திரும்பத் திரும்ப தீபத் தூண் : கோயபல்ஸ் தந்திரம்

$articleData->title

திருப்பரங்குன்றம்: தமிழ்நாட்டின் அயோத்தியல்ல, பார்ப்பனிய எதிர்ப்பு மரபின் தொடர்ச்சி

‘திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்று வோம்’ என்ற பாஜக இந்துத்துவ சங்கிகள் தமிழ்நாட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பல வழிகளிலும் முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனர். தற்போது நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் தங்களின் விருப்பமான நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற திரும்பத் திரும்ப தீபத் தூணைச் சுற்றி வருகிறார்கள். இதுவரை  இல்லாத வழக்கமாக, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவிற்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று  சொல்லி, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்து, தான் ஒரு ஆர்எஸ்எஸ்காரர்தான், சனாதனவாதிதான் என்று அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக வெளிப்படையாகவே அறிவித்துக் கொள்ளும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு வழக்கைக்  கொண்டு வந்து உத்தரவு பெற்று, கார்த்திகை தீப நாள் அன்று கலவரம் செய்தார்கள்.  அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக திருப்பரங்குன்றத்தைச்  சுற்றி 144 தடை உத்தரவு மதுரை மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்டது. வழக்கமாக ஏற்றப்படும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது.


உண்மையான பக்தர்கள் அதை ஏற்றுக் கொண்டு முருகனை வணங்கிச் சென்றார்கள். ஆனால், தாங்கள்தான்  பக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சங்கிகள், உடனடியாக நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தவில்லை என்று சொல்லி, மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், கோயில் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு அவசர வழக்காக விசாரணைக்கு ஒரே நாளில் எடுக்கப்பட்டது.  உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை நம்பர் செய்வதற்கே எளிய மக்கள் பல மாதங்கள் காத்திருக்க, இந்த வழக்கு மட்டும் உடனடியாக எண்ணிடப்படுகிறது.  அந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நிலுவையில்  வைத்துக் கொண்டே, தங்கள் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்ற ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறது நீதிபதி ஜி.ஆர்.எஸ் நீதிமன்றம்.


ஏற்கனவே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த உத்தரவு  மீதான மேல் முறையீட்டில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பையே உறுதி செய்துவிட்ட நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர், தான் வேண்டுமென்றே 144 பிறப்பிக்கவில்லை என்றும் சூழ்நிலையின் காரணமாகதான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்து விட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கக் கோரினார். அடுத்த கார்த்திகை தீப நாளுக்குள் தீபத் தூணில் தீபம்  ஏற்பாடு செய்திடுவதாகக் கூறினார். ஆனால்   நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அடுத்த அம்பினை விட்டார். நீங்கள் எனது உத்தரவை சரியாகப் படித்துப் பாருங்கள் நான் இப்பொது தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறவில்லை, இந்த நீதிமன்றம் சொல்கிற 5 நபர்களை மலை உச்சியில் பூஜை செய்து வழிபட அனுமதிக்க வேண்டும். அப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கப்படும்    அப்படியில்லையென்றால், அனைவரின் மீதும் அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என்றும் அறங்காவலர் குழுவினர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியிருக்கிறார். வரும் 18ம் தேதி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மலர் தூவி பூஜை நடத்த அனுமதி வழங்கப்படும் என்ற தகவலுடன் கோயில் நிர்வாகம் நீதிமன்றத்திற்கு வர வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை எனில், மதுரை ஆட்சியர், காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். 


முதலில் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். இப்போது மலை உச்சியில் தீபத் தூணில் 5 பேரை பூஜை செய்து வழிபட அனுமதிக்க வேண்டும் என்கிறார். இது என்ன மாதிரியான நிபந்தனை? நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக மதுரை மக்கள் மலை உச்சிக்குப் போய் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஊரில் வாழும் இந்துக்கள் யாருக்கும் இப்படியொரு எண்ணம் இதுவரை வந்ததே இல்லை. புதிதாக மத ரீதியான  பழக்க வழக்கங்களில் அறங்காவலர்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று அறங்காவலர்கள் தரப்பில் சொல்லப்பட்ட போதும் எனது உத்தரவை அமுல்படுத்திட வேண்டும் என்கிறார் நீதிபதி.


தீபத் தூணில் தீபம் ஏற்றவில்லை என்றால் இந்துக்கள் மனம் புண்படும் என்கிறார்கள் சங்கிகள். அப்படி நீங்கள் சொல்லும் தீபத் தூணில் தீபம் ஏற்ற முடியாது, அப்படியே செய்தாலும் அது ஆகம விதிகளுக்குப் புறம்பானது என்கிறார்கள் கோயில் அர்ச்சகர்கள். கோயில் அர்ச்சகர்கள் இந்துக்கள் இல்லையா? மலையைச் சுற்றி வாழ்பவர்களில் பெரும்பான்மையினர் இந்துக்கள்தானே. அவர்கள் யாரும் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றோ, அதற்கு பூஜை செய்து வழிபட வேண்டும் என்றோ கேட்கவில்லையே. அவர்களில் யாரும் நீதிமன்றத்திற்கு வரவில்லையே. சங்கிகளின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. முதலில் ஐந்து பேர் மலை உச்சிக்குச் செல்வார்கள். பின்னர் அது ஐம்பதாகும். அடுத்து ஐநூறு ஆக்குவார்கள். நீதிமன்ற உத்தரவை காரணமாகக் காட்டி, மலையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, பின்னர் சிக்கந்தர் தர்காவைக் காலி செய்வார்கள். ஏற்கனவே எச்.ராஜா, மலை எங்களுடையது நீங்கள் தர்காவை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள் என்று பேசியிருக்கிறார். இதுதான் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்கும் சங்கிகளின் திட்டம்.


இப்போது சங்கி என்று சொன்னாலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயுமாம். மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன் மீதும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதும் மற்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் செயலை, உத்தரவை விமர்சிப்பவர்கள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளார்கள். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் செயலையும் அவரின் தீர்ப்பையும் விமர்சித்துப் பேசினார் என்பதற்காக நீதிபதி ஹரிபரந்தாமன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு தமிழ்நாடு தலைமை வழக்கறிஞர் திரு. பி.எஸ். இராமனிடம் திருச்சியை சேர்ந்த ஒருவர் மனு அளித்துள்ளார். அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட அவர், மனுதார் நேரடியாக நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர், நீதிபதி ஹரிபரந்தான் அவர்களின் கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், கருத்து சுதந்திரத்தை கருத்தில் கொண்டு தான் எந்த நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ்-பாஜக ஆதரவான மனநிலையில் உள்ளவர்கள்தான் தமிழ்நாட்டு அரசு நிர்வாகத்தின் முக்கிய பதவிகளில் அமர்ந்துள்ளார்கள். அதனால்தான் திமுக ஆட்சியிலும் சங்கிகள் தாங்கள் நினைத்தவற்றைச் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இது மிகப் பெரும் ஆபத்தாகும்.


சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் சொன்னதை, ஏற்க முடியாது அதை நடைமுறைப்படுத்த முடியாது, நடைமுறைக்குச் சாத்தியமற்ற இது போன்ற தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கக் கூடாது என்று சொன்னவர் இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் அமீத்ஷா, உயர் நீதிமன்றம் உத்தரவுப் படி தாங்கள் நடக்க வேண்டும் என்று காவல்துறை வேண்டிக் கேட்ட போது உயர் நீதிமன்றமாவது ம...றாவது என்று சொன்னவர் எச்.ராஜா. இவர்கள் மீதெல்லாம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயாது.


அமித்ஷா உச்சநீதிமன்றத்தைப் பார்த்து சொன்னதைத்தான் தமிழ்நாடு அரசும், அறங்காவலர்களும் அர்ச்சகர்களும், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் உத்தரவானது இதுவரை நடைமுறையில் இல்லாதது, புதியது மட்டுமின்றி, ஆகம விதிகளுக்குப் புறம்பானது என்று சொன்னால் அவர்கள் மீது மட்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயுமாம். 


ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்பது பாசிச கோயபல்ஸின் தந்திரம். அதே வழியைத் தான் ஹிட்லர், முசோலினியை தங்களின் ஆதர்ஸ நாயகர்களாகக் கொண்ட கோல்வால்கர், ஹெக்டேவார் வழி வந்த இந்த ஆர்எஸ்எஸ்-பாஜக சங்கிகள் அதிகாரத்தில் உட்கார்ந்து கொண்டு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 


மதச் சார்பற்ற நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை வணங்கி பதவி ஏற்ற பிரதமர் மோடி மதுரைக்கு வருகிறார். இதுவரை இல்லாத வகையில், திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் செல்கிறார். தீபத் தூணில் தீபம் ஏற்ற முடிய வில்லையே என்று தன்னை மாய்த்துக் கொண்ட வரை நினைத்து தான் மனமுடைந்து போய் விட்டேன் என்கிறார். மோடியிடம் இறந்தவர் மீதான அக்கறையைக் காட்டிலும் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்கிற விரும்பமே அதிகமாகக் காணப்பட்டது. அவருக்கு மதுரைக்கு மெட்ரோ ரயில் கொண்டு வருவது பற்றியோ, எய்ம்ஸ் மருத்துமனையை கொண்டு வருவதைப் பற்றியோ எவ்விதக் கவலையும் இல்லை. சங்கிகளுக்கு அந்த கல் தூணில் தீபம் ஏற்றப்படுகிறதோ இல்லையோ சட்டமன்ற  தேர்தலை முன்னிட்டு, திருப்பரங்குன்றத்தை வைத்து தமிழ்நாட்டில் கலவரத் தீ கொழுந்துவிட்டு எரிய வேண்டும். அதன் மூலம் தங்களின் திட்டத்தைச் செயல்படுத்தி வேண்டும் என்பதே நோக்கம். 

ஏற்கனவே மதுரை மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கேட்டுவிட்டார். தமிழ்நாட்டு தலைமை வழக்கறிஞர் நீதிபதி ஹரிபரந்தாமனின் கருத்தில் தனக்கு உடன்பாடில்லை என்கிறார். நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்கள் திமுக அரசின் நிலைப்பாட்டை ஆதரித்துதானே பேசினார். திமுக அரசு என்ன செய்யப் போகிறது? கறாராக இல்லையென்றால், சங்கிகளின் ஆட்டம் அதிகமாகும்.                    


08 March, 2026