தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோருடன் பாஜகவின் ஆறு மாநிலங்களின் முதல்வர்களும் வரவிருக்கிறார்களாம். புதுச்சேரியில் ‘சாலை உலா’ சென்று வந்த மோடி சென்னையில் தங்கினாலும் இம்முறை தமிழ்நாட்டில் பரப்புரையில் ஈடுபடவில்லை. வெகு சிலரை மட்டும் அழைத்துப் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறுவது மத்திய ஆட்சிக்கு மிகவும் அவசியம் என்று மோடி சொன்னதாக செய்திகள் சொல்கின்றன. எதையும் செய்து வெற்றி பெற பாசிச சங்கிக் கும்பல் முயற்சிக்கும். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. அந்த தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 164 தொகுதிகளில் தே.ஜ.கூட்டணி கைப்பற்றி சந்திரபாபு நாயுடு முதல்வரானார். மத்தியில் மோடி ஆட்சி இவரின் தயவிலும்தான் நீடித்துக் கொண்டிருக்கிறது. ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிய தில்லுமுல்லு மோசடி நடந்துள்ளது, இரவு 8 மணியிலிருந்து அதிகாலை 5 மணிக்குள் கிட்டத்தட்ட 52 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதுவும் நள்ளிரவு நேரத்தில் 6 வினாடிகளில் 17 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்று குற்றம் சுமத்தியுள்ளார் பிரபல பொருளாதார வல்லுநர் பரகல பிரபாகர். மொத்த வாக்குகளில் 4.16% வாக்குகள் நள்ளிரவு 11.45 லிருந்து 2 மணிக்குள் பதிவாகியுள்ளது என்கிறார். வாக்குப்பதிவு நடந்த மே 13 அன்று மாலை 5 மணிக்கு 68.04% வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி சொன்னார். இரவு 11.45 மணிக்கு 76.50% வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் நான்கு நாட்கள் கழித்து இறுதி வாக்குப் பதிவு 81.79% என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இது பற்றி அப்போதே எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இங்கும் இது போன்ற மோசடி நடக்காது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது. நெதன்யாகும் ட்ரம்ப்பும் ஈரான் மீது ஏவுகணைகளை வீசி வருவதைப் போல, பெரும்பான்மை பலம் இல்லாமலேயே, மோடியும் அமித்ஷாவும் இந்திய மக்கள் மீது கொத்து குண்டுகளை வீசி வருகின்றனர். மாற்றுப் பாலினத்தவரை ஆங்கிலேய ஆட்சியாளர் குற்ற சமூகம் போல் பாவித்து கொடூரமாக ஒடுக்கியது போல் மோடி ஆட்சியும் மாற்றுப் பாலின சமூகத்தின் மீது கொடூரத்தை ஏவும் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது. வறியவர்களுக்கு, விளிம்புநிலை மக்களுக்கு சேவை செய்து வரும் தொண்டு நிறுவனங்களை, சிறுபான்மை அமைப்புகளை ஒடுக்க வெளிநாட்டு நிதியுதவியை முறைப்படுத்தும் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இவற்றோடு கூடவே, வரும் ஏப்ரல் 16-18 தேதிகளில் நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தி, மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை 543ல் இருந்து 816ஆக அதிகரிப்பதற்கான மசோதாவையும் தொகுதிகள் மறுவரையறை மசோதாவையும் கொண்டு வர திட்டமிட்டுள்ளது மோடி அரசு. இதன் மூலம் பாஜகவுக்கு பாதகமாக உள்ள தென் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, வட மாநிலங்களில் அதிகரிப்பதற்கு வழிவகை செய்கிறது. தமிழ்நாடும் மேற்கு வங்கமும் தேர்தலில் மும்முரமாக இருக்கும் இச்சமயத்தில், இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாதபோது, எளிதாக மக்களவையிலும் மாநிலங்களவையிலும் மசோதாக்களை நிறைவேற்றிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுபற்றி ஏப்ரல் 4 அன்று கேரளாவில் பேசிய மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்தவே என்றார். சங்கிகள் ஜனநாயகத்தைப் வலுப்படுத்தப் போகிறார்களாம்! இப்படி அரசமைப்புச் சட்டம், நாடாளுமன்ற ஜனநாயகம், இந்தியாவின் மதச்சார்பற்ற சமூகப் பிணைப்பு எல்லாவற்றையும் கொடூரமாக அழித்துவரும் பாசிச பாஜகவை தூக்கித் திரியும் எடப்பாடி, இவைபற்றியெல்லாம் கவலைப்படமாட்டார். இப்படிப்பட்டவர்களை தமிழ்நாட்டிற்குள் காலூன்ற விடுவது தமிழ்நாட்டு மக்களுக்கு பேராபத்தாகும். ஆகவே, பாசிச பாஜக-அதிமுக-பாமக கூட்டணியைத் தோற்கடிப்பது தமிழ்நாட்டு மக்களின் முழுமுதற்கடமையாகும்.
