுகமான ‘90கள் முதலே ‘வறுமை இல்லாத் தமிழ்நாடு’ பேசப்பட்டு வருகிறது. ஜெயலலிதா இதை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வந்த கட்சிகளும் சொல்லி வந்தன. தவெகவும் கூறுகிறது. வறுமை இல்லா தமிழ்நாடு பற்றி மேலே சுட்டிக்காட்டியுள்ள தவெகவின் பார்வை, அரைகுறையானது, மிகவும் மேலோட்டமானது. தவெகவை பின்பற்றுவோர், தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பது ஒரு கருத்துரு மட்டுமே. திட்ட வரைபடத்தை விரைவில் அரசாங்கம் அறிவிக்கும் என்று கூட சொல்லலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

பொது விநியோகம் பற்றிய மக்கள் விருப்பங்கள், அது தொடர்பான போராட்டங்களைக் கவனத்தில் கொண்டிருப்பதுபோல் சில வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளன. வீடு தேடி ரேசன் பொருட்கள், ஊட்டச்சத்துமிக்க உணவுப் பொருட்கள், பாக்கெட்களில் அடைக்கப்பட்ட ரேசன் பொருட்கள், கலப்படத்திற்கு முற்றுப் புள்ளி, ரேசன் கடைகள் அதிகரிப்பு (500 ரேசன் கார்டுகளுக்கு ஒரு ரேசன் கடை), எடையாளர்கள் நியமனம் என சொல்லப்பட்டுள்ளன. கிராமப்புர, நகர்ப்புர ஏழைகள், சாமான்ய மக்களுக்கு இவை மிகவும் அவசியமே. இதைச் செய்வதற்கு அரசியல் உறுதி வேண்டும். எதிர்பார்ப்போம்.

ஆதிதிராவிடர் பழங்குடி மக்கள் சிறுபான்மையினர் பாதுகாப்பு பற்றி அறிக்கை தலா 6 வாக்குறுதிகளை அளிக்கிறது. இவை வழமையானவையே. எந்த மாற்றத்தையும் காணமுடியவில்லை. எடுத்துக்காட்டாக, எஸ்சி\எஸ்டி வன்கொடுமை விசயத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்பிரிவு உருவாக்கப்படும் என்றே சொல்கிறது. இதைத் தாண்டி, வன்கொடுமை ஏன் நடக்கிறது? யாரால் நடக்கிறது? சாதி ஆதிக்க அரசியலை தவெக அரசாங்கம் எப்படி தடுக்கப்போகிறது என வாக்களித்த தலித் மக்கள் எதிர்பார்ப்பை அறிக்கை எப்படி நிறைவேற்றப் போகிறது என்பது மிகவும் முக்கியமானது. அம்பேத்கரை கொள்கைத் தலைவராக ஏற்றுள்ள தவெக, “விளிம்புநிலை மக்களை பாதுகாக்கும்” ஒவ்வொரு கொள்கையும் அம்பேத்கரின் “வாழ்நாள் பணியிலிருந்து  நேரடியாக பெறப்பட்டது” என்று அடித்துக் கூறுகிறது. ஆனால் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு கருத்தியல் அரசியலில் இருந்து தவெக எவ்விதமான ஒளியும் உந்துதலும் பெற்றதாகத் தெரியவில்லை.

15 லட்சம் துரித(ஜிக்) பணியாளர்களுக்கு சட்டம் இயற்றி பணிப் பாதுகாப்பும் சம்பளம், சமூகப் பாதுகாப்பும் அளிக்குமென உறுதி கூறும் அறிக்கை, 5000 கோடி ஒதுக்கீட்டில் அரசு, காவலர், ஆசிரியர், பேராசிரியர் உள்ளிட்டு அரசு ஊழியர் நல வாரியம் ஏற்படுத்தப்படும் என்று கூறுகிறது. இது பல கேள்விகளை எழுப்புகிறது. திமுக ஆட்சிக்கு சவால் விட்டு நடந்த தூய்மைப் பணியாளர் போராட்டத்தை ஆதரித்த விஜய் வெளியிட்ட தேர்தல் அறிக்கை  தூய்மைப் பணியாளரின் தனியார் கான்ட்ராக்டர் ஒழிப்பு, பணி நிரந்தரம், சட்டக்கூலி உள்ளிட்ட கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை.

சச்சார் கமிட்டி பரிந்துரை அமலாக்கம் வலியுறுத்தப்படுவது தொடங்கி, வக்ஃப் வாரிய பாதுகாப்புக்கு சட்டப்போராட்டம் வரை அறிக்கை பேசுகிறது. ஆனால், அறிக்கை கூறுவது போல “அச்சமின்றி உறங்கி, நம்பிக்கையுடன் எழும்” நிலையை உருவாக்குவதற்கான திட்டங்கள் என்ன என்ற கேள்வியே மிஞ்சுகிறது. நாடு முழுவதுமுள்ள சிறுபான்மை மக்களை இந்துத்வா பாசிச (பாயாசமல்ல) கொடுங்கோன்மையிலிருந்து பாதுகாக்கும் அரணாக தவெக இருக்குமா என்ற கேள்வியே எழுகிறது.

பொருள் இல்லாத அறம்

திருவள்ளுவரின் ‘பொருள்’ பிரிவில் முதலாவதாக மகளிர் நலனுக்காக 19 வாக்குறுதிகள் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றுள் பெரிதும் கவனத்தை ஈர்ப்பது “மகளிர் பொருளாதாரச் சுதந்திரம் காக்கும்” மாதம் ரூ. 2500, அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் (சூப்பர் சரவணாஸ் நினைவுக்கு வருகிறது. ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்) அரசுப்பேருந்துகள் அனைத்திலும் கட்டணமில்லா வெற்றிப் பயணம்”, “அண்ணன் சீர் திட்டம்”, “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” (அண்ணன், தாய்மாமனாவது தமிழ்நாட்டு மரபுதானே! ஆனால் திருக்குறள் மரபில் உள்ளதா என்பதை தோண்டித் துருவிப் பார்க்க வேண்டும்) என வரிசை கட்டி நிற்கின்றன. சிங்கப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு 5 லட்சம் வட்டியில்லாக் கடன், திருப்பித் தரத் தேவை இல்லாத 5 லட்சம் முதலீட்டு மானியம் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன. இது மோடி அரசாங்கத்தின், ஒரு கோடி பெண் லட்சாதிபதிகள் திட்டத்தை ஒத்ததுதான். தமிழ்நாட்டின் கிராமப்புர பெண்கள் ஆண்டுக்கு 90 ஆயிரம் கோடி முதல் 1.5 லட்சம் கோடி வரை தனியார் நுண்கடன் இரும்புச் சங்கிலிகளால் இறுகப் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தச் சங்கலிகள் முழுவதுமாக அறுத்தெறியப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தால் தவெகவுக்கு வாக்களித்தப் பெண்கள் உண்மையில் பொருளாதாரச் சுதந்திரத்தை நோக்கிய முதல் அடி எடுத்து வைக்க முடியும்.

“சமரசமற்ற பெண்கள் பாதுகாப்பு”க்காக ராணி வேலுநாச்சியார் படை அமைக்கப்படும் என்கிறது. இந்த நவீன நாச்சியார் படை உடலில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராக்களுடன் 500 கண்காணிக்கும் குழுக்களாக இருக்கும். (பின் ஏன் அய்ஜி தலைமையில் காவல் துறை அதிகாரிகள்)? பின்னர் இந்த வேலுநாச்சியார் படையில் தவெக இளம் பெண்கள் இணைக்கப்பட்டு, காவல்துறை பயிற்சியுடன் மிகக் குறைவான ஊதியம் வழங்கி சிங்கப் பெண் படையாக மாற்றப்படக் கூடும். வேறு திட்டமும் இருக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம். பழங்குடிப் பெண்களுக்கு சோலார் அடுப்புகள் புதிய வாக்குறுதி. தவெக வின் மற்றொரு கொள்கைத் தலைவரான “பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் மகளிர் விடுதலை, பெண்கள் கல்வி, சமூக சீர்திருத்தத்தின் ஓர் அர்த்தமுள்ள போராட்டத்தின்” தொடர்ச்சியை தேர்தல் அறிக்கையில் பார்க்க முடியவில்லை.

4வது தூண் வழியாக 17 வாக்குறுதிகளில் இளைஞர் நலன் பேசப்படுகிறது. வேலை இல்லா உதவித்தொகை, அரசுப்பணி நியமனங்களை நேர்மையாக முறையாக நடைமுறைப்படுத்த சிறப்புச் சட்டம், (இப்போதுள்ள டிஎன்பிசி என்னாகும்)? 5 லட்சம் இளைஞர்களுக்கு தொழில் நிறுவனங்களில் பயிற்சி (பட்டதாரிகளுக்கு ரூ.10000, தொழிற்கல்வி பயின்றவர்களுக்கு ரூ.8000 உதவித்தொகை), 75% தமிழ்நாட்டு இளைஞர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரிச்சலுகை, 5 லட்சம் இளைஞர்கள் மக்கள் சேவைத்திட்டத்தின் கீழ் மாதம் ரூ.18,000 ஊதியத்தில் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப் படுவர் (ஏற்கனவே திமுக ஆட்சியிலிருந்த மக்கள் நலப்பணியாளர் திட்டத்தின் தொடர்ச்சியா?), 25 நகரங்களில் மைக்ரோ டெக் பார்க் (ஸ்டாலின் தோல்வியடைந்த கொளத்தூரில் இருப்பது போல) வீட்டிலிருந்தே உலக அளவில் வேலை செய்யும் வாய்ப்பு உருவாக்கித் தரப்படும் (இதனால் எவ்வளவு பேர் பயன்பெறுவார்கள் என்பது சொல்லப்படவில்லை) போன்ற வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளன. ஆனால் புதிய தலைமுறையை (ஸென் ஜி) எந்த லட்சிய நோக்கத்தையும் நோக்கி கொண்டு செல்லும் ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை.

விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்கள், மீனவர் நலன்

மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள இந்த மிக முக்கியமான சமூகம் குறித்து தேர்தல் அறிக்கை, 45 வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. “விவசாயிகள் நலன், மீனவர் நலன், நீர் மேலாண்மை விவசாய கண்டு பிடிப்புகள், கால் நடை பால் பொருட்கள் மேம்பாடு” என 4 பிரிவுகளில் இந்த வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளன. 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி, 5 ஏக்கருக்கு மேலுள்ள வர்களுக்கு 50% தள்ளுபடி, மகளிர் உரிமைத் தொகை போல விவசாயிகள் உரிமைத் தொகை (இரண்டு தவணைகளில் ரூ 15000), உழவர் தோழர் திட்டம், (ஜெயலலிதா ஆட்சியில் உழவர் அட்டை இருந்தது போல் இப்போது  ‘உழவர் உரிமை அட்டை’) கால்நடை வாங்க கடன், உழவர் உற்பத்தியாளர் அமைப்பில் இணையும் விவசாயிகளுக்கு ரூ. 5000 ஊக்கத் தொகை போன்ற இன்னும் பல அறிவிப்புகள் உள்ளன. இவை எதுவும் புதிதில்லை. கடந்த ஆட்சிகள் செய்ததை வேறு பெயர்களிலோ கூடுதலான எண்களிலோ சொல்கிறது. அதிர்ச்சி என்னவென்றால், ஒரு கோடிக்கு மேற்பட்ட விவசாயத் தொழிலாளர், கிராமப்புர தொழிலாளர் பற்றி அறிக்கை அமைதி காக்கிறது.

தூண் 7ல் வளமான தமிழ்நாட்டுக்கான வாக்குறுதிகள் தரப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சி சொல்லி வந்த 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை 1.5 ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்தி “இதுவரை இல்லாத வளர்ச்சி” ஏற்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதி சொல்கிறது. இந்த ‘வளமான தமிழ்நாடு’ 15 பக்கங்களில் 32 வாக்குறுதிகளாக விரிகிறது. தமிழ்நாட்டின் உற்பத்திப் பொருள்களை உலகமயமாக்குவது, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களையும் மண்டல வாரியாக பிரித்து அங்குள்ள நிலமைகளுக்கு உகந்த தொழில் முயற்சிகளை நிறுவுவது. அந்த வகையில் விரிவான தொழில் மயமாக்கத்தைப்பற்றி பேசுகிறது. “விவசாய விளைநிலங்கள் கைப்பற்றப்படாது” என்று கூறினாலும் சொல்லப்படும் இந்த பெரும் தொழில் திட்டங்கள் பகாசுர பசியோடு விவசாய நிலங்களை விழுங்கி விடும். விவசாயம் மேலும் வீழ்ச்சியடையும். 30 லட்சம் ஏக்கர் விவசாய பரப்பு அதிகரிப்பு சாத்தியமில்லை. வளமான தமிழ்நாட்டுக்கு தொழில் வளர்ச்சி மட்டுமே முதுகெலும்பு என்று அறிக்கை சொல்கிறது. பெருங்குழும உலகமயமாக்க கொள்கைகளே தவெக தேர்தல் அறிக்கையின் முதுகெலும்பாகவும் மூளையாகவும் முகமாகவும் இருக்கிறது என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும். நிலம், நீர், மின்சாரம், வரிவிதிப்பு அனைத்தையும் மய்யப்படுத்தி கைகளில் வைத்திருக்கும் ஒன்றிய அரசு மாநில ஆட்சிகளை ஒரு நகராட்சி அளவுக்கே வைத்திருக்கிறது. அந்த அதிகாரத்தை எதிர்த்து, அதன் பகாசுர கார்ப்பரேட் கொள்கைகளை எதிர்த்துப்போராடுவது வளமான தமிழ்நாட்டிற்கு அவசியம். பொறுத்திருந்து பார்ப்போம்.

திருவள்ளுவரது ஆட்சித் தத்துவம் சொல்கிறது, “வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழுங் குடி” (குறள் எண் 542). இதிலிருந்து உந்துதல் பெற்றதாலோ என்னவோ 94 பக்க தவெக தேர்தல் அறிக்கையில் உள்ளாட்சி அதிகாரம் (அமைப்பு) பற்றி எதுவும் இல்லை!

இன்பம் பற்றி அறிக்கை என்ன சொல்கிறது? அடுத்த இதழில் பார்க்கலாம்.


-பாசு

24 May, 2026