உயர் கல்வி நிறுவனங்களில் நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட தலித் மாணவர்கள் ரோகித் வெமுலா, பயல் தாத்வி ஆகிய இருவரின் தாயார்களும் நிறுவனப் படுகொலைகளை தடுக்க ரோஹித் சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகிய பின்னணியில், பல்கலைக்கழக மானியக் குழு சமத்துவ விதிகளை உருவாக்கி ஜனவரி 13, 2026 அன்று வெளியிட்டது. அதில் மாணவர்களுக்கிடையே பாகுபாடு பற்றிய புகார் அளிப்பதற்கான வழிமுறைகள், பிரத்தியேக அதிகாரி, சம வாய்ப்பு மையங்கள் அமைத்தல், சமத்துவம், சமூக நீதியை ஊக்குவிக்க நடவடிக்கை ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த சமத்துவ விதிகளானது முற்போக்காளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்ற நிலையில், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை எதிர்த்த அதே பார்ப்பனிய சக்திகள் இந்த விதிகளையும் எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள். இந்த சமத்துவ விதிகளால் தாங்கள் பாதிக்கப்படப் போவதாக கூக்குரலிட்டனர்.தங்கள் அதிகாரம் பறிபோவதையே இப்படி அவர்களின் பாதிப்பாக அவர்கள் வெளிப்படுத்தி வந்தனர். உச்ச நீதிமன்றத்தையும் நாடினர். ஜனவரி 29,2026 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வு சமத்துவ விதிகளை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தப் பின்னணியில் தான் டெல்லி பல்கலைக்கழகத்திலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவ விதிகளை அமல்படுத்துவதை வலியுறுத்தி பல்வேறு இயக்கங்களை மாணவர்கள் நடத்தி வருகின்றனர். இதில் பட்டியலின மாணவர்களும் இதர பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் பெரும் எண்ணிக்கையில் அணி திரண்டு வருகின்றனர். ஆத்திரமடைந்த பார்ப்பனிய சக்திகள், அகில பாரத வித்யாத்ரி பரிஷத் அமைப்பு மூலம் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டு வருகின்றன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய இர்பான் ஹபீப் போன்ற ஆளுமைகள் மீது கூட தண்ணீர் பாட்டில் விட்டெறியப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் சமத்துவப் பேரணி சென்ற மாணவர்கள் மீது செங்கற்களை வீசுவதும் உடல் ரீதியாக தாக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .
வன்முறையில் ஈடுபட்டு வரும் ஏ பி வி பி மாணவர்களை பாதுகாக்கின்ற பல்கலைக்கழக நிர்வாகம், அறவழியில் போராடும் ஜே என் யு மாணவர் சங்க 4 நிர்வாகிகளையும் ஒட்டுமொத்தமாகத் தற்காலிகமாக நீக்கி உள்ளது(rustication). இகக (மாலெ) செயல்வீரரும் முன்னாள் ஜே என் யூ மாணவர் சங்கத் தலைவருமான பிரசன்ஜித் மீதும் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜே என் யூ துணைவேந்தர் திருமதி.சந்திசிறீ துளிபுடி பண்டித், கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அமெரிக்காவில் கருப்பர்களும் இந்தியாவில் தலித்துகளும் “பாதிக்கப்பட்டவர்கள்” என்ற துருப்புச் சீட்டை பயன்படுத்தி வருவதாகவும், அவர்கள் “பாதிக்குள்ளானவர்கள் என்ற போதை ஏற்றப்பட்டுள்ளனர்” என்றும் குறிப்பிட்டார். பிரசித்தி பெற்ற பல்கலைக்கழக துணைவேந்தரின் இந்தப் பேட்டி, நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியது. சமத்துவ விதிகளுக்கான அவசியத் தேவையை இந்தப் பேட்டி ஊர்ஜிதம் செய்வதாக அமைந்தது. அய்சா உள்ளிட்ட முற்போக்கு மாணவர் அமைப்புகள், துணைவேந்தர் பதவி விலக வேண்டும் என்றும் ரோகித் சட்டப்படியான சமத்துவ விதிகள் உருவாக்கி அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரி, பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து சமூக நீதி, சமத்துவத்துக்கான போராட்டத்தைத் தொடர்ந்து வந்தனர்.
ஜேஎன்யு மாணவர்கள் சங்கத் தலைவர்கள் மீதான கல்வித் தடையை நீக்கு!
அரசமைப்புச் சட்ட விழுமியங்களுக்கு மாறாக சாதிய வன்மத்துடன் செயல்படும் ஜேஎன்யு துணைவேந்தரை பதவி நீக்கம் செய்!
சமத்துவ விதிகளை அமல்படுத்து! ரோகித் சட்டம் இயற்று!
என்ற முழக்கங்களுடன் கல்வி அமைச்சகத்தை நோக்கிய நீதி கேட்டு 'நீண்ட பயணம்' என்ற பேரணியை நடத்தினர். பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை கண்மூடித்தனமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டது. அறவழியில் போராடிய ஜே என் யு மாணவர் சங்கத் தலைவர் அதீதி, துணைச் செயலாளர் டேனிஷ் அலி அய்சா அகில இந்தியத் தலைவர் நேகா ஆகியோர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக பொய் குற்றச்சாட்டை காவல்துறை சுமத்தியதோடு, காயமடைந்த மாணவர்களையே கைதும் செய்தது. பிணையில் வர முடியா பல்வேறு பிரிவுகளில் வழக்குப் போட்டு, திகார் சிறையில் அடைத்தது.
மாணவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டக் குழுவினர் விரைந்து செயல்பட்டு, நீதிமன்றத்தில் பிணை பெற்றனர். ஆனால், பிணை வழங்கிய நீதிபதி, மாணவர்களின் பூர்வீக முகவரிகளை சரி பார்த்த பின்பு பிணை என்ற முன் நிபந்தனையுடன் உத்தரவிட்டிருந்தார். ஆனால், மாணவர்கள் பலரும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது முகவரிகளை சரி பார்ப்பதற்கு காலதாமதம் ஆகிய பின்னணியில் அவர்கள் விடுதலை செய்யப்படாமல் இருந்தனர்.
உடனடியாக சட்டக் குழுவினர் வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற மேல் முறையீட்டுக்கு எடுத்துச் சென்று, டெல்லி உயர் நீதிமன்றம் முகவரி சரிபார்ப்பு காரணத்தைச் சொல்லி, கல்வி கற்கும் மாணவர்களை சிறையில் வைக்கக் கூடாது என்று சொல்லி, உடனடியாக பிணை வழங்கி உத்தரவிட்டது.
ஜவர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்கள் பிணைக்கான உத்தரவாதங்களை அளித்தனர். மட்டுமின்றி, மாணவர்களுக்கு ஆதரவாக சமத்துவ விதிகள் கோரி போராட்டத்திலும் ஈடுபட்டனர். மார்ச் 2 அன்று, ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆதரவு கூட்டத்தில் சிபிஐ (எம் எல் )பொதுச் செயலாளர் தோழர் திபங்கர், சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர், தோழர் பிருந்தா காரத் ஆகியோர் உரையாற்றினர்.
டெல்லி மாணவர்கள் அம்பேத்கர், பெரியார் படங்களை கையில் ஏந்தி சமத்துவம், சமூக நீதிக்கானப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தில்லி மாணவர்களின் சமூக நீதிப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் காவல்துறை ஒடுக்கு முறைக்கு எதிராகவும், பாசிச ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் தமிழக மாணவர்கள் குரல் எழுப்ப வேண்டும்.
