ஏகாதிபத்தியமும் மூல பாசிசமும் ஒன்றுசேர்ந்த முழுமுதற்கலவையாக டிரம்ப் நிர்வாகம் உருவெடுத்து வருகிறது

$articleData->title

ஏகாதிபத்தியமும் மூல பாசிசமும் ஒன்றுசேர்ந்த முழுமுதற்கலவையாக டிரம்ப் நிர்வாகம் உருவெடுத்து வருகிறது

இந்தியாவில் தற்போது ஆபத்தான வகையில் அதிகரித்து வரும் பாசிசத்தைப் பற்றி விவாதிக்கும் போது, நாம் அடிக்கடி ஹிட்லரின் நாஜி ஜெர்மனியுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். அதில் நிச்சயமாக சில குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் உள்ளன. ஆனால் இதில் நாம் தவறவிடமுடியாத, தவறவிடக்கூடாத ஒரு அடிப்படை வித்தியாசமும் உள்ளது. ஜெர்மனியைப் போலன்றி, இந்தியா ஒரு முன்னாள் காலனி நாடாகும். இன்றைய இந்திய பாசிஸ்டுகளின் முன்னோடிகள் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் இணக்கமாக ஒத்துழைத்தவர்கள். அவர்கள் காலனித்துவ மரபான சர்வாதிகாரத்தையும் மக்கள் மீதான வெறுப்பையும் கொண்டு தங்கள் அதிகாரத்தை வலுப்படுத்துகிறார்கள். அதேநேரத்தில் காலனிய ஆதிக்க ஒழிப்பு வாய்சவடால்களை பயன்படுத்தி தங்கள் செயல்திட்டத்தை முன்னெடுக்கவும் முயல்கிறார்கள். உண்மையில், டிரம்பின் ஆட்சியதிகாரத்தில் உள்ள அமெரிக்காதான் இன்று, ஹிட்லரின் ஜெர்மனிக்கு மிக நெருக்கமாக உள்ளது. இது நாஜி ஜெர்மனியின் அடையாளமாக இருந்த, ஏகாதிபத்தியமும் பாசிசமும் இணைந்த மற்றொரு முழுமுதல் முன்னுதாரணத்தை நம் கண்முன் காட்டுகிறது. டிரம்ப் நிர்வாகம் தொடர்பான அண்மைய பல நிகழ்வுகள் இதை மிகத் தெளிவாக உறுதிப்படுத்துகின்றன.


தாக்குதலுக்கான ஒரு கருவியாக வரிவிதிப்பையும் வர்த்தகத்தையும் டிரம்ப் நிர்வாகம் பயன்படுத்தியது. அதோடு, காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை நடவடிக்கைக்கும் ஈரான் மீதான தாக்குதலுக்கும் ஆதரவளித்தது. அதன்பின்னர், வீழ்ச்சியடைந்து வரும் அமெரிக்க பேரரசின் அதிகாரத்தை வலுப்படுத்த 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து தொடர்ச்சியான, வெளிப்படையான இராணுவ அச்சுறுத்தல்களையும் நடவடிக்கைகளையும் அது கட்டவிழ்த்து விட்டுள்ளது. வெனிசுலாவில் ஒரு புதிய வகை சிஐஏ நடவடிக்கையை நாம் கண்டோம். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஹ்யூகோ சாவேஸை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கான சதி முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இம்முறை அதிபர் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸையும் சிஐஏ கடத்திச் சென்றது. அதேவேளையில் டிரம்ப் ‘வெனிசுலாவை நிர்வகிப்பது’ பற்றியும் வெனிசுலாவின் மிகப்பெரும் எண்ணெய் வளங்களைக் கட்டுப்படுத்துவது பற்றியும் வெளிப்படையாகப் பேசினார். வெனிசுலாவைப் பாதுகாப்பதில் முப்பத்திரண்டு கியூப வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். லத்தீன் அமெரிக்காவையும் கரீபியன் பிராந்தியத்தையும் பொருத்தமட்டில், சோசலிச கியூபாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதே தனது இறுதி நோக்கம் என்பதையும் டிரம்ப் நிர்வாகம் வெளிப்படையாக அறிவித்தது.


அதேநேரத்தில், டென்மார்க் அரசாட்சிக்குள் ஒரு தன்னாட்சிப் பகுதியாக இருந்து வரும் கிரீன்லாந்தைக் கைப்பற்றும் அமெரிக்கத் திட்டம் குறித்து டிரம்ப் தனது மூர்க்கத்தனமான வாய்வீச்சுகளை தீவிரப்படுத்தினார். முன்னதாக அவர் கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றுவது குறித்தும் ஆத்திரமூட்டும் கருத்துகளை வெளியிட்டிருந்தார். உலகப் பொருளாதார மன்றத்தில் டிரம்ப் தொடங்கிய ‘அமைதி வாரியம்’ இவையெல்லாவற்றையும் விட மிக மோசமானதாகும். (டிரம்ப் நிர்வாகத்தால் அழைக்கப்பட்ட அறுபது நாடுகளில்) இருபது நாடுகளின் பங்கேற்புடனும் ஒத்துழைப்புடனும் தொடங்கப்பட்ட இது, காசாவில் நிரந்தரமாக அமெரிக்க-இஸ்ரேல் கட்டுப்பாட்டை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பையே மாற்றிமைக்கும் நோக்கம் கொண்டது. தனது நிரந்தர தலைமையின் கீழ் இந்த அமைதி வாரியத்தை டிரம்ப் தொடங்க, அவரது மருமகன் ஜாரெட் குஷ்னரோ $3,000 கோடி தொகையில் காசாவை ‘மறுநிர்மாணம்’ செய்வதற்கான விரிவான திட்டத்தை வெளியிட்டார். இது பாலஸ்தீன மக்களையும் கலாச்சாரத்தையும் அழித்து, காசாவை செயற்கையாக உருவாக்கப்பட்ட கார்ப்பரேட் சுற்றுலா, பொழுதுபோக்கு மையமாக மாற்றும் திட்டமாகும். இதற்கிடையில், ஈரானில் வாழ்வாதாரம், ஜனநாயகம் சார்ந்த பிரச்சினைகளில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியை ஒரு சாக்காகப் பயன்படுத்தி அங்கும் தலையிடத் தயார் என்று அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.


வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதல் பற்றியும் அதிபர் மதுரோ கடத்தப்பட்டது குறித்தும் மேற்குலக நாடுகள் வெளிப்படையாக மௌனம் சாதித்தன; அதுமட்டுமின்றி, காசாவில் அமெரிக்க ஆதரவுடன், இஸ்ரேல் தலைமையில் தொடர்ந்து நிகழ்த்தப்படும் பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலை, பாலஸ்தீன நிலப்பரப்பின் மீதான ஆக்கிரமிப்பு ஆகியவற்றிலும் கூட அவை பெரும்பாலும் மௌனமாக இருந்தன; அல்லது செயலூக்கத்துடன் உடந்தையாக செயல்பட்டன. ஆனால் முரண்பாடாக, கிரீன்லாந்து விவகாரத்திலோ மிக வலுவாக எதிர்வினையாற்றின. ‘(ஆபத்தை தவிர்த்து) பாதுகாப்பாக இருத்தல்’ என்ற மாயையுடன் அமெரிக்காவின் வழியைப் பின்பற்ற வேண்டாம் என்றும் மாற்று வழிகளை ஆராய்ந்து நீண்டகால நோக்கில் தன்னாட்சியை அறுதியிட வேண்டுமென்றும் ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலுமுள்ள ‘நடுத்தர வல்லரசுகளுக்கு’ அழைப்பு விடுக்கும் முன்முயற்சியை கனடா அதிபர் மார்க் கார்னி எடுத்தார். ஆக, ஏதோ ஒரு குறுக்கு வழியிலாவது கிரீன்லாந்தைக் கைப்பற்றத் துடிக்கும் அமெரிக்க முயற்சிக்கு எதிராகவும் டென்மார்க், கிரீன்லாந்திற்கு ஆதரவாகவும் அநேகமாக ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோவின் பெரும்பான்மையான நாடுகளும் அணிதிரண்டன. அமைதி வாரியத் திட்டமும் காசா குறித்த விரிவான திட்டமும் கூட, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய அளவிலான அமெரிக்கக் கூட்டாளிகளுக்கு அப்பால் குறிப்பிடத்தக்க எந்தவொரு ஆதரவையும் பெறவில்லை.


அமெரிக்காவின் நிதி, இராணுவ ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்கான இந்த ஏகாதிபத்திய திட்டத்துடன், அமெரிக்காவிற்குள் டிரம்பின் குடியேற்ற எதிர்ப்பு பாசிச, இனவெறி நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான எல்லாவித எதிர்ப்புகளையும் நசுக்க கொடூரமான அரசு பயங்கரவாத நடவடிக்கைகளையும் டிரம்ப் நிர்வாகம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஆப்பிரிக்க அமெரிக்க குடிமகன் ஜார்ஜ் ஃப்ளாய்டின் கொடூரமான படுகொலையைத் தொடர்ந்து சக்திவாய்ந்த ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ (கறுப்பர் உயிர்களும் மதிப்புள்ளவையே) போராட்டங்களின் மையமாக இருந்த மினியாப்பொலிஸ்  நகரம், இப்போது ஐசிஇ (அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க துறை-ஐஸ்) துறையினர், உள்நாட்டு எல்லைக்காவல் பாதுகாப்புப் படையினரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான அரசு பயங்கரவாத ஆட்சியைக் கண்டுள்ளது. அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க  துறையிடமிருந்து தங்கள் அண்டை வீட்டாரை பாதுகாப்பதில் அமைதிவழி நடவடிக்கைகளில் பங்கேற்ற இரண்டு அமெரிக்கக் குடிமக்களான ரெனி குட், அலெக்ஸ் பிரெட்டி ஆகியோர் அடுத்தடுத்து விசாரணையின்றி கொல்லப்பட்டதும் இதில் அடங்கும். வெளிநாடுகளின் மீது தனது நிதி, இராணுவ மூர்க்கத்தனத்தை ஏவும் அமெரிக்க ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கை, உள்நாட்டில் ஒரு முரட்டு காவல் அரசு என்ற அதற்கிணையான பாசிச வடிவத்தை இப்போது கண்டடைந்துள்ளது. ஹிட்லர் வீழ்ந்து எண்பதாண்டுகளுக்குப் பிறகு இப்போது ஏகாதிபத்தியம் மற்றும் பாசிசத்தின் கொடூர நாஜி சங்கமத்தால் அமெரிக்கா வாட்டி வதைக்கப்படுகிறது. இது நிச்சயமாக வெள்ளை மேலாதிக்கம், உலகளாவிய பேரரசு என்ற அமெரிக்காவின் சொந்த தனித்துவ வரலாற்றால் மேலும் தாக்கம் பெற்றுள்ளது.


பல வழிகளில், இந்தியாவில் சங்க்-பாஜகவின் பாசிசத் திட்டம், டிரம்பின் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பாசிசத்தின் இணைவுடன் ஒத்துப்போகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான நிரந்தரப் போர் வெறியைத் தூண்டுவதில் நீண்ட காலமாக கவனம் செலுத்தி வந்த மத அடிப்படையில் பிளவுபடுத்தும் அரசியல், இப்போது வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல் என்ற போர்வையில் அச்சுறுத்தலை தொடர்ந்து வருகிறது. வெளியுறவுக் கொள்கையில், இந்தியப் பொருட்கள், சேவைகள் அமெரிக்காவின் தண்டனைக்குரிய வரிகளை எதிர்கொண்டாலும் இந்தியக் குடிமக்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு சங்கிலிகள், கைவிலங்குகளுடன் நாடு கடத்தப்பட்டாலும், மோடி அரசாங்கம் அமெரிக்க-இஸ்ரேல் அச்சுக்கு முழுமையாக அடிபணியும் வழியைப் பின்பற்றுகிறது. அரசு பயங்கரவாதத்தையும் துன்புறுத்தலையும் நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படும் சொற்களும் வியக்கத்தக்க வகையில் ஒரே மாதிரியாக உள்ளன – மோடி அரசாங்கம் மாற்றுக்குரல்களை அடக்க ‘நகர்ப்புற நக்சல்கள்’, ‘தேசவிரோதிகள்’, ‘அந்தோலன்ஜீவி’ (தொழில்முறை போராட்டக்காரர்) போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறது. அதேநேரத்தில் அமெரிக்க அரசு பயங்கரவாதத்தில் பாதிக்கப்பட்டவர்களை ‘தொழில்முறை கிளர்ச்சியாளர்கள்’, ‘உள்நாட்டு பயங்கரவாதிகள்’, ‘இடதுசாரி கிளர்ச்சியாளர்கள்’ என்று டிரம்ப் நிர்வாகம் விவரிக்கிறது. நாம், அமெரிக்காவிலும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு, இனவெறி எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முழு ஆதரவை வழங்கும் அதேவேளையில், இந்தியாவிற்குள் பாசிசம், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நமது சொந்தப் போராட்டங்களை கூர்மைப்படுத்திட வேண்டும்.


எம்எல் அப்டேட், 

தொகுதி. 29 | எண். 05 | 27 ஜன – 02 பிப் 2026


தமிழாக்கம்: விஜி

20 February, 2026