தமிழக அரசின் அரசாணை எண் 62/2017 - ன் படி தூய்மைப்பணி தொழிலாளருக்கு குறைந்தபட்ச சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ.761, ஓட்டுநர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.799 வழங்கப்பட வேண்டும்; அவர் லேண்ட் ஒப்பந்த நிறுவனத்தால் சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட, தூத்துக்குடி மாநகராட்சி ஏஐசிசிடியு தூய்மைப்பணியாளர் சங்கத் தலைவர் பி.பொன்ராஜ் அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாநகராட்சி தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
போராட்ட நிர்ப்பந்தத்தின் காரணமாக, தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள், தொழிலாளர் துறை அதிகாரிகள், மாவட்ட காவல் துறை துணைக் காணிப்பாளர், அவர் லேண்ட் ஒப்பந்த நிறுவனத்தினர், ஏஐசிசிடியு தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்து கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது, 4.2.2026 ஆம் தேதியிலிருந்து தோழர் பொன்ராஜிற்கு மீண்டும் பணி வழங்குவதாக ஒப்புக்கொண்டு உறுதியளித்த அவர் லேண்ட் ஒப்பந்தக்காரர் நிர்வாகம் இது நாள் வரை பணி வழங்கவில்லை.
தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில், பல லட்சக்கணக்கில் தொடர் ஊதியத் திருட்டை செய்து வருகிறது அவர் லேண்ட் ஒப்பந்த நிர்வாகம்
தமிழக அரசாணைப் படி தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும்; ஊதியத் திருட்டு நிறுத்தப்பட வேண்டும்; சட்ட விரோதமாக வேலையிலிருந்து நீக்கப்பட்ட தோழர் பொன்ராஜை மீண்டும் வேலைக்கமர்த்த வேண்டும்; PF, ESI திட்டத்தில் தொடரும் முறைகேடுகளைச் சரி செய்ய வேண்டும்; அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டதை மீறும் அவர் லேண்ட் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தையும், மேயரையும் கண்டித்து பிப்ரவரி 11, 2026 முதல், 7 நாட்கள், தினமும் காலை 7:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை தூத்துக்குடி - மதுரை பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஏஐசிசிடியு தொழிற்சங்க அலுவலகத்தில் தொடர் பட்டினி போராட்டம் நடைபெற்றது.
7 நாட்கள் நடைபெற்ற தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் தோழர் பொன்ராஜ் மற்றும் 35க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் ஏஐசிசிடியு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் சகாயம், சிவராமன், மின்னல் அம்ஜத், பாலமுருகன், இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் முருகன் ஆகியோரும் கலந்து கொண்டனர். உண்ணாநிலை போராட்ட இடத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் வந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
பட்டினிப் போராட்டம் நடைபெற்ற நாள்களில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பட்டினிப் போராட்டத்தில் இருந்த தோழர்களை வாழ்த்திப் பேசினார்கள். ஏஐசிசிடியு மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஞானதேசிகன், மாநில சிறப்புத் தலைவர் டி.சங்கரபாண்டியன், மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எம்.அந்தோணி முத்து, மாநிலச் செயலாளர் ஏ.கோவிந்தராஜ், மாலெ தீப்பொறி பத்திரிகை ஆசிரியர் ஜி.ரமேஷ், மாலெ கட்சி குமரி மாவட்டச் செயலாளர் சுசீலா, தென்காசி மாவட்டச் செயலாளர் வேல்முருகன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் பேராசிரியர் பாத்திமா பாபு, மனித உரிமை வழக்கறிஞர் ஹென்றி திபேன் ஆகியோர் பட்டினிப் போராட்ட இடத்திற்கு நேரில் வந்து தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள்.
