முப்பது லட்சம் பக்கங்கள், படங்கள், காணொலிகள் கொண்ட எப்ஸ்டீன் கோப்புகள் வெளியானதால் உருவான புயல் தொடர்ந்து உலகில் மோதி வருகிறது. இன்னும் குறைந்தது முப்பது லட்சம் பக்கங்கள் வெளிவரக் காத்துக் கிடக்கின்றன. பெயர்களை மறைக்கவும் எப்ஸ்டீன் கோப்புகளின் திட்டமிடப்பட்ட வெளியீட்டைத் தடம் புரளச் செய்யவும் ட்ரம்ப் நிர்வாகம் தீவிரமாக முயன்று வருகிறது. இவ்வேளையில், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களும் உலகெங்கிலுமுள்ள நீதியைக் கோருபவர்களும் எப்ஸ்டீன் கோப்புகள் முழுமையாக வெளியிடப்படுவதைக் கோருகின்றனர். அதுமட்டுமல்லாமல், சிறுமிகள் மீதான பாலியல் அத்துமீறல் குற்றம், குழந்தைகளையும் பெண்களையும் கடத்தியது, பாலியல் சுரண்டல் ஆகிய கொடூர குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளும் அதற்கு உடந்தையாக இருந்த அனைவரும் பொறுப்பாக்கப்படும் உரிய நடவடிக்கைகளையும் கோருகின்றனர். தாமதமாகவேனும், உலகின் பல நாடுகளில் இருந்தும் பதவி விலகல்கள், கைதுகள், சோதனைகள், விசாரணைகள், மன்னிப்புக் கோரல்கள் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
ஆயினும் இந்தியாவில், இந்த அவப்பெயர் பெற்ற எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றுள்ள இந்தியர்களின் பெயர்களை அரசாங்கமும் முன்னணி ஊடகங்களும் பாதுகாத்து வருவதைக் காண்கிறோம். பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி, எப்ஸ்டீனுடனான தனது நெருக்கமான தொடர்பை சில்லரை பிரச்சனையாகவும் நியாயப்படுத்தியும் பேசி வருகிறார். அதேவேளையில் பிரதமர் மோடி தனது கறைபடிந்த சகாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கிறார். வெளியான கோப்புகளில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான பில் கேட்ஸ், டெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சிமாநாட்டில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பும் அளிக்கப்படவிருந்தது. ஆனால் உலகளாவிய எதிர்ப்புக்கு அஞ்சி கடைசி நேரத்தில் அவராகவே விலகிக்கொண்டார். அப்பட்டமாகவே, மோடி அரசாங்கம் மறைப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. மேலும், நாடாளுமன்றத்தில் தனக்குள்ள அறுதி பெரும்பான்மையின் அடிப்படையில் எவ்விதப் பொறுப்புமின்றித் தப்பிவிட முடியும் என்றும் அது நம்புகிறது.
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிப்படும் குற்றத்தின் அளவு மட்டுமல்ல, உலகின் பெரும் பணக்கார, அதிகாரம் படைத்த பலர் அதற்கு உடந்தையாக இருந்ததும் சொல்லப்போனால் அவர்களின் பங்கேற்பும் தான், எப்ஸ்டீன் கோப்புகளை முன்னெப்போதும் கண்டிராத ஒரு பயங்கர திகில் கதையாக மாற்றுகிறது. பல வழிகளில், அமெரிக்க-இஸ்ரேல் அச்சின் ஒரு ரகசிய சுரங்க அறையாக எப்ஸ்டீன் தீவு செயல்பட்டதாக தோன்றுகிறது. சிறுமிகள் மீதான பாலியல் அத்துமீறல் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு அதிகாரவர்க்க தரகர், 2008 ம் ஆண்டிலேயே தனது குற்றங்களை ஒப்புக் கொண்டவர், ஏறக்குறைய முழுமையான தண்டனை விலக்குடன் மேலும் பத்தாண்டுகள் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். அதன்பிறகு, உயர் பாதுகாப்பு கொண்ட சிறையில் இறந்து கிடந்ததாகக் கூறப்பட்டது. ட்ரம்ப் அமெரிக்க அதிபராகி, தடையற்ற மூலதனக் குவிப்பின் மீதும் ஏகாதிபத்தியக் கொள்ளையின் மீதும் கட்டுப்பாட்டை விதிக்கும் எந்தவொரு விதிமுறையையும் அல்லது நிறுவனத்தையும் காலில் போட்டு மிதிக்கத் தொடங்கியதும் இந்தப் பத்தாண்டுகளில்தான்.
மற்ற நாடுகளை போலவே இந்தியாவிலும் பெரும் பணக்காரர்கள், சக்திவாய்ந்தவர்களின் கலாச்சாரம், எப்ஸ்டீனின் குற்றங்களைப் புறக்கணிக்கவும் கொண்டாடவும் அனுமதித்ததற்கு, அதே பெண் வெறுப்பும் வழக்கமான பாலியல் வன்முறை, சுரண்டல், தண்டனை பற்றிய அச்சமின்மை ஆகியவையே காரணமாக இருக்கிறது என்பதை அறிவோம். ஆனால் இதற்கும் அப்பால், எப்ஸ்டீன் மற்றும் அவரது சந்தேகத்திற்குரிய நிழல் உலகுடன் ஹர்தீப் பூரி, அனில் அம்பானி போன்ற இந்தியர்களின் நெருக்கமான பிணைப்பை விளக்குவது எது?
2014 இல் டெல்லியில் மோடி அதிகாரத்திற்கு வந்ததைத் தொடர்ந்து எப்ஸ்டீன் வலைப்பின்னலுடனான அவர்களின் இணக்கமான உறவு வளர்கிறது என்றும் இருவரும் தெளிவாக புதிய ஆட்சியின் ஏஜண்டுகளாகவே செயல்படுகிறார்கள் என்பதையும் எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படுத்துகின்றன. அனில் அம்பானி அதை வெளிப்படையாகச் செய்கிறார்; ஹர்தீப் பூரியோ, இந்தியாவில் மோடியின் டிஜிட்டல் இந்தியா பரப்புரை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பே தான் அதை பரப்பத் தொடங்கிவிட்டதாகக் கூறியிருக்கிறார். மோடியின் மாபெரும் உலகளாவிய அந்தஸ்துக்கு சான்றாக முன்நிறுத்தப்படக்கூடிய, மோடி-ட்ரம்ப் இடையேயான இணக்கமான உறவு என்று சொல்லப்படும் மாயையை உருவாக்க மோடி அரசாங்கம் எப்ஸ்டீனின் சேவைகளை நாடியதா? பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கூடிக் குலாவி ட்ரம்பின் தயவைப் பெறுமாறு மோடிக்கு வெற்றிகரமாக ஆலோசனை வழங்கியதாகவும் கூட எப்ஸ்டீன் உரிமை கோருகிறார்.
மோடி பிரதமரான பின் இந்தியாவின் மேம்பட்ட உலகளாவிய அந்தஸ்து என்ற புனைவை பரவலாக்க மோடி ஆட்சி ஏன் எப்ஸ்டீன் உதவியை நாடியது? 2002 குஜராத் படுகொலைக்குப் பிறகு, பாஜக மத்தியில் அதிகாரத்தை இழந்திருந்தது. மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, அய்ரோப்பாவின் பல நாடுகளில் மோடி அதிகாரப்பூர்வமாக விரும்பத்தகாத நபராக ஆக்கப்பட்டிருந்தார். இந்தியாவிற்குள் மோடியின் அரசியல் மறுவாழ்வு, 'துடிப்பான குஜராத்'* முழக்கத்துடனும் கார்ப்பரேட் ஆதரவுடனும் தொடங்கியது. ஆனாலும் அவரது உலகளாவிய தனிமைப்படுதல் தொடர்ந்தது. இந்தத் தனிமைப்படுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் சர்வதேச அதிகார உயரடுக்கில் ஒரு புதிய பங்கேற்பாளராக மோடியை அறிமுகப்படுத்துவதற்கும் எப்ஸ்டீனிடம் இந்த ஆட்சி ஒரு வழியை தேடியுள்ளது.
மோடியைப் பொறுத்தவரை, உள்நாட்டு நிர்வாகம் முதல் சர்வதேச இராஜதந்திர உறவுகள் வரை அனைத்துமே தனிப்பட்ட நிகழ்ச்சி நிர்வாகம் தான். அமெரிக்காவிற்கான முன்னாள் இந்தியத் தூதர் ஹர்தீப் பூரி, அம்பானி சாம்ராஜ்யத்தின் பகட்டான, தோல்வியடைந்த வாரிசான அனில் அம்பானி போன்ற மோடியின் தூதுவர்கள், மோடி முத்திரையை விளம்பரப்படுத்த எப்ஸ்டீனைப் பயன்படுத்தினர். மேலும் அந்தச் செயல்பாட்டிற்கான பணம் கொழுத்த வெகுமதிகளாக பெட்ரோலிய அமைச்சர் பதவியையும் ரஃபேல் ஒப்பந்தத்தையும் பெற்றனர்; நீங்கள் விரும்பினால் அவற்றை தரகுக் கட்டணம் என்று கூட சொல்லிக் கொள்ளலாம். ஆனால், ஒரு ட்ரம்புக்குத் தேவைப்படும் வரை மட்டுமே ஒரு எப்ஸ்டீன் பயனுள்ள பொருளாக இருக்க முடியும். 2019 வாக்கில் எப்ஸ்டீன் அந்தப் பயன்பாட்டை இழந்துவிட்டார். இப்போது, ட்ரம்பின் ‘மாகா' (அமெரிக்காவை மீண்டும் உன்னதமாக்குவோம்) திட்டத்திற்கு இந்திய நலன்களை அடகு வைப்பதன் மூலம் டொனால்ட் ட்ரம்ப் உடனான தனது 'நட்பை' மோடி மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இன்றைய உலகளாவிய முதலாளித்துவத்தின் ரகசிய நாட்குறிப்புகளைப் போன்றவையே எப்ஸ்டீன் கோப்புகள். இந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ள இந்தியப் பெயர்கள் - எப்ஸ்டீனுடன் மிகவும் நெருக்கமாகக் கைகோர்த்துச் செயல்பட்ட பூரி மற்றும் அம்பானியாக இருந்தாலும் சரி, அல்லது பூரியும் அம்பானியும் யாருடைய சார்பாக எப்ஸ்டீன் வலைப்பின்னலுடன் தொடர்பு கொண்டார்களோ அந்த நரேந்திர மோடியாகவே இருந்தாலும் சரி - இவை தற்செயலான பதிவுகள் அல்ல. மோடி அரசாங்கம் இந்தியாவை எவ்வாறு வழி நடத்துகிறது என்பதையும் நமது அமைச்சர்களும் கார்ப்பரேட்டுகளும் அதிகார வெறி மற்றும் செல்வத்திற்கான வேட்கையில் எத்தகையவர்களுடன் கூட்டு வைத்திருக்கிறார்கள் என்பதையும் அவை நமக்குச் சொல்கின்றன. இந்தியாவின் பல்வேறு அதிகாரப் பதவிகளில் உள்ள எப்ஸ்டீன்-கறைபடிந்த நபர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கான போராட்டம் என்பதே, எப்ஸ்டீன் மற்றும் அவரது பரந்த, ஒன்றோடொன்று இணைந்த வலைப்பின்னல்களின் அங்கமாக உள்ள பெரும் பணக்காரர்கள், சக்திவாய்ந்தவர்கள் நடத்திய விரிவான குற்றங்களில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு நியாயமும், நீதியும் கோருகிற போராட்டத்தின் முக்கிய பகுதியாகும். அதே சமயம், இது இந்தியாவின் நீண்டகால முக்கியத்துவம் வாய்ந்த தன்னாட்சிக்காகவும் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் அடிபணிந்து நடப்பதையும் அவர்களது புவியரசியல் சதிக்கு உடந்தையாக இருப்பதற்கும் எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியுமாகும்.
தலையங்கம்,
லிபரேஷன், மார்ச் 2026
தமிழாக்கம்: விஜி
குறிப்புகள்: 'வைப்ரேண்ட் குஜராத்’ - கார்ப்பரேட் ஆதரவுடன் 2003 ஆம் ஆண்டில் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட, “துடிப்பான குஜராத்" என்பது முதலீடுகளை ஈர்க்கவும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் உலகளாவிய வணிக கூட்டணிகளை உருவாக்கவும் குஜராத் மாநில அரசாங்கம் நடத்திய ஒரு முக்கிய சர்வதேச மாநாடும் இயக்கமும் ஆகும்.
