தமிழ்நாடு அரசின் இடைக்கால விவசாய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் தருகிறது!

$articleData->title

தமிழ்நாடு அரசின் இடைக்கால விவசாய நிதிநிலை அறிக்கை 2026-2027

2026_2027ற்கான தமிழ்நாடு இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சரும், விவசாய நிதிநிலை அறிக்கையை விவசாயத் துறை அமைச்சரும் கடந்த 17.2.26 அன்று தனித்தனியே தாக்கல் செய்தார்கள். திமுகவின் ஐந்தாண்டு ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுடைய மறு வாசிப்பாகவே நிதிநிலை அறிக்கை வெளிவந்திருக்கிறது.

விவசாய அறிக்கையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஏற்கனவே அரைத்த மாவை மீண்டும் ஒரு முறை அரைத்துள்ளார். தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையும்  இந்திய ஒன்றிய பாஜக அரசின் 2026- 27 நிதிநிலை அறிக்கை போலவே விவசாயிகளை ஏமாற்றியுள்ளது.

ஆரவாரப் புள்ளி விவரங்கள்:-

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான அரசின் அறிக்கைகள் பின்வருமாறு பெருமைபட்டுக் கொள்கின்றன.

'2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி எட்டும் மாநிலமாக மாற்றுவது என்பதை இலக்காக வைத்து தமிழ் நாட்டை உயர்த்தும் பொறுப்பை  துவங்கிய திராவிட மாடல் முதல்வர் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சிக்கு உயர்த்தி தமிழ்நாட்டின் GSDP 11.19 % என்ற இமாலய இலக்கை எட்டியுள்ளார்.'

'திராவிட மாடலின் விவசாயத் துறை விளைவித்த சாதனைகளில் சில, விவசாயத் துறைக்காக 5 தனி நிதிநிலை அறிக்கைகள், மொத்தமாக ரூ.1,94,076 கோடி நிதி ஒதுக்கீடு, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த விவசாய வளர்ச்சித் திட்டத்திற்கு ஒதுக்கீடு ரூ.707 கோடி, 61 லட்சம் விவசாயிகள் பயன், 58,712 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மேம்பாடு....' .

தமிழ்நாடு இடைக்கால விவசாய நிதிநிலை அறிக்கை 2026-27ன் முக்கிய அம்சங்களாக  'நிலையான வளர்ச்சி, காலநிலைக்கு ஏற்ற விவசாயம் மற்றும் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி, சாகுபடி செய்யக்கூடிய நிலத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட  ரூ.47,248 கோடி செலவினத்தைக் கொண்ட பட்ஜெட்', 'விவசாய உற்பத்தியை அதிகரிக்க, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அதிக ஆதரவு தருவது, நேரடி நிதியுதவி மற்றும் உள்ளீட்டு (input) மானியங்கள் வழங்குவது

உயர் மகசூல் விதைகள், இயந்திர மானியம் விரிவாக்கம் செய்வது போன்ற பல எனச் சொல்லப்பட்டாலும் தமிழ்நாட்டில் உள்ள சிறு குறு ஏழை விவசாயிகளின் முக்கிய பிரச்சினைகளான, விவசாய கடன்களிலிருந்து விடுதலை, விவசாய விளைபொருள்களுக்கு கட்டுபடியாகும் விலைகள், தாங்கள் சாகுபடி செய்யும் நிலத்தின் மீதான உரிமைகள் போன்றவை பற்றி விவசாய நிதிநிலை அறிக்கையில் அறிவிப்புகளோ,  நிதி ஒதுக்கீடுகளோ, கொள்கை முடிவுகளோ எதுவுமில்லை.

விவசாயக் கடன் தள்ளுபடி இல்லை!

பிரதமராக மோடி  பதவியேற்றதிலிருந்து, இந்திய கார்ப்பரேட் பெரு நிறுவனங்களின் பல்வேறு வகையான கடன்களில், ரூ. 14 லட்சம் கோடி வரை தள்ளுபடி செய்துள்ளது. அதேவேளை, 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து வகை விவசாயக் கடன்களையும்  ஒன்றிய அரசு இதுவரை தள்ளுபடி செய்யவில்லை. அதனால், மாநில அரசாவது விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாடு விவசாயிகளிடம் தொடர்ந்து காணப்படுகிறது. ஆனால், திமுக வின் 2021 தேர்தல் அறிக்கை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்வதற்கு உத்தரவாதம் கொடுத்திருந்தபோதும் இந்த  நிதிநிலை அறிக்கையில் அதற்கான எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

2021 ஆம் ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கையில், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் அனைத்துவித விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய ரூ.12,110 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்து அதில் முதல் கட்டமாக சுமார் 5,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து அரசாணையும் வெளியிட்டுச் சென்றார். ஆனால், தற்போது  திமுக அரசின் இடைக்கால  நிதிநிலை அறிக்கையில், அதுபோன்ற விவசாயக்  கடன் தள்ளுபடி திட்டம் குறித்து எதுவும் காணப்படவில்லை.  எடப்பாடி பழனிச்சாமி விட்டுச்சென்ற ரூ. 7,110 கோடியை மட்டும் தள்ளுபடி  செய்துள்ளனர்.

அதிமுக ஆட்சி  காலத்தில் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன் தள்ளுபடி திட்டத்தில் பெரும் பாரபட்சம் இருந்தது. அதில் பணக்கார விவசாயிகள், மிராசுதார்கள் பலனடைந்தனர்.  கஜா புயலைத்  தொடர்ந்து பல மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்பட்ட  காலங்களில் 'மத்திய கால மறுமாற்று கடன்' பெற்ற  விவசாயிகளுக்கு ரூ.450 கோடி இன்று வரை தள்ளுபடி செய்யப்படவில்லை.  அதை அப்போதைய எடப்பாடி அரசும் கண்டு கொள்ளவில்லை.  இப்போதைய  திமுக அரசும் கண்டு கொள்ளவில்லை;  தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் பயிர்க் கடன் தேவையில் 25 % மட்டுமே கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படுகிறது. 'தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றுள்ள 70% சிறு குறு ஏழை விவசாயிகளின் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டு விவசாயிகள் பிரதான எதிர்க்கட்சிகளிடம் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

குறைந்தபட்ச ஆதார விலைக்கான அறிவிப்பு  இல்லை

பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான பால் கொள்முதல் விலை உயர்வு பற்றி அறிக்கையில் எதுவுமில்லை, அதேபோல், நெல் கொள்முதல் விலை உயர்வு (சத்தீஸ்கர், ஒடிசா போன்று குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 3100 விலை அறிவிப்பு)  வரும் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை. கடந்த 2024  நாடாளுமன்ற பொதுத்  தேர்தல் அறிக்கையில்,  கரும்பிற்கு டன் ஒன்றிற்கு ரூ.4000/- விலை தருவோம் என்று திமுக அறிவித்தது. அதுபற்றி இடைக்கால நிதிநிலை அறிக்கையில் எதுவும் காணப்படவில்லை. கடந்தாண்டு நிதிநிலை அறிக்கையில், 'அனைத்து நியாய விலை அங்காடிகளிலும் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்குவது பற்றி பரிசீலனை இருப்பதாக' அறிவிக்கப்பட்டது.  அறிவிப்பு இப்போதுவரை அறிவிப்பாகவே உள்ளது.

விவசாய சாகுபடி நிலப்பரப்பை அதிகரிப்பது ! ?

இந்த விவசாய  நிதிநிலை அறிக்கை 'சாகுபடி செய்யக்கூடிய நிலத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது' என அறிவிக்கப்பட்டது. ஆனால், சாகுபடி செய்யக்கூடிய நிலங்களை அதிகரிப்பதற்கு நில விநியோகத் திட்டங்கள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. மாறாக, 'இரட்டைப் பயிர்கள் சாகுபடி பரப்பளவை அதிகரிப்பது' என்ற அணுகுமுறை தான் கைக் கொள்ளப்படுகிறது.

குத்தகை விவசாயிகள் பிரச்னை:-

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள மடங்கள், கோவில்களின் நிலங்களில் குத்தகைக்கு பயிரிடும் இலட்சக்கணக்கான ஏழை விவசாயிகள் மின் இணைப்பு பெறமுடியாததால் ஒருபோகம் மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையை மாற்ற குத்தகை விவசாயிகளுக்கு நிலத்தின் மீது அதிகாரமளிக்க, ஆண்டு முழுவதும் விவசாயம் செய்ய மின் இணைப்பு பெற வழிவகுக்கும் அறிவிப்புகள் எதுவும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இல்லை.

நில உரிமை கோரிக்கைகள்:-

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காரணங்களால் நிலமிழந்த இலட்சக்கணக்கான பழங்குடியின, பட்டியல் சாதிகள் மற்றும் மிகவும் பிற்பட்ட ஏழை விவசாயிகள் உள்ளனர். கல்ராயன், சேர்வராயன் போன்ற மலைகளிலும் மேற்குத் தொடர்ச்சிமலை  வனப்பகுதிகளிலும், பனமரத்துப்பட்டி ஒன்றியம் அத்திப்பட்டி, சூரியூர் போன்ற கிராமங்களிலும் சாகுபடி நிலம் கோரி விவசாய மக்கள் தொடர்சியாகப் போராடி வருகின்றனர். இவை பற்றிய எவ்வித கொள்கை அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படவில்லை. அதேபோல், காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் உலர் இயந்திரங்கள் அமைப்பதற்கு எவ்வித அறிவிப்பும் இல்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் வேலை நாட்களை உயர்த்துவது, நிதி ஒதுக்கீடு செய்வது பற்றி, தனியார் சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்துவோம்  என்ற வாக்குறுதி பற்றி எதுவுமில்லை.

மோடி - எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை, ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலை உள்ளிட்ட பல தனியார் ஆலைகள் கரும்பு விவசாயிகள் பெயரில் 500 கோடி  ரூபாய்க்கு மேல் மோசடிகளை அரங்கேற்றியது. ஏதுமறியாத கரும்பு விவசாயிகளை அவர்கள் வாங்காத கடனுக்கு நிரந்தர கடனாளியாகியாக்கினர். அவர்கள்  ஆயிரம் நாள்களுக்கு மேலாகப் போராடி வருகிறார்கள். 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தடுப்போம், தனியார் சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்த முயற்சிப்போம்' என்ற வாக்குறுதிகள் எல்லாம் வழங்கப்பட்டன. அவை பற்றி எதுவுமே இல்லை. 

மொத்தத்தில், கடந்த தேர்தல் அறிக்கையில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை என்பது மட்டுமின்றி அவற்றை வருங்காலத்தில் நிறைவேதற்கான அறிவிப்புகள்கூட இல்லை நிதிநிலை அறிக்கையில். குறிப்பாக, விவசாயக் கடன்கள் -  கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி, கல்விக் கடன்கள் தள்ளுபடி, தொலைநோக்கு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள்  எதுவும் நிதிநிலை அறிக்கையில் காணப்படவில்லை. திமுக அரசின், இடைக்கால விவசாய நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே தருகிறது.


08 March, 2026