கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் காவிப் பாசிச ஜனதா கட்சியும்

$articleData->title

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் காவிப் பாசிச ஜனதா கட்சியும்

மே 16 வரை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்று ஒன்று கிடையாது. மே 15 அன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலையற்ற இளைஞர்களை கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள் என்றார். நீதிபதியின் வார்த்தைகளால் காயம்பட்ட இளையதலைமுறையின் பிரதிநிதியாக மகாராஷ்ட்ராவைச் சார்ந்த, தற்போது அமெரிக்கா போஸ்டன் நகரில் மேற்படிப்பு படித்து வரும், அபிஜித் டிப்கே, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற இணையதள கட்சி ஒன்றை அறிவித்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இளைஞர்களை ஏளனம் செய்ததைக் கண்டித்து, ஒரு அரசியல் கேலியாக, விமர்சனமாக, எள்ளிநகையாடி விளையாட்டாக, துவங்கப்பட்டதுதான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. கரப்பான்பூச்சி என்று சொன்ன உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் அதே ஏளனச் சொல், வேலையற்றோரின், இளைஞர்களின் கேடயமாகவும் வாளாகவும் மாற்றப்பட்டது. வேலையற்றோரும் சோம்பேறிகளும் எப்போதும் இணையத்திலேயே குடியிருப்போரும் கோபக்காரர்களும் அந்த கட்சியில் இணையலாம் என சொல்லப்பட்டது.

வைரலாகும் கரப்பான்பூச்சி

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உதித்த 10 நாட்களிலேயே சுமார் 2.3 கோடி பேர் அதன் இன்ஸ்டா பக்கத்தை பின் தொடர்ந்தார்கள். இது இந்தியாவிலேயே பெரும் டிஜிட்டல் படை பலத்தை கொண்டிருக்கும் பிஜேபியின் பக்கத்தை பின் தொடரும் 88 லட்சம் பேரைக் காட்டிலும் சுமார் 3 மடங்கு அதிகம் ஆகும். யாரும் எதிர்பாராத வகையில் இளைஞர்களின் மாபெரும் டிஜிட்டல் எழுச்சியாக உருவெடுத்து, காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

இது யார் அந்த கட்சியை தொடங்கினாரோ, அவர் மட்டும் நடத்தும் கட்சியாக இல்லாமல் நாடு முழுவதுமுள்ள ஜென் Z தலைமுறை அதனை தமதாக வரித்துக் கொண்டிருக்கிறனர். ஒரு பாடலை உருவாக்கினால், அது 100 புத்தம்புதிய பாடல்களாக தெறிக்கிறது. 5 கோரிக்கை முன்வைக்கப்பட்டால், அது எண்ணற்ற கோரிக்கைகளாக வடிவம் பெறுகிறது. ஒரு இணையதளம் முடக்கப்பட்டால், அடங்க மறுத்து, பல புதிய இணைய தளங்களாகப் புத்துயிர் பெற்று எழுகிறது.

குலைநடுங்கும் பெருமுதலாளிகள்

”நான் ஒரு கரப்பான்பூச்சி” என்கிற அந்தக் குரலை, பாடலை கேட்டு ஒன்றிய அரசாங்கம் நடுநடுங்குகிறது. நாட்டின் பிரதமர் மோடி கலவரம் அடைகிறார். ஆளும் கட்சியான பிஜேபி பதறுகிறது. அவர்களின் அரசியல் கருத்தியல் குருவான ஆர்எஸ்எஸ் கலங்குகிறது. அதோடு கூடவே, இந்த டிஜிட்டல் கரப்பான் பூச்சி இயக்கத்தைக் கண்டு கார்ப்பரேட் பெருமுதலாளிகளும் குலைநடுங்குகிறார்கள். ஏன்?

டிஜிட்டல் இயக்கம்

ஏனென்றால்,  அது ஒரு ஆக்டோபஸாக பூதாகரமாக வளர்ந்து வருகிறது. அது இன்றைய இளைய தலைமுறையினரின் மனசாட்சி. பிஜேபி கட்டமைத்து வரும் சமூகத்திலிருந்து எழும் கலகக் குரல், இச் சமுதாயத்தில் அந்நியமாகி நிற்கும் இளைஞர்களின் அவலத்திற்கு எதிரான போர்க்குரல். அநீதிகளை எதிர்த்து புறப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் இயக்கம் பலமடங்கு பெருகுவதற்கான களம் இந்த சமுதாயத்தில் நிலவுகிறது. அருவருப்பாக கருதப்படும் கரப்பான் பூச்சிகளின் ஒரு முக்கியமான பணி தூய்மைப் பணி. இந்த டிஜிட்டல் கரப்பான் பூச்சிகள் இச் சமுதாயத்தின் சீர்கேடுகளை தூய்மைப் படுத்தும் இயக்கமாக மாறிவிடுமோ என்கிற பயம்.

‘தொழில்நுட்பப் புரட்சியை நோக்கிய இந்திய பயணத்தை இந்த கரப்பான்பூச்சிகள் பின்னோக்கி தள்ளுகின்றன. இது போன்ற உள்நாட்டு அபாயங்களைப் பற்றி ஏற்கனவே சாணக்கிய ராஜதந்திரம் எச்சரித்து இருக்கிறது’ என தன்னுடைய ஆர்கனைசர் இதழ் கட்டுரையில் குறிப்பிடுகிறது ஆர்எஸ்எஸ். வழக்கம்போல், இது பாகிஸ்தான் சதி என்கிறது, பிஜேபி. 

கரப்பான்பூச்சிகளின் கொள்கை அறிக்கை

இது போல, அரசை விமர்சிக்கும் கருத்துக்கள் வருமானால், அதன் சரி-தவறை, அது எழுவதற்கான சமூக, பொருளாதார காரணிகளை கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்குப் பதிலாக, அவற்றை சதித் திட்டம் என வர்ணிப்பதுதான் உலகம் முழுக்க பாசிஸ்டுகள் கடைபிடித்த ஆயுதமாகும். அதைத் தான் பிஜேபியும் செய்கிறது.

நீதிபதியின் தவறான வர்ணனைகளுக்கு எதிராக உருவான கரப்பான்பூச்சி இயக்கம், இப்போது நீதிமன்றத்தைத் தாண்டி, ஒன்றிய பிஜேபி அரசின் ஜனநாயக விரோத தன்மைக்கு எதிரான, வேலையற்ற வளர்ச்சி மாடலுக்கு எதிரான, நீட்டுக்கு எதிரான, கல்வி அமைச்சருக்கு எதிரான அரசியல் பரிமாணம் பெற்று வருகிறது.

அது பிஜேபி அரசின் தவறுகளுக்கு எதிரான விமர்சனமாக சிஜேபியின் கொள்கை அறிக்கை அமைந்திருக்கிறது. நிதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு அரசியல் பதவிகள் வழங்குவது ஊழல் என்கிறது. நீதித் துறையின் சுதந்திரத்தை பறிப்பதாகும், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும் என்கிறது. 

தேர்தல் ஆணையத்தின் அரசு சார்பு செயல்பாட்டை, வாக்குத் திருட்டை விமர்சிக்கிறது. நாடாளுமன்றத்தின் மொத்த எண்ணிக்கையை உயர்த்தாமலே பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்கிறது. 

ஊடக சுதந்திரத்தை நிலைநாட்டிட அதானி-அம்பானிகளின் ஊடக லைசென்சுகள் பறிக்கப்பட வேண்டும், பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளும் ஊதுகுழல் ஊடகவியலாளர்களின் சொத்து சேர்த்த விதம் விசாரிக்கப்பட வேண்டும் என்கிறது. 

மக்கள் தீர்ப்புக்கு மாறாக, எம் எல் ஏக்கள் - எம் பிக்கள் விலை கொடுத்து வாங்கப்படும் அசிங்கமான அரசியலை தடுத்திட, அத்தகைய கட்சித் தாவும் மக்கள் பிரதிநிதிகள் அடுத்த 20 ஆண்டுகளுக்கு தேர்தலில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்கிறது.

இந்த அனைத்து கோரிக்கைகளுமே, மோடியின், பிஜேபியின் பாசிச போக்குக்கு எதிரான குறிப்பான விமர்சனங்கள் ஆகும். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பிஜேபி அதை சதி என முத்திரை குத்துகிறது. இது சரிதான் என கருதும் இளைய தலைமுறை அதை ஆதரிக்கிறது. இதுதான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.  

அவமான ரோபோ

இந்தியா தொழில்நுட்ப புரட்சியை நோக்கி பயணிக்கிறது என்கிறார் மோடி. அப்படியானால், இந்திய நாட்டின் மிகச் சிறந்த பொறியாளர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் ஏன் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள்?

டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு சர்வதேச மாநாட்டைப் பற்றிப் பீற்றிக் கொள்ளும் ஆர்எஸ்எஸ் அந்த மாநாட்டிற்கு, சட்டைகளை கழற்றி எதிர்ப்பைத் தெரிவித்த இளைஞர்களை தேச அவமானம்  என்றது. ஆனால், அதே மாநாட்டில் சீனத்திலிருந்து இறக்குமதி செய்த  எந்திர மனிதனை (ரோபோ), நம் நாட்டு கண்டுபிடிப்பாக பச்சைப் பொய் சொல்லி, உலக நாடுகளின் முன்னால் அசிங்கப்பட்டது, ஆர்எஸ்எஸ்ஸிற்கு அவமானமாகத் தெரியவில்லை.

கடமை தவறினால் கண்டிப்பது அராஜகமா?

அரசமைப்புச் சட்டப்படியான தலைமைத் தேர்தல் அதிகாரியை, சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென கரப்பான்பூச்சிகள் கூறுவது பெரும் அராஜகம், ஜனநாயகத்தை முடக்கும் வன்முறை என்கிறது ஆர்எஸ்எஸ். அப்படியென்றால், மேற்கு வங்கத்தில் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வாக்குகளை மறுத்தது, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கியது, அதன்மூலம் திருட்டுத்தனமாக ஆட்சியைக் கைப்பற்றியது தான் ஜனநாயகமா? அரசமைப்புச் சட்ட அடிப்படையிலான தேர்தல் ஆணையம் தனது அரசமைப்புச் சட்டப்படியான கடமையை செய்யத் தவறி இருக்கிறது.  அந்த அநியாயத்தை எதிர்த்து கேள்வி கேட்டால், அதைத் தண்டிக்க வேண்டும் என்றால் அராஜகமா?

ஆர்எஸ்எஸ்ஸின் ஆணாதிக்கம்

நாடாளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறது சிஜேபி. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் அப்படிச் செய்ய முடியாது என்கிறது ஆர்எஸ்எஸ். இது பெண்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தும், வெறும் போகப்பொருளாக கருதும் ஆர்எஸ்எஸ்ஸின் ஆணாதிக்க சிந்தனையை, பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீடு கிடைக்கவிடாமல் செய்துவிட்டார்கள் என்று மோடி வடித்த நீலிக் கண்ணீரை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பறிபோகும் நீதித் துறையின் சுதந்திரம்

நீதித்துறை அரசுக்கு அடிமையாக அல்லாமல், சுதந்திரமாக  இயங்க வேண்டும். தன்னுடைய எதிர்கால சுய நலன்களுக்காக, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக தீர்ப்பளிக்கும் விதத்தில் நீதித் துறை சீரழியக் கூடாது. அதற்கு தலைமை நீதிபதிகளுக்கு பதவிக் காலம் முடிந்த பிறகு வேறு அரசு பதவிகள் வழங்கக் கூடாது என்கிறது சிஜேபி. இது சர்வாதிகாரம், பிற்போக்குத்தனம் என்கிறது ஆர்எஸ்எஸ். மூன்றாவது தூணான நீதிமன்றங்கள் சுதந்திரமாக அல்லாமல் ஆர்எஸ்எஸ் அடிமையாகவே நீதிபதிகள் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

ஊதுகுழல் ஊடகங்கள்

ஊதுகுழல் ஊடகங்களின் ஊடகவியலாளர் சொத்துக்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். அதானி, அம்பானிகளின் ஊடக லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும் என்கிறது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. அது ஸ்டாலினிஸ்ட், கம்யூனிஸ்ட் சென்சார் முறை என்றும் அது உள்நாட்டு மூலதனத்தின் மீதான கடும் தாக்குதல் என்றும் கூப்பாடு போடுகிறது ஆர்எஸ்எஸ்.

பெருமுதலாளிகள் விசுவாசம்

சிஜேபிக்கு எதிராகப் பேசி, தனது பெருமுதலாளிகள் விசுவாசத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது ஆர்எஸ்எஸ். ”உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பம் வேண்டுமானால், உலகத் தரம் வாய்ந்த மூலதனம் வேண்டும். கார்ப்பரேட் மூலதனம் என்பது தேசத்தின் உள்ளார்ந்த, உயிர்த்துடிப்பு மிக்கது, தவிர்க்க முடியாதது. அதுவே வேலை வாய்ப்பை உருவாக்கும் ஆற்றல் படைத்தது. அத்தகைய மூலதன சிருஷ்டிகளை தாக்கக் கூடாது என்கிறது ஆர்கனைசர். அது, இந்த தேசம் என்பது உழைக்கும் மக்களுக்குச் சொந்தமானது என்பதை மறுதளிக்கிறது.

ஜென் Z செய்யும் ஆட்சி மாற்றம்

கரப்பான்பூச்சிகளுக்கு எதிராக ஒரு விரிவான பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆர்எஸ்எஸ் உள்ளாகி இருக்கிறது. இந்த கரப்பான்பூச்சி இயக்கம் இருக்கலாம், மறையலாம். ஆனால், நிலவுகின்ற ஆட்சிமுறை, சமுதாய, பொருளாதார பிரச்சனைகள் காரணமாக வேறொரு கரப்பான் பூச்சி மீண்டும் உதிக்க வாய்ப்புள்ளது என்பதை மறுக்க முடியாது. ஏனென்றால், உலகம் முழுவதும் ஜென் Z தலைமுறை எழுந்து வருகிறது. லத்தீன் அமெரிக்கா, பொலிவியா, வெனிசூலா முதல் சமீபத்திய பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் வரை ஆட்சி மாற்றங்களுக்கு இளைய தலைமுறையின் எழுச்சியே காரணமாகியிருக்கிறது. அதுபோன்றதொரு நாள் இந்தியாவிலும் வருவது வெகுதொலைவில் இல்லை என்பதைத்தான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் உதயமும் அது வைரலாகும் வேகமும் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.


07 June, 2026