வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள்: ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் முன்னுள்ள சவால்கள்

$articleData->title

அசாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்க சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் அட்டவணை

சாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்க சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் அட்டவணையை மார்ச் 15 அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அசாம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு ஏப்ரல் 9 ஆம் தேதியும் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 23 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும். மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும். அதாவது கேரளா, புதுச்சேரி, அசாம் மக்கள் தங்கள் வாக்குகள் எண்ணப்படுவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் காத்திருக்க வேண்டும்! வாக்கு எண்ணிக்கையையும் முடிவுகளையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துரிதப்படுத்துகின்றன என்ற நம்பிக்கையில் இன்னும் அதனை ஆதரிப்பவர்கள், வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையிலான இக்கால இடைவெளியைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


நவம்பர் 2025 பீகார் தேர்தல்களைப் போலவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பாகவும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் பெருமளவிலான வாக்காளர்களை நீக்குவதற்கும் வாக்காளர் பட்டியல் சுருங்குவதற்கும் இந்த சிறப்பு தீவிரத் திருத்தம் வழிவகுத்துள்ளது. கேரளாவில் இந்த வாக்காளர் நீக்கத்தின் அளவு மிக மிகக் குறைவானதாகும். ஆனால் அங்கும் கூட, வாக்காளர் பட்டியலில் கிட்டத்தட்ட 10 இலட்சம் பேர், அதாவது 3 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு மாறாக, தமிழ்நாட்டில் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6.2 கோடியிலிருந்து 5.5 கோடியாக குறைந்து, கிட்டத்தட்ட 12 சதவீத அளவிற்கு வாக்காளர் பட்டியல் மாபெரும் சரிவைச் சந்தித்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஏற்கனவே அறுபது இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் மற்றுமொரு அறுபது இலட்சம் வாக்காளர்களின் எதிர்காலம் 'பரிசீலனையை எதிர்நோக்கி‘ உள்ளது.

உண்மையில், எஸ்ஐஆர் செயல்முறையின் வெளிப்படையற்ற, தன்னிச்சையான தன்மையை மேற்கு வங்கத்தில் மிகச் சிறப்பாகப் புரிந்து கொள்ள முடியும். வாக்காளர்களை 2002 ஆம் ஆண்டின் அடிப்படை வாக்காளர் பட்டியலுடன் இணைத்த பின் வெளியிடப்பட்ட முதல் வரைவுப் பட்டியலில்,  இறப்பு, நிரந்தர இடம்பெயர்வு அல்லது இரட்டைப் பதிவுகள் ஆகிய காரணங்களின் அடிப்படையில் 58 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இந்த ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு தான் பெருமளவிலான துன்புறுத்தல்களும் வாக்காளர்களைக் குறிவைத்து நீக்கும் நடவடிக்கைகளும் தொடங்கியது. முதல் வரைவில், மால்டா, முர்ஷிதாபாத் போன்ற முஸ்லிம்கள் அதிகம் வாழும் தொகுதிகளின் வாக்காளர்களில் 2 சதவீதம் மட்டுமே நீக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போது அந்தத் தொகுதிகளின் கிட்டத்தட்ட சரிபாதி வாக்காளர்களின் பெயர்கள் இரண்டாவது சுற்றில் நீக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளுடன் பரிசீலனையை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. மிகவும் தம்பட்டம் அடிக்கப்படும் இந்த ‘ஜனநாயகத் திருவிழா'வில் இந்த அறுபது இலட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை ஒரு பொருட்டல்ல என்பது போலவும், ' அவர்களின் வாக்குகளுக்கு மதிப்பில்லை என்பது போலவும் அவர்களது வாக்குரிமையை நிறுத்தி வைத்துவிட்டு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதுதான் மிகவும் எரிச்சலூட்டும் விஷயமாகும்.  எஸ்ஐஆர் மூலம் பெயர்கள் நீக்கப்படாமல் தப்பிப்பிழைத்த வாக்காளர்கள், இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட இந்த எஸ்ஐஆர் தாக்குதலுக்காக மோடி அரசாங்கத்தைத் தண்டிக்கத் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.

தேர்தல் நடைபெறவுள்ள இந்த நான்கு மாநிலங்களில், தற்போது அசாமில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ளது. பாஜகவின் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த வெறுப்புப் பரப்புரையாளர்களில் ஒருவராக அசாம் முதல்வர் உருவெடுத்துள்ளார். அவர் இப்போது அசாமில் உள்ள வங்கமொழி பேசும் முஸ்லிம்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறையைத் தூண்டுகிறார். அவரது ஆட்சியின் கீழ், கட்டுக்கடங்காத கார்ப்பரேட் கொள்ளைக்காடாக அசாம் மாறியுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக அனைத்து வழிகளிலும் முயற்சிக்கிறது. தேர்தல் அறிவிப்புக்கு சற்று முன்பு, அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளுக்காக உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட, சர்ச்சைக்குரிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மோடி அரசாங்கம் மேற்கு வங்கத்திற்கு மாற்றியுள்ளது. அறிவிப்பு வெளியான உடனேயே, தேர்தல் ஆணையம் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களின் முழுமையான நிர்வாகத்தைக் கையிலெடுக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. கண்ணில் தெரியக்கூடிய எதிர்காலத்தில் பாஜக வெற்றிபெற வாய்ப்பே இல்லாத தமிழ்நாடு, கேரளாவில் கூட, மோடி அரசாங்கத்தின், சங் பரிவாரங்களின் வெறியாட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

எனவே, ஜனநாயகத்தின், அரசமைப்புச் சட்டத்தின் காவலர்கள், இந்த சட்டமன்றத் தேர்தலை அரசியல் ரீதியாக மக்களைத் திரட்டும் பாசிச எதிர்ப்புக் களமாகப் பயன்படுத்த வேண்டும். அடிமைத்தனத்தின் புதிய தொழிலாளர் சட்டங்களை ஏப்ரல் 1 முதல் அரசாங்கம் அமல்படுத்தப் போகிறது. வேலை நேரத்தை நீட்டிக்கும் முயற்சிகளுக்கு எதிராகத் தொழிலாளரிடையே அதிருப்தி வளர்ந்து வருவதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தெரிகின்றன. பிப்ரவரி 12 பொது வேலைநிறுத்தத்தின் செயல்திட்டங்களை பொதுவான தேர்தல் செயல்திட்டமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஈரான் மீது தீவிரமடைந்து வரும் அமெரிக்க-இஸ்ரேல் போரின் பேரழிவுகரமான விளைவுகள் ஏற்கனவே இந்தியாவில் மிகக் கடுமையாக உணரப்பட்டு வருகின்றன. அமெரிக்க-இஸ்ரேல் அச்சிடம் மோடி அரசாங்கம் சரணடைந்தது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள கறை மட்டுமல்ல; இது இந்தியாவின் நலன்களுக்கும் நமது சாமானிய மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியாகும். இது, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும் விவசாயிகள், மேற்கு ஆசியாவில் சிக்கியுள்ள வெளிநாடுவாழ் தொழிலாளர், எரிபொருள் நெருக்கடி, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் தவிக்கும் ஒவ்வொரு சாதாரண இந்தியனுக்கும் எதிரான தாக்குதலாகும். இந்தத் தேர்தல்கள் போர் எதிர்ப்பு இயக்கத்திற்கான களமாகவும் கருதப்பட வேண்டும்.

தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து மாநிலங்களும் இந்தியாவின் இடதுசாரி இயக்கத்தின் துடிப்புமிக்க மையங்களாக இருந்து வருகின்றன. உடனடி தேர்தல் கள சூழல், முடிவுகளுக்கு அப்பால், இந்த அனைத்து மாநிலங்களிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் போராட்டத் திறனை வலுப்படுத்த நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த மாநிலங்களில் ஒரே மாதிரியான கூட்டணிகள் இல்லை; ஆனால் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தவும் இந்தியா மீதான பாசிசப் பிடியை வலுவிழக்கச் செய்யவும் புரட்சிகர கம்யூனிஸ்டுகள் இத்தேர்தல்களில் முன்முயற்சி எடுக்க வேண்டும். இதற்காக, முதல் முறையாக மேற்கு வங்கத்தில் சிபிஐ(எம்எல்), சிபிஐ(எம்), இடதுசாரி முன்னணியுடன் மாநில அளவிலான தேர்தல் உடன்பாட்டைக் கொண்டிருக்கும். அசாமில் காங்கிரஸ் கட்சியுடன் பகுதியளவிலான உடன்பாட்டைக் கொண்டிருக்கிறது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தும். அதே வேளையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணிக்கும் கேரளாவில் இடது ஜனநாயக முன்னணிக்கும் ஆதரவளிக்கும்.


30 March, 2026