மாதவ் காட்கில் அவர்களுக்கு அஞ்சலி!

$articleData->title

Madhav gadgil

இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களின் முன்னோடி,  சுற்றுச்சூழல் அறிவியலாளர், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாதுகாவலர் பேராசிரியர் மாதவ் காட்கில் காலமானார்.

மனித உரிமைகளையும் இயற்கையின் பாதுகாப்பையும் ஒன்றிணைத்துச் சிந்தித்த முன்னோடி சுற்றுச்சூழல் அறிவியலாளர்  பேராசிரியர் மாதவ் காட்கில் மறைவு, இந்தியாவின் சுற்றுச்சூழல்–சமூக நீதி போராட்டத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 போன்ற சட்டங்கள், பல இடங்களில் வனத்துறை அதிகாரங்களால் பொதுமக்களை அடக்குவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாக அவர் கடுமையாக விமர்சித்தார். இயற்கையை காப்பது என்பது மக்களை வெளியேற்றுவது அல்ல; மக்களுடன் இணைந்து பாதுகாப்பதே உண்மையான பாதுகாப்பு என்றார்.

'வனமும் நிலமும் மக்களிடமிருந்து பிரிக்க முடியாதவை' என்பதை வலியுறுத்திய மக்கள் மைய சுற்றுச்சூழல் சிந்தனையாளராக அவர் திகழ்ந்தார். வனங்களில் வாழும் ஆதிவாசிகள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோரை “இந்தியாவின் சாதாரண மக்கள்” என்றும், “சூழலியல் அமைப்பின் அங்கங்கள்” என்றும் அழைத்தார்.

மக்கள் பங்களிப்புடன் அறிவியல் அடிப்படையில் இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் பேராசிரியர் மாதவ் காட்கில் அவர்கள்.

மேற்கு தொடர்ச்சி மலைகள் சார்ந்த இவருடைய கள அறிவியல் ஆய்வுகளும்,  அவைகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டிய அறிக்கையும் மிக முக்கியமானவை. அது மக்கள் பங்கேற்புடன் கூடிய கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்வைத்தது. சுற்றுச்சூழலை பாதுகாக்க மிக மோசமான தொழில்கள் தடை செய்யப்பட வேண்டும்; பாதிப்புக்குள்ளான பகுதிகள் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற அவரது பரிந்துரைகள், இன்று மேலும் பொருத்தமானதாக மாறியுள்ளன.

கேரளாவின் ‘சைலன்ட் வாலி’ காடுகளை காப்பாற்றிய இயக்கம் முதல், பஸ்தார் காடுகள் வரை, அவரது செயல்பாடுகள் இந்தியாவின் சுற்றுச்சூழல் வரலாற்றில் நிலையான முத்திரையை பதித்துள்ளன.

இந்தியாவில் மக்கள் பங்களிப்புடன் நமது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இரு முக்கிய சட்டங்களான உயிரிப் பல்வகைமைச் சட்டம் (Biological Diversity Act, 2002) & வன உரிமைச் சட்டம் (Forest Rights Act, 2006) உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர். இந்த இரு சட்டங்களும் நமது காடுகளையும், நம் அருகாமையில் உள்ள உயிர்ச்சூழல் நிறைந்த வாழ்விடங்களை மக்கள் பங்களிப்புடன் பாதுகாக்க உதவும் முக்கிய சட்டங்களாகும்.

அவர் கட்டமைத்த உயிரிப் பல்வகைமைச் சட்டம் 2002 ன் கீழ்தான் எலத்தூர் பல்லுயிர் மேலாண்மை குழுவானது மீள் உருவாக்கம் செய்யப்பட்டு, எலத்தூர் குளம் மற்றும் நாகமலை குன்றானது பாரம்பரிய பல்லுயிர் தலமாக (Biodiversity Heritage Site - BHS) தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

அறிவியலையும் சமூகப் பொறுப்பையும் ஒன்றிணைத்த அவரது வாழ்க்கை, இன்றைய தலைமுறைக்கு வழிகாட்டுகிறது.


26 January, 2026