இந்தியா முழுவதும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் 2004 அமுல்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் 2003 லேயே ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அத்திட்டம் அமலுக்கு வந்து விட்டது. மத்திய, மாநில அரசாங்கங்கள் கடைப்பிடித்து வரும் நவ தாரளவாதக் கொள்கை, சிக்கன நடவடிக்கைகள் விளைவாக அரசு ஊழியர்கள் போராடிப் பெற்றப் பயன்களும் சலுகைகளும் தொடர்ந்து வெட்டி சுருக்கப்பட்டு வருகின்றன.
ஊதியத்தில் எவ்வித பிடித்தமும் இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தக் கேட்டு மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை இன்றளவும் முன்னெடுத்து வருகின்றனர்.
ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஜார்க்கண்ட் மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துவிட்டன.
ஒன்றிய அரசு, தமது அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை சென்ற ஆண்டு அறிவித்தது. அது பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஈடாக இல்லை என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக சென்ற சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் அரசானது ,தேர்தல் வாக்குறுதிப் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துமாறு கேட்டு தொடர் போராட்ட இயக்கங்களை அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் மேற்கொண்டு வந்த பின்னணியில், அரசு செயலாளர் கங்கன் தீப் சிங் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையின் பேரில் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு உத்தரவாத ஓய்வூதியத் திட்டத்தை(TAPS) அறிவித்தார். பிறகு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 50% உத்தரவாதமான ஓய்வூதியத்தை உறுதி செய்கிற அதே வேளை, அவற்றை தொடர்ந்து வழங்க ஏதுவாக அரசின் நிதி நிர்வாக நிலையையும் கணக்கில் கொண்டு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இத்திட்டத்தின்படி அரசு ஊழியர்கள் மாதா மாதம் 10% தொகையை பங்களிப்பு செலுத்த வேண்டும். ஓய்வு பெறும்போது 50 % உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும். பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பஞ்சப்படி உயர்வு ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்படும். ஓய்வூதியம் பெறுபவரின் மரணத்திற்குப் பிறகு அவர் குடும்பத்திற்கு 60% குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும். அதிகபட்சம் 25 லட்சத்திற்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும். 01.01.2026 க்கு முன்னர் பணியில் இருப்பவர்கள் புதிய ஓய்வூதிய திட்டம் அல்லது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் இவற்றில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்பவர்கள் ஓய்வூதிய தொகையில் ஒரு பகுதியை கம்ப்யூடேஷன் பண்ணிக் கொள்வதற்கும் வழிவகை உள்ளது. ஆனால், அவை பற்றிய விவரங்கள் இனிமேல் தான் தெரிவிக்கப்படும் என்கிறது அரசாணை. 01.01.2026 க்கு பிறகு பணியில் சேருபவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பல விவரங்கள் இன்னும் தெளிவாக விதிகளை உருவாக்கி வெளியிட்ட பிறகுதான் தெரிய வரும். உத்தரவாத ஓய்வூதியம் 50% வழங்குவதால் வருடத்திற்கு அரசாங்கத்திற்கு ரூ 11,000 கோடியிலிருந்து 13,000 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எப்படி இருந்த போதிலும், திமுக அரசாங்கம் பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதேசமயம் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை விட இது அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அனுகூலம் கொடுக்கும் திட்டமாக கருதப்படுகிறது. புதிய ஓய்வூதிய திட்டம் என்று பெயர் இருந்தாலும் அத்திட்டத்தின் படி ஊழியர் பங்களிப்பு 10%, அரசு தரப்பு பங்களிப்பு 10% அதனுடன் 7.5% வட்டி சேர்த்து ஒரு மொத்த தொகை ( lumpsum)மட்டுமே ஓய்வு பெறும் போது வழங்கப்பட்டு வருகிறது.
ஆகவே, இந்தத் திட்டத்தை பல்வேறு அரசு ஊழியர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் வரவேற்றுள்ளன.
அரசு ஊழியரிடம் பிடித்தம் செய்த தொகை திருப்பித் தரப்பட மாட்டாது என்பதால் அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்திகளும் நிலவுகிறது.
பல்வேறு குறியீடுகளில், பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலமாக தன்னை அறிவித்துக் கொள்ளும் தமிழ்நாடு அரசு, பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற வாக்குறுதியிலிருந்து பின் செல்லக்கூடாது. அரசு ஊழியர், ஆசிரியர் இயக்கங்கள் தளர்வில்லாமல் அதற்கானப் போராட்டங்களைத் தொடர வேண்டும்.
