2026 ஜனவரி 2 மாலையில், பழனி பெரியார் திடலில் சிபிஐஎம்எல் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டக் குழு உறுப்பினர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார்; மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி, மத்திய கமிட்டி உறுப்பினர் சந்திரமோகன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் முருகேசன், மாநிலக் குழு உறுப்பினர் ரவி உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான சட்டங்கள் - திட்டங்களுக்கு எதிராக, தொழிலாளர், கிராமப்புர ஏழைகளுக்கு எதிரான சட்டங்கள் - திட்டங்களுக்கு எதிராக, நடை பெற்ற பொதுக்கூட்டத்தில், தோழர் ஆசைத்தம்பி தனது உரையில், தொழிலாளர் பல ஆண்டுகளாகப் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்கும் வகையில் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. பீகாரைப் போல தமிழ்நாட்டிலும் அடிமை தேர்தல் ஆணையத்தின் மூலம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் ஒரு கோடி வாக்காளர்களை தன்னுடைய அடிமை தேர்தல் ஆணையத்தின் மூலம் நீக்கியுள்ளது. இது வாக்குரிமைப் பறிப்பு மட்டுமல்ல, வாக்குத் திருட்டு ஆகும். இன்னொருபுறம் குடியுரிமையைப் பறித்து இந்திய மக்களை சொந்த நாட்டிற்குள்ளேயே அகதிகள் ஆக்கும் முயற்சியாகும். மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தை ஒழிக்க விபி கிராம்ஜி என்று கொண்டு வந்து விவசாய, கிராமப்புரத் தொழிலாளர் வாழ்க்கையை அழிக்கிறது. இப்படி இந்திய மக்கள் வாழ்க்கையைச் சீரழிக்கும் மோடி அரசும் பாஜகவும் தமிழ்நாட்டில் காலூன்ற திருப்பரங்குன்றத்தின் மூலம் கலவரத்தைத் தூண்டிவிட முயற்சி்க்கிறது என்றும் இதற்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிணைந்து போராட முன் வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
தோழர் சந்திரமோகன் பேசும்போது, பழனி மலைப் பகுதியின் சில பகுதிகளில், கரடிக் கூட்டம், நெய்காரப்பட்டி, சத்திரப்பட்டி என்ற குறிப்பிட்ட மாலிப்டினம் வளம் உள்ள மண்டலங்கள் (மாலிப்டினைட்) ஆகும். சுமார் 2.8 இலட்சம் டன் மாலிப்டினம் கனிமத் தாது இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2018 ல், ஒன்றிய பிஜெபி அரசாங்கம்,காவிரி டெல்டா பகுதியிலே இலட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் (பெட்ரோலியம்) எடுக்க ஏலம் விடுத்தது. வேதாந்தா நிறுவனம் தான் ஏலம் எடுத்தது. விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக அன்றைய தமிழ்நாடு அரசு, 'காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' என அறிவித்தது. கடந்த 2025 ம் ஆண்டில், மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில், சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில், டங்ஸ்டன் கனிம சுரங்கங்களுக்கான ஏலம் விடப்பட்டது. அதையும் வேதாந்தா தான் எடுத்தது. மேலூர் மக்களின் எழுச்சியான போராட்டம் காரணமாக பிஜெபி அரசாங்கம் பின்வாங்கியது. இந்திய அரசாங்கம் பல கனிமத் தொகுதிகளை ஏலத்திற்கு விட்டதில், சில குறிப்பாக மாலிப்டினம் தொகுதிகளில் தமிழ்நாட்டில் நொச்சிப்பட்டி மாலிப்டினம் தொகுதி உள்ளது. பழனியில் கிடைக்கும் கனிமத் தாதுவில் உள்ள மாலிப்டினத்தின் அளவு குறைவு என்பதால், பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலப்பரப்புகளை கையகப்படுத்தினால் தான், 2.80 இலட்சம் டன் தாதுவை வெட்டி எடுக்க முடியும். இதனால், சுமார் 400 ச கி.மீ அளவிற்கு, 1 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் வரை பாதிக்கப்படும்,. பல்லாயிரக் கணக்கான சிறு குறு விவசாயிகளின் விவசாய நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களால் அபகரிக்கப்படும். பழனி தாலுகாவின் மொத்த விவசாயமும் அழிந்துவிடும்!
அதோடு சேர்ந்து தொல்லியல் தளங்களும் அழியும். வரலாற்று முக்கியத்துவம் மிக்க பழனிமலை, இடும்பன் மலை, ஐவர் மலை இங்கிருக்கிறது. ஏற்கனவே தமிழர் நாகரிகத்தின் தொன்மையை பறைசாற்றும் ஆதிச்ச நல்லூர், கீழடி, கொடுமணல் வரிசையில் வரும் 'பொருந்தல்' தொல்லியல் தளமும் பழனிமலை பகுதியில் தான் இருக்கிறது. மேலும் கரடிக் கூட்டம் ஊராட்சியில் குகைகளிலுள்ள எழுத்துகள் கரடிக் கூட்டம் ஊராட்சிக்கு மிக அருகாமையில் உள்ள தொன்மைமிக்க தொல்லியல் தளமான இரவிமங்கலம் பரம்பு உட்பட அனைத்தும் அழியும்.
சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள தொல்லியல் மேடு `ரவிமங்கலப் பெருங்கற்காலச் சின்னங்கள்’ ஆகும். அங்கு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத்தில், மூன்று இரும்பு உருக்காலைகள் செயல்பட்டு வந்திருக்கிறது என்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன; இரும்பு மூலப்பொருள்கள், அச்சு உலைகள், இரும்பை உருக்கத் தேவையான சுண்ணாம்புக் கட்டிகள், இரும்பு கசடுகள் போன்றவை இன்றளவும் அந்த இடத்தில் காணப்படுகின்றன. இரண்டு சங்ககால புதைகுழிகளும் 900 க்கும் கூடுதலான தொல்பொருள்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதியில், மாலிப்டினம் சுரங்க செயல்பாடுகள் வந்தால் இவை மொத்தமும் அழிக்கப்பட்டுவிடும் என்பதைச் சுட்டிக் காட்டினார்.
