மேற்கு வங்கத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சி பல பத்தாண்டுகளாக காத்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. அந்தக் காத்திருப்பு இந்த மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. ஆக, சங்கிப் படையின் கருத்தியல் அரசியல் வார்ப்புருவுக்கேற்ப வங்கத்தைப் பொருத்துவதில் போர்க்கால அடிப்படையில் வேலை தொடங்கப்பட்டு விட்டது.
அதிகாரத்திற்கு வந்து இரண்டே மாதங்களில், சங்கிப் படை தனது அதிரடித் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அதன்மூலம், தன் மதவாத நிகழ்ச்சி நிரலின் முழுச் சீர்கேட்டையும் மக்களுக்கு அறிமுகப்படுத்துகிற தீவிரமான குறுகிய கால பயிற்சி வகுப்பை வங்கத்தில் நடத்திக் கொண்டிருக்கிறது. பாசிச பயங்கரவாதம், அரசு-தனியார் கூட்டணி, கலவரக் கும்பல்களுக்கு அரசு அதிகாரம் வழங்குவதும் அவற்றுடன் கூட்டு சேர்ந்து செயல்படுவது என மாநிலம் முழுவதும் இரட்டிப்பு நேரத்தை செலவு செய்து வருகிறது. அதேவேளை, தனது ஆட்சியின் கொள்கைத் திட்டத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக உள்ளது. அதோடு, புல்டோசர் மோதல் கொலைகளின் ஆட்சிக்கான சூழலையும் தயார்படுத்துகிறது.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, கும்பல் படுகொலை, புல்டோசர் ஆட்சி, (அரசாங்க சொற்களில், ‘புல்டோசர் நீதி’), மோதல் கொலைகள் என மூடி மறைத்து குறிவைத்து ஒழித்துக்கட்டும் மூன்று குறிப்பிடத்தக்க அம்சங்களை இந்தியாவில் பாசிச ஆட்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த மூன்று அம்சங்களும் புதிய ஆட்சி நடைமுறையால் ஏற்கனவே பகட்டாக பறைசாற்றப் பட்டு விட்டன. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி மீது முட்டைகளை எரிந்த முதல் சம்பவம், புதிய போக்கை உருவாக்கியது. தற்போதைய புதிய அரசுடன் முழுமையாக கூட்டு சேர்ந்துவிட்ட மேற்கு வங்கத்தின் முதன்மை ஊடகங்கள், அந்த சம்பவத்தை திரிணாமுல் காங்கிரஸ் கால ஊழலுக்கு எதிரான பொதுமக்களின் கோப வெளிப்பாடு எனக்கூறின. குண்டர் கும்பல், சட்டத்தை வெளிப்படையாக தன் கைகளில் எடுத்துக் கொண்டதை ஊடகங்களோ, ‘முட்டை வைத்தியம்’ என்று பெயர் வைத்து அழைத்தனர்.
மோதல் கொலைகளின் ஆட்சி
குஜராத்தில், மோதல் கொலைகளை தனது தந்திரம் என தத்தெடுத்து வைத்திருந்தார் அமித் ஷா. அதிகாரமிக்கவர்களாயினும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்றிருந்த அக்காலத்தில், நீதித்துறை ஒரு வழக்கில் அவரை சிறைக்கும் அனுப்பி வைத்தது. உத்தரபிரதேசத்தில் முஸ்லீம்களுக்குச் சொந்தமான வீடுகள், மசூதிகள், கடைகள் அல்லது பிற நிறுவனங்களை இடித்துத் தள்ளுவதுமட்டுமின்றி, மோதல் கொலைகள் செய்வதையும் தனது ஆட்சி நிர்வாகத்தின் கொள்கையாக ஆக்கிக் கொண்டார் முதலமைச்சர் ஆதித்யநாத். மேற்கு வங்க பாஜக முதலமைச்சரோ அந்தக் கொள்கையை “காலையில் காவல்துறையிடம் ஒப்படையுங்கள், இரவில் கொன்று விடுங்கள்” என, திரைப்பட வசனம் போல, மாற்றிவிட்டார். இந்தக் கொள்கையின் முதல் நடவடிக்கை, கொல்கத்தா அருகில் உள்ள பருய்பூரின் 11 வயது சிறுமியைக் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதில் வெளிப்பட்டது. அந்தக் கொலைக்கு சாட்சியாக இருந்த பிரபாஸ் மண்டல் போலி மோதலில் கொல்லப்பட்டார். அவர் உள்ளூர் பாஜக தலைவர் உட்பட சில நபர்களையும் அடையாளம் காட்டியிருந்தார்.
மோதல் கொலைகளை ஒரு கொள்கையாக கொள்வது என்பதற்கு சட்டத்தின் ஆட்சியை அப்பட்டமாக மறுப்பது என்று மட்டுமே பொருள். இது காவல்துறை கட்டுக்கடங்காத அதிகாரத்துடன் நடப்பதற்கு மட்டுமே உதவிசெய்யும்; அது எந்த பொருளிலும் குற்றங்களைத் தடுக்கும் எந்தவொரு விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆதித்யநாத் ஆட்சியில் உத்தரப்பிரதேசத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ஐந்து மோதல் கொலைகள் அரங்கேறுகின்றன. இருப்பினும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உ.பிதான் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. மோதல் கொலைகளின் ஆட்சி எப்படி குற்றவியல் நீதி அமைப்பை குறுக்கு வழியில் இட்டுச் செல்கிறது என அலகாபாத் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், முதல் தகவல் அறிக்கையை கட்டாயமாக்கியும் ஒவ்வொரு மோதல் கொலை குறித்த விசாரணைக்கும் ஆணையிட்டுள்ளது. அதேவேளையில், உபி காவல்துறையின் ஒருதலைப் பட்ச நடவடிக்கையையும் அம்பலமாக்கியுள்ளது.
அளவிற்கதிகமான நகர்வுகள்
இந்தத் தான்தோன்றித்தனமான அடக்குமுறை, ஆட்சி நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள புதிய கொள்கைகளையும் சட்டங்களையும் இணைத்துப் பார்க்க வேண்டும். எவரொருவரையும் விசாரணையின்றி ஒரு முழு ஆண்டும் கூட தடுப்பு காவலில் வைக்கும் அதிகாரத்தை தற்போது இந்த அரசாங்கம் பெற்றுள்ளது. அத்தகைய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களுக்கு தங்களுக்காக சட்ட ஆலோசகர் வைத்துக் கொள்ளும் உரிமையும் கூட கிடையாது. கலப்பு மணங்கள் மற்றும் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்வதைத் (குற்றம் என்று சொல்லாவிட்டாலும்) தடுக்கும் பொது சிவில் சட்ட மசோதா கூடுதலான ஆய்வுக்காக ஒன்பது உறுப்பினர் கொண்ட குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 17%த்திலிருந்து 7%மாக அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. 2011 லிருந்து வழங்கப்பட்டுள்ள அனைத்து பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி, பிற பிற்படுத்தப்பட்ட சாதிச் சான்றிதழ்கள் கட்டாய மறு சரிபார்த்தலுக்கு உட்படுத்தப்படுகின்றன. அரசால் இயக்கப்படும் ஐம்பத்தொரு தொழில் பயிற்சி நிலையங்கள் தனியார்மயாக்கப்பட உள்ளன. சந்தேகத்திற்குரிய வங்கதேச குடிமக்களை மீண்டும் வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பும் முன்பு அவர்களை அடைத்துவைக்க பதினொரு தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ‘திருப்பி அனுப்புதல்’ நாடு கடத்துதல் என்று அழைக்கப்படுவதில்லை; இதுவொரு சட்டவிரோத வலுக்கட்டாய நடவடிக்கையாகும். இதன்மூலம் வங்கதேச பகுதிக்குள் எல்லை தாண்டி மக்கள் தள்ளப்படுகிறார்கள். ஸ்வீட்டி பீபி மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து இந்தியக் குடிமக்கள் வங்கதேசத்திற்கு சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டு ஓராண்டு நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு திரும்பி வந்தனர். இது ‘திருப்பி அனுப்பும் நடவடிக்கை’ என்ற பெயரில் நடக்கும் கொடுமையையும் அநீதியையும் உணர வைக்கும் நிகழ்வாகும்.
கருத்தியல் ரீதியாக ஆக்கிரமிப்பு செய்யும் ஆர்எஸ்எஸ்-ஸின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, வரலாறும் கலாச்சாரமும் புதிய பாஜக அரசாங்கத்தின் முக்கிய போர்க்களங்களாக ஏற்கனவே மாறிவிட்டுள்ளன. பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழும் கொல்கத்தாவின் ஒரு பகுதியில் உள்ள முக்கிய சாலைக்கு, புகழ் பெற்ற மருத்துவரும் கல்கத்தா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான ஹசன் சுஹ்ரவார்டியின் நினைவாக சுஹ்ரவார்டி நிழற்சாலை என அழைக்கப்பட்டது. நூறாண்டிற்கும் மேலாக இருந்த அந்த சாலையின் பெயர், விவேக் அக்னிஹோத்ரியின் படமான 'தி பெங்கால் ஃபைல்ஸ்' இல் வங்க இந்துக்களின் மீட்பராக காட்டப்பட்ட கோபால் முகர்ஜியின் பெயரில் ‘கோபால் முகர்ஜி சாலை‘ என இப்போது மாற்றப்பட்டுள்ளது. கொல்கத்தா சாலைகளின் பெயர்களை மாற்றம் செய்ய, 'முகலாய', 'பதான்' பெயர்களை மாற்றுவதற்கு, சர்ச்சைக்குரிய கார்த்திக் மகராஜின் தலைமையில் ஒரு குழுவை முதலமைச்சர் அமைத்துள்ளார். கார்த்திக் மகராஜ், அல்லது பாரத் சேவாசிரம சங்கத்தைச் சேர்ந்த சுவாமி பிரதிப்தானந்தர் மீது பாலியல் வன்கொடுமைப் புகாரும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டியதாக குற்றச்சாட்டும் உள்ள போதிலும் 2025 ஆம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
மரபின் விருப்பத்தேர்வு
சியாமா பிரசாத் முகர்ஜி ஏற்கனவே மேற்கு வங்கத்தின் தந்தையாக அறிவிக்கப்பட்டுள்ளார். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் ஒட்டுமொத்த பிரிவினையின் ஒரு பகுதியாக, பிரிக்கப்படாத வங்கம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட நாளைக் குறிக்கும் வகையில் ஜூன் 20 மேற்கு வங்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் வரலாற்றை மறுவரையறை செய்யும் இந்த மறைமுக நோக்கங்களைக் கொண்ட முயற்சிகளுக்கு மத்தியில், கொல்கத்தாவில் பள்ளி மதிய உணவுத் திட்டம் இஸ்கான் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது மற்றொரு கருத்தியல் அறிக்கை வெளியிடப்பட்டது. சைவ உணவை உயர்த்திப்பிடிக்கும் பொருட்டு முட்டைகள் உணவுப் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று இஸ்கான் அறிவித்தது. மதிய உணவுப் பட்டியல் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தை அப்பட்டமாகப் பலவீனப்படுத்துவது என்பதைத் தாண்டி, மேற்கு வங்கத்தில் இஸ்கானின் வளர்ச்சியை மாநிலத்தின் பரந்த பண்பாட்டுச் சூழலில் காண வேண்டும்.
பக்தி இயக்கத்தின் மாபெரும் சின்னமான சைதன்ய மகாபிரபுவின் நிலமான மேற்கு வங்கம், கௌடிய வைஷ்ணவம் என அழைக்கப்படும் வலுவான வைஷ்ணவ மரபை எப்போதும் கொண்டுள்ளது. இந்த 16ஆம் நூற்றாண்டு மரபு, 19ஆம் நூற்றாண்டு மற்றும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் ஹரிசந்த் தாக்கூர் (1812-1878), அவரது மகன் குருசந்த் தாக்கூர் (1847-1937) ஆகியோரால் வலுவான சாதி எதிர்ப்பு திசைவழியில் கொண்டு செல்லப்பட்டு, மடுவா மதமாக உறுதிப்படுத்தப்பட்டது. இது ஜோதிபா, சாவித்ரிபாய் பூலே ஆகியோர் வெகுமக்கள் கல்வியை, குறிப்பாக பெண்கள், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கான கல்வியை, அதிகாரமளித்தலுக்கும் தீவிர சமூக விழிப்புணர்வுக்கும் ஆயுதமாக மேம்படுத்திக் கொண்டிருந்த காலமாகும். சைதன்யரின் கௌடிய வைஷ்ணவத்திலிருந்து ஹரிசந்த்-குருசந்த் மடுவா மதப் பள்ளி வரையிலான முழு மரபையும் இஸ்கான் கைப்பற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மூர்க்கத்தனமான இந்துத்துவ திட்டத்தில் ஆர்எஸ்எஸ்-ஸின் சக்திவாய்ந்த உலகளாவிய கருத்தியல் கூட்டாளியாக இஸ்கான் இயங்குகிறது.
பாஜக தனது முழு நிகழ்ச்சிநிரலையும் ஒரு கணம் கூட வீணடிக்காமல் கட்டவிழ்த்துவிட விரும்புகிறது. இரும்பு சூடாக இருக்கும்போதே, முடிந்தவரை பலமாக அடித்துவிடப் பார்க்கிறது. நரேந்திர மோடி இப்போதும் நேருவையும் காங்கிரசையுமே மக்கள் மத்தியில் சொல்லிக் கொண்டே இருப்பது போலவே, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியையும் திரிணாமுல் காங்கிரசையும் மக்கள் கவனத்தை திசைதிருப்பும் திரையாக பயன்படுத்த பாஜக விரும்புகிறது. அந்த திரைக்குப் பின்னால் இடையூறின்றி தனது திட்டத்தை செயல்படுத்த முடியும் என நினைக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் ஏற்கனவே மூன்று பிரிவாக பிளவுபடும் நிலைக்குள்ளாக்கப்பட்டுவிட்டது. மம்தா பானர்ஜியிடமிருந்து அவரது கட்சியைப் பறிக்கும் பொருட்டு, கிளர்ச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தான் ‘உண்மையான திரிணாமுல் காங்கிரஸ்’ என்று முன்னிறுத்தப்படுகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ்-ஸின் பெரும்பான்மை மக்களவை உறுப்பினர்கள் ‘தேசியவாத நேசனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா’ என்று அழைக்கப்படும் தங்கும் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக பாஜகவிற்கு மாற்றம் செய்யப்பட்டு திருமுழுக்கு செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், களத்தில் எல்லா தரப்பிலிருந்தும் வரும் எதிர்ப்பையும் ஒருங்கிணைக்கப்பட்ட குண்டர் கும்பல் வன்முறை, அரசு தலையீடு மூலம் மௌனமாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பாஜகவை ஒரு தற்காலிக நிகழ்வாக, அதன் நிகழ்ச்சி நிரலை ஆட்சி நிர்வாகம் என்ற பெயரில் நடக்கும் சில மாய வித்தையாக மேற்கு வங்கத்தின் மதச்சார்பற்ற முற்போக்கு கருத்து கொண்டவர்கள், நினைத்தால் அது தவறாகவே முடியும். இந்தியாவின் பாசிச மறுவடிவமைப்பு திட்டத்திற்கு மேற்கு வங்கத்தை இன்னொரு பாதுகாப்பான பரிசோதனைக் கூடமாக மாற்றுவதில் சங்கிப் படை தீவிரமாக உள்ளது. பாஜக ஒரு கணம் கூட வீணாக்கத் தயாராக இல்லாதபோது, இடதுசாரிகளும் தங்கள் பெயருக்குத் தகுதியான எந்தவொரு எதிர்க்கட்சியும் காத்துக் கொண்டிருக்கலாமா?
( தி வயர் இணைய இதழில் ஜூலை 14, 2026 அன்று வெளிவந்த கட்டுரை. தமிழாக்கம்: செந்தில்)
