உருவாக்கப்படும் அடிமைத் தொழிலாளர்கள் மறுக்கப்படும் மாநில உரிமைகள்

$articleData->title

உருவாக்கப்படும் அடிமைத் தொழிலாளர்கள் மறுக்கப்படும் மாநில உரிமைகள்

பிஜேபி தலைமையிலான மோடி அரசு, கார்ப்பரேட்டுகளுக்காக, கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும், கார்ப்பரேட் முதலாளிகளின் அரசுதான் என்பதை வெளிப்படையாகவும் தெளிவாகவும் மீண்டுமொரு முறை அறிவித்திருக்கிறது ஒன்றிய பட்ஜெட் 2026. தனியார் மயமாக்கம், பணமயமாக்கம், பொதுத் துறை நிறுவனங்களில் அரசு முதலீட்டை விற்பது என எல்லாவற்றையும் செய்து விட்டு, தற்போது, தொழிலாளர் அடிமைச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி தொழிலாளர் உழைப்பைக் கொள்ளை அடித்து, கார்ப்பரேட்டுகளுக்கு லாபம் சேர்ப்பதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது 2026 பட்ஜெட். 

மோடி அரசின் பட்ஜெட்டில் மக்கள் விரோத அம்சங்கள் இருப்பது என்பது வாடிக்கை. ஆனால், இந்த முறை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், குறிப்பாக தொழிலாளர் வர்க்கத்திற்கும் கூட்டாட்சி முறைக்கும் எதிரானது. 

அடிமைத் தொழிலாளர் சட்டங்கள்

நவதாராளவாத கொள்கையின் பின்னணியில், உழைப்புச் சந்தையை மலிவாக்குவதன் மூலம் கார்ப்பரேட்டுகளின் லாபத்தைப் பெருக்குவது தற்போதைய பட்ஜெட்டின் நோக்கமாக இருக்கிறது. எந்தவொரு தொழிலாளிக்கும் பணி நிரந்தரம் என்பது அவரது மாபெரும் வாழ்க்கைக் கனவு. ஆனால், அந்த பணி நிரந்தரத்தை, மதிப்பிற்குரிய வேலையை, மதிப்பிற்குரிய ஊதியத்தை ஒழித்துக் கட்டுவதுதான் அதன் நோக்கம். வேலைக்காக, கூலிக்காக நாள்தோறும் பரிதவிக்கக்கூடிய, உரிமைகள் ஏதுமற்றதோர் அடிமைத் தொழிலாளர் வர்க்கத்தை, அடுத்த நாள் வேலைக்கு, அடுத்த நாள் சோற்றுக்கு ஆலாய்ப் பறக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டதோர் தொழிலாளர் வர்க்கத்தை உருவாக்குவதுதான் மோடியின் மாபெரும் கனவு ஆகும். முதலாளி யார் எனத் தெரிந்துகொள்ள முடியாத, வேலை செய்யும் இடம் இதுதான் எனச் சொல்ல முடியாத, வேலை நேரம் இவ்வளவுதான் என வரையறுக்கப்படாத டெலிவரி தொழிலாளர்கள் போல நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தொழிலாளர்களையும் மாற்றுவதுதான் அவரது கனவு. இது டெலிவரி தொழிலாளர்களுக்கு மட்டும்தான் என்றல்ல, எதிர்வரும் காலங்களில் அனைத்து தொழிலாளர்களுக்கும் அதே நிலைமையை உருவாக்கிடும் முயற்சிதான் அது. செல்வச் செழிப்பில் உலக முதலாளிகள் பட்டியலில் முன்வரிசைக்கு வரும் அதானி-அம்பானிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, அடுத்த வேளை சோற்றுக்கு பரிதவிக்கும் தொழிலாளர் கூட்டத்தையும் பெருக்குவது என்பதே மோடி அரசின் வளர்ச்சி மாதிரியாக முன்வைக்கப்படுகிறது. ஒரு பாரபட்சமற்ற சமுதாயத்தைப் படைக்க வேண்டும் எனச்  சொல்லும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒரு இந்திய சமூகத்தைப் படைப்பதுதான் மோடியின் லட்சியமாக இருக்கிறது. அந்த லட்சியத்தை நிறைவேற்றும் நோக்கில்தான் தொழிலாளர் அடிமைச் சட்டத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன, விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கின்றன. இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் மீது உழைக்கும் மக்களின் மீது மோடி அரசு, பிஜேபி அரசு தொடுக்கும் போரின் ஒரு பகுதிதான் 2026 பட்ஜெட். 

அதிவேக சீர்திருத்த வண்டி

உழைப்பை எளிமைப்படுத்தும் நவீனமயமாக்கத்தின் மூலம் அல்ல, உற்பத்தித் திறனை உயர்த்துவதன் மூலம் அல்ல, உழைப்புச் சுரண்டலைத் தீவிரப்படுத்துவதன் மூலம் கொள்ளை லாபம் ஈட்டுவதை முதலாளிகளுக்கு எளிதாக்குவதுதான் இந்த பட்ஜெட்டின் தாரக மந்திரம். பட்ஜெட்டின் மூன்று கடமைகளில் முதல் கடமையை நிறைவேற்றுவதற்கான முதல் நிபந்தனை கட்டமைப்புரீதியான மாற்றங்கள் என குறிப்பிடப்படுகிறது. கட்டமைப்புரீதியான மாற்றங்களைச் செய்திட தேவையான புறச்சூழல் என்பது பொருளாதார சீர்திருத்தங்கள் என்கிறது. அதனை ரிஃபார்ம் எக்ஸ்பிரஸ் (அதிவேக சீர்திருத்த வண்டி என்கிறது மோடி அரசு) என்கிறது. அதுதான் தொழிலாளர் விரோத தொகுப்புச் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதாகும். இது பட்ஜெட்டில் மிகத் தெளிவாகவே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. 

வேலைவாய்ப்பை ஒழிக்கும் விபி-கிராம்-ஜி

ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டம், விபி-கிராம்-ஜி யாக அவதாரம் எடுத்ததும் அத்தகைய, கார்ப்பரேட் கொள்ளையை ஊக்குவிக்கும் ஒரு பரந்த சதித் திட்டத்தின் ஒரு பகுதிதான். ஊரகப் பகுதிகளில் வேலை கிடைப்பதை மறுப்பதன் மூலம், வறிய கிராமப்புறத் தொழிலாளர்களை நகரங்களை நோக்கி விரட்டியடிப்பதும், அதன் மூலம் மிகப்பெரும் வேலையற்ற பட்டாளத்தை உருவாக்கி, உழைப்புச் சக்தியை மலிவாக்கி, கொள்ளை லாபம் அடிக்க கார்ப்பரேட்டுகளுக்கு உதவுவதும்தான் அந்தச்  சதித்திட்டம். இருக்கும் வேலைவாய்ப்பை ஒழித்துக் கட்டுவதைத்தான் மோடி நாங்கள் கவர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை எனச் சொல்லி நியாயப்படுத்த முயற்சிக்கிறார். 

இந்திய விவசாயத்தைக் காவு கொடுக்கும் அமெரிக்க ஒப்பந்தம்

நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லாமல், டிரம்பின் கட்டளைக்கு அடிபணிந்து, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு வரியே கிடையாது என ஒப்புக் கொண்டிருக்கிறார் திருவாளர் மோடி. ஏற்கனவே மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்திய விவசாயத்தைக் காப்பதற்குப் பதிலாக காவு கொடுக்க சம்மதித்து இருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி. பட்ஜெட்டுக்கு முன்னோட்டமாக, விபி கிராம் ஜி, அமெரிக்க கட்டளைக்கு இணங்க நமது விவசாயத்தைக் காவு கொடுக்கும் ஒப்பந்தம் போன்றவற்றின் மூலம், பட்ஜெட் நடைமுறையை, இந்திய ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றிவிட்டது பிஜேபி – மோடி அரசு.

கூட்டாட்சி முறைக்கு சாவுமணி 

இரண்டாவது முக்கிய அம்சம், பட்ஜெட்டின் கூட்டாட்சி அமைப்பு முறைக்கு எதிரானது. இந்தித் திணிப்பை ஒப்புக்கொள்ளவில்லை என்ற காரணத்தால், சுமார் 3800 கோடிக்கும் மேல் தமிழக கல்வித் துறைக்கு வரவேண்டிய நிதியை திமிராக மறுத்திருக்கிறது மோடி அரசு. கோடானுகோடிக் கணக்கில் வரி செலுத்தும் மாநிலம் தமிழ்நாடு. ஆனால், முந்தைய நிதி ஆணையங்களைத் தொடர்ந்து சமீபத்திய 16வது நிதி ஆணையத்தின் கொள்கையும் கூட நிதி பகிர்வு கொள்கையை தமிழ்நாடு மற்றும் பிஜேபி அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எதிரானதாகவே உருவாக்கி இருக்கின்றன. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதைப் போல தமிழ்நாடு வழங்கிய நிதி உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு, கேரளாவுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பங்கு மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி மறுக்கப்படுகிறது. நிதி கூட்டாட்சி முறைக்கு மரண அடி கொடுக்கப்படுகிறது.

வரிப் பகிர்வு அநீதி

நாட்டின் மொத்த வரி வருமானத்தில் 41 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதனை 50 சதவீதமாக உயர்த்திட வேண்டும் எனும் மாநிலங்களின் கோரிக்கை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இம்முறையும் மறுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் மொத்த வரி வருமானத்தில் தமிழ்நாட்டின் பங்கு கிட்டத்தட்ட 13 சதவீதம் இருந்தபோதும் வெறும் 4.08 சதவீதத்தை மட்டுமே ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்கி வருகிறது. ஆனால் மிகக்குறைவாக பங்களிக்கும் உத்தர பிரதேசத்துக்கு 17.09 சதவீதம் வழங்கப்படுகிறது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு, கூட்டாட்சி முறைக்கு எதிரானது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்தியப் பொருளாதாரத்தில் 9.6 சதவீதம் ஆகும். மக்கள் தொகையில் 6 சதவீதம் ஆகும். ஆனால், 16வது நிதி ஆணைய பரிந்துரைப்படி, வரி வருமானத்தில் 4 சதவீதத்தை மட்டுமே திரும்பப் பெறுகிறது.

புறக்கணிக்கப்படும் விவசாயம்

டிஜிட்டல் விவசாயம், செயற்கை நுண்ணறிவின் ஆலோசனை, வேளாண் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பற்றி பேசும் பட்ஜெட், காவேரி டெல்டா வின் வறட்சி பற்றியோ, வானம் பார்த்த பூமியாக இருக்கும் தென் மாவட்ட வளர்ச்சி பற்றியோ, சிறு, குறு, நிலமற்ற விவசாயிகள் பற்றியோ, குறைந்தபட்ச ஆதார விலை, சாகுபடியாளர் நலன் ஆகியன பற்றியோ கிஞ்சித்தும் அக்கறை செலுத்தவில்லை. கார்ப்பரேட் பாணியிலான, வணிகமய விவசாயம் பற்றி, கார்ப்பரேட் நலன் பற்றி மட்டுமே கவலைப்படுகிறது.

தனியார்மயமாக்கப்படும் கல்வி

2026 பட்ஜெட் தமிழ்நாட்டில் தொழில் முதலாளிகள், தகவல் தொழில்நுட்ப தொழிற்சாலைகள் கொழுத்திட உதவ தயாராக இருக்கிறது. ஆனால் விவசாயம், பொதுக் கல்வி மற்றும் தொழிலாளர்களை மையமாகக் கொண்ட மேம்பாட்டை ஒழித்திட எத்தனிக்கிறது. வாழ்வாதாரத்தை பலி கொடுத்து, மூலதனத்தைக் கொழுக்க வைக்கும் வளர்ச்சி மாதிரியை வலுப்படுத்த முயற்சிக்கிறது.

டிஜிட்டல் பல்கலைக் கழகங்கள், எடுடெக் (கல்வி தொழில் நுட்பம்), முதலாளிகளுக்கு உதவும் திறன்சார் பயிற்சி பற்றி பேசும் பட்ஜெட், மாநில பல்கலைக்கழகங்களுக்கு நிதியை மறுக்கிறது. மாணவர் உதவித் தொகை நிதியைக் குறைக்கிறது. இலவச மாணவர் விடுதிகளைப் புறக்கணிக்கிறது. அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தப்படுகிறது. சமூக நீதி அடிப்படையிலான கல்வி களவாடப்படுகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கை எனும் பெயரில் மாநில உரிமைகளைக் கட்டுப்படுத்துவது, கூட்டாட்சித் தத்துவத்தை குழி தோண்டிப் புதைத்து ஒற்றை ஆட்சி, ஒருபடித்தான ஆட்சி, சர்வாதிகார ஆட்சியை வலுப்படுத்த கடும் முயற்சி மேற்கொள்கிறது. 

ரயில்வே ஒதுக்கீடு அநீதி

2026–27 ரயில்வே பட்ஜெட்டில், ஆந்திரப் பிரதேசத்துக்கு ₹10,134 கோடி, மகாராஷ்டிராவுக்கு ₹23,926 கோடி, உத்தரப் பிரதேசத்துக்கு ₹20,012 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்கு வெறும் ₹7,611 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன.

மக்கள் தொகை, தொழில், சரக்கு போக்குவரத்து ஆகியவற்றில் முன்னணியில் உள்ள தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடு ஒப்பீட்டளவில் குறைவானது.

இரண்டே இரண்டு விசயங்கள்தான் தமிழ்நாடு பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஒன்று தாதுப் பொருள் கொள்ளை மாபியாக்களுக்கு உதவுவதற்காக அரியவகை தாதுப் பொருள் தாழ்வாரம் அமைப்பது ஆகும். செல்வச் சீமான்கள் களித்திட சென்னையிலிருந்து பெங்களூருக்கும் ஹைதராபாத்துக்கும் புல்லட் ரயில் விடுவதும்தான்.

மறுக்கப்படும் மாநில உரிமைகள்

2026–27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, ஒன்றிய அரசு, “வளர்ச்சி, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம்” என்ற முழக்கங்களுடன் முன்வைத்துள்ளது. ஆனால் அந்தப் பட்ஜெட்டை தமிழ்நாடு பார்வையில் ஆய்வு செய்தால், இது வளர்ச்சியை விட அதீத மத்தியத்துவமயமாக்கம், வெட்டிச் சுருக்கப்படும் மாநில உரிமைகள், புறக்கணிக்கப்படும் சமூக நீதி என்பதாகவே வெளிப்படுகிறது.

பட்ஜெட் 2026 தமிழ்நாட்டு உழைக்கும் மக்களுக்கு எதிரானது. இந்திய கூட்டாட்சி முறைக்கு எதிரானது. அடிமைத் தொழிலாளர் வர்க்கத்தை மட்டுமல்ல, அடிமை மாநிலங்களை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டதுதான் பட்ஜெட் 2026.


20 February, 2026