மக்கள் மாமன்றம் அமைந்தது

$articleData->title

மக்கள் மாமன்றம் திறப்பு விழா

போந்தூரில், தலைநகர மண்டல ஒருமைப்பாடு மன்ற தோழர்கள், மார்ச் 8, அகில உலக பெண்கள் நாளன்று, மக்கள் மாமன்ற  அலுவலகத்தின் திறப்பு விழாவை நடத்தினார்கள்.


போந்தூர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது. இருங்காட்டுக்கோட்டை, ஓரகடம், சுங்குவார்சத்திரம் பகுதிகளுக்குப் பக்கத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருவள்ளூர் - செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நடுவில், பன்னாட்டு மூலதனம் குவிந்துள்ள தலைநகர் மண்டலத்தில், இடது தொழிற்சங்க மய்யம், ஒருமைப்பாடு மன்றம் ஆகியவற்றின் கூட்டு முன் முயற்சியில், ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு (ULF), உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றம் (WPTUC)  மற்றும் தோழர் பரமசிவம் ஆகியோர் ஒத்துழைப்புடன், மக்கள் மாமன்றம், இரண்டு மாடி கட்டிடமாக கம்பீரமாய் நிற்கிறது.


கட்டிடத்திற்குள் மண் - சிமெண்ட் -  இரும்பு - எல்லாமே நிச்சயம் உண்டு. மனித உழைப்பும் நிச்சயம் உண்டு. அதைவிட முக்கியமாய், மக்கள் மாமன்ற கட்டிடம் கட்டுவதற்குப் பின்னால், ஒரு கருத்து உண்டு. ஒரு கனவு உண்டு.


• மக்கள் மாமன்ற கட்டிட மாடிப்படிக்கட்டில், ஒவ்வொரு தளத்திலும் ஒரு முழக்கம் இருந்தது. 


"உழைப்பே உன்னதமானது, உழைப்பாளர்கள் உலகாள வேண்டும்."


"ஒவ்வொருவரும் அனைவருக்குமாக, அனைவரும் ஒவ்வொருவருக்குமாக"


" EACH FOR ALL, ALL FOR EACH "


"நாமின்றி நாடில்லை, நாடோ நமக்கில்லை, நாமே நாடாவோம், நாட்டை நமதாக்குவோம்"


"முதலாளித்துவம் வீழட்டும், சோசலிசம் வெல்லட்டும்"


• ஒருமைப்பாடு மன்ற பொறுப்பாளர்கள் சொன்னார்கள்: மக்கள் மாமன்ற கட்டிடத்தில், கட்டணமில்லாமல் எந்த தொழிற்சங்கமும், ஒர்க்ஸ் கமிட்டியும் கூட்டம் நடத்தலாம். மக்கள் சார்பு, மக்களுக்கான அமைப்புகள் கட்டணம் இல்லாமல் கூட்டம் நடத்தலாம். சாதி கடந்து, காதல் இணையர் கரம் கோர்க்க, கட்டிடம், கதவு திறக்கும். மக்கள் மீது பேரன்பு கொண்டவர்க்கு, அநீதியின் மீது பெரும் சீற்றம் கொண்டவர்க்கு, அரசியலமைப்புச் சட்ட அறத்தை அதன் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்பவர்களுக்கு, மக்கள் மாமன்ற கதவுகள் திறந்திருக்கும். அன்பும் அறமும் தோழமையுடன் சேர்ந்து உறையும் மக்கள் மாமன்றம், சமூகத்தின் தலைமை தாங்கும் நிலைக்கு, பாட்டாளி மக்கள் உயர, பங்களிக்கும்.


• ஒருமைப்பாடு மன்றம் அழைத்து, ஹூண்டாய், லேலண்ட், எம்.ஆர்.எஃப், டைமண்ட் செயின் தொழிலாளர்கள் பலமுறை கிராமப்புறங்கள் சென்று விவசாயத் தொழிலாளர்களோடு கரம் கோர்த்து பணியாற்றினார்கள்.

• சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேசக்கரம் நீட்ட, ஒருமைப்பாடு மன்றம், தொழிலாளர்களை வழி நடத்தியது.


• சங்க உரிமைக்கான போராட்டத்தில், கொலை வழக்கில் கைதாகி, பிணை  நிபந்தனையில் வந்த, பிரிக்கால் தொழிலாளர்களை, புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வகோட்டை ஒன்றிய விவசாயத் தொழிலாளர்கள் அரவணைத்தார்கள். 


• தமிழ்நாட்டில் திருமாங்கல்ய திட்டம் என்ற பெயரால் பயிற்சியாளர் முறை, நிரந்தரம் மறுக்கும் முறை வெறியாட்டம் போட்ட போது, திருத்த சட்டம் 47/2008 மூலம், பயிற்சி / தற்காலிக தொழிலாளர்கள் பாதுகாப்பு பெற, தொழிற்சங்க அங்கீகார சட்ட திருத்தம் கொண்டு வர, தொழிலாளர் முன்னணிகள் தலைமையில் மாபெரும்  இயக்கங்கள், பரப்புரைப் பயணங்கள் நடத்தப்பட்டன.


மக்கள் மாமன்றம் ( PEOPLES' TRIBUNE) என்ன செய்ய உள்ளது?


•  தொழிற்சாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் உழைக்கும் மக்கள் சமூக உற்பத்திக்குப் பங்களிப்பு செய்கிறார்கள். அந்த சமூக உற்பத்தியின் பயன் தனியுடைமையால் அபகரிக்கப்படுகிறது. சமகால நாடாளுமன்ற /தேர்தல் அரசியல், மக்களின் வாக்குகளை பெற்று முதலாளிகள் /பணக்காரர்கள் / ஆதிக்க சக்திகள் ஆட்சி நடத்த உதவுகிறது. 


• தொழிலாளர் வர்க்க அரசியல் என்பது தமக்குள் சுருங்கி குறுகி இருப்பவர்களை, தமக்கானவர்களாக ஒன்றுபட்டும் உணர்வோடும் எழ வைப்பதேயாகும். சங்கக் கொடிகள் தாண்டி, ஆலை பணியிட சுவர்கள் தாண்டி, தொழிலாளர்கள் ஒற்றுமை வேண்டும். நிரந்தர தொழிலாளிகள், நிரந்தரமற்ற, பயிற்சி / ஒப்பந்த தொழிலாளர்களுக்காக குரல் எழுப்ப வேண்டும். தொழிற்சாலை தொழிலாளர்கள், ஒன்று சேரும் வாய்ப்புள்ளவர்கள், நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள தூய்மை காவலர், தூய்மை பணியாளர், திட்ட தொழிலாளர், கிக் தொழிலாளர், இடம்பெயர்ந்த தொழிலாளர், விவசாய தொழிலாளர் அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டும். முதலாளிகளும் மூலதனமும் நாடல்ல. பணமூட்டைகள் ஆதிக்க சக்திகள் நாடல்ல. உழைக்கும் மக்களே நாடாக மாறி, நாட்டை உழைக்கும் மக்களுடையதாக்க வேண்டும். 


• நமது கனவுகள், பெரிய கனவுகள் ஆகும். நமது கனவுகள் உழைக்கும் மக்கள் கனவுகள் ஆக வேண்டும். கனவுகள் நனவாக, நடவடிக்கைகளும் அமைப்பு செயல்பாடுகளும் வேண்டும். 


• மக்கள் பணியாற்றுபவர்களுக்கு, மக்கள் மாமன்ற கதவுகள் திறந்தே இருக்கும். கனவுகள் காண்போம் கனவுகள் நனவாகப் பாடுபடுவோம். 

• மார்ச் 8-ல் மக்கள் மாமன்றம் திறந்து வைக்கப்பட்டது. உழைக்கும் பெண்கள் தின உணர்வும் மே தின உணர்வும் ஒன்று கலந்து உற்சாகம் நிறைந்திருந்தது. 

• இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் 3008 தோழர்கள் இணைந்தனர். 

• மார்ச் 8 அன்று நடந்த இணைப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக் கலந்து கொண்ட இகக(மா-லெ)  விடுதலை பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் அவர்களே, செங்கொடியையும் ஏற்றி வைத்தார். 

• விடுதலை சிறுத்தைகள் கட்சியின், சமத்துவ வழக்கறிஞர் சங்க முதன்மை செயலாளர் தோழர் த.பார்வேந்தன் கலந்து கொண்டார். போந்தூர் ஊராட்சி தலைவர் வந்திருந்தார். அவரும் செங்காடு ஊராட்சித் தலைவரும் நிதி வழங்கினர்.

• மக்கள் மாமன்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் ஏஅய்சிசிடியு அகில இந்திய தலைவர் வீ.சங்கர், ஏஐசிசிடியு ஆலோசகர் எஸ் குமாரசாமி, மாநிலத் தலைவர் தோழர் கு.பாரதி, எல்டியுசி-ஏஐசிசிடியு வின் தோழர்கள் ஏ.எஸ்.குமார், ஜோதி, ராஜகுரு, ராஜேஷ், இகக (மா-லெ) மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி, உழைக்கும் மக்கள்  தொழிற்சங்க மாமன்றத்தின் தலைவர் தோழர் ஆர்.குசேலர், ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பின் தோழர் மாரியப்பன், ஓசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தோழர் சந்திரசேகர், வழக்கறிஞர் பரமசிவம் ஆகியோர் பேசினார்கள். இகக (மா-லெ), ஏஅய்சிசிடியு, எல்டியுசி, ஒருமைப்பாடு மன்ற தோழர்கள் பெரும் திரளாக விழா பந்தலில் கூடினார்கள்.

• நிகழ்ச்சியின் முடிவில் அசைவ, சைவ உணவு பரிமாறப்பட்டது.

 • 1200 சதுர அடி நிலத்தின் மேல் 3200 சதுர அடி கட்டப்பட்டுள்ள கட்டடத்தின் மின் தூக்கி, அறை கலன்கள் எல்லாம் சேர்ந்து ரூ 100 லட்சம் செலவாகும். 

நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்கள் 


காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் ஒருமைப்பாடு மன்றம், 

மதர் சன்   டூ.ஸ்விங் ஸ்டெட்டர்,  சியான் யுவா இந்தியா,  சியோன் யுவா சென்னை ஹூண்டாய்,  நிசான்,  டயம்லர், ராயல் என்ஃபீல்ட், ஏசியன் பெயிண்ட்ஸ்  HSE ,  NVH,  PHI, PHA , சான்மினா, கோனே  பெரூசியா , இந்துஜா பவுண்டரி, டென்னக்கோ, மேக்னா,  ரேனால்ட்ஸ், நிப்கோ, பெரோ, ஹவாசின்,  டாய்சாங், கெஸ்டாம்ப்,  பின்ஸ்டார், சிம்சன், சிஎம்ஆர் டொயாட்சு  மியங்ஹுவா,  காஞ்சி மாவட்ட தூய்மைப் பணியாளர்கள், கட்டிடப் பணி தொடர்பானவர்கள்,  ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பு,  ஏசியன் PPG என ஆலைத் தொழிலாளர்கள்  திருவள்ளூர், கோவை, மயிலாடுதுறை , ஈரோடு, நாமக்கல் தூய்மை காவலர்களோடு சேர்ந்து வந்தனர். அம்பத்தூர் ஆன் லோட் கியர், டைமண்ட் செயின், சாய்மிரா, பிகார் மாநில தொழிலாளர்கள்   நுகர்பொருள் வாணிபக் கழகம் ஊழியர்கள்,, டாஸ்மாக் ஊழியர்கள், விஜயா, காஞ்சி காமகோடி மருத்துவமனை, அகர்வால் பவன், ஜிம்கானா கிளப், மெட்ராஸ் கிளப் மற்றும்  செங்கல்பட்டில் இருந்து தொழிலாளர்கள்  வந்தனர். 

வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள் வந்திருந்தனர். 

பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலம் 4, 7, 8 ல் இருந்து 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  இகக (மா-லெ) மாநிலக்குழு உறுப்பினர்கள், முன்னணிகள் என மொத்தம் 1300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

—----------------------------------------------

அனைவருக்கும் வணக்கம். என் பெயர் பிரமிளா. நான் ஒரு தூய்மைப் பணியாளர். ஏழாவது மண்டலத்தில் வேலை செய்கிறேன். நான் தன்னந்தனியாகவே எனது மகள்களை வளர்த்து வருகிறேன். பள்ளிக்கூடத்துக்கு செல்லும் அவர்கள் மார்ச் 8 ன் போது இதை வாங்கி வரச்சொன்னார்கள், அதை வாங்கிச் வரச் சொன்னார்கள் என்று கூறி கேட்டு வாங்கிச் செல்வார்கள். போட்டிகளில் கலந்து கொள்வதாகவும் சொல்வார்கள். படிச்சவங்க முக்கு தான் மார்ச் 8 ஆ?

எங்களுக்கெல்லாம் மார்ச் 8 கிடையாதா? என்று என் பெண்களிடம் கேட்பேன்.

உழைப்போர் உரிமை இயக்கத்தில் சேர்ந்தேன். சங்கம், போராட்டங்களில் கலந்து கொண்டேன். தலைவர் பாரதியும் மற்ற தலைவர்களும் மார்ச் 8 பற்றி எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். மார்ச் 8 எங்களைப் போன்ற உழைக்கும் பெண்களுக்கு தான் என்பதை அப்போதுதான் புரிந்து கொண்டேன். இப்படி நாங்களெல்லாம் கவுரவமாகவும் தலைநிமிர்ந்து நிற்கிறோம். போராட்டத்துக்கும் சங்கத்துக்கும் நான் நன்றி சொல்லிக்கிறேன்.

வணக்கம்.[மக்கள் மாமன்றம் திறப்பு விழாவில் 7வது மண்டலத்தைச் சேர்ந்த தோழர் பிரமிளா பேசியது]


மக்கள் ஒன்று கூடினால் வெற்றி நிச்சயம்! 

(மக்கள் மாமன்றம் திறப்பு விழாவில் முதுபெரும் தொழிற்சங்கத் தலைவர் தோழர் ஆர்.குசேலர் உரை)

க்கள் ஒன்று கூடினால் கோரிக்கைகளை நிறைவேற்றித் தான் ஆக வேண்டும். அரசாங்கமோ, காவல்துறையோ, நீதிமன்றமோ எதுவும் செய்து விட முடியாது என்பதற்கு சாட்சியங்கள் நிறைய உள்ளன. 

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தமிழ்நாட்டில் தடை விதித்த போது, அதற்கு எதிராக லட்சக்கணக்கானோர் கடற்கரையில் திரண்டு போராடினார்கள். மாடுபிடி விளையாட்டுக்கு அனுமதி அளித்து அதற்கான உத்தரவை கொண்டு வந்து காண்பித்தப் பிறகே போராட்டம் முடிவுக்கு வந்தது.

அருகிலுள்ள ஸ்ரீலங்காவிலும் அதுதான் நடந்தது. வங்கதேசத்தில், நேபாளத்திலும் மக்கள் ஒன்று கூடி வெற்றி பெற்றார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர்கள் நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டதை நாம் பார்த்தோம். 

தமிழ்நாட்டில் நீங்கள் தூய்மைப் பணியாளர்களை ஒன்று கூட்டி நடத்திய போராட்டத்தின் மூலம் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். 

தொழிலாளர்கள் ஒன்று கூடும் இடமாக நீங்கள் இந்த மாமன்றக் கட்டிடத்தை கட்டி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 


இன்றைய காலகட்டத்தில் நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்குவதில், போனஸ் வழங்குவதில் மிகப்பெரிய பாரபட்சம் நிலவுகிறது. அசோக் லேலண்ட் ஆக இருந்தாலும், இங்குள்ள மிகப்பெரிய பன்னாட்டு  நிறுவனங்களாக இருந்தாலும், நிரந்தரமற்றத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம் இல்லை.ஆணுக்கும் ஆணுக்கும் கூட சம ஊதியம் இல்லை என்ற நிலை தான் இருக்கிறது. சம வேலைக்கு சம ஊதியம், நிரந்தரத் தன்மை வாய்ந்த வேலைகளில் ஈடுபடும் நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், இரண்டு வருடங்களில் 480 நாட்கள் பணி புரிந்திருந்தால் சட்டப்படி பணி நிரந்தரம் ஆகியவை முக்கியமான கோரிக்கைகள். இந்தக் கோரிக்கைகள் மீது தொழிற்சங்க இயக்கம் மிகப்பெரிய மக்களை ஒன்று கூட்டி இயக்கம் நடத்த வேண்டிய தேவை, அவசியம் உள்ளது. முக்கியமாக, இந்த கருத்தை, ஆலோசனையை சொல்வதற்கு, இந்தக் கோரிக்கைக்கான இயக்கத்தை நீங்கள் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்குத் தான் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். 

இந்த மக்கள் மாமன்ற கட்டிடத்திற்கு நன்கொடையாக ரூபாய் ஒரு லட்சம் வழங்குகிறேன். 

(தோழர் குசேலர் அறிவித்தவாறு ஒரு லட்சம் நன்கொடையை வழங்கியுள்ளார்).


30 March, 2026