பல்கலைக்கழக மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்களை கொடூரமாக சித்திரவதை செய்த டெல்லி பாஜக அரசின் காவல்துறை.

$articleData->title

பல்கலைக்கழக மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்களை கொடூரமாக சித்திரவதை செய்த டெல்லி பாஜக அரசின் காவல்துறை.

கடந்த மார்ச் 12ஆம் தேதி சீருடையில் இல்லாமல்  வந்த காவல்துறையின் “சிறப்புப் பிரிவு” பல்வேறு முற்போக்கு அமைப்புகளைச் சார்ந்த மாணவர்களையும் சமூக செயற்பாட்டாளர்களையும் அழைத்துச் சென்றனர். யாருக்கும் எந்தத் தகவலும் அளிக்கவில்லை. ஒருவரை கைது செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய உச்ச நீதிமன்றத்தின் டி கே பாசு வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை. அழைத்துச் சென்றவர்களை காவல் நிலையத்திற்கும் கொண்டு செல்லவில்லை. அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல், அவர்களிடமிருந்த செல்போன், இதர டிஜிட்டல் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. அவர்கள் இரண்டு நாட்களாக கொடூர சித்திரவதை முகாமில் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் இது போல் அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டவர்களில் சிலரும் இதில் அடங்குவர். டெல்லி இரட்டை எஞ்சின் ஆட்சியானது மாற்றுக் கருத்துடைய எவராக இருந்தாலும் காவல்துறையைக் கொண்டு ஒடுக்கி வருகிறது. அச்சுறுத்துவது, பொய் வழக்கு போடுவது, தாக்குதல் நடத்துவது என்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டதன் பேரில், டெல்லி உயர்நீதிமன்றம் மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வழக்கை எடுத்துக் கொண்டது. ஆனால் மார்ச் 14ஆம் தேதியே சித்திரவதைக்கு உள்ளானவர்களை காவல்துறை விடுதலை செய்துவிட்டு நீதிமன்றத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்று தெரிவித்தது.

கைது செய்யப்பட்டவர்கள் ஆண்கள், பெண்கள், வழக்கறிஞர்கள் என  மாணவர் இயக்கம், தொழிற்சங்க இயக்கம், சட்ட உதவி அமைப்புகளைச்  சேர்ந்தவர்கள். மஸ்தூர் அதிகார் சங்காதன் அமைப்பின் ஷிவ் குமார், மாணவர் செயற்பாட்டாளர் இலக்கியா, மாணவர் அவினாஷ், தொழிலாளர் பிரச்சினைகளை எழுதி வரும் "நஜாரியா"  பத்திரிகையோடு தொடர்பில் இருக்கும் ருத்ரா, மஸ்தூர் அதிகார் சங்காதனின் மன்ஜித் குமார், அவரின் நண்பர் அமன், மாணவர் கவுரவ் ஆகியோருடன் இன்னும் சிலரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

மக்கள் சிவில் உரிமைக் கழகம் உடனடியாக இணைய வழியில் பொது விசாரணைக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த விசாரணையில் பிரசித்தி பெற்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களான விருந்தா குரோவர், மிகிர் தேசாய் ஆகியோருடன் தமிழ்நாட்டின் ஹென்றி திபேன், அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்க தேசிய செயலாளர் கிளிஃப்டன் ரோசாரியோ ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பியூசிஎல் பொதுச் செயலாளர் சுரேஷ், தலைவர் கவிதா ஸ்ரீவஸ்தவா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

காவல்துறை சித்திரவதைகளை அனுபவித்த பலரும் நிகழ்ந்த கொடூரத்தை விளக்கிப் பேசினர். இளைஞர்கள், புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், படிப்பாளிகளாகவும் இருந்த காரணத்தினால் அவர்களால் நிகழ்வு நடந்த இடம், தங்களைத் தாக்கிய காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் உட்பட அனைத்து விவரங்களையும் சொல்ல முடிந்தது.

பேசிய பலரும் அவரவர்களுக்கு நடந்த கொடுமைகளைப் பற்றி கூறினர். ஆடைகளை அவிழ்க்கச் செய்து, தினமும் 5 மணி நேரம், 6 மணி நேரம் காவல்துறையினர்  லத்தியால் அடித்துள்ளார்கள்,  மின்சாரம் பாய்ச்சியுள்ளார்கள்,  நெற்றியில், மார்பில் துப்பாக்கியை வைத்து என்கவுண்டர் செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளார்கள், ஆடை இல்லாமல் குளிரூட்டப்பட்ட அறையில் பல மணி நேரம் நிற்கவைத்து கொடுமைப்படுத்தியுள்ளார்கள். அவர்களில்  ஒருவரின் கண்களை கட்டி வாகனத்தில் கொண்டு சென்று, யாரும் இல்லாத இடத்தில் இறக்கி விட்டு என்கவுண்டர் செய்யப் போவதாக மிரட்டி, துப்பாக்கியால்  வானை நோக்கி இரு முறை சுட்டுள்ளார்கள். நிர்வாணமாக்கப்பட்டவர்களை ஒருவருக்கொருவர் பாலியல் உறவில் ஈடுபட நிர்பந்திக்கபந்திக்கப்பட்டுள்ளார்கள். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காணாமல் போன நஜீப்புக்கு நடந்ததுதான் உங்களுக்கும் நடக்கும், நஜீப் விசயத்தில் இதுவரை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறி  காவல்துறையினர் மிரட்டியுள்ளனர்.

 இவர்கள் மோடி அரசாங்கத்துக்கு எதிரான கருத்து  கொண்டவர்கள், ஆகையால், இவர்களை பேச விடக்கூடாது, செயல்பட விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த சித்திரவதை அரங்கேற்றப்பட்டது. ஆனால், இப்போது அவர்கள் தங்கள் முகத்தை மறைத்துக் கொள்ளாமல், நெஞ்சுரத்தோடு தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை, போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் முதற்கொண்டு தெரிவித்திருக்கிறார்கள் எனும் போது அவர்களின் அசாத்திய துணிச்சலைக் கண்டு வியப்படைவதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மிகிர் தேசாய் குறிப்பிட்டார். இந்தத் தாக்குதல் மதம், சாதி, பாலின அடையாளம் (sexual orientation) என்ற அடிப்படையிலேயே நடத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர் இந்த விவகாரத்தை மனித உரிமை ஆணையம், பட்டியலின ஆணையம், சிறுபான்மையினர் ஆணையம், நீதிமன்றம் என அத்தனை மேடைகளிலும் எழுப்ப வேண்டும். நீதி கிடைக்க வேண்டும். இப்படி கொடிய சித்திரவதை செய்தவர்களை பொறுப்பாக்க வேண்டும் என உறுதிபடத் தெரிவித்தார்.

பரம் பீர் சிங் சைனி தீர்ப்பின் படி காவல் நிலையங்களிலும் விசாரணைக் கூடங்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் கட்டாயமாக நிறுவப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் விருந்தா குரோவர், அந்தப் பதிவுகளை பாதுகாப்பதற்கு உடனடியாக நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றார். (ஏற்கனவே நீதிமன்றத்தில் அதற்கான உத்தரவு பெறப்பட்டிருக்கிறது) நீதிமன்றம் எப்போதுமே இது போன்ற அமைப்புகளை, செயல்பாட்டாளர்களைப் பொறுத்தவரை, வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவர்கள், இடையூறு செய்பவர்கள் என்ற கருத்தைக் கொண்டிருந்தாலும், நாம் நடந்த கொடூரத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஆனதெல்லாம் செய்ய வேண்டும் என்றார். இது தொடர்பான கூருணர்வை நீதிமன்றத்துக்கும் பொதுச் சமூகத்துக்கும் ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று குறிப்பிட்டார்.

மக்கள் கண்காணிப்பகத்தின் வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேசும்போது இப்படிப்பட்ட கொடூர சித்திரவதையை அரங்கேற்றியவர்களை தண்டிக்க முடியும் என்பதற்கு தமிழ்நாட்டில் உதாரணங்கள் இருப்பதாகக் கூறி அவர்களுக்கு நம்பிக்கை அளித்தார்.

தமிழ்நாட்டின் சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ், ஜெயராஜ் என மகனும் தந்தையும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஐந்தாண்டு காலமாக தொடர்ந்து போராடி மிகச் சமீபத்தில் பத்து காவல்துறையினரும் குற்றவாளிகள் என்ற தீர்ப்பை பெற்றிருக்கிறோம். இந்த ஐந்து வருட காலத்திலும் உச்ச நீதிமன்றம் வரை அவர்கள் சென்றால் கூட அவர்களுக்கு பிணை கிடைக்காமல் பார்த்துக் கொண்டோம். அதேபோல், தமிழகத்தின் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படக்கூடிய அதிகாரி ஒருவரால் கொல்லப்பட்ட தனது மகனுக்காக குருவம்மாள் என்ற 72 வயது மூதாட்டி அலைந்து திரிந்து சம்பந்தப்பட்ட அதிகாரி காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட, இப்போது உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார் என்றார். ஆனால், தமிழ்நாட்டின் சமூக நீதி அரசோ, அவரது இடைநீக்கத்தை ரத்து செய்து மீண்டும் அவரைப் பணியில் அமர்த்தியது என்றார்.

வழக்கறிஞர் க்ளிஃப்டன், காவல்துறையினரின் இந்த கொடிய செயலுக்கு கண்டிப்பாக அவர்கள் விலை கொடுக்க வேண்டும் என்பதை நாம் உறுதி செய்வோம், தண்டனையிலிருந்து அவர்களை தப்பிக்க விடக்கூடாது என்றார்.

காவல்துறை சித்திரவதைக்கு எதிரான மாணவர்கள், இளைஞர்கள் உட்பட அனைவரையும் உள்ளடக்கிய ஒரு தேசம் தழுவிய இயக்கம் தேவை என கூட்டம் அறைகூவல் விடுத்தது.

வழக்குக்கு வேண்டிய ஆவணங்கள், விவரங்களைத் திரட்டி கொடூர சித்திரவதையில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனையை  பியூசிஎல் அமைப்பு மற்ற அனைவருடனும் இணைந்து உறுதி செய்யும் என அறிவிக்கப்பட்டது.

08 April, 2026