செத்து மடிந்தவர்கள் உயிர்த்தெழ உள்ளனர் என சங்கே முழங்கு

$articleData->title

சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டங்கள்

கேள்வி: செத்து மடிந்தவர்கள் உயிர்த்தெழுவார்களா?

பதில்  :  பெருநகர சென்னை மாநகராட்சியின் (பெ.செ.மா) மண்டலம் 5,6 தூய்மைப் பணிகள், 01.08.2025 முதல் தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டன. சுமார் 2000 பெ.செ.மா தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். உச்சநீதிமன்ற மொழியில், அவர்களுக்கு பொருளாதார மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆமாம். அவர்களது பழைய  பணிக் காலமும் மாநகராட்சி தொழிலாளி  என்ற அந்தஸ்தும் பறிக்கப்பட்டபோது, அவர்கள் குப்பைகளை போல் ராம்கி என்ற ஒப்பந்ததாரரிடம் வீசி எறியப்பட்டபோது, அவர்கள் அந்த வகையில், செத்து மடிந்தார்கள். இப்போது மாண்புமிகு அமைச்சரும் மேயரும் ஊடகங்கள் முன்னிலையில்  தொழிலாளர்களிடம்  நேரடியாக  உழைப்போர் உரிமை இயக்கத்தால் வழி நடத்தப்படும் நீங்கள் அனைவரும், ஜனவரி இறுதிக்குள் மீண்டும் பெ.செ.மா தூய்மைப் பணியாளர்களாக, நாள் கூலி ரூ.761 குறையாமல், வேலைக்கு  எடுக்கப்படுவீர்கள் என, தேர்தல் நெருங்கும் காலத்தில் உறுதி அளித்துள்ளதால், சுமார் 1400 பேர் உயிர்த்தெழுவார்கள் என்று சொல்வது சரிதானே!

கேள்வி: புராணக் கதைகளில் இதிகாசங்களில் மட்டுமே, உயிர்த்தெழுதல் சாத்தியம் ஆகும். ''உயிர்த்தெழுவார்கள்" என்பதை, ஏன் மிகவும் சாதாரணமாக சொல்கிறீர்கள்? சொல்ல முடியாத ரகசியம் ஏதும் உள்ளதா? அல்லது தன்னடக்கத்தால் இப்படி செய்கிறீர்களா?

பதில்  :   மன்னிக்கவும். நீங்கள் சொல்லும் இரண்டு விஷயங்களும் காரணம் அல்ல. இந்தப் போராட்டத்தில், களத்தில் முன் நிற்கிற தோழர்கள், பிரிக்கால் போராட்ட காலத்திலிருந்து, உழைக்கும் மக்களிடம், '’கொண்டாட்டமாகப் போராடுவோம், போராட்டத்தைக் கொண்டாடுவோம்’’ என்ற முழக்கத்தை, உள்வயமாக்கப் பார்த்திருக்கிறார்கள்.

''உயிர்த்தெழுதல்’’ எப்போதுமே கொண்டாடத்தக்க விஷயமாகும். ஒப்பந்தமயம் பணி நிரந்தரம் தொடர்பான அரசாணை பெற்றதும், இதே தொழிலாளர்கள், 30.07.2025 அன்று ஆடிப் பாடி கொண்டாடினார்கள். ஆனால் இரண்டே நாட்களில் சட்ட விரோத ஒப்பந்தமயம் நடந்தது. ஆகவே தான், கைக்கு  எட்டியது வாய்க்கு எட்டக் காத்திருக்கிறோம்.

சக்தி வாய்ந்த சென்னை அமைச்சர்/அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. P.K.சேகர்பாபு அவர்கள், பொதுவில் தந்த வாக்குறுதியை மீறாமல், அறம் பிறழாமல் நடப்பார் என நம்பிக்கையோடு இருப்போம். மாண்புமிகு முதல்வர் தலையிட்டு முடிந்த விஷயத்தில், வேறு எந்த தவறான தலையீடும் வராது என நம்புகிறோம்.

கேள்வி : உழைப்போர் உரிமை இயக்கம் (இணைப்பு: LTUC- AICCTU)  ஒப்பந்தமய எதிர்ப்பை, பணி நிரந்தரக் கோரிக்கையை விட்டுக் கொடுத்துள்ளதா?

பதில்: உ.உ.இ (LTUC-AICCTU) தோழர்கள், மிகவும் சாதாரணமானவர்கள், உண்மையானவர்கள், அவர்களுக்கு தொழிலாளர்களோடு நெருக்கமான பிணைப்பு உள்ளது. சங்கங்களை ஜனநாயகப்படுத்துவது, தொழிலாளர்களை போராட்டங்கள் மூலம் அரசியல்படுத்துவது என்ற கொள்கை முழக்கத்திற்கு செயல் வடிவம் தர விடாமுயற்சி எடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் எல்லா மாநகராட்சிகளில்/நகராட்சிகளில், தூய்மைப் பணி தனியார்மயமாகி விட்டது. சென்னையில் மண்டலம் 4,5,6,8 நீங்கலாக மண்டலம் 7 உட்பட 11 மண்டலங்களில், தூய்மைப் பணிகளை தனியார்மயப்படுத்த முந்தைய அஇஅதிமுக அரசு, 2021-ல் முடிவு செய்தது. இன்றைய முதல்வர் மற்றும் சுகாதார அமைச்சர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர்களாக, போராட்டம் நடத்தியவர்களிடம், நடந்த தனியார்மயம் பற்றி கவலைப்படாதீர்கள், நாங்கள் பதவிக்கு வந்தவுடன் உங்களை நிரந்தரம் செய்கிறோம் என தந்த வாக்குறுதி, அன்றைய போராட்டம் நடத்துபவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது, தனியார்மயம் நடந்தது. பிறகு முடிந்த கதையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. உ.உ.இ, 7வது மண்டல தூய்மைப்பணி தனியார்மயத்திற்கெதிராக, நீதிமன்றத்திலும் களத்திலும் போராடியதால் மே 2021 முதல் இன்று வரை  1481 பேர் வேலைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. (ரூ.400 தினக் கூலி அடுத்தடுத்த போராட்டங்களால் ரூ.761-அய் எட்டியுள்ளது.)

மண்டலம் 5,6 தனியார்மயம் எதிர்ப்பு பணி நிரந்தரம் கோருதல் தொடர்பான வழக்கை, உயர் நீதிமன்ற இரு மட்ட அமர்வங்கள் தீர்ப்புகளை அடுத்து, அசல் மனுக்கள் 66,67/2025 என, தொழில் தீர்ப்பாயத்தில் சங்கம் நடத்தி வருகிறது. பிரச்சனை கைவிடப்படவில்லை. கவனமாக, தீர்மானகரமான இறுதி வெற்றியை நோக்கி செல்ல, பாதை அமைந்துள்ளது. தனியார்மய எதிர்ப்பை மற்றவர்கள் மேற்கொள்ளவில்லை, நிரந்தரம் என்ற கோரிக்கையை மற்றவர்கள் எழுப்பவில்லை என்று சொல்லி தன் கடமையிலிருந்து உ.உ.இ ஒரு போதும் விலகாது. உ.உ.இ, சாத்தியமானவைகளோடு நின்று விடாமல், அவசியமானவற்றை செய்ய முயற்சிக்கிறது. அனைவரின் ஆதரவையும் நாடுகிறது.

கேள்வி :   போராட்டம் என்ன செய்திகளைச் சொல்கிறது?

பதில் : எளிய மக்கள், உறுதியோடு இறுதிவரை போராடி வெல்வார்கள். அசுத்தமான (DIRTY), ஆபத்தான (DANGEROUS), சிறுமைப்படுத்தும் (DEGRADING), வேலைகளைச் செய்து வந்த தூய்மைப் பணியாளர்கள், அருந்ததியர்களாக, ஆதிதிராவிடர்களாக, அனைத்து சாதி ஏழைகளாக, பெண்களாக, இருக்கின்றனர். அதிலும் கணிசமானவர்கள், ஒற்றைப் பெற்றோர்கள்.  ‘இந்த அடி வாங்காமல் எப்பூட்டும் உடையாது, இந்த அடி வாங்கினால் எப்பூட்டும் தாங்காது’ என்ற இன்குலாப் கவிதை வரிகளுக்கு ஏற்ப, இந்த மக்கள் எழுந்து நின்று, சாதி ஆதிக்கத்திற்கு, நவீன தீண்டாமைக்கு, கொடிய சுரண்டலுக்கு,  ஒடுக்கு முறைக்கு, பலத்த அடி தந்துள்ளனர். சமூக நீதி சமத்துவ கொள்கைகளுக்கு வலு சேர்க்கப்பட்டுள்ளது. பெண்களால் முடியும், பேராற்றல் உள்ள பெண்கள் வென்று காட்டுவார்கள் என்பதற்கு, அண்ணா சாலையும், வங்கக்கடலும் கூவம் ஆறும், சுடுகாடும் இடுகாடும்,  அம்பேத்கர் சிலையும் மேதினப் பூங்காவும், சென்னை மாநகரமும் சாட்சி சொல்லும். மனித உடலும் சிந்தனையும் நீதியை நிலை நாட்டும் ஆயுதமாக மாறும்போது, அங்கே கற்பனை வளத்தோடு படைப்பாற்றலோடு ஆயுதங்கள் வந்த வண்ணம் இருக்கும். சமூக ஊடக, அச்சு மின்னணு ஊடகங்கள், தூய்மைப் பணியாளர் போராட்டத்தை, கவனத்தில் கொண்டன. 165 நாட்களில் செய்தி இல்லாத நாளில்லை. பொதுக்கூட்டம், அறைக்கூட்டம், நிர்வாகிகள் கூட்டம், வார்டு மட்ட கூட்டங்கள், நிதி திரட்டுவது, ஆதரவு திரட்டுவது, ஒருமைப்பாடு நிதியும் உதவிகளும் வழங்குவது என்று ஏதாவது ஒன்று, நடக்காத நாளில்லை. போராட்டம் இயக்கமானது. போராட்டத்தில், இயக்கத்தில், நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்புடன் எஃகு உறுதியும் நெகிழ்வும் கொண்ட அமைப்பு, செயல்பட்டது. அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், கலைஞர்கள், அறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொது மக்களின் ஆதரவு போராட்டத்திற்குக் கிடைத்தது.

1400 பேரின் போராட்டத்தால், 25000 க்கும் மேற்பட்டவர்கள் நாள்கூலி, ரூ.565 லிருந்து ரூ.761 ஆனது. 32000 பேருக்கு காலை, மதியம், இரவு உணவு உறுதியானது. தமிழ்நாடெங்கும் உழைக்கும் மக்கள், எளிய மக்கள் போராட முடியும், வெற்றி பெற முடியும் என, நம்பிக்கை பெற்றுள்ளார்கள்.

தமிழ்நாட்டின் சமூக பொருளாதார அரசியல் வாழ்க்கையில், உரிய இடத்தைப் பெற, முதலீட்டாளர்களுடன் போட்டியிட, உழைக்கும் மக்கள் புறப்பட்டு விட்டார்கள்.

------------

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்

 சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு – பாரதி தாசன்

 


26 January, 2026